திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மீது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மயிலாடு துறையில் கழகப் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக சுமார் ஓராண்டுக்குப் பிறகு காவல்துறை இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

“தந்தை பெரியாரை யார், எதற்காக எதிர்க்கிறார்கள்?” என்ற தலைப்பில் அப்பொதுக் கூட்டம் நடந்தது. இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மயிலாடுதுறை காவல்துறை இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 153 (பி), 504 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இவை பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளாகும். இதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் துரை. அருண், உயர்நீதிமன்றத்தில் விடுதலை இராசேந்திரன் சார்பாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு கடந்த 28ஆம் தேதி மனு விசாரணைக்கு வந்தது.

“ஒரு வருடம் கழித்து, இப்போது வழக்குப் பதிவு செய்வது ஏன்? இந்த பேச்சுக் குறித்து எவரிடமிருந்தும் புகாரும் வரவில்லை. இரு தரப்புக்கிடையே மோதல் உருவாகும் சூழலில் ஒரு வருடமாக ஏதும் நிகழ்ந்து விடவும் இல்லை” என்று கருத்துக் கூறிய நீதிபதி, நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தர விட்டார். அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், காவல் துறை சார்பில் நேர்நின்று பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். விடுதலை இராசேந்திரன் சார்பில் துரை. அருண் வாதாடினார். மயிலாடுதுறையில் தங்கி ஒவ்வொரு நாளும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Pin It