தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை நாம் உருவாக்கிய கல்வி அமைப்பு. அந்த அமைப்பை நாம் பார்ப்பன ஆதிக்கத்தி லிருந்து பறித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பகிர்ந்தளித்தோம். பிரிட்டிஷ்காரர் நாட்டை ஆண்டபோது பிரிட்டிஷார் வழங்கிய நமக்கான சொற்ப அதிகாரங்களோடு மாகாண சபையை நமது முன்னோர்களான நீதிக் கட்சியினர் வழியாக ஆட்சி செய்தோம். 1928ஆம் ஆண்டிலேயே நாம் இந்த கல்வி வேலைவாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். “சுதந்திர”த்துக்குப் பிறகு காமராசர் ஆட்சி யில் சமூகநீதி இலவசக் கல்வி மடை திறந்த வெள்ளம்போல் பரவியது. தொடர்ந்து அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சி யிலும் நாம் நமக்கான இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கொள்கையைக் கொண்டே முன்னேறினோம். அதனால்தான் மண்டல் பரிந்துரையை அமுலாக்கி, மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, அதன் காரணமாகவே பிரதமர் பதவியை இழந்த மாமனிதர் வி.பி.சிங், “சமூக நீதிக்கான தலைநகரம் இந்தியாவில் தமிழ்நாடுதான்” பெருமையோடு என்று கூறினார். இன்று அமுலில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவரும் வி.பி.சிங்தான்.

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட் டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையி லிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்திருப்பதே ‘நீட்’ தேர்வு.

•             2006ஆம் ஆண்டிலேயே நாம் நுழைவுத் தேர்வை ஒழித்து விட்டோம். அது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடை என்பதை உணர்ந்தோம்.

•             ‘ப்ளஸ் டூ’ வரை கடுமையாக உழைத்து மதிப்பெண்களைப் பெறும் நமது பிள்ளைகள், நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருந்தபோது ‘நீட்’ தேர்வு எனும் பேரிடியை மத்திய மோடி ஆட்சி நம் மீது திணித்தது. “ப்ளஸ் டூ மதிப்பெண்களை குப்பையில் போடு; நாங்கள் ஒரு தகுதித் தேர்வு நடத்துவோம்; இதில் தேர்ச்சிப் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரிக்கு போகலாம்” என்கிறது மத்திய மோடி ஆட்சி.

                சி.பி.எஸ்.ஈ. என்ற மத்திய அரசு பாடத் திட்டத்தில் நடத்தப்படுவது இந்தத் தேர்வு, அந்தப் பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் 15 சதவீதம் பேர். அதுவும் பார்ப்பனர், பணக்காரர், உயர்சாதி, மேட்டுக்குடி வர்க்கத்தினர். 85 சதவீதம் நமது மாநில அரசு பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாணவர்கள், நமது மாணவர்கள் ‘நீட்’ தேர்வு முறைக்கு பழக்கப்படா தவர்கள். எனவே ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியவில்லை.

•             2016 மார்ச்சில் தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் நமது மாநில பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர் 8,33,682. மத்திய பாடத் திட்டமான சி.பி.எஸ்.ஈ.யின் கீழ்த் தேர்வு எழுதியோர் 13,265. தமிழகத்தில் 2 சதவீதம் கூட மத்திய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதவில்லை. ஆனால், நீட் தேர்வினால் மாநில பாடத் திட்டத்தில் படித்த 98 சதவீத மாணவர்கள் கல்வி மறுக்கப்படும் அபாயம் உள்ளது.

•             தமிழ்நாட்டில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலே இங்குதான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நமது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ மாணவிகளின், ஓர் ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ.20,000 தான். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுத ஒவ்வொரு மாணவரும் தனிப் பயிற்சி மய்யத்துக்கு செல்ல வேண்டும். அங்கு ரூ.50 ஆயிரம், ஒரு இலட்சம் என்று கட்டணம். கிராமப்புற மாணவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது எவ்வளவு பெரிய சுமை? ‘பிளஸ் டூ’ தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து முடித்த களைப்பு நீங்கும் முன்பே நீட் தேர்வுக்கு பயிற்சி என்றால், அவர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம்?

•             தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்புகளுக்கான இடங்களில் 15 சதவீத இடங்களையும் மேல்பட்டப் படிப்பான எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்பு களுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும் மத்திய அரசு கோட்டா என்ற பெயரில் இடங்களைப் பறித்துக் கொள்கிறது. மேல் பட்டப்படிப்புக்கு மேலே படிக்கும் உயர் சிறப்புப் படிப்பு களும் உண்டு. டி.எம்., எம்.சி.ஏ.எச். போன்ற இத்தகைய உயர் சிறப்புப் படிப்புக்கான இடங்கள் இந்தியா விலேயே நமது தமிழ்நாட்டில்தான் மிக அதிகம். (192 இடங்கள்) மற்ற மாநிலங் களில் ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் இருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தையும் ‘பகிரங்கப் போட்டி’க்கு உள்ளாக்கி பிற மாநிலத்துக்காரர்களை நம்முடைய அரசு செலவின் கீழ் படிக்க கதவு திறந்துவிட்டு விட்டார்கள். உதாரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உயர் சிறப்புக்கான மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 8இல் 6 இடங்களை வட மாநிலத்தவர் பிடித்துக் கொண்டுள்ளனர். கல்லீரல் மருத்துவத்துக்கு அதி உயர் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இரண்டு. இரண்டுமே நமது மக்களுக்குக் கிடைக்கவில்லை. பிற மாநிலத்தவருக்கு போய் விட்டது. நமது செலவில் நாம் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்காமல் ‘அகில இந்திய கோட்டா’ என்று வெளி மாநிலத்துக்காரர்கள் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். எனவேதான் அகில இந்திய கோட்டாக்களே வேண்டாம்; எங்கள் மாநிலத்தில் நாங்கள் உருவாக்கும் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் எங்கள் மாணவர்கள் படிக்க வேண்டும்; அவர்கள் சேவை எங்கள் தமிழ் நாட்டுக்கே வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம்.

எங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நாங்களே நடத்திக் கொள்ள வேண்டும். டெல்லி ஆட்சி திணிக்கும் நீட் தேர்வு வேண்டாம்; இதனால் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து வரும் எங்கள் நாட்டு மாணவர்கள் இடங்களைப் பெற முடியவில்லை.

இப்போது நீட் தேர்வில் வெளிநாடுகளில் வாழும் பார்ப்பன உயர்ஜாதி மற்றும் தொழிலதிபர் வீட்டுப் பிள்ளைகள், வெளி நாட்டுக்காரர்களாக குடியுரிமைப் பெற்றுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் இந்தியர்கள். (இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்) இந்தியாவிலேயே பிறக்காத வெளிநாட்டுக்காரர்கள் அனைவருமே நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க வழி திறந்து விட்டார்கள். நீட் தேர்வை உலகத் தேர்வாக்கிவிட்டோம் என்கிறது, மோடி ஆட்சி! என்னடா கொடுமை!

அரியலூரிலிருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் அமெரிக்காவி லிருந்து வரும் மாணவர்களோடும், ஆடுதுறையிலிருந்து மருத்துவம் படிக்கவரும் நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பெண், ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கி நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களோடும் போட்டியிட்டு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்?

எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு கிராமங்களில் 3 ஆண்டு பணியாற்றினால் உயர் பட்டப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு என்ற முறையை நாம் பின்பற்றுகிறோம். இதனால் நமது கிராம சுகாதார மய்யங்களில் மருத்துவர்கள் பணியாற்ற வந்தார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளில்தான் இவர்கள் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை இருந்ததால் தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் உயர் கல்வி பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கிடைத்தார்கள். ‘நீட்’ தேர்வு வழியாக மோடி ஆட்சி இந்த ஒதுக்கீடுகளையும் ஒழித்து விட்டதால், நமது கிராமப்புற சுகாதார மய்யங்களில் பணியாற்ற மருத்துவர்களே வரமாட்டார்கள். அரசு மருத்துவமனை களிலும் உயர் மருத்துப் படிப்பு படித்த மருத்துவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இனி தனியார் மருத்துவ மனையை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் வரும். பல இலட்சம் ரூபாயை ஏழை எளிய மக்கள் இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு கொட்டி அழ முடியுமா?

ஆக, நீட் தேர்வு மருத்துவ படிப்பை மட்டும் பாதிக்கவில்லை; நமது மருத்துவ சேவையையும் பாதிக்கிறது. நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என்ற நீண்ட பாரம்பரியத்தில் நாம் கட்டிக் காத்த சமூக நீதிகளை பறிக்கிறது, மத்திய மோடி ஆட்சி. இதனால் பாதிக்கப்படுவது அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும், அனைத்து மதங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மாணவர்களும்தான். இந்த உரிமைகளுக்கு ஒன்றுபட்டு நாம் குரல் கொடுக்காமல் மதத்தைக் காட்டி, ஜாதியைக் காட்டி சண்டை போட்டுக் கொண்டிருக்கலாமா? நாமெல்லாம் உணர்வுள்ள சமூகநீதிக்கான புரட்சிகர தமிழர்களாய் மாற வேண்டாமா? இதை எடுத்துச் சொல்லவே இந்தப் பயணம். 

Pin It