பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய சாதியினருக்குப் பத்து விழுக்காடு இடஒதுக்கீடு என்ற சட்டம் நிறைவேறியபோதே, இது சமூக நீதிக்கு எதிரானது என்று தமிழகம் உரத்துச் சொன்னது. அது இப்போது உண்மையாகி விட்டது. 

sbi brahminsஅந்தச் சட்டம் நிறைவேறியபின் வெளிவந்துள்ள வங்கித் தேர்வு முடிவுகள் பேரதிர்ச்சியாய் உள்ளன. இந்திய அரசு வங்கி (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா)ப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் பெறவேண்டிய குறைநிலைத் தகுதி மதிப்பெண்ணை (கட் ஆப் மார்க்) அவ்வங்கி வெளியிட்டுள்ளது. அதன் படி, பொதுப்போட்டியில் பங்கேற்போர் (ஓசி), பிற்படுத்தப்பட்டோர் (பிசி), தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) அனைவரும் குறைந்தது 61.25% மதிப்பெண்களாவது பெற்றிருந்தால்தான், இறுதித்தேர்வுக்கு அவர்கள் செல்ல முடியும். மலைவாழ்மக்கள் (எஸ்டி) கூட 53.75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மாதம் 65000 ரூபாய் ஊதியம் பெறும் ஏழைகளான (!) முன்னேறிய வகுப்பினர் 28.5% மதிப்பெண்கள் பெற்றாலே போதும், இறுதித் தேர்வுக்குச் சென்றுவிடலாம். 

இப்படி ஒரு சமூக அநீதி நம்நாட்டில் இழைக்கப்பட்டுள்ளது. இப்போதும் தமிழகம் தவிரப் பிற மாநிலங்கள் அமைதியாகவே இருக்கின்றன. 

இங்கே நான்கு வினாக்களை மட்டும் நாம் முன்வைக்கிறோம். .

  1. அனைத்து வங்கிகள் பணியாளர் தேர்வுக்கும், ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு IBPS (Institute of Bank Personnel Selection Committee) என ஒன்று இருக்கும்போது, இந்திய அரசு வங்கிக்கு மட்டும், தனித்த தேர்வுக் குழு எதற்காக?
  2. இறுதிநிலைத் தேர்வுக்குத்தான் தகுதி மதிப்பெண் (Qualifying mark) உண்டு, முதல்நிலைத் தேர்வுக்கு அது கிடையாது என்னும்போது, தகுதி மதிப்பெண்ணே இல்லாத இடத்தில், குறைநிலைத் தகுதி மதிப்பெண் எங்கிருந்து வந்தது? 
  3. 10% இடஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு, வரும் 30 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் வேளையில், இந்தத் தேர்வு முடிவுகளை இவ்வளவு அவசரம் அவசரமாக வெளியிட வேண்டிய தேவை என்ன? ஒருவேளை, உச்சநீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்து விடுமோ என்ற அச்சமே காரணமா? அதற்குள் முடிந்தவரை தங்கள் ஆள்களை உள்ளே கொண்டு வந்து விடலாம் என்ற துடிப்பா? ‘பலித்தவரை...என்பதுதான் பார்ப்பனியம்' என்று எங்கள் அய்யா பெரியார் சொன்னது இப்போது மெய்ப்பிக்கப்படுகின்றதா? 
  4. மலைவாழ் மக்களின் பிள்ளைகள் வாங்கியுள்ள மதிப்பெண்களில் கூடப் பாதியைத்தான் எட்ட முடிந்துள்ளது என்றால், இதுவரையில் வாய்கிழியப் பேசிவந்த முன்னேறிய சாதியினரின் ‘தகுதி, திறமை' என்பதெல்லாம் நூற்றுக்கு நூறு பொய்தானே? 

இன்னும் பல வினாக்கள் இருக்கின்றன. இப்போதைக்கு இந்த நான்கு வினாக்களுக்கு மட்டுமாவது, மெத்தப் படித்த மேதாவிகள் யாருமிருப்பின் விடை சொல்லட்டும்!

Pin It