முனைவர் செல்வக்குமார் இராமச்சந்திரன்! இந்தப் பெயர் எவ்வளவு பரிச்சயமோ தெரியாது. ஆனால் இணைய உலகில் ‘வினையூக்கி’ என்றால், ‘ஓ! அவரா!’ என்றே வியப்புடன் விளிப்பர். வினையூக்கியை கண்டதில்லை ஆனால் அவரின் எழுத்துகள் எங்களுக்குள்ளே பகுத்தறிவை, சமூக நீதியை உசுப்பிவிட்டது என்று பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கலாம். வினையூக்கியை காணும் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் வாய்ப்பை நழுவ விடுவார்?

லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் இரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் அவருடன் உரை யாடும் வாய்ப்புக் கிடைத்தது இரண்டு மணி நேரமும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. தகவல் தொழில் நுட்பத் தகவல்கள், பொது அறிவுத் தகவல்கள், சமூக நீதிக் கருத்துகள், தர்க்க முறைகள், திட்டமிடல், செயலாற்றல், எதிர்காலத் திட்டங்கள், நகைச்சுவைத் துனுக்குகள் என சுவாரசியமான இரண்டு மணி நேரமாக அமைந்தது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலகத் தத்துவம். இணைய உலகம் வலைப்பூவில் தொடங்கி, ஆர்க்குட்டில் வளர்ந்து, பேஸ்புக்கில் பல்கி, டுவிட்டரில் பெருகி வளர்ந்து வருகிறது. இவை அனைத்திலும் தடம் பதித்தவர் ‘வினையூக்கி’. இது எதைக் குறிக்கிறது என்றால், சமூக மாற்றத்திற்கான தேவைக்கு ஏற்ப புதிய மாற்றத்துக்குத் தகவமைத்துக் கொள்ளும் அரிய பண்பை கொண்டவராகக் ‘வினையூக்கி’ வழிகாட்டுகிறார்.

தடுக்கி விழுந்தால் சாப்ட்வேர் இஞ்சினியர் என்பது இன்றைய தமிழ்நாட்டின் நிலை. அப்படிப் பட்ட நன்னிலை அடைந்ததற்கு தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் ஒரு காரணம். ஆனாலும் ஒருபடி மேலே போய், மேற்படிப்பு படிப்பவர்கள் குறைவு தான். அதையும் தாண்டி ஆராய்ச்சி மேற்படிப்பு படிப்பவர் மிகச் சொற்பம். அந்த வகையில் ‘வினையூக்கி’ செல்வா அவர்கள் தமிழ் நாட்டில் தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார், அடுத்ததாக ஸ்வீடனில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இத்தாலியில் உள்ள ரோம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். வினையூக்கியின் தந்தையார் அஞ்சல்துறையில் கிளார்க்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ என்பதற்க்கேற்ப ‘வினையூக்கி' முனைவர் ஆகி பெருமைப்பட வைக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள், ‘நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய கடமை; உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும்.’ என்பார்.

‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன் தெரிவார்’

‘வினையூக்கி’ அவர்கள் தன் முனைவர் பட்டப்படிப்புக்கான ஆராய்ச்சியில், தன் நன்றியாக தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணவுக்கு, கலைஞர் கருணாநிதிக்கு, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோருக்கு காணிக்கையாக செலுத்தி இருப்பது சிறப்பான செயலாகும். ஆம்! ‘நன்றின் பால் உய்ப்பது அறிவு', நன்றியின் பால் உய்ப்பது பேரறிவுதானே!

ரோம் பல்கலைக் கழகத்தில் ஹானர்ஸ் தேர்ச்சியுடன் ஆராய்ச்சி படிப்பை முடித்த ‘வினையூக்கி’ தற்பொழுது வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லாந்து பல்கலைக் கழகத்தில்(The University of Sunderland) ஆராய்ச்சி யாளராக உள்ளார். பல்கலைக்கழகப் பணிக்கு அப்பாற்பட்டு அறிவியல் மருத்துவத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய வேண்டிய தகவல் மென்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இரண்டை தொடங்கி இருக்கிறார்.

அய்ரோப்பாவில் கணினித் துறையில் சிறப்பாகப் பங்காற்றிய பத்தே பத்து மாணவர்களுக்கு மட்டும் கூகிளின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அந்தப் பத்து நபர்களில் ‘வினையூக்கி’ அவர்களும் ஒருவர். பின்னர், அவரின் திறமையைப் பாராட்டி காந்தி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

‘வினையூக்கி’ அவர்கள் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். மேலும் தன் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட செல்வாவிற்கு அவர் மனைவி விஜிதான் தனது வாழ்வின் வினையூக்கி என்பதில் பெருமிதமுண்டு. பொருளாதார தன்னிறைவு பூர்த்தி அடைந்தவுடன் ஐக்கிய முடியரசு அரசியலில் ஈடுபட்டு இங்கிலாந்து பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பது வினையூக்கியின் திட்டம்.

தமிழ்ச் சமூக இணைய ஊடக வெளியில் கிளிமூக்கு அரக்கர்களின் ஒருங்கிணைப்பாளராக செயற்படும் ‘வினையூக்கி', விரைவில் ‘கிளிமூக்கு அரக்கன்’ மாத இணைய இதழை இங்கிலாந்தில் இருந்து வெளியிட ஆயத்தப் பணிகளை மேற் கொண்டு வருகிறார். திராவிட எண்ணம் கொண்டவர்கள் எடுக்கும் முன்னெடுப்புகளை கைத்தட்டி ஆதரிப்பவர்கள் அந்த முன்னெடுப்பு களுக்கான நேரம் அதன் நேரிடை பண மதிப்பை உணர்ந்து பொருளாதார புரவலர்களாகவும் மாற வேண்டும் என்று கருதுகிறார். அரக்கர்கள் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு பொருளாதார புரவர்களின் ஆதரவு பெருகவேண்டும்.

“மனிதனின் மனமும் மதமும் அறிவியலாக மட்டுமே இருக்க வேண்டும்”, என்பது வினை யூக்கியின் கருத்து.

“எந்த ஒரு மனிதருக்கும் சமூக நீதிப் பார்வையும், தன் தாய்மொழிப் பற்றும், உலக மொழிகள் ஒன்றில் அறிவும் பெறும்போது, இந்த உலகமே தழைத்தோங்கும்”, எனும் விசாலப் பார்வையால் வியக்க வைக்கிறார் ‘வினையூக்கி’.

“எந்த ஒரு மனிதருக்கும் வெற்றி பெற வெண்டும் எனும் வேட்கையும், சமூக நீதி சார்ந்த சூழலும், சிறிது பயிற்சியும் கொடுத்தாலே போதும், அந்த மனிதர் தன் இயல்பாகவே தான் தேர்ந்தெடுத்த துறையில் நிச்சயம் வெற்றியாளராக பிரகாசிக்க முடியும்”, என்று உறுதியாக நம்புகிறார் ‘வினையூக்கி’.

‘வினையூக்கி’ அவர்களின் தத்துவத்திற்கு முனைவர் செல்வக்குமார் ராமச்சந்திரன் அவர்களே ஒரு நற்சான்றுதானே!

Pin It