அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைப்பது சரியல்ல. அவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும். மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தி.

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 4600 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் அகில இந்தியத் தொகுப்பில் உள்ளன. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இடங்களில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை.

பல முறை இது குறித்த கோரிக்கைகளை முன்வைத்த பிறகும், மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 1242 மருத்துவ இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவில்லை. இந்த 1242 மருத்துவ இடங்களிலும் அதிக அளவில் முன்னேறிய வகுப்பினரே சேர்ந்து வருகின்றனர்.

இது சமூக நீதிக்கு எதிரானது.

இந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடை நடப்பு கல்வியாண்டிலேயே வழங்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ,நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இது இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினரை மிகக் கடுமையாக பாதிக்கும்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல், முன்னேறிய வகுப்பில் உள்ள, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடை வழங்குவது, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இழைக்கும் மாபெரும் துரோகமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருதுகிறது.

எனவே, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவத் துறையில் இளநிலைப் பிரிவில் இந்தியாவிலுள்ள மொத்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 216; அதிலுள்ள MBBS இடங்கள் 30,455. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கல்லூரிகள் (முதல் மாநிலம்) மற்றும் 3,250 இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும், ஆக 4,600 இடங்கள் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய தொகுப்பிற்குத் தருகின்றன.

தமிழகம் மட்டும் 490 இடங்களைத் தருகிறது (வேறு எந்த மாநிலத்தையும்விட அதிகம்). இந்த மொத்தமுள்ள 4,600 இடங்களில் மத்திய அரசு SC/ST க்கான இடஒதுக்கீட்டை 22.5 சதவீதம் வழங்குகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதில்லை. ஏனெனில் இந்த 4,600 இடங்களும் ஒரு கல்லூரியைச் சார்ந்தவை அல்ல, அது ஒரு கூட்டுத் தொகுப்பு தான்.

எனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறது.

அதே அரசு 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை (EWS quota) இந்த வருடமே இந்த 4,600 இடங்களில் அமல்படுத்த வேண்டும் என்று NATIONAL TESTING AGENCY மற்றும் MCI-க்கு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 4600 இடங்களை பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினருக்கு உறுதி செய்தாகிவிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 1242 இடங்களை அளிக்காமல் கொல்லைப்புறம் வழியாக அதையும் பார்ப்பனர்களுக்கே தாரை வார்க்கின்றது.

Pin It