காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக - தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு பறித்துவிட்டது.
• 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் - இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground - தீர்ப்பு பக்.451)
• 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார்.
• 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
• தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர்களும் ஊடகங்களில் விவாதத்தில் பேசிய பா.ஜ.க. ‘பிரச்சாரகர்களும்’ கெடு முடிவதற்குள் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம் என்று நீட்டி முழங்கினர்.
• உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடவில்லை. ‘ஸ்கீம்’ என்றே குறிப்பிட் டிருக்கிறது என்று கருநாடக அரசு எடுத்துக் கொடுத்த ‘விதண்டாவாதத்தை’ நடுவண் ஆட்சியும் அப்படியே பற்றிக் கொண்டது. கருநாடகத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்தப் பிரச்சினை கிடப்பில் போட்டாக வேண்டும் என்பதே நடுவண் ஆட்சியின் நோக்கம்.
• ‘ஸ்கீம்’ (செயல் முறை) என்று உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும் உள்ளடக்கியதுதான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நடுவண் அரசு மீதான தமிழ்நாடு அரசு அவமதிப்பு வழக்கிற்கான மனுத்தாக்கலின்போது வாய்மொழியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
• மாநிலங்களுக்கிடையிலான நதிநீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து 1956ஆம் ஆண்டு ஒரு சட்டம் நடுவண் அரசால் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில் சர்க்காரியா ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டு 6ஏ(2) என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு ‘ஸ்கீம்’ என்ற சொல், ‘ஆணையம்’ (authority) என்பதையே குறிக்கும் என்று தெளிவாக விளக்கமளிக்கிறது. (சர்க்காரியா ஆணையம் என்பது இந்திரா பிரதமராக இருந்தபோது மத்திய மாநில உறவுகள், அதிகாரப் பகிர்வுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆணையம்)
• காவிரிப் பிரச்சினைக்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் என்ன கூறியது? காவிரி நீர்ப் பங்கீட்டை செயல்படுத்தக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட ஆணையம் - அதாவது மாநிலங்களின் செயல்பாடுகளில் மேலாண்மை செலுத்தக் கூடிய வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கூறியதோடு, அது ‘பக்ரா-பியாஸ்’ நதி நீர் மேலாண்மை வாரியம் போல் இருக்க வேண்டும் என்றும் தெளிவாக விளக்கியிருக்கிறது.
• உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் மேற்குறிப்பிட்ட காவிரி நடுவர் மன்றம் (Tribunal) குறிப்பிட்ட மேலாண்மை வாரியம் பற்றியும், அது எப்படி, எவரைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும் என்பவை குறித்தும் கூட்டங்கள் நடத்தும் முறைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் விளக்கியிருக்கிறது. (தீர்ப்பு பக்கம் 337 - பத்தி 290) 2016ஆம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம், ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த போது பா.ஜ.க. நடுவண் அரசு அதை எதிர்த்தது. அப்படி உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு உரிமை கிடையாது என்று பா.ஜ.க. ஆட்சி பதிலளித்தது.
• கருநாடகத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளி வந்துள்ள நிலையில், காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி முடிவெடுக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையரே கூறியிருக்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கருநாடகத்தில் ‘சட்டம் ஒழுங்கு சீர்கெடும்’ என்று நடுவண் ஆட்சி உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறது.
• காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கருநாடக அரசு எதிர்ப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுக்கும் செயல்பாடு; இதை தேச விரோத நடவடிக்கை; தேச விரோதி என்று கூற பா.ஜ.க. தயாராக இல்லை. ஆனால் தமிழர்கள் இந்தியை எதிர்த்தால் தேசவிரோதி; ‘நீட்’டை எதிர்த்தால் ‘தேச’ விரோதி; ‘ஜி.எஸ்.டி.’யை எதிர்த்தால் ‘தேச விரோதி’, தமிழக உரிமைக்காக மெரினாவில் திரண்டவர்கள் ‘தேச விரோதி’ என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தமிழர்களை குற்றக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.
• இந்தியா என்ற அமைப்புக்குள் கூர்மை அடைந்து வரும் தேசிய இனங்களுக்கான பிரச்சினைகளை ஒரு போதும் தீர்க்க முடியாது என்பதும், முழுமையான தன்னாட்சி உரிமை கொண்ட கூட்டமைப்பு முறையை பரிசீலித்தாக வேண்டும் என்பதையும் காவிரிப் பிரச்சினை தீவிரமாக உணர்த்தி நிற்கிறது.
சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு
காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. வருமான வரித் துறை அலுவலகம் எதிரே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிட மாட்டோம் என்ற முழக்கத்தோடு வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கழகத் தோழர்களைக் கைது செய்தனர். பூட்டு - பூட்டுச் சங்கிலியை பறி முதல் செய்தனர். மாலை வரை ஆயிரம் விளக்கு சமூகநலக் கூடத் தில் வைக்கப்பட்டு, சொந்தப் பிணையில் காவல்துறை விடுதலை செய்தது. அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் வேழவேந்தன், உமாபதி, ஏசு, செந்தில் (எப்டி.எல்.), மயிலை சுகுமார், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், ஜாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த ஜெயநேசன் உள்ளிட்ட 55 தோழர்கள் கைதானார்கள்.
காவலில் இருந்த தோழர் களிடம் பிற்பகலில் காவிரிப் பிரச்சினைக் குறித்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஜெயநேசன் ஆகியோர் உரையாற்றினர்.
கழகத் தோழர்கள் களப்பணி களில் கழகத்தின் தொடர் செயல் பாடுகளையும் கழகம் எதிர் நோக்கும் சவால்களையும் விளக்கிப் பேசினர்.