கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பிரிட்டிஷ் ஆட்சி - காங்கிரஸ் ஆட்சி காலங் களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறுகளைத் தொடர்ந்து இத்தொடரில் - அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

27 சதவீத இடஒதுக்கீடு மறுப்பு

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24 ஆண்டுகள் கழிந்த பிறகும் 27 சதவீதத்தில் இன்னும் பாதியளவுகூட பிற்படுத்தப்பட்டோருக்குப் பணிகள் வழங்கப்பட வில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1993 செப்டம்பர் 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இப்போது என்ன நிலை? மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை.

24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும் பணியாற்றுகிறார்கள். 24 அமைச்சகங்கள், மொத்த முள்ள 37 அரசுத்துறைகளில் 24 துறைகள், சட்ட அங்கீகாரம் பெற்ற 8 அமைப்புகள் (பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் செயலகம், பொருளாதாரம் தொடர்பான அமைப்புகள்) உள்ளிட்ட 54 நிறுவனங்கள், துறைகள் பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் குரூப் ‘ஏ’ பிரிவில் 14 சதவீதம். ‘பி’, ‘சி’, ‘டி’ பிரிவுகளில் முறையே 15, 17, 18 சதவீதமும் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்கள் இருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவைக்கான செயலகத்தில் (Cabinet Secretariat) 64 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில், ஒருவர்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லை. 60 பேர் திறந்த போட்டியில் வந்தவர்கள் (இவர்கள் பார்ப்பனர், உயர் ஜாதியினர்) பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்தவர்கள் 4 பேர் மட்டுமே. தகவல் மற்றும் ஒலி/ஒளி பரப்பு அமைச்ச கத்தில் மொத்தமுள்ள 503 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் 25 பேர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்கள்.

2015ஆம் ஆண்டில் இதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 12 அமைச்சகங்கள் 10அரசுத் துறைகள், மற்றும் சட்ட அங்கீகாரமுள்ள நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்களின் எண்ணிக்கை ‘ஏ’ பிரிவில் 10.71 சதவீதம், ‘பி’ பிரிவில் 7-18 சதவீதம்.

2013ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலின்படி 55 மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 9.43 சதவீதம் மட்டுமே.

சென்னையைச் சார்ந்த சமூக செயல்பாட்டாளர் முனைவர் ஈ. முரளிதரன், இந்த தகவல்களைப் பெற்றுள்ளார்.

மத்திய வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தந்துள்ள தகவல்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

“தரப்பட்டிருக்கும் தகவல்கள்கூட முழுமை யானவை அல்ல. இவற்றில் 11 அமைச்சகங்கள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டன. இந்தத் துறைகள்தான் வேலை வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும் துறைகள், தொடர்வண்டித் துறை, பாதுகாப்புத் துறை, உள்துறை, நிதித்துறை போன்றவை தகவல் தெரிவிக்க மறுத்து விட்டன. மத்திய அரசின் மொத்த வேலை வாய்ப்புகளில் 91.25 சதவீத வேலை வாய்ப்புகள் இந்தத் துறைகளில்தான் இருக்கின்றன. இப்போது தகவல் தெரிவித்துள்ள 24 அமைச்சகங்களில் மொத்த வேலைகளில் 8.75 சதவீதம் வேலைகள் மட்டுமே உள்ளன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொடர்வண்டித் துறையில் மத்திய அரசுப் பணியாளர்களாக பதிவு செய்தவர்கள் 13,28,199. இவர்கள் நிரந்தரப் பணியாளர்கள். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனப் பிரிவினர் குறித்த எந்தத் தகவலும் இல்லை.

மத்திய அரசுப் பணிகளில் 31 இலட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாம் பெற்றிருக்கும் தகவல் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 735 ஊழியர்களைப் பற்றி மட்டுமே.

2015ஆம் ஆண்டில், நான் தகவல் கேட்டபோது, 40 அமைச்சகங்கள், 48 மத்திய அரசுத் துறைகள், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக் குறித்து, தகவல் தர மறுத்து விட்டன.

மத்திய வேலை வாய்ப்பு, பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை, 2013ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஒரு தாக்கீதை பிறப்பித்தது. (O.M. No.43011.10.2002 ESTT. RES) இதன்படி ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் பட்டியல் இனம், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பிரதிநிதித்துவம் குறித்தத் தகவலைத் தெரிவிப்பது கட்டாயக் கடமை’ என்று இந்த தாக்கீது அறிவுறுத்தியது. ஆனால் அது கிடப்பில் போடப் பட்டது.

2013 ஜூன் மாதம் மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகம் விரிவான ஒரு தாக்கீதைப் பிறப்பித்தது. (No.36038/1(i) 2013 ESTT. RES) அதில் பட்டியல் இனப் பிரிவினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக் கான நிரப்பப்படாத பணியிடங்களை, விரைவாகக் கண்காணித்து, உயர்மட்ட அளவில் முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியது. 6 மாதத்துக்குள் பணியிடங்களை நிரப்புவதற்கான விரைவான செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும். அதற்காகத் தேவைப்பட்டால், விதிகளிலிருந்து விலக்குகளை வழங்கலாம் என்றும் தாக்கீது அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து மத்திய வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் நாடாளுமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சமூக நீதித் துறை அமைச்சகத்தின் பரிந்துரைப்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான முனைப்பான செயல்பாடுகள் 2014 நவம்பர் 11இல் தொடங்கி, ஆகஸ்டு 2016க்குள் முடிக்கப்படும் என்றார்.

இதற்கான செயல் திட்டங்களும் உருவாக்கப் பட்டன. அந்த செயல் திட்டங்கள் செயலாக்கம் பெற்றிருக்குமேயானால் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. தாக்கீதுகளோ, செயல் திட்டங்களோ முழுமையாக அலட்சியப்படுத்தப் பட்டதைத்தான் இந்த புள்ளி விவரங்கள் காட்டு கின்றன என்றார் முனைவர் முரளீதரன்.

இறுதியாக 2019ஆம் ஆண்டு நிலவரம் இது தான்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள், 27 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளான பிறகும், மத்திய அரசின் அதிகாரப் பகிர்வில் நாட்டின் பெரும்பான்மை மக்களான ஓபிசி (சூத்திர) பிரிவினர்க்கு இன்னமும் அவல நிலை.

குரூப் ‘ஏ’ பதவிகள் - 27 துறைகளில் ஓபிசி பிரிவினர் ‘ஜீரோ’ (ஒருவர்கூட இல்லை).

மத்திய அரசின் 41 அமைச்சக / துறைகளில் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் எண்ணிக்கை (31.3.2019).

reservation status in union govt

ஆதாரம் : மத்திய பொது நிறுவனங்களின் துறை சர்வே அறிக்கை 2018-2019.

(தகவல் அனுப்பி உதவியவர்: தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர் கோ. கருணாநிதி)

தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வடநாட்டுக்காரர்கள்

“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், இரயில்வே பயணச் சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக் காப்பீடு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர் களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர் கொள்கிறார்கள். டெல்லி அரசுகளின் கயமைத் தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புரிமை தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

இது சேவைத்துறைகளில் மட்டு மல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற் துறைகளான (Factories and Enterprises) என்.எல்.சி (NLC), ஓ.என்.ஜி.சி (ONGC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, இராணுவ உடை தயாரிப்பகம் (Defence Factories), இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலை யம் ஆகிய தொழிற்சாலைகளில் இந்த நிலை தான்.

மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகளில் அதிகாரிகள் அளவிலான பணி நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வு களில் முதற்கட்ட அப்ஜெக்டிவ் (Objective) வினாத் தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது. இரண்டாம் கட்ட எழுத்துமுறை தேர்வுகளை (Descriptive) இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுகளும் (Interview) டெல்லியில் மையமிட்டு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் அளிப்பவர்கள் பெரும்பாலும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்தி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழகத்தை சேர்ந்தவர்கள் பின்னுக்கு தள்ளப்படு கிறார்கள். இலட்சங்களில் மாத ஊதியம் பெறும், இவ்வாறு தேர்வு செய்யப்படும் அதிகாரிகளே எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களுக்கு தலைமைப் பொறுப்புகளுக்கு வருகிறார்கள், இவ்வாறு தலைமைப் பொறுப்புகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர் களை வரவிடாமல் தடுப்பதற்கான டெல்லியின் சூழ்ச்சியினால் இப் பணியிடங்களுக்கு தமிழர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படுவதில்லை.

இதே நிலைதான் அதிகாரிகள் அல்லாத பணியாளர் அளவிலான தேர்வுகளுக்கும் பணியாளர் அளவிலான தேர்வுகள் மாநில அளவிலோ அல்லது மண்டல அளவிலோ நடத்தப் படவேண்டும் என்று பல ஆணைகள், தீர்ப்புகள் உள்ளன. ஆனால் இவை எல்லாம் காற்றில் விடப்பட்டு, படிப்படியாக தளர்த்தப்பட்டு மத்திய அரசின் ஆதிக்கப் போக்கினால் இப்பணிகளும் அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு 2006 ஆண்டுவரை மத்திய பணியாளர் தேர்வாணையம் மண்டல அளவிலேயே தேர்வுகளை நடத்தி வந்தது, தபால் துறை தபால் உதவியாளர் பணியிடங்களுக்கு 2014 வரை மாநில அளவில் நடத்தி வந்தது. அப்போது இத்தேர்வுகளில் அப்ஜெக்டிவ் (Objective) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) மூலமாக இரண்டு கட்ட நிலைகளில் பணி நியமனச் சேர்க்கை நடைபெற்று வந்தன. இதனால் அந்தந்த மாநில மக்களுக்கான வேலை வாய்ப்புகள் மத்திய அரசு நிறுவனங்களில் கிடைத்து வந்தது.

பின்னர் இவை அகில இந்திய அளவிலான தேர்வுகளாக மாற்றப்பட்டு இத்தேர்வுகளில் இந்தி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சூழ்ச்சிகள் செய்யப்பட்டு எழுத்துமுறை (Descriptive) வினாத் தாள்கள் இந்தியில் நுழைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அப்ஜெக்டிவ் (Objective) வினாத்தாள் களும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் இருப்பதால், இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, வினாக்களை எளிதில் புரிந்து கொண்டு விடையளிப் பது மிகவும் எளிதாக இருக்கிறது. மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே விடையளிக்க வாய்ப்புகளை இந்திய அரசு ஏற்படுத்தித் தந்து இந்தி பேசும் மக்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறது என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறோம். மிக உயரிய முதல்நிலை IAS, IPS பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தும் UPSC கூட தேர்வுகளைத் தமிழில் நடத்துகிறது. ஆனால் மக்களிடையே நேரடியாக தொடர்பு கொண்டு களத்தில் பணியாற்றும் இப்பணியிடங்களுக்கு நாம் பலமுறை வலியுறுத்தியும் இந்திய அரசானது தமிழில் தேர்வுகளை நடத்த மறுக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு இந்தி பேசும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சிறு நகரங்களுக்கும், மாவட்ட தலைநகரங்களுக்கும் பணியமர்த்தப் பட்டு பெருவாரியாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் சேவைகளைப் பெற வேண்டுமானால் அங்கு பணியாற்றும் இந்தி மட்டுமே தெரிந்த வேற்று மாநிலப் பணியாளர்களிடம், இந்தி தெரிந்தால் மட்டுமே சென்று அவர்களின் சேவையை பெற முடியும் என்ற நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியிடங்களில் தேவைக்கேற்ப மண்டல அளவிலோ அல்லது மாநில அளவிலோ பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தும் (Radhe Shyaam Vs Union of India) மத்திய அரசானது தான் தோன்றித்தனமாக வடவர்களை பணிகளில் திணிப்பதையே கருத்தாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளை தமிழர்களுக்கு மறுக்கும் இந்த ஆபத்தான போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டியது அவசரம்; அவசியம்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 1.10.2015 நிலவரப்படி 18 தேசிய வங்கிகளில் மொத்தமுள்ள 450 மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 5 பேர் மட்டுமே. 1255 துணை மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 16 பேர் மட்டுமே. அதாவது 1.1 சதவீதம். அரசின் கீழ் உள்ள நான்கு ஆயுள் காப்பீட்டுக் கழகங்களில் (இன்சூரன்ஸ் நிறுவனங்கள்) 43 மேலாளர் பதவிகளில் ஒரே ஒருவர்தான் பிற்படுத்தப்பட்டவர். 275 துணை மேலாளர் பதவிகளில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர். ‘தலித்’ நிலையை சொல்லவே வேண்டாம்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்