‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை... தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி)
ஆண்டாள் - தேவதாசி மரபு என்று ஆய்வாளர் கூறிய கருத்தைக்கூட பேசினால் அது இந்துமத அவமதிப்பு என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு அவாளின் வேதம் ஒன்றையே பதிலாக எடுத்துக் காட்டலாம்.
“வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்சனம் பாப நாஸம்
சம்பனம் சர்வதீர்த்தா னாம்
மைதுனம் மோஷ சாதனம்”
- என்பது ஒரு சுலோகம்.
வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம் போய்விடும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமமான புண்ணியம்; உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி - இதுவே மேற்குறிப்பிட்ட சுலோகத்தின் பொருள். இந்த சுலோகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால்கூட - அப்போதும் ‘இந்து விரோதி’ என்றுதான் கூச்சல் போடுவார்கள்.
வேத மரபு கட்டமைத்த ஒழுக்க நெறிகள் எப்படி இருந்தன என்பதற்கு மற்றொரு உதாரணத்தைக் கூற வேண்டும். தந்தையைக் கொலை செய்துவிட்டு, தாயுடன் உலுறவு கொண்ட ஒரு பார்ப்பன சிறுவனுக்கு வேத மரபில் ‘பரிகாரம்’ இருக்கிறது. அந்தப் பரிகாரத்தை செய்தால், ‘பாவம்’ பறந்தோடி விடும். ‘பிராமணன்’ கொலை செய்தால்கூட அவனுக்கு தலையில் ஒரு முடியை வெட்டி விடுவதுதான் தண்டனை. ஆனால் சூத்திரன் கொலை செய்தால் தலையையே துண்டிக்க வேண்டும் என்ற ‘மனுசாஸ்திரம்’ தான் வேத மரபுக்கான ‘நீதி நூல்’; பிரிட்டிஷ் ஆட்சியில் மெக்காலே அனைத்து மதத்தினருக்கும் பொதுவான கிரிமினல் சட்டம் கொண்டுவரும் வரை இந்த ‘மனுசாஸ்திரமே’ நீதிமன்றங்களின் சட்ட நூல். மனு சாஸ்திரத்தை நீதி நூலாகப் பின்பற்றக் கூடாது; கிரிமினல் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி நெருக்கடி தந்த காரணத்தால் திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யர், தனது சமஸ்தானத்தில் தூக்குத் தண்டனைக்கே தடை விதித்தார். கொலை செய்யும் ‘பிராமணர்’களுக்கு தூக்குத் தண்டனை வழங்கிடும் நிலை வந்துவிடக் கூடாது என்பதே அவரை இந்த முடிவை எடுக்கச் செய்ததே தவிர, மனித உரிமையின் மீதான கவலையில் அல்ல. தாயுடன் தகாத உறவு கொண்டவனுக்கும் ‘பிராயச்சித்தம்’ வைதிக மதத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்படக் கூடாது.
‘திருவிளையாடல் புராணத்தில், ‘மாபாதகம் தீர்த்த படலம்’ என்று ஒரு படலம் வருகிறது. அதிலே வரும் 40ஆவது பாடல், இந்தக் கதையைக் கூறுகிறது. இந்த பிராயச்சித்தத்துக்காக தஞ்சை மாவட்டம், வேதாரண்யம் ஊரில் கோயிலும் திருக்குளமும் இப்போதும் இருக்கிறது. ஸ்ரீ வேதாரண்யோஸ்வர சுவாமி தேவஸ்தானம் வெளியீடாக கோயில் நிர்வாகமே ‘வேதாரண்யம் தல வரலாறு’ என்று நூலாக வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள கருத்தை அப்படியே தருகிறோம்:
“வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள ராமச்சந்திரபுரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக்கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான். மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி, இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தாலல்லவா செய்யக் கூடும் எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கை வரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்கு பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம். வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந்தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள். இவனைக் கண்டதும் இவன் இளமையிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூட வேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்க மாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள். அவனும் மதுவை இதுவரையறியாதவனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவைக் கொன்றான்; காமந் தலைக்கேறி, அவ்விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ்விதவையைப் பார்த்து - நீ யார்? உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் விதி வலி கொடிது, வெல்லுதற்கரியது என வருந்தினான். இப்பழித் தொலையும் வழி யாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை. வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் திருமுன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா! இதற்குத் தற்கொலையும் செய்து கொண்டு அப்பாவத்தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமுறைக்காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவனேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும், அப்படியே செய் என்றருளினார்.
பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சத்தி பதம் பெற்றாள்”
எப்படி இருக்கிறது வேத மரபு? இதை திரைப்படம் எடுத்தால்கூட சென்சார் போர்டு அனுமதிக்காது.
இந்தத் தலப் பெருமைகளையும், ‘தீர்த்த’ புண்ணியங்களையும் வேதமரபு போற்றுகிறது. தமிழ் மரபு எப்படி இந்த வேதமரபுகளை ஏற்கும்? வேத மரபுக்குள் கீழ்ப்படிந்து ஒழுகுவதே ‘இந்து மரபு’ என்று காலம்காலமாய் பார்ப்பனியம் தமிழர்களை ஏமாற்றி, அவர்களை ஏற்கச் செய்திருக்கிறது என்பதுதான் கொடுமை.
வேத மரபுகளை மறுத்த தமிழ் மன்னர்களும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். சைவர்கள் போற்றும் சேக்கிழார் எழுதியப் ‘பெரியபுராணம்’ மனுநெறி கொண்ட சோழன் கதையைக் கூறுகிறது. மன்னனின் மகன் தேர்ப் பவனியில் வரும்போது தேர்ச் சக்கரத்தில் பசுவின் கன்று ஒன்று சிக்கி செத்தது. பசுவைக் கொன்றது வேத மரபுப்படி ‘மாபாதகம்’. எனவே மன்னன் தனது மகனையே தேர்ச் சக்கரத்தில் ஏற்றிக் கொலை செய்து தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டான் என்ற கதை எல்லோருக்கும் தெரியும். ‘மனுநீதி தவறாமல்’ ஆண்ட மன்னன் என்று இதுவரை வைதிகர்களால் புகழப்படுகிறான். உண்மையில் மன்னன் பசுவைக் கொன்றதற்கு தண்டனையாக மகனைக் கொன்றது மனுநீதியை ஏற்றுக் கொண்டதற்காக அல்ல; மனுநீதியை எதிர்ப்பதற்காகவே என்பது பலருக்கும் வியப்பைத் தரலாம். உண்மை அதுதான். பெரிய புராணத்திலேயே அதற்கான குறிப்புகள் இருப்பதை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். மகன் தேர்க்காலில் பசுவின் கன்று இறந்தவுடன் மன்னர் களுக்கு அமைச்சர்கள் சொல்லிய ஆலோசனை, ‘பிராமண தர்மம் கூறும் பரிகாரங்களை பிராமணர் களுக்கு செய்துவிட்டால் போதும்’ என்பதுதான்.
“மறை, அந்தணர்கள் விதித்த முறை வழி
நிறுத்தல் அறம் என்றார்”
- என்று பெரிய புராணம் கூறுகிறது.
‘பிராமணர்களுக்கு பிராயச் சித்தம்’ - அதாவது பார்ப்பனர்களை அழைத்து, வேத மந்திரங்களை ஓதச் செய்து அவர்களுக்கு பொன் பொருளை வாரி அவர்கள் வயிற்றில் கொட்டும் ‘பிராயச்சித்தத்தைச்’ செய் என்றவுடன், மன்னன் கொதித்துப் போகிறான். மக்களையும், நாட்டில் வாழும் உயிர்களையும் காப்பாற்ற வேண்டியது ஒரு மன்னனின் கடமை; மக்களுக்கோ வேறு உயிருக்கோ, தன்னாலோ, தனது குடும்பத்தாலோ, படை வலிமையின்மையாலோ, திருடர்களாலோ ஆபத்து வராமல் மக்களைக் காக்கும் கடமையிலிருந்து ஒரு மன்னன் தவறினால் அவன் அறத்தைக் காப்பாற்றத் தவறுகிறான்” என்று கூறுகிறான். மக்களை - உயிர்களைக் காப்பாற்றத் தவறிய மன்னன் அதற்கான தண்டனையை தனக்குத் தான் வழங்க வேண்டுமே தவிர, பிராமணர்களுக்கு ஏன் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று கூறி, மகனைத் தேர்க் காலில் ஏற்றிக் கொன்றான். ‘மனுதர்மம்’ கூறிய ‘பிராமண பிராயச் சித்தம்’ செய்து பாவத்தைத் துடைத்துக் கொண்டேன் என்ற அவப்பெயரை ஏற்க நான் தயாராக இல்லை என்பதை,
‘தொன் மனுநூல் தொடை மனுவால்
துடைப்புண்டதெனும் வார்த்தை
எனைச் சேரும்’
என்று கூறி தனது மகனை அதே தேர்க்காலில் ஏற்றிக் கொல்கிறான். பசுவைக் கொன்றது ‘மாபாதகம்’ என்பதற்காக அல்ல, மாறாக தனது ஆட்சியில் எந்த உயிரும் இப்படி சாகடிக்கப்படக் கூடாது என்பதே அவனது கொள்கை. உண்மையில் மனுநீதியைக் கொன்ற சோழன் அவன். ஆனால் அவனை மனுநீதி கொண்ட சோழனாக திரித்து விட்டது வைதிகம்.
சைவம் - தமிழர் மதம் என்று சைவத் தமிழர்கள் பெருமைப்பட்டாலும் அதற்குள்ளும் பார்ப்பனியமே ஊடுறுவி நின்றதை பெரியாரும் குடிஅரசும் வெளிச்சப்படுத்தின. மதம் குறித்த ஆய்வாளர்கள் சைவத்தில் சித்தாந்த மரபு, வேதாந்த மரபு என்று இருவகைப்படுத்துகிறார்கள். வேதாந்த மரபு, வேத வைதிகப் பார்ப்பனியத்தை ஏற்றது. இதற்கு நேர் எதிராக சைவத்திலேயே திருமூலர் போன்றவர்கள் ‘சித்தாந்த மரபு’காரர்களாக இருந்து பார்ப்பன மரபுகளை எதிர்த்தார்கள். அப்பபடி எதிர்த்தவர்களிலே ஒருவர் திருமூலர்.
பூணூல் உச்சி குடுமி அறுப்பு பற்றி திருமூலர் கூறுகிறார் :
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலாகும் ஆதலாற் பேர்த்து உணர்ந்து
ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே
-திருமந்திரம் -241 (நூல் - பூணூல், சிகை-குடுமி )
அறியாமையை போக்கிக் கொள்ளாத பார்ப்பனர்கள் உச்சி குடுமியும் பூணூலும் பெற்று இருப்பார்களேயானால், இந்த மண்ணுலகானது சோர்வடையும். பெருமை பொருந்திய வாழ்வினை உடைய மன்ன வனும் தனது சிறப்புகளை இழப்பான். ஆதலால் இதனைப் பகுத்துணர்ந்து பார்ப்பானுடைய ஆடம்பர பூணூலையும் உச்சிக் குடுமியையும் அறுத்தெறிவதே நல்லதாகும் - என்கிறார் திருமூலர்.
தமிழ்நாட்டு மதங்களாகக் கூறப்படும் சைவ வைணவ மதங்களுக்கு வடமொழி வேதங்களின் அடிப்படையில் பொருள் உரைக்கும் முயற்சிகள் நடந்தன. “வேத வாக்கியங்களுக்கு சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஏற்ற முறையில் பொருள் கொள்ளுதல் பைபிளுக்கும், குரானுக்கும் சைவ, வைணவப் பொருள் கொள்ளுதல் போலாகும்” என்று கண்டித்தார், ஆய்வாளர் கா.சு.பிள்ளை. திருமூலரைப்போலவே வள்ளலாரும் சைவ மரபில் வைதிக மத எதிர்ப்பாளராக வாழ்ந்து காட்டினார். சைவ மடாதிபதிகளையே எதிர்த்தவர் ‘தீட்சை’ பெறுவதற்கு சைவ மடங்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற மரபை உடைத்துத் துறவியானவர். சைவ மடங்களில் வடமொழி கற்பிக்கப்பட்டு, வட மொழியின்றி தமிழ் தனித்து இயங்க முடியாது என்று பேசிய சைவப் பார்ப்பனியர்களின் கருத்தை மறுத் தவர் வள்ளலார். வள்ளலார் ஏற்படுத்தியது ‘மடம்’ அல்ல. சமசர சன்மார்க்க சங்கம், காவி உடையைத் தவிர்த்து, வெள்ளை உடையைத் தேர்வு செய்தார்.
“சாதிகளிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சடையிலே
ஆதியிலே அபிமானித்து அபிமானித்து
அலைகின்ற உலகீர்”
என்று எழுதினார். வள்ளலாரின் அருட்பாஆறாம் திருமுறையில் 100 பாடல்களைத் திரட்டி, 1935இல் பெரியார் ‘குடிஅரசு’ பதிப்பக சார்பில், ‘இராமலிங்க சாமிகள் பாடல் திரட்டு’ என்று நூலாக வெளியிட்டார். பெரியார் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி. சிதம்பரனார்தான், இந்த வள்ளலார் திரட்டுகளையும் தொகுத்தார். இதற்கு மாறாக சைவத்தின் பெயரால் வைதிகத்தைப் பார்ப்பனியத்தைக் காப்பாற்ற வந்தவனே திருஞான சம்பந்தன். திருஞான சம்பந்தனின் வைதிக ‘பிராமணிய’ மோசடிகளை எடுத்துக் காட்டி இந்தத் தொடரை நிறைவு செய்வோம்!
(அடுத்து இதழில் முடியும்)