கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்து தர்ம சாத்திரங்கள் என்று கூறப்படும் மநு, நாரதர், பராசரர், யக்ஞவல்கியர் முதலிய ஸ்மிருதிகளே சட்ட நூல்களாக இருந்தன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட முகலாயர்களுக்கு இசுலாமியச் சட்டமும், இந்துக்களுக்கு இந்து சாத்திரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு வரை இந்துப் பெண்களும், சூத்திரர்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் கணக்கற்றவை.

1856இல் விதவைகள் மறுமணச் சட்டம் வரும் வரையில் இந்துப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள முடியாத நிலையிருந்தது.

வருண - சாதி கலப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக குழந்தைத் திருமணத்தை இந்து சனாதனிகள் திணித்து வந்தனர். 1929இல் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

கணவன் இறந்தவுடன் மனைவியை உயிரோடு சிதையில் தள்ளி எரிக்கும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இராசாராம் மோகன்ராய் முன் முயற்சியால் 1829இல் அது சட்டப்படி தடை செய்யப்பட்டது.uniform civil codeஇந்து மதத்தின் பெயரால் பெண்களைத் தேவதாசிகளாக்கி வைத்து அவர்களைப் பார்ப்பனர்கள் - பண்ணையார்களின் காமவேட்கைக்கு ஆட்படுத்தி வந்தனர். இந்த தேவதாசி முறையை ஒழிக்க நீதிக்கட்சி ஆட்சியில் 1929இல் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 1947இல்தான் இது சட்டமானது.

1955இல் இந்துச் சட்டம் நடைமுறைக்கு வருகின்ற வரை இந்து மதத்தில் பலதார மணமுறைக்கு சட்டப்படி தடையில்லாமல் இருந்தது.

இந்து சாத்திரங்களின் அடிப்படையில் இந்துப் பெண்களுக்குச் சட்டப்படி சொத்தில் பங்கில்லாமல் இருந்தது. 1989இல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாட்டிலும், 2005 முதல் இந்தியா முழுவதிலும் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டு என்பது சட்டப்படி உண்டாயிற்று.

மெக்காலே சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த போதுதான் இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான குற்றவியல் சட்டத்தை 1860இல் இயற்றி நடைமுறைப் படுத்தினார்.

இந்துக்களுக்கு இந்து சாத்திரங்களின் அடிப்படையில் இந்துச் சட்டத்தை 1871இல் இயற்றியவர்களும் ஆங்கிலேயர்களே.

இந்துக்களுக்குப் பொதுவான உரிமையியல் சட்டத்தை இயற்ற முயன்ற ஆங்கிலேயர்கள் 1858 விக்டோரியா அரசியின் அறிக்கையின் அடிப்படையில் மதங்களில் தலையீடாக் கொள்கைக் காரணமாக அதைக் கைவிட்டனர்.

எந்த ஒரு சனநாயக நாட்டிலும் குடிமக்களை வழிநடத்தும் நெறிமுறைகள் அடங்கிய சட்டங்கள் குடிமையியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்கள் என இருவகையாக உள்ளன.

1.           சமூக நடத்தை, நன்னெறி, பாதுகாப்பு முதலியவற்றை ஒழுங்குபடுத்துவதும் இந்த நெறிமுறைகளை மீறுவோருக்குத் தண்டனை அளிப்பது பற்றிய சட்டம் குற்றவியல் சட்டம் (Criminal Procedure Code) ஆகும். இந்தச் சட்டம் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது ஆகும்.

2.           திருமணங்கள் வரைமுறை, குடும்பம், சொத்துரிமை, ஒப்பந்தங்கள் முதலியவற்றை முறைப்படுத்துவதும் இவற்றை மீறுவோருக்குத் தண்டனை முறைகளும் அடங்கிய சட்டங்களின் தொகுப்பு குடிமையியல் சட்டம் (Civil Code) ஆகும்.

இந்தக் குடிமையியல் சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே தன்மையானது அல்ல. மாறாக இசுலாமியச் சமயத்தினருக்கு இசுலாமிய சரியத் தனிநபர் சட்டம் என்றும் கிறித்துவச் சமயத்தினருக்கு கிறித்துவத் தனிநபர் சட்டம் என்றும் பார்சி சமயத்தவருக்கு பார்சி தனிநபர் சட்டம் என்றும் இந்து, பவுத்தம், சமணம், சீக்சிய சமயத்தினருக்கு இந்துச் சட்டம் என்றும் தனித்தனியாக உள்ளன.

மேற்கூறிய 4 வகையான சட்டங்களைச் சமச்சீராக ஒரே சட்டமாக இயற்றிட வேண்டும் என்பதே பா.ச.க. வலியுறுத்துவது ஆகும்.

வெவ்வேறு மதத்தினரோ, சாதியினரோ திருமணம் செய்து கொள்ள சிறப்பு திருமணச் சட்டமும் (1954) நடை முறையில் உள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள ஒரு குறைபாடு மணமக்கள் பெயர்களை 30 நாள்கள் முன்பே அறிவிக்கை எழுதி பெயர்ப் பலகையில் வைப்பார்கள். இதனால் பல திருமணங்கள் நடைபெறாமலே போய் விடுகின்றன. அந்த ஒரு மாத முன் அறிவிப்பை நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

இசுலாமியர்களின் திருமணச் சட்டத்தில் தொடக்கக் காலம் முதலே விதவைத் திருமணத்துக்கு அனுமதி உண்டு. மூன்று முறை தலாக் சொல்லி, விவாகரத்து செய்யும் முறையை 30.3.2017 அன்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு செல்லாது என்று அறிவித்தது.

முத்தலாக் முறை செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், பிரதமர் நரேந்திர மோடி இசுலாமியப் பெண்களின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவும் இசுலாமிய இளைஞர்களை மிரட்டவும் “முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2019” என்பதை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. முத்தலாக் கூறினால் இசுலாமிய ஆண்கள் மூன்றாண்டு சிறை செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தச் சட்டம் எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை.

பாரதிய சனதா கட்சி 2014இல் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்” என்று வாக்குறுதி அளித்திருந்தது.

நரேந்திர மோடி தலைமை அமைச்சராக 2014இல் பொறுப்பேற்ற பிறகு 2016இல் 21ஆவது சட்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பல்பீர்சிங் சவுகான் தலைமையில் அமைத்தார். பொது சிவில் சட்டம் குறித்து பரிந்துரை செய்யுமாறு இந்திய ஒன்றிய அரசு அந்த ஆணையத்தை கேட்டுக் கொண்டது. இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்று 31.8.2018 அன்று 185 பக்க அறிக்கையை ஒன்றிய அரசுக்கு 21ஆவது சட்ட ஆணையம் அளித்தது.

தற்போதுள்ள சூழலில் பொதுச் சிவில் சட்டத்திற்கான வழிமுறையானது “தேவையற்றதாகவும், விரும்பத்தகாததாகவும் உள்ளது. பெண்கள் சமத்துவம் அடைவதற்கான முயற்சிகளை எல்லா சமயச் சட்டங்களிலும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தற்போதைய இந்து தனிநபர் சட்டங்களில் இந்துப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாரபட்சங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.”

குடும்ப வன்முறை தடுப்பு தொடர்பாக உள்ள சட்டத்தின் அம்சங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படும் இஸ்லாமியப் பெண்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் 21ஆம் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதைக் கிடப்பில் போட்டு விட்டது மோடி அரசு.

கர்நாடக மாநில முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையில் 22ஆவது சட்ட ஆணையக் குழு அமைக்கப்பட்டது. பொது உரிமையியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

22ஆவது சட்ட ஆணையம் சூன் 14 முதல் பொது மக்களிடம் பொது உரிமையியல் சட்டம் குறித்து கருத்து கேட்டிருந்தது. ஏறக்குறைய ஒரு கோடி பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பாரதிய சனதா கட்சியினர் ஒருபக்கம் பொது சிவில் சட்டம் என்று கூறிக்கொண்டு, மறுபக்கம் ‘இந்து ராஷ்டிரம்’ அமைப்போம்; அப்போது இந்து மத ஸ்மிருதிகள்தான் ஆட்சி நூல்களாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நீண்ட காலமாக ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். அதே முழக்கத்தைத்தான் மோடி அவர்கள் அண்மையில் முழங்கியுள்ளார்.

“ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், நான்கு சட்டங்களை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும்?” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் நீண்ட காலமாக உள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவர்களுக்கு விலக்கு அளிப்பதாகக் நாடாளுமன்றத்தின் நிலைக்குழுத் தலைவர் சுசில் மோடி கூறிவிட்டார். அப்படியானால் இது எப்படி அனைவருக்குமான பொது சிவில் சட்டம் ஆகும்?

அரசமைப்புச் சட்டத்தில் பொது சிவில் சட்டம் குறித்தான கூறு 44 அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது கூறு 35-ஆக இருந்தது.

23.11.1948 அன்று பொது சிவில் சட்டம் பற்றி நடைபெற்ற விவாதத்தில் அண்ணல் அம்பேத்கர் அதனை நடைமுறைப் படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன; கட்டாயத்தின் அடிப்படையில் இல்லாமல் விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென்று கூறினார். பிற்காலத்தில் நாடாளுமன்றம் அந்தச் சூழலை உருவாக்கிய பிறகு கொண்டு வரலாம் என்று கூறினார். ஆனால் அம்பேத்கர் கூறியதற்கு முற்றிலும் எதிரான சூழலே இன்று நிலவுகிறது.

பா.ச.க.வை பொருத்தவரை இசுலாமியர் தனிநபர் சரியத் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளது.

கோவாவில் 163 ஆண்டு காலமாக பொது சிவில் சட்டம் உள்ளது. அங்கு திருமணம் பிறப்பு, இறப்பு கட்டாயப் பதிவு செய்யப்படுகிறது. திருமணம் நடைபெற்றவுடன் கணவனின் சொத்தில் 50 விழுக்காடு மனைவிக்கு உரிமை வந்து விடுகிறது. இருவரும் இணைந்துதான் சொத்துகளை விற்க முடியும். இப்படி சில சிறப்புகள் இருந்த போதிலும் சில குறைபாடுகளும் உள்ளன.

25 வயது வரை மனைவி பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலோ (அ) 30 வயது வரை ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றாலோ கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று உள்ளது. அதேபோல பார்ப்பனர்கள் பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி பொதுவான சிவில் சட்டமாகும்?

22ஆவது சட்ட ஆணையமோ, ஒன்றிய அரசோ இதுவரை இதுதான் பொது சிவில் சட்டம் என்று அறிக்கை எதையும் மக்கள் முன் விவாதத்திற்கு வைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பா.ச.க.வினரும் இதை விழுந்து, விழுந்து ஆதரிப்பதன் மூலம் அவர்கள் காண விரும்புகிற இந்து ராஷ்டிராவின் இந்துச் சட்டத்திற்கு முதற்படியாக இது இருக்கட்டும் என்று எண்ணுகிறார்கள்.

உண்மையான பொது சிவில் சட்டம் என்பது எந்த மதச்சார்புத் தன்மையும் இல்லாமல் இருப்பதேயாகும். அதைத் தான் உண்மையான மதசார்பற்ற ஆட்சியை நிறுவ நினைக்கும் நம்மை போன்றவர்கள் விரும்புவதாகும். ஆனால் பா.ச.க. ஒருபோதும் அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வராது.

இந்துச் சட்டத்தின் கூறுகளாக உள்ள திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றை பொது சிவில் சட்டம் இதுதான் என்ற பெயரில் மற்ற மதத்தினர் மீது திணித்துவிடும் அபாயம் உள்ளது. எனவே பா.ச.க. கொண்டு வரத் துடிக்கும் பொது சிவில் சட்டம் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகளைப் பறிப்பதாகவே இருக்கும். அனைத்துச் சாதியினரும் பெண்களும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராகும் சட்டத்தை பா.ச.க. ஆட்சி முதலில் இயற்றட்டும். பிறகு பேசலாம் பொதுச் சிவில் சட்டம் பற்றி.

- வாலாசா வல்லவன்