1876ஆம் ஆண்டிற்குப்பின் 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை மிகவும் குறைவாகப் பெய்தது. பொதுவாக வடகிழக்குப் பருவ காலத்தில் தமிழகம் 440 மி.மீ. மழை பெறும். ஆனால் 2016 வெறும் 168 மி.மீ. மழை மட்டுமே பெய்தது. இது வழக்கத்தைவிட 62 விழுக்காடு குறைவாகும். தென்மேற்குப் பருவ மழையும் குறைவாகவே பெய்தது. அதனால் தமிழகம் கடந்த அய்ம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வறட்சியை யும், பயிர்ச் சேதத்தையும் சந்திக்க நேரிட்டது. தமிழகத்தில் உள்ள 16,682 வருவாய்க் கிராமங்களில், 13,305 வருவாய்க் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் வறட்சி நிலவுகிறது. ஏறத்தாழ 50 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பல்வேறு நிலைகளில் நீரில்லாமல் கருகின. இதனால் முப்பது இலட்சம் உழவர்கள் பெரும் இழப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.
காவிரி நீர் உரிமை
காவிரிப் பாசனப் பகுதியில் வேளாண்மை காவிரி ஆற்றின் நீரையே நம்பியிருக்கிறது. கருநாடகம் ஓராண்டில் தமிழ கத்துக்கு 179 டி.எம்.சி. நீரைக் காவிரியில் திறந்துவிட வேண் டும். ஆனால் 2016இல் வெறும் 66 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டது. உச்சநீதிமன்றம் தமிழகத்துக்குத் தண்ணீ ரைத் திறந்துவிடுமாறு பலமுறை அறிவுறுத்தியும் கருநாடகம் அதைப் பொருட்படுத்தவில்லை.
காவிரிப் பாசனப் பகுதி உழவர்கள், மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருந்தபோதிலும், வடகிழக்குப் பருவத் தில் இயல்பான அளவுக்கு மழைபெய்யும் என்று நம்பி 13 இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிட்டனர். வடகிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட முற்றிலுமாகப் பொய்த்துவிட்டதால் பயிர்கள் காய்ந்து கருகுவதைக் கண்டு 400க்கும் மேற்பட்ட உழவர்கள் அதிர்ச்சி யால் மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்து கொண்டும் மாண்டனர்.
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைத் தராமல் கருநாடகம் அடாவடித்தனம் செய்து வருகிறது. நடுவண் அரசில் மாறி, மாறி ஆட்சி செய்யும் காங்கிரசுக் கட்சியும், பாரதிய சனதாக் கட்சியும் தங்களுடைய அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு கருநாடகத்துக்கு ஆதரவாக நின்று, தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.
தி.மு.க.வின் முயற்சியால் வி.பி. சிங் தலைமை அமைச்சராக இருந்தபோது 1990இல் காவிரி ஆற்றுநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. ஓராண்டிற்குள் தீர்ப்பாயம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. அதன்படி ஆண்டுதோறும் சூன் மாதம் முதல் கருநாடகம் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத் திற்கு திறந்துவிட வேண்டும். ஆனால் கருநாடக அரசு இதன் படி நீரைத் திறந்துவிடவில்லை. தீர்ப்பாயம் 2007இல் தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்குரிய நீரின் அளவு 183 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகுதான் நடுவண் அரசு 2013இல் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அரசிதழில் வெளியிட்ட ஓராண்டிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங் காற்றுக் குழுவையும் நடுவண் அரசு அமைத்திருக்க வேண்டும்.
தமிழக மக்கள் தங்கள் தனித்தன்மையைத் துறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களைக் கரைத்துக்கொள்ள மறுக் கிறார்கள் என்பதால் நடுவண் அரசு தமிழகத்துக்குரிய காவிரி நீரைக் கிடைக்கவிடாமல் செய்திட வஞ்சக எண்ணத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்கிறது. தமிழக அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு ஆணையிட உச்சநீதிமன்றத் துக்கு அதிகாரம் இல்லை என்று அடாவடித்தனமாகக் கூறியது. நாடாளுமன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியது.
காவிரி ஆற்றுநீர்த் தீர்ப்பாயத்தில் தமிழகத்துக்குத் தரப் பட்டுள்ள குறைந்த அளவு காவிரி நீர் உரிமையையும் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கில், நடுவண் அரசின் நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி, இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள் அனைத்துக்கும் சேர்த்து ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார், உமாபாரதியின் இந்த அறிவிப்பை எதிர்த்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரிப் பாசன உழவர்கள் பல நாள்கள் போராட்டம் நடத்தினர். காவிரிச் சிக்கலை 1974இல் இருந்த நிலைக்குத் தள்ளிவிட்ட நடுவண் அரசின் வல்லாதிக்கத்தைத் தமிழர்கள் ஒன்றுதிரண்டு எதிர்த்துப் போராட வேண்டும். இல்லாவிடில், மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானைக் கட்டிப் போரடித்த சோழ வளநாடு என்கிற பெருமிதம் பழங் கதையாய்ப் போகும். தமிழகத்தின் காவிரிப் பாசன வள வயல்கள் பாலை நிலமாக மாறும்.
தமிழக அரசின் நிவாரணம்
வடகிழக்குப் பருவமழை முற்றிலுமாகப் பொய்த்ததால், நவம்பர், திசம்பர் மாதங்களில் காவிரிப் பாசனப் பகுதியில் தங்கள் பயிர் முற்றிலும் கருகுவதைக் கண்டும், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்கிற அதிர்ச்சியாலும் பல உழவர்கள் வயல்களிலேயே மாரடைப்பால் மாண்டனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தக் கொந்தளிப்பான சூழலில் 2017 சனவரியில் தமிழக அரசு வறட்சி நிவாரணத் தொகையாக ரூ.2,247 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தது. மேலும் நிலவரி முழுவதையும் தள்ளுபடி செய்வதாகவும், கூட்டுறவு வங்கிகள் மூலம் உழவர்கள் பெற்ற ரூ.3028 கோடிக்கான பயிர்க்கடனை மத்திய காலக்கடனாக மாற்றிய மைக்கப்படும் என்று அறிவித்தது.
ரூ.2,247 கோடி நிவாரண நிதியிலிருந்து நெல் உள்ளிட்ட நீர்ப்பாசனப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.5465, மானாவாரிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3000, கரும்பு, வாழை போன்ற நீண்டகாலப் பயிர்களுக்கு ரூ.7287 இழப்பீட்டுத் தொகையாக உழவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசு அமைத்த தொழில் நுட்ப வல்லுநர் குழுவின் அறிக்கையில் ஒரு ஏக்கருக்கான சாகுபடிச் செலவு நெல்லுக்கு ரூ.25,000; மானாவாரிப் பயிர் களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை, கரும்புக்கு ரூ.75,000 என்று கூறப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை யானைக்குச் சோளப் பொறி போன்றதே ஆகும்.
நடுவண் அரசின் வல்லுநர் குழு தமிழகத்தின் பயிர்ச் சேதத்தைப் பார்வையிட்டுச் சென்றது. நடுவண் அரசின் தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.39,565 கோடி வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு நடுவண் அரசுக்கு அறிக்கை அனுப்பியது. மார்ச்சு மாத இறுதியில் நடுவண் அரசு வெறும் ரூ.1748 கோடி மட்டுமே அளித்தது. கருநாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வறட்சி நிவாரண நிதியாகக் கேட்ட தொகையில் 30 விழுக்காடு அளவுக்குப் பெற்றன.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. உள்கட்சி சண்டையிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழக ஆட்சியாளர்கள் நடுவண் அரசைக் கண்டு அஞ்சிக் கொண்டிருப்பதால், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையைப் பெற்றிட தவறிவிட்டனர். நடுவண் அரசும் வேண்டுமென்றே தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. 23.4.2017 அன்று தில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் முன்னிலையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத் தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத் திற்கு மிகக் குறைவாக வறட்சி நிவாரணத் தொகை ஒதுக்கப் பட்டது பற்றியோ, இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டு மென்று வலியுறுத்தியோ ஒரு சொல்லும் பேசவில்லை.
மேலும் தமிழக அரசு, ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.3,400 கோடி செலவில் ஏரிகள், பாசனக் கால்வாய்கள், குளங்கள் முதலானவைத் தூர்வாரப்படும் என்று கூறியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீர்நிலைகள் தூர்வாரப்படவே இல்லை. இதற்காக ஒதுக்கப்படும் பணத்தை அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் பங்குபோட்டுக் கொள்ளை யடித்தனர். குடிமராமத்து எனப்படும் நீர்நிலைகளைத் தூர் வாருதல், ஏரி, குளம், குட்டைகளைச் செப்பனிடல் போன்ற பணிகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வந்திருந்தால், 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் நீர்நிலைகளில் 2016ஆம் ஆண்டிலும் தண்ணீர் இருந்திருக்கும். இந்த நீர் பயிரிடுவதற்குப் போதுமானதாக இல்லாவிடினும், குடி நீருக் கும், கால்நடைகளின் நீர் தேவைக்கும் போதுமானதாக இருந்திருக்கும்.
பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
தடாலடி மன்னன் பிரதமர் நரேந்திர மோடி, பேரிடர் காலத்தில் உழவர்களுக்கான “சர்வரோக நிவாரணி”யாக புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு அறிவித்தார். இது 2016ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டம் தனியார் காப்பீட்டுத் துறை மூலம் செயல்படுத்தப்படும்.
பயிர் இழப்பீட்டின் விழுக்காடு முன்பு சில வருவாய்க் கிராமங்களைக் கொண்ட “பிர்க்கா” அளவில் மதிப்பிடப் பட்டது. புதிய பயிர்க் காப்பீடு திட்டத்தின்படி கிராம அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இதனால் பயிர் இழப்புக்குள்ளான உழவர்களுக்குக் கட்டாயம் இழப்பீடு தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. காரிப் பயிர்களுக்கு 2 விழுக்காடும், ராபி பயிர்களுக்கு 1.5 விழுக்காடும் உழவர்கள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். மீதி பிரீமியம் தொகையில் 50 விழுக்காடு மாநில அரசும், 50 விழுக்காடு நடுவண் அரசும் செலுத்தும். 2016ஆம் ஆண்டில் 13 இலட்சம் உழவர்களுக் காக தமிழ்நாட்டு அரசு ரூ.410 கோடி பிரீமியம் தொகையைச் செலுத்தி உள்ளது. இதற்குமுன் சராசரியில் ஆண்டிற்கு ரூ.40 கோடி அளவில் பிரீமியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வந்தது.
2016ஆம் ஆண்டின் வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்தை ஈடுகட்டும் அளவுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று உழவர்களுக்கு ஆசை காட்டப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் காவிரிப் பாசனப் பகுதியில் நெல் பயிரில் 100 விழுக் காடு பயிர் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000; 80 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20,000; 60 விழுக் காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000; 33 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8250 பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
எந்த உழவரின் பயிருக்கு எவ்வளவு விழுக்காடு பாதிப்பு என்று காப்பீடு செய்துள்ள 13 இலட்சம் உழவர்களுக்குத் தனித் தனியான கணக்கீட்டு அறிக்கை வருவாய்த் துறையிடமோ வேளாண் துறையிடமோ இல்லை. எனவே பயிர்க் காப்பீட்டு மூலம் இழப்பை ஈடுகட்டும் தன்மையில் பணம் தரப்படும் என்பது கானல் நீராகவே இருக்குமோ என்று அய்யுற வேண்டியுள்ளது. தனியார் மருத்துவக் காப்பீடு என்பதிலும் தனியார் காப்பீட்டு நிறுவனமும் தனியார் மருத்துவமனை களும் கூட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. எந்தவொரு தனியார் காப்பீட்டு நிறுவனமும் பிரீமியத் தொகை மூலம் பணம் திரட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, இழப்பீடு தருவதில் காட்டுவதில்லை என்பது கண்கூடான உண்மை.
ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் வறட்சி நிவாரண நடவடிக்கையாக 100 நாள் வேலை என்பதை 150 நாளாக உயர்த்துவதாகத் தமிழக அரசு அறி வித்துள்ளது. தமிழ்நாட்டில் 89 இலட்சம் பேர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 69 விழுக்காட்டினர் பெண்கள். ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி ரூ.203. ஆனால் வேலையின் அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி கூலி ரூ.162 ஆகும். 2016-17ஆம் நிதி ஆண்டில் மண் வேலை செய்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கூலி நிலுவைத் தொகை ரூ.965 கோடி. மொத்தமாக நிலுவையில் உள்ள கூலித் தொகை ரூ.2954 கோடி. உண்மை நிலை இவ்வளவு கேடானதாக இருக்கும்போது, வேலை நாள்கள் 150ஆக உயர்த்தப்படும் என்பது எத்தகைய மோசடி! (ஆதாரம் : தி இந்து (தமிழ்), 11.1.17).
இத்திட்டத்தில் நடுவண் அரசின் பங்களிப்புத் தொகையான 75 விழுக்காட்டைத் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அளிக்கப்படாமையே கூலித்தொகை நிலுவைக்கு முதன்மை யான காரணமாகும். 2017-18ஆம் ஆண்டிற்கு இந்திய அளவில் இத்திட்டத்திற்கு எப்போதும் இல்லாத அளவில் ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வரவு-செலவு திட்ட அறிக்கையில் கூறுகிறார். மக்களுடன் நேரிடையான நிருவாகத் தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள். ஆனால் மக்களுடன் நேரிடையான தொடர் பில் இல்லாத நடுவண் அரசின்கீழ் பல திட்டங்கள் இருப்பது சனநாயகப் படுகொலையாகும்.
கடனில் உழலும் உழவர்கள்
1991இல் இந்திய அரசு தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது முதல் நடுவண் அரசாலும், மாநில அரசு களாலும் வேளாண்மை புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. வேளாண்மை இடுபொருள்களின் மானியங்கள் படிப்படியாக நீக்கப்பட்டன. கொள்முதலில் பன்னாட்டு நிறுவனங்கள் அனு மதிக்கப்பட்டன. விதை, உரங்கள், பூச்சி மருந்துகள் தனியாரின் ஆதிக்கத்திற்குச் சென்றன. அதனால் வேளாண்மை பெருஞ் செலவினதாக மாறியது. விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பி லிருந்து அரசு விலகிக் கொண்டது. அறுவடைக்காலத்தில் குறைந்த விலையில் உழவர்கள் தங்கள் விளைபொருள் களை விற்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வறட்சி, அதிக மழை, காலந்தவறிய மழை, பூச்சி நோய் தாக்குதல் முதலான காரணங்களால் அய்ந்து ஆண்டுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முழுமையான இழப்பு ஏற்படுகிறது. மக்களின் உணவுக்கான வேளாண்மை என்பது சந்தையில் விற்பதற்கான வேளாண்மையாக மாறியதால் மானாவாரி வேளாண்மை அழிந்தது. இக்காரணங்களால் கடன்சுமை அதிகமாகியது.
கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய அளவில் கடன் சுமையைத் தாங்க முடியாமல் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நாளொன்றுக்கு 34 உழவர்கள் தற்கொலை செய்து கொள் கின்றனர். தமிழ்நாட்டில் 2016-17ஆம் ஆண்டில் 400க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக அரசோ 17 உழவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறிவந்தது. அண்மையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி 82 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தமிழக அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் 28-4-17 அன்று தமிழ்நாட்டு அரசு தில்லி உச்ச நீதி மன்றத்தில் அளித்த அறிக்கையில், “வறட்சியின் காரணமாக எந்தவொரு விசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை; மாரடைப்பு, உடல்நலக்குறைவு, வயது முதுமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் மட்டுமே அவர்கள் இறந்து போனார்கள்” என்று கயமையாகக் கூறியுள்ளது. மேலும் 80 விழுக்காட்டினராக உள்ள உழவர்கள் தனியாரிடம் கடன் வாங்குகின்றனர். விதை, உரங்கள், பூச்சி மருந்து கடைக் காரர்களிடம் அதிக வட்டியில் கடன் வாங்குகின்றனர்.
எனவே கடன் சுமையால் உழவர்கள் பெருந் துன்பத் திற்கு உள்ளாகின்ற நெருக்கடியான காலங்களில் அவர்களின் கடன் சுமையைப் போக்க வேண்டியது அரசின் கடமை யாகும். 1989இல் வி.பி. சிங் தலைமை அமைச்சராக இருந்த போது, ரூ.10,000 கோடிக்கு உழவர்களின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்தார். அதன்பின் அரசுகளால் செய்யப்பட்ட கடன் தள்ளுபடிகளெல்லாம் கட்சிகளின் ஆதாயத்தை நோக்க மாகக் கொண்டிருந்தன. 2008இல் மன்மோகன் சிங் ஆட்சி யில் 72,000 கோடிக்கு உழவர்களின் கடன் தள்ளுபடி செய்யப் பட்டது. 2006இல் தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ரூ.7000 கோடி கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 2016 தேர்தலில் வாக்களித்தபடி முதலமைச்சர் செயலலிதா சூன் மாதம் ரூ.5,780 கோடிக்கு 16,94,145 சிறு, குறு உழவர்களின் கூட்டுறவு சங்கக் கடனைத் தள்ளுபடி செய்தார். உத்தரப்பிரதேசத் தேர்தல் அறிக்கையில் சொல்லிய படி, 2017 மார்ச்சு மாதம் முதலமைச்சர் ஆதித்தியநாத் ரூ.36,000 கோடிக்கு உழவர் கடன் தள்ளுபடியை அறிவித்திருக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும், உலக வங்கியும் உழவர்களின் கடன் தள்ளுபடி நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. ஆனால் பெருமுதலாளிகளுக்கு இலட்சக்கணக் கில் அரசு கடன் தள்ளுபடி செய்வதை இவர்கள் கண்டுகொள் வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 50 பெரு முதலாளி களின் வாராக் கடன் 1.4 இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப் பட்டது. (தினமணி 1.4.2017 ஏப்பிரல் மாதம் ரூ.5,02,068 கோடியாக இருந்த வாராக்கடன் 2016 திசம்பரில் 9 மாதங் களில் ஒரு இலட்சம் கோடி அதிகரித்து - ரூ.6,06,911 கோடி யாக உயர்ந்தது) இந்த வாராக்கடன்கள் பெருமுதலாளிய நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாத கடன் தொகையாகும்.
இதுதவிர, ஆண்டுதோறும் பெருமுதலாளிய - வணிக நிறுவனங்கள் ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, சொத்து வரி, முதலீட்டு வரி, விற்பனை வரி என்கிற பல்வேறு பிரிவுகளின் கீழ் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையில் விலக்கு பெறும் தொகை 5 இலட்சம் கோடி உருபா ஆகும். கடந்த பத்து ஆண்டுகளில் இத்தன்மையில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ரூ.48 இலட்சம் கோடி என்று நடுவண் அரசின் பொருளாதார ஆய்வறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வறட்சியில் தத்தளிக்கும் தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள ரூ.7000 கோடி கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அய்யாக்கண்ணு தலைமையில் தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச்சு 14 முதல் 41 நாள்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அவலநிலைப் போராட்டம் நடத்திய தமிழக உழவர்களை மோடி அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் உச்சநீதி மன்றம் நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று உறுதியுடன் ஆணையிட்டதும், சாராய முதலாளிகள் கொடுத்த அழுத்தத்தால் உடனே மோடி தன் அமைச்சரவையைக் கூட்டி, பா.ச.க. ஆட்சி செய்யும் மாநிலங் களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் மாவட்டச் சாலைகளாக அறிவிப்பது என்று முடிவு செய்தாரே! விஜய் மல்லைய்யா பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பியோட துணைநின்றவர் தானே இந்த மோடி!
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் என 5 கோடிப் பேர் வேளாண்மையை விட்டு நகரங்களில் வேறு தொழில்களைத் தேடி வெளியேறி யிருக்கிறார்கள். 2011 மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்படி, நாளொன்றுக்கு 2500 பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறு கின்றனர். குடிப்பது கூழானாலும் தன்மானத்துடன் கிராமத்தில் வாழ்ந்து வந்த இவர்கள் நகரங்களின் நடைபாதைகளில் பிச்iக்காரர்களைப் போலப் படுத்துக் கிடக்கும் இழிநிலைக் குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
நடுவண் அரசின்கீழ் இயங்கும் தேசிய மாதிரி ஆய்வு ஆணையம் (சூளுளுடீ) 2002-2003ஆம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்புப்படி ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.2115ஆக இருந்தது. இது பத்து ஆண்டுகள் கழித்து 2012-13இல் ரூ.6426ஆக உயர்ந்தது. ஆனால் 2012-13இல் ஒரு விவசாய குடும்பத்தின் செலவு ரூ.6223 என்று தெரிவித்துள்ளது. எனவே ஒரு விவசாயக் குடும்பத்தின் மொத்த வருமானமும் அவர்களின் குடும்பச் செலவுக்கே சரியாகிவிடுகிறது. அதாவது வாய்க்கும் வயிற்றுக்குமான வாழ்க்கையாக இருக்கிறது.
அதேசமயம் விவசாயத் தொழிலாளர்களின் நிலை இன்னும் இரங்கத்தக்க நிலையில் இருக்கிறது. 2002-2003 முதல் 2012-2013 வரையிலான காலத்தில் வேளாண் கூலித் தொழிலாளர்களின் நுகர்வுப் பொருள்களின் பணவீக்கம் 7.2 விழுக்காடாக இருக்கிறது. இதேகாலத்தில் இவர்களின் வருவாய் உயர்வு 4 முதல் 4.5 விழுக்காடாக இருக்கிறது. எனவே இவர்களின் உண்மையான வருமானம் எதிர்மறையாக இருக்கிறது. அதனால்தான் வேளாண் தொழிலாளர்கள் கிராமங்களைவிட்டு நகரங்களை நோக்கிதான் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த நிலையைத்தான் முதலாளிய ஆளும்வர்க்கம் விரும்புகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்த இரகுராம் ராஜன் விவசாயத்திலிருந்து மக்களை வேறு பிழைப்புக்கு நகர்த்துவதுதான் வளர்ச்சியின் இலக்கு என்று ஒருமுறை குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 70 விழுக்காடு விவசாயிகள் தேவையில்லை என்றும் அவர்களை வேறு தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவில் கிராமங்களிலிருந்து 40 கோடி மக்களை நகரங்களுக்கு நகர்த்த (விரட்ட) வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. இப்படிச் செய்தால்தான் கிராமப்புறங்களில் கார்ப்பரேட் வேளாண்மையைக் கொண்டுவரமுடியும். நகர்ப்புறங்களில் குறைந்த கூலிக்கு, காரல்மார்க்சு குறிப்பிட்டது போல் உழைப்பதற்காகப் பெரும் பட்டாளம் ஏங்கிக் காத்துக் கிடக்கும் நிலை ஏற்படும். முதலாளியத்தின் கொள்ளை இலாபத் துக்கு இதுவே இன்றியமையாத முன் தேவையாகும்.
அய்யாக்கண்ணு தலைமையில் உழவர்கள் தில்லியில் திறந்தவெளியில் அரை நிர்வாண கோலத்தில் வெய்யிலிலும் கடும் குளிரிலும் போராடியதால், இந்தியா முழுவதும் நாள் தோறும் செய்தி ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சி குறித்தும், தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மாநில - மத்திய அரசுகள் பற்றியும் மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டு அரசின் கையாலாகத்தனமும் நடுவண் அரசின் வஞ்சப்போக்கும் தமிழக மக்கள் முன் அம்பலப்பட்டு நின்றன. இன்னும் கடுமையான போராட்டங்களை மேற் கொண்டால்தான் ஆளும் வர்க்கங்களை மக்களின் கோரிக் கைகளை ஏற்கச் செய்ய முடியும் என்பதைத் தில்லியில் உழவர்கள் நடத்திய 41 நாள்கள் போராட்டமும் தமிழகத்தில் பரவலாக நடத்தப்பட்ட போராட்டங்களும் உணர்த்துகின்றன.