2000 இஸ்லாமிய பெண்களை ‘இந்து’க்களுக்கு திருமணம் செய்யும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்புகளில் ஒன்றான ‘இந்து ஜக்ரான் மஞ்ச்’ என்ற அமைப்பு அறிவித்துள்ளது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. திருமணத்துக்கான செலவு, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான பாதுகாப்பு அனைத்தும் வழங்கப்படும் என்றும், இந்து வைதிக சடங்கு களுடன் இத்திருமணங்கள் நடக்கும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. திருமணம் செய்து கொள்ளும் இஸ்லாமியப் பெண்கள் இந்துவாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. (இந்துவாக மாறினால் எந்த ஜாதியில் வைப்பார்கள்?)
உ.பி. ‘இந்து ஜக்ரான் மஞ்ச்’ அமைப்பின் தலைவர் அஜூசவுகான் என்பவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தோடு, இஸ்லாமிய ஆண்கள், இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கான பதிலடி என்றும் கூறியுள்ளார். இஸ்லாமியர் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்து வதும் இந்த இயக்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியிருக்கிறார். “ஒரு முஸ்லிம் பெண், ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு 10 குழந்தைகளை பெறுகிறார்கள். அந்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது இந்துக்களுக்கு எதிரானவர்களாக மாறி விடுகிறார்கள். இதற்கு மாறாக இஸ்லாமிய பெண் இந்து குடும்பத்துக்கு வந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளும் இந்துக்களாகவே இருக்கும். இந்து மக்கள் தொகை அதிகரிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
உ.பி.யில் இந்து பெண்களைக் காப்பாற்றும் பரப்புரை இயக்கம் ஒன்றையும் இந்த மதவெறி அமைப்புதொடங்கி, ‘இஸ்லாமிய ஆண்களை திருமணம் செய்யா தீர்’ என்று இந்து மாணவிகளிடம் கல்வி நிறுவனங்களில் பிரச்சாரம் செய்கிறது. இதற்கு உ.பி.யில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி முழு ஆதரவு வழங்கி வருகிறது.