‘குடிஅரசு’ தொகுதிகளை கழகம் வெளியிட்டது
துரோகம் - தடைகளைக் கடந்து பெரியார் திராவிடர் கழகம் பெரியார் எழுத்து பேச்சுகளடங்கிய 27 ‘குடி அரசு’ தொகுப்புகளை11.6.2010 அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் வெளியிட்டது. ஜூன் 9 ஆம் தேதி பகல்2 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் குடிஅரசு தொகுப்பை வெளியிட தடை இல்லை என்று உயர்நீதிமன்ற மேல் அமர்வு அவை தீர்ப்பு வழங்கியவுடன், ஒரே நாள் இடைவெளியில் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்று மழை தூறிக் கொண்டிருந்தாலும் அரங்கு முழுதும் பத்திரிகையாளர்களும் பெரியாரியல்வாதிகளும் தோழர்களும் ஏராளமாக திரண்டிருந்தனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை ஏற்றார். வழக்கறிஞர் துரைசாமி வரவேற்புரையாற்றினார். ‘ரிவோல்ட்’ தொகுப்புப் பணியை எஸ்.வி. இராஜதுரை அவர்களுடன் இணைந்து செய்து முடித்த தோழர் வ. கீதா, கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக் குழு தலைவர் ஆர். நல்லக்கண்ணு முதல் இதழைப் பெற்றுக் கொண்டார். அப்போது அரங்கத் துக்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
தோழர் நல்லக்கண்ணு தமது உரையில், நாட்டில் சாதிக் கலவரங்கள் நடப்பதையும், வடநாட்டில் ஒரே கோத்திரத்துக்குள் திருமணம் செய்தால் கொலை செய்யப்படுவதையும் அதேபோல் தமிழ் நாட்டில்,சாதி மறுப்பு கலப்பு திருமணம் செய்தால் கொலை செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டி, பெரியாரின் கருத்துகள் இன்னும் நீண்ட காலத்துக்கு இங்கே தேவைப்படுகிறது. அவரது கருத்துகள் பரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நடிகவேள் எம்.ஆர். ராதா எதிர்நீச்சல் போட்டு, நாடகங்களின் வழியாக சமூக மாற்றத்துக்கான கருத்துகளைப் பரப்பியதை நினைவு கூர்ந்த தோழர் நல்லக்கண்ணு, நடிகவேள் 3500 முறை அரங்கேற்றிய ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்துக்கு கதை வசனம் எழுதியவர் திருவாரூர் தங்கராசுதான் என்பதை இளைய சமு தாயத்துக்கு தெரிவிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
தூக்கு மேடை ஏறிய மாவீரன் பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன்?’ என்ற நூலை முதன்முதலாக தமிழில் வெளியிட்டது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். தமிழில் மொழியாக்கியவர் தோழர் ஜீவா தான். அதற்காக அவர் கைது செய்யப்பட்டார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், தமிழில் பெரியார்தான் முதலில் வெளியிட்டார் என்ற வரலாற்று நிகழ்வுகளை தோழர் நல்லக்கண்ணு நினைவுகூர்ந்தார். பெரியார்,சிங்காரவேலர், திரு.வி.க., இராஜாஜி போன்ற தலைவர்கள் பொது வாழ்க்கையில் இருந்த காலத்தில் இருந்த அரசியல் நாகரிகம் இப்போது மங்கிப் போய்விட்டது என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
திருவாரூர் தங்கராசு பேசுகையில் - ஏசு, நபிகள், புத்தர், காந்தி என்று உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் தங்களது கருத்துகளையே மக்களிடம் கூறினார்கள். ஆனால், பெரியார் ஒருவர் மட்டும் தான், “நான் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்; உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து சரி என்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிய தலைவர். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் சிந்தனைகளுக்கு எவரும் பதிப்புரிமை கோரவில்லை. அவர்களுக்கு வாரிசுகள் இல்லை போலும் என்று குறிப்பிட்ட அவர், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, குரான்,பைபிள் என்று மதத்தைப் பரப்பும் பழமை கருத்துகள் பதிப்புரிமைத் தடைகள் இன்றி மீண்டும் மீண்டும் மக்களிடையே பரப்பப்படுகிறது. ஆனால், பெரியார் கருத்துகளுக்கு மட்டும் பதிப்புரிமை கேட்டு, தடை வாங்குகிறார்கள். பெரியாரின் வாரிசாக உரிமை கோருவதற்கு கி. வீரமணிக்கு எந்த தகுதியும் கிடையாது. பெரியார் இயக்கத்தை தனது சொந்த நலனுக்குப் பயன்படுத்தி வளர்ந்தவர் என்று கூறினார்.
கழகம் வெளியிட்டுள்ள மற்றொரு தொகுப்பான ‘ரிவோல்ட்’ஆங்கிலத் தொகுப்பை தொகுத்தவர்கள் தோழர்கள் வ. கீதா, எஸ்.வி. இராஜதுரை ஆகியோர் ஆவர்.
‘ரிவோல்ட்’ ஏட்டின் புரட்சிகர உள்ளடக்கங்கள் பற்றியும், அதில் பெண்கள் முற்போக்கு சிந்தனை யாளர்கள், உலகப் பகுத்தறிவாளர்கள் எழுதிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதையும்,சுட்டிக் காட்டி வ.கீதா உரையாற்றினார்.
பொதுச்செயலாளர் கோவை இராம கிருட்டிணன் தனது உரையில் -“பெரியார் கருத்துகளை வேகமாகப் பரப்பிடும் தேவை உள்ளபோது,அதைத் தடுக்க முயல்வோர் எப்படி பெரியாரியல்வாதியாக இருக்க முடியும் என்று கேட்டார். ஊரில் மூலைக்கு மூலை பிள்ளையார் கோயில்கள் இருக்கின்றன. அதற்கு தலைமை பிள்ளையார் கோயில் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா?” என்று திருவாரூர் தங்கராசு கூட்டங்களில் பேசியதை சுட்டிக் காட்டிய இராமகிருட்டிணன், இந்தத் தீர்ப்பு பெரியாரை விடுதலை செய்து விட்டது என்றார்.
பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இந்த கடும் போராட்டத்தில்,பெரியார் திராவிடர் கழகத்தின் பக்கம் இருந்த நியாயங்களுக்காகக் குரல் கொடுக்க முன் வந்த அமைப்புகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நன்றி கூறினார். அவர்கள் தான் இந்த இயக்கத்துக்கு வலிமை சேர்ப்பவர்கள் என்று நன்றியுடன் பதிவு செய்தார். ஏற்கனவே பெரியார் கொள்கையிலிருந்து வீரமணி விலகிப் போய்,அரசியல் தலைவரைப் போலவே மாறி விட்டார் என்று மக்கள் மன்றம் ஒதுக்கிவிட்டது. இப்போது நீதிமன்றமும், பெரியார் எழுத்துகள், வீரமணியின் ஏகபோக உரிமையல்ல என்று தீர்ப்பளித்துவிட்டது. தனது சொந்த செலவில் நீதிமன்றத்தின் வழியாகவும் கி. வீரமணி இப்படி ஒரு தீர்ப்பைப் பெற்றுக் கொண்டுவிட்டார் என்று குறிப்பிட்ட விடுதலை இராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட குடிஅரசு தொகுப்புகளை கழக இணையதளத்திலிருந்து, எவர் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன என்று பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.
திராவிடர் கழக இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள பெரியார் படங்களுக்குக்கூட பதிவிறக்கம் செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்தவர் வீரமணி என்பதை சுட்டிக்காட்டிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சாமி சிதம்பரனார் எழுதி, தமிழன் பதிப்பகம் வெளியிட்ட ‘தமிழர் தலைவர்’ நூலை (பதிப்புரிமை பெற்றது என்று குறிப்பிட்ட பிறகும்) சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில்,பத்துக்கும் மேற்பட்ட முறை கி.வீரமணி வெளியிடலாமா? அவர் மட்டும் பதிப்புரிமையில் குறுக்கிடலாமா? என்று கேட்டார்.
குடிஅரசு வழக்கில் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வாதிட்ட பெண் வழக்கறிஞர் கிளாடிஸ் டேனியல் பேசுகையில் - பதிப்புரிமை சட்டத்தின் சட்டப் பிரிவுகள், வழக்குத் தொடர்ந்த வீரமணிக்கு எதிராகவே இருந்ததை சுட்டிக் காட்டினார். ஒரு நூலாசிரியருக்குரிய பதிப்புரிமை என்பது அவர் உயிருடன் வாழும் காலத்திற்கும் அவர் இறந்த பிறகு 25 வருடங்கள் வரையிலும் தான் இருக்கும். அதன் பிறகு பதிப்புரிமை முடிவுக்கு வந்து, நூலாசிரியரின் எழுத்துக்கள் மக்கள் உடைமையாகிவிடுகின்றன. இப்போது பெரியாரின் படைப்புகளும் மக்கள் உரிமையாகிவிட்டன என்று நீதிபதிகள் தீர்ப்பில் எழுதியிருப்பதை சுட்டிக் காட்டினார்.
நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முன் பதிவு செய்த தோழர்கள், குடிஅரசு தொகுப்புகளைப் பெற்றுக் கொண்டனர்,. எளிமையாக, எழுச்சியுடன் நடந்த இந்த நிகழ்வு 12.30 மணியளவில் நிறைவடைந்தது. பெரியார் பாதையிலிருந்து விலகிப் போய், பெரியார் நிறுவனங்களை வர்த்தகமாக்கி, அரசியல் அதிகார போதையில் மூழ்கி, கல்வி வர்த்தக நிறுவனங்களின் அதிபர் என்ற அதிகாரத்தில், எந்த முறைகேடு களையும் செய்ய முடியும் என்ற இறுமாப்பு களுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரியாரியல்வாதிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும்.
- பெரியார் முழக்கம் செய்தியாளர்