velmurugan hrajaபாரதிய ஜனதாவுக்குள்ளேயே ‘புரட்சி’! நம்புங்க! முருகன், ராஜாவை விசாரிக்கப் போறாரு! ஆமாம்! அதே ‘ஆன்டி இந்தியன்’ ஹரிஹர ராஜா சர்மாவைத் தான்! விசாரணை எப்படி நடக்கும்? இப்படித் தான்.

முருகன்: ராஜா, நீங்க - தேர்தலுக்கு கட்சிக் கொடுத்த 13 கோடியில் 4 கோடியை எடுத்து வீடு கட்டியிருக்கீங்கன்னு எனக்கு புகார் வந்திருக்கு!

ராஜா: புகார் வந்தால் விசாரணை நடத்துவீங்களோ... அந்த அதிகாரம் உனக்கு இல்லை. எனக்கு பணத்தை அனுப்பிய அமீத்ஷா கேட்கட்டும்; அல்லது மோடி கேட்கட்டும்; உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை.

முருகன்: நான் தான். இம் மாநிலத் தலைவர் என்னிடம் தான் புகார் வந்திருக்கு.

ராஜா: மாநிலமாவது... மண்ணாங்கட்டியாவது; மாநிலங்களையே நாங்க ஒழிச்சிகிட்டிருக்கிறோம் தெரியுமோ? அதுக்கு முதல் கட்டமா எங்க மாவட்ட பா.ஜக.வையே ஒழிச்சுகிட்டிருக்கிறேன். அவனுங்க எல்லாம் ‘ஆன்டி இந்தியனா’ ஆகி எனக்கு எதிரா தேர்தல்ல - முதுகில் குத்திட்டானுங்க. அவனுங்கள நான் சும்மா விடப் போவது இல்லை.

முருகன்: இப்படிப் பேசிப் பேசியே தமிழ் நாட்டுல கட்சிக்கு பாடை கட்டிட்டீங்க... அந்தக் காலம் முடிஞ்சு போச்சு; குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க.

ராஜா: நல்லா புரிஞ்சுக்க முருகா! இந்த ராஜா கையாடல் பண்றான்னா - அதுக்குள்ள ‘தேச பக்தி’ பதுங்கி இருக்குது. ‘தேச பக்தி’க்கு எதிரான முஸ்லிம் - கிறிஸ்துவ கைக் கூலிகளின் சதி இது. அவனுங்கள தேச விரோத சட்டத்தின் கீழே கைது செய்ய வேண்டும்!

முருகன்: அப்படிப் பேசாதீங்க! நான் எதுக்கு தலைவன்னு ஒருத்தன் இங்கே இருக்கேன்?

ராஜா: உன்னை யாருப்பா ‘தலைவன்னு’ ஒத்து கிட்டா! காவி கட்டி வேல் தூக்கி ஊர் ஊராகப் சுத்துறதுக்குத்தான் நீ தலைவன்; என்கிட்ட கேள்வி கேட்கிறதுக்கு இல்லை.

முருகன்: வேற வழியில்லை; மேலிடத்துக்குத் தான் இதை கொண்டு போகணும்.

ராஜா: என்ன பேச்சு பேசற நீ... தாராளமாகக் கொண்டு போ! அயோத்தியிலே இராமன் கோயிலுக்கு இடம் வாங்குறதுக்கு 16 கோடி கையாடல் மேல் மட்டத் துலேயே நடந்துருக்கு. அந்த அறக்கட்டளையே இப்ப விசாரணையில தான் இருக்குது; அது 16 கோடி ஊழல்; என்னுடையது வெறும் 4 கோடி.

முருகன்: இப்படி எல்லாம் பொறுப்பில்லாமல் பேசாதீங்க...

ராஜா: எனக்கு நீ பாடம் சொல்லித் தராதே; இராமன் கோயிலாக இருந்தாலும் சரி; எனக்கு வீடு கட்டினாலும் சரி; எல்லாம் இந்துக்களின் நன்மைக்காகத்தான். இந்துக்களுக்காகத்தான் நம்ம கட்சியே நடத்துறோம்; முதலில் கொள்கையைப் புரிஞ்சுகிட்டுப் பேசு. ‘ஆன்டி இந்தியனாகி’ விடாதே!

முருகன்: ஊழலிலும் கொள்ளையடிப்பதிலும்கூட கொள்கை இருக்குதுன்னு சொல்ல வர்ரீங்களா?

ராஜா: ஆமாம்! நிச்சயமாக. நான் ஒரு ‘சுயம் சேவக்’ கொள்கையில் ஊறிப் போனவன்; ‘பிர்மா’வின் தலையில் பிறந்த ‘பிர்மா’ வம்சம். காலில் பிறந்த நீ எல்லாம் என்னை விசாரிப்பது தர்மத்துக்கே இழுக்கு! ஒழுங்காக பதவியைக் காப்பாத்திக்க.

முருகன்: இப்ப புரியுது. ஏதோ உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். நீங்க நீங்கத் தான்; நாங்க நாங்கத் தான்; அது தான் அடிப்படையான நமது கொள்கை என்பதை அப்பப்போ மறந்துடுறேன். இனிமே நாம, அவுங்க அவுங்க இடத்துலே இருந்துகிட்டே இந்து ஒற்றுமைப் பேசுவோம்; மன்னிச்சிடுங்க; நமஸ்தே ஜீ! ஜெய் ஹிந்த்; வந்தே மாதரம்.

- கோடங்குடி மாரிமுத்து

Pin It