பாஜக ஆட்சியில் கேசுபாய் படேல் குஜராத் முதல்வராக இருந்தபோது முந்த்ரா துறைமுகத்தை 30 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அதானி பெற்றார். அடுத்து முதல்வரான மோடி கேசுபாய் படேல் அணியைச் சேர்ந்தவர் என்று கவுதம் அதானியை ஒதுக்கினார். ஆனால் கோத்ரா கலவரத்திற்கு பிறகு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குஜராத்தைப் புறக்கணித்த போது மிகப்பெரிய முதலீடுகளை குஜராத்துக்கு வரவழைப்பேன் என்று உறுதியளித்த அதானியை மோடிக்குப் பிடித்துப் போனது.

தன் மீதான கோத்ரா வன்முறைக் கறையைச் சுத்தம் செய்ய நினைத்த மோடி முந்த்ரா துறைமுகத்தை ஒட்டிய 140 சதுர மைல் நிலத்தைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காகச் சகாய விலையில் அதானிக்கு ஒதுக்கினார். அன்று முதல் அதானி மோடியோடு சேர்ந்து வளரத் தொடங்கினார்.washington post on modiதனது கார்ப்பரேட் ஜெட் விமானத்தை முதல்வர் மோடியின் தேர்தல் பரப்புரைக்காக அளித்தார் அதானி. கைமாறாக குஜராத்தின் தொழிற்கொள்கைகள் அதானிக்காகத் தளர்த்தப்பட்டன. பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பிரான்ஸ் முதல் கனடா வரையிலான அலுவல் பயணங்களில் அதானியும் உடன் சென்றார். அதன் மூலம் பங்களாதேஷ் மின் விநியோகத் திட்டம், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளில் நிலக்கரி சுரங்கங்கள், இலங்கை காற்றாலை மின் திட்டம் என அயல்நாடுகளில் பல்வேறு தொழில் வாய்ப்புகளை அதானி குழுமம் பெற்றது.

இந்தச் சூழலில் அதானியின் வணிக வளர்ச்சிக்காக மோடி அரசு செய்த உதவிகள் குறித்து குறிப்பிட்டு அமெரிக்காவின் “வாஷிங்டன் போஸ்ட்” நாளிதழ் புகார் கூறியிருப்பது புயலைக் கிளப்பியுள்ளது. சத்தீஸ்கர் ஹஸ்தேவ் வனப்பகுதியில் 500 கோடி டன் நிலக்கரி வளம் உள்ளதாக மதிப்பிடப்பட்டு அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க 1,880 ஏக்கர் நிலத்தை மோடி அரசிடம் இருந்து அதானி குழுமம் பெற்றதாகவும், அதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் வாழ்விடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் அந்நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது.

ஹஸ்தேவ் வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கும் நிலக்கரி மாசு ஏற்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மோடி அரசு வருமான வரி சோதனை நடத்தியதாகவும், ஆக்ஸ்பாம் இந்தியா, கொள்கை ஆராய்ச்சி மையம், என்விரோனிக்ஸ் அறக்கட்டளை போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வருவதை மோடி அரசு தடுத்ததாகவும், இதன் காரணமாக லைப் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டதாகவும், சுரங்க திட்டத்தை எதிர்த்த சுற்றுசூழல் செயற்பாட்டாளர் அலோக் சுக்லாவின் செல்போன் பெகாஸஸ் மென்பொருள் மூலம் ஓட்டுக் கேட்கப்பட்டதாகவும் “வாஷிங்டன் போஸ்ட்” ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் அனுமதியுடன் அதானி பவர் நிறுவனம் ஜார்கண்ட் கொட்டா மாவட்டத்தில் அமைத்த அனல் மின் நிலையத்திற்காக ஏழை மக்களின் தென்னந்தோப்பு, வயல்வெளிகள் புல்டோசர்கள் கொண்டு அழிக்கப் பட்டதாகவும், 10 கிராமங்களை சேர்ந்த மக்களை பலவந்தமாக வெளியேற்றி 1,214 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதாகவும், கொட்டா மின் நிலையத்தை எதிர்த்த தொண்டு நிறுவனங்களும் மோடி அரசால் வருமான வரி சோதனைக்கு ஆளானதோடு திட்டத்தை எதிர்த்த தன்னார்வலர் ஸ்ரீதர் அரசு இயந்திரங்களால் மிரட்டப்பட்டதாகவும், அரசின் அதானி சார்புக்கு ஆட்சேபம் தெரிவித்த உயரதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

சமரசமற்ற செய்திகளை வழங்கி பல தருணங்களில் மோடி அரசை நெளிய வைத்த என்.டி.டி.வி நிறுவனத்தின் கணிசமான பங்குகளைக் கொல்லைப் புறமாக வாங்கித் தன்வசமாக்கி உள்ளது அதானி குழுமம். இப்படி இந்தியாவில் ஊடகங்கள் இவர்கள் பிடியில் இருக்கிற நிலையில், வெளிநாட்டு நாளிதழ் இங்கு நடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

மோடி தலைமையிலான அரசு அதானி குழுமத்திற்கு ரூ.82 ஆயிரம் கோடிக்குச் சலுகை வழங்கியுள்ளது மட்டுமின்றி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு அதிகாரிகளையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் குறி வைத்து மிரட்டி இருப்பது பற்றிய இந்த “வாஷிங்டன் போஸ்ட்” புலனாய்வுக் கட்டுரை இந்திய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியத்தில் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியா சர்வாதிகாரத்தின் கோரப் பிடியில் சிக்கி விடும். 2024 நாடாளுமன்றத் தேர்தலே நமக்கான இறுதி வாய்ப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மக்களைத் திரட்டுவோம்! மோடி ஆட்சியை விரட்டுவோம் !!

Pin It