2022இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பு.
ஜனவரி : டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தமிழக ‘சுதந்திரப் போராட்டக்காரர்களான’ வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தியை கடைசி நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அனுமதிக்க மறுத்தது. தமிழ்நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இந்தத் தலைவர்களோடு பெரியார் சிலையையும் சேர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வைத்ததோடு குடியரசு நாள் அணி வகுப்பிலும் பங்கேற்கச் செய்தது, தமிழக அரசு.
மருத்துவ உயர் மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதியை மீட்டு மாபெரும் சாதனை படைத்தது. (ஜன.20, 2022)
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட கோயிலை அகற்றக் கூடாது என்று பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்ததோடு நெடுஞ் சாலை அனைத்து மதத்துக்கும் பொதுவானது; ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்று தீர்ப்பளித்ததோடு கடவுள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் இருக்கிறார் என்று சொந்தம் கொண்டாட முடியாது என்றும் கூறியது.
பிப்ரவரி: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ‘நீட் விலக்கு’ மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் பதவி விலகக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை; இரயில் மறியல்; கண்டன ஆர்ப்பாட்டங்கள் சென்னை, கோவை, சேலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல ஊர்களில் நடந்தன.
தமிழக அரசு ஆளுநரின் குடியரசு நாள் தேனீர் விருந்தைப் புறக்கணித்தது.
தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி மாணவியின் ‘தற்கொலை’யை முன் வைத்து பொய்யான தகவலைப் பரப்பி வரும் தமிழக பா.ஜ.க.வைக் கண்டித்து சேலம் நங்கவள்ளி தி.வி.க. சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (பிப்.1, 2022)
பிப். 14 - காதலர் நாளை ஜாதி மறுப்பு இணையர் களுக்கு விருதுகள் வழங்கும் விழாவாக சென்னை, மதுரையில் கழக சார்பில் கொண்டாடப்பட்டது.
- கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக்கும் மய்யம் அமைக்கும் ஒன்றிய பா.ஜ.க. முயற்சியைக் கண்டித்து, அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன அறிக்கை வெளியிட்டார்.
- ஜாதி ஒழிப்புப் புரட்சி பாடகர் லெனின் சுப்பையா புதுவையில் முடிவெய்தினார் (பிப்.16). கழக சார்பில் புதுவையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டதோடு சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் கழக சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது (பிப்.20). லெனின் சுப்பையா நினைவாக அவரது பாடல்களை கார்த்திக் குழுவினர் பாடி ‘இசை அஞ்சலி’ செலுத்தினர்.
- தேசிய பங்குசந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் (பார்ப்பனர்) ‘சாமியார்’ ஆலோசனையோடு நடத்திய மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தது. சித்ரா கைது செய்யப்பட்டார்.
- தில்லை சிற்றம்பல மேடையில் ‘தலித்’ மக்களை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தீட்சதப் பார்ப்பனர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தீட்சதர்கள் அத்துமீறலைக் கண்டித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தில்லையில் நடந்தது. (பிப்.28)
மார்ச் : சிவராத்திரியை அறநிலையத் துறையே அரசு சார்பில் மக்கள் விழாவாக நடத்தும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனக் குரல் எழுப்பியது. கடும் எதிர்ப்புகள் உருவான நிலையில் அறநிலையத் துறை பெயரள வுக்கு ‘விழா’வை நடத்தி ‘பிரம்மாண்டத்தை’ நிறுத்தியது.
சேலம் பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் , ஜாதி ஆவணப் படுகெலை வழக்கில் யுவராஜ் என்ற கொங்கு வேளாளர் பேரவைப் பொறுப்பாளர் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து திராவிடர் விடுதலைக் கழகம் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை செஞ்சி திரையரங்கில் வெளியிடக் கூடாது என்று பா.ம.க. மிரட்டி படம் போடுவதை நிறுத்தியது. கழகத் தோழர் பெரியார் சாக்ரட்டீஸ் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து படத்தைத் திரையிட வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர் கே.எஸ். மஸ்தானை சந்தித்து மனு தந்தனர்.
மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கோவை கழகத் தோழர் ஃபாரூக், அய்ந்தாமாண்டு நினைவு நாள் சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தலைமை கழகத்தில் நடந்தது.
பெரியாருடைய சிந்தனைகளை மாநில மற்றும் உலக மொழிகளில் வெளியிடுவதற்கு தமிழ்நாடு தி.மு.க. ஆட்சி, நிதி நிலை அறிக்கையில் ரூ.5 கோடி ஒதுக்கி அறிவித்தது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்குப் பதிலாக அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000 வழங்கும் சீரிய திட்டத்தை தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
ஏப்ரல் : கழகத் தலைமைக் குழு ஏப்.2ஆம் தேதியும் அடுத்த நாள் ஏப். 3ஆம் தேதியும் முறையே தலைமைக் குழுவும் கூடி கழக செயலவையும் ஈரோட்டில் கழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தது.
பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்கா என்பவர், மீண்டும் வேதகாலத்துக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டு வந்த தனி நபர் மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஜவஹர் சர்க்கார், இராஷ்டிரிய ஜனதாதள கட்சி உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா பதிலடி தந்தார். வேதகால மரபு என்பது பார்ப்பனிய மரபு என்றுபதிலடி தந்தனர். பெரியாரை மேற்கோள் காட்டி பேசிய மனோஜ்குமார், ஜவஹர் பெரியாரின் இராமாயணம் பற்றிய கருத்துகளைத் தாம் ஆதரிப்பதாகக் கூறினார்.
பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுமாறு எந்தக் கடவுளும் கேட்கவில்லை. அப்படி கடவுளே கோயிலைக் கட்டினாலும் நீதிமன்றம் அகற்றும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாமக்கல்லில் பொது இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்தது.
“நமது அடையாளம் - திராவிடன் மாடல்” எனும் தலைப்பில் ஏப்.20இல் தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகளும் மாநாட்டு நோக்கங்களை விளக்கி 400 தெருமுனைக் கூட்டங்களையும் நடத்த ஈரோட்டில் கூடிய கழக செயலவை முடிவு செய்தது. சென்னை, கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, விழுப்புரம், மயிலாடுதுறை, சங்கராபுரம், கிருட்டிணகிரி, திருப்பூர், பள்ளிப்பாளையம், மதுரை, சிவகங்கை, குடந்தை, குடியாத்தம், கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல மாநாடுகள் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் எழுச்சி நடை போட்டன.
ஜாதி ஆணவப் படுகொலை தடைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக சங்கராபுரத்தில் ஒரு நாள் பரப்புரைப் பயணம் நடந்தது. (ஏப்.12)
மே : சென்னை வீதிகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி சென்னை மயிலைப் பகுதி கழகத் தோழர்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்ததைத் தொடர்ந்து ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.
ஜூன் : கழகத் தலைமைக் குழு திருப்பூரில் கூடி (ஜூன் 17) நடந்து முடிந்த மாநில மாநாடுகள், தெருமுனைக் கூட்டங்கள், நிறை குறைகள் குறித்து ஆலோசித்தது.
ஜூலை : களப்பணியாளர்களுக்கு மூன்றுநாள் பயிற்சி முகாம் (ஜூலை 23, 24, 25) மற்றும் இணைய தள செயல்பட்டாளருக்கு ஒரு நாள் பயிற்சி (ஜூலை 2) திருச்சி ‘டான்பாஸ்கோ மீடியா’வில் நடந்தது.
ஆகஸ்ட் : சேலத்தில் மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல் வைத்த வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. (ஆக.5)
நீர்நிலைகளை மாசு படுத்தும் வேதிப் பொருள்களால் உருவாக்கப்பட்ட விநாயகன் சிலைகளைக் கரைப்பதற்கு தடை செய்யக் கோரி மயிலாடுதுறை தி.வி.க. சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதனிடம் மனு அளிக்கப் பட்டது. (ஆக.5)
கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை யொட்டி ஆக.12இல் மேட்டூர், சேலம், சென்னை, கோவை, திருப்பூரில் கழகப் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜாதி மத மோதல்களை உருவாக்கும் ‘கிடுகு’ திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கைக் கோரி கழக சார்பில் சென்னை மாவட்டக் காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. (ஆக.22)
அரசின் வழிகட்டும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக இந்து முன்னணி சங்கிகள் விநாயகன் ஊர்வலத்தில் பின்பற்றப்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்கக் கோரி காவல்துறையிடம் கோவை, சென்னை மாவட்டக் கழகங்கள் மனு அளித்தன.
செப்டம்பர் : மேட்டூர் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக இந்து முன்னணி நிறுவிய திடீர் விநாயகன் சிலை, கழகத் தோழர்கள் முயற்சியால் அகற்றப்பட்டது.
சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இந்துப் பெண்களை இழிவுப்படுத்தும் மனு சாஸ்திரத்தைத் தடை செய்யக் கோரி பெண்களே முழுமையாகப் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் தியாகராயர் நகர் பெரியார் சிலை அருகே நடந்தது.
தி.மு.க. இளைஞரணி தமிழகம் முழுதும் நடத்திய திராவிட மாடல் பயிற்சி பாசறையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு ஊர்களில் பங்கேற்று திராவிடர் இயக்க வரலாறு பற்றி உரையாற்றினார்.
அனைத்து ஜாதியையும் சார்ந்த ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று சென்னை மாவட்டக் கழக சார்பில பாராட்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது. சனாதன எதிர்ப்புக் கூட்டமாக கலை நிகழ்வுகளுடன் விழா நடந்தது.
அக்டோபர் : சென்னை மாவட்டக் கழக சார்பில் வைதீகத்தை எதிர்த்த வள்ளலார் என்ற தலைப்பில் தேனாம்பேட்டை அன்பகத்தில் சிறப்பான கருத்தரங்கம் கலை நிகழ்வுகளுடன் நடந்தது.
நவம்பர் : நவம்பர் 27ஆம் நாள் மேட்டூர் அருகே விடுதலைப் புலிகள் 3 ஆண்டுகள் இராணுவப் பயற்சி எடுத்த புலியூரில் மாவீரர் நாள் கழக சார்பில் நடத்தப்பட்டது. தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நவம்பர் 27 காலை கழகத்தின் தலைமைக் குழு மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கழகத் தலைவர் தலைமையில் கூடி கழக ஏட்டின் வளர்ச்சிக் குறித்து விவாதித்தது.
நவம்பர் 26 அன்று பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற பேராளிகளை நினைவுகூர்ந்து சட்ட எரிப்பு நாள் சென்னை, ஜலகண்டபுரம், பேராவூரணி, மதுரை, திருப்பூர், கோவை, கோபி, சேலம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வயலூர் முருகன் கோயிலில் அரசு ஆணைப்படி அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர்களை கருவறைக்குள் பூஜை செய்ய தடை செய்து மிரட்டிய பார்ப்பன அர்ச்சகர்களைக் கண்டித்து சென்னை மாவட்டக் கழக சார்பில் அண்ணாசாலை பெரியார் சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (நவ. 23) மதுரையிலும் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் மாணவர்களிடம் ஜாதி கேட்கும் தனியார்ப் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (நவம். 26)
டிசம்பர் : ஈரோடு மாநகராட்சிக்கு உரிமையான அரசு வளாகத்தில் யாகசாலைக் கூடம் அமைக்கப்பட்டதை அகற்றக் கோரி ஈரோடு மாவட்டக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் கைதானார்கள்.
சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாக நான்கு ஆண்டுகளாக நடந்த வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். (டிச. 2)
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராnந்திரன் எழுதிய 59 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. மரபு உரிமைத் தொகையாக ரூ.15 இலட்சத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேரில் வழங்கினார். நிகழ்வில் கழகத் தலைவர் பங்கேற்றார்.
- விடுதலை இராசேந்திரன்