75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் இளைஞர் - சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார்.

karunanidhi and periyarஇது சூத்திரர்களால் - சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு ஒழிப்புக்காக ‘கோயில் கர்ப்ப கிரகத்தில்’ நிலைநிறுத்தப்பட்டிருந்த சூத்திர இழிவை ஒழிக்க பெரியார் போர்க் கொடி தூக்கியபோது, அந்த இழிவை அகற்றிட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி பார்ப்பனரின் பிறவி ஆதிக்கத்தைப் புரட்டிப் போடும் சமூகப் புரட்சி தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அனைத்துக் கட்சி உறுப் பினர்களின் ஆதரவோடு அதை நிறை வேற்றி, சூத்திர இழிவு ஒழிப்பு சரித்திரத்தில் மற்றொரு சாதனையைப் படைத்தவர் கலைஞர். “கர்ப்பகிரகம் பாதுகாக்கப்பட வேண்டியதுதான்; ஆனால் அது வர்ணா ஸ்ரமப் பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்திய தேசியப் பார்ப்பன அதிகாரத்தின் முன் இந்த ‘சூத்திர இழிவு’ ஒழிப்பு இன்னும் வெற்றி பெற முடியவில்லை. பார்ப்பனிய அதிகாரம் இப்போதும் எவ்வளவு வலிமை பெற்று நிற்கிறது என்பதற்கு இது சான்று.

இத்தகைய ‘இந்திய தேசியம்’ எனும் பார்ப்பன-பனியா கட்டமைக்குள்ளே செயல்பட வேண்டிய ஒரு மாநில அரசு என்ற எல்லைக்குள்ளேதான் ஒரு மாநில முதல்வராக ‘பார்ப்பனிய’ சமூகக் கட்டமைப்புகளை சீர்குலைக்கும் திட்டங்களை கலைஞர் முனைப்போடு முன்னெடுத்தார். அடித்தள மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களான கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சித் துறைகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, கணவனை இழந்த பெண்களுக்கு நிதி உதவி, பிச்சைக்காரர் மறுவாழ்வு, திருநங்கை நல வாரியம் என்று இந்த பட்டியல் நீளும். நிலஉச்ச வரம்பை 15 ஏக்கராகக் குறைத்தல், தனியார் பேருந்துகள் அரசுடைமை, தஞ்சை பெரும் பார்ப்பன பண்ணையார்கள் விவசாயக் கூலிகள் மீது நிகழ்த்திய ஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களை விடுவித்த விவசாயத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், விவசாயத்துக்கு இலவச மின்சாரம், பெரியார் சமத்துவபுரம், பெரியாருக்கு அரசு மரியாதை, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அரசு அறிவிப்பு என்று நீண்ட பட்டியலிட முடியும்.

சமூக நீதித் துறையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், அருந்ததியினருக்கு தனி ஒதுக்கீடுகள், கிராமப்புற மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கு தனி ஒதுக்கீடு, முதல் தலைமுறையாக பட்டதாரியாக படிக்க வரும் மாணவர்களுக்கு (அவர்கள் முன்னேறிய சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்) கூடுதல் மதிப்பெண் என்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியதும் அவர் தான். பார்ப்பனிய அதிகாரக் கட்டமைப்புக்கு எதிராக அவர் ஆட்சி அதிகாரத்தைக் கருவிகளாக்கிய இந்த ‘சமூக நீதித் திட்டங்கள்’ வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருக்கின்றன. ‘ஏன் வெற்றி பெற்றுக் காட்டவில்லை; கலைஞர் தோற்றுவிட்டார்’ என்று குற்றம் சாட்டுவது, இந்திய பார்ப்பன அதிகார மய்யத்தின் கொடூரங்களைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது புரிந்து கொண்டு நடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு தலைவரின் அய்ம்பது ஆண்டுகால அரசியல் பயணத்தில் நிச்சயமாக சறுக்கல் சரிவுகள் இல்லை என்று எவருமே நியாயப்படுத்த முடியாது. உண்மைதான் சறுக்கல்களும் உண்டு; அதே நேரத்தில் ‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கை இந்திய பார்ப்பன அதிகார அமைப்பால் புகுத்தப்பட்ட பிறகு அரசியலிலும், சமூகத்திலும் இது உருவாக்கிய சீரழிவுகள் ஏராளம். சுரண்டல், ஊழல், மக்கள் நலனுக்கான அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கள் அதிகாரங்களை ‘தாரை வார்த்தல்’ சீரழிவுகளை கவனத்தில் கொண்டு, அதன் பின்னணியில் சாதனைகளையும் சறுக்கல்களையும் எடை போடுவதே சரியான மதிப்பீடாக முடியும்.

அது மட்டுமல்ல; கடவுளை மதத்தை மறுத்த ஒரு நாத்திகர், 95ஆவது வயது வரை வாழ்ந்து, கடவுள் மத மறுப்புக் கொள்கை களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

மரணத்தைத் தடுத்து நிறுத்தும் அறிவியலை இன்னும் மனித சமூகம் எட்டவில்லை. எதிர்கால அறிவியல் அதை சாதித்துக் காட்டும்; ஆனாலும் 95 வயது வாழ்ந்து காட்டிய மனிதரின் பிரிவு, காலம் கடந்தாவது நிகழ்ந்துதானே தீரும். அதற்காக கலங்குவதோ, கண்ணீர் விடுவதோ உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தாலும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்பதே இயற்கையின் நியதி; அதுவே பகுத்தறிவுப் பார்வை. மகத்தான மனிதர்களின் உடல்கள் இல்லாமல் போனாலும் அவர்களின் சிந்தனைகளும் செயல்களும் அவர்களின் இருத்தலை உறுதி செய்து கொண்டே இருக்கும்.

சமூக விடுதலை என்பது - இந்த நாட்டில் பார்ப்பனியத்துக்கும் பார்ப்பன அதிகாரத்துக்கும் நேர் எதிரான ‘சுயமரியாதை மானுடம்’ நோக்கிய புரட்சிகர மாற்றத்துக்குள்தான் சூள் கொண்டு நிற்கிறது. சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை, சமத்துவம் அனைத்துமே அதில் அடங்கியிருக்கிறது. இந்தப் பாதையில் தனது அதிகாரங்களைக் கொண்டு செலுத்தும் முயற்சிகளில் கலைஞர் முதல்வராக செயல்பட்டிருக்கிறார். ஆட்சிகளைப் பணிய வைக்கும் முயற்சிகளில் எதிர்கட்சித் தலைவராகப் போராடியிருக்கிறார்.

இந்த ‘எதிர்நீச்சலில்’ தடம் புரளாது எதிர்காலத்தில் கலைஞர் கட்டிக் காத்த இயக்கம் பயணிப்பதோடு மட்டுமல்ல; அதை மேலும் கூர்மையாக்கி விரைவுபடுத்த வேண்டும். அதைத் தான் வரலாறு கோரி நிற்கிறது. அதில்தான் கலைஞரின் பெருமையும் உயிர்ப்பும் தங்கி நிற்கிறது.

(‘நிமிர்வோம்’ தலையங்கம் ஜூலை 2018 இதழ்)

Pin It