பாபர் மசூதி இடிப்பைப் பற்றி இன்னும் எத்தனை விதமாகப் பேசி பாஜக பரிவாரம் மக்களைக் குழப்பும் என்பது தெரியவில்லை. பாபர் மசூதி இடிப்பால் பாஜக மக்களது ஆதரவை இழந்தது என்றும், மசூதி இடிக்கப்பட்டது பெரிய சோகம் என்றும், மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று நடந்த நிகழ்வுகளுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது என்றும் அத்வானி கூறியுள்ளார். அத்துடன் அயோத்தி இயக்கத்தில் தான் பங்கு பெற்றதைப் பெருமையாகவேக் கருதுவதாகவும் திருவாய் மலர்ந்துள்ளார். (ஆதாரம்: தினமணி, மார்ச் 13, 2011).

இம்மாதிரி பேச்சுக்கள் சம்பவம் நடந்து அல்லது குற்றம் நடந்து இருபது வருடங்களுக்குப் பின்னர் பேசப்படுகின்றது என்பதை நினைவில் கொள்வோம். ஏனெனில், ரத யாத்திரை நடத்தியது இவர்தான். அது சென்ற பாதையெல்லாம் தனக்குத் தானே மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்து கொண்டவரும் இவர்தான். (அப்போது நடந்த கலவரங்களில் மட்டும் 564 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று விக்கிபீடியா இணையதளம் கூறுகின்றது). இனி இந்திய வரலாற்றை எழுதும்போது 1947க்கு முன் பின் என்று எழுதாமல் '1992 டிசம்பர் 6க்கு முன், அதற்குப் பின்' என்று எழுத வேண்டும் என்றவரும் இவர்தான். மேற்கொண்டு பார்க்கும் முன் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சதி வழக்கு இன்னும் அத்வானி மீது நிலுவையில் இருக்கின்றது என்பதை மனதில் கொள்வோம்.

இந்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு மே 20ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ இருக்கை ஒரு தீர்ப்பு வழங்கியது. கடந்த 2001ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் அத்வானியையும் மற்ற 21 பேரையும் விடுவித்திருந்தது. அதாவது அவர்கள் எதுவும் சதி செய்யவில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. அதற்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை முறையீடு செய்திருந்தது. அந்த முறையீட்டு மனுவின் மீது லக்னோ உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதற்கு எதிராக சிபிஐ மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இப்போது முறையீடு செய்திருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் அத்வானி இப்படிப் பேசியிருக்கின்றார். வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மசூதி இடிக்கப்பட்டவுடன் அத்வானி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தார், உற்சாகமாக இருந்தார் என்பதற்கு ஏற்கனவே ஏராளமான தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. அதன்றி பல்வேறு சாட்சியங்களும் இருக்கின்றன.

''அத்வானி உற்சாகமாகக் காட்சியளித்தது மட்டுமின்றி 1992 டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் திரண்டிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தினிடம் சர்ச்சைக்குரிய அந்த இடத்திலேயே ராமர் கோவில் கட்டப்படும் என்று அறிவிக்கவும் செய்தார்' என்று அஞ்சு குர்தா என்கிற மூத்த ஐபிஎஸ் அதிகாரி சிறப்பு நீதிமன்றத்திடம் சாட்சியளித்தார்.'' (மார்ச் 26, 2010. ஜீ நியூஸ்).

கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் (லக்னோ) நீதிமன்றம் மசூதி இடிப்பு வழக்கில் சங்பரிவாருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தபோது தான் ரதயாத்திரை நடத்தியது சரிதான் என்று தீர்ப்பு மெய்ப்பிக்கின்றது என்று அத்வானி குதூகலமாகத் தெரிவித்தார். (ஆதாரம்: ரிடிப்.காம்). தற்போது தற்காலிகக் கோவில் இருக்கும் இடத்தில் பேச்சு வார்த்தைகளின் மூலமாக ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.

பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியாருடன் சேர்ந்து மசூதியை இடிப்பதற்கு அத்வானி சதி செய்ததாக அத்வானியின் மருமகள் கௌரி அத்வானி லிபரான் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது நடந்தது 2001ம் ஆண்டு.

'டிசம்பர் 1, 1992 அன்று ரதயாத்திரை புறப்படுவதற்கு முன்னர் வினய் கத்தியார் அத்வானியைச் சந்திக்க வந்தார். அந்த சந்திப்பில் நானும் உடனிருந்தேன். இந்தக் கூட்டத்தில்தான் அத்வானியும், கத்தியாரும் பாபர் மசூதியை இடிக்கச் சதித் திட்டம் தீட்டினர். ரதயாத்திரையின் இறுதி நோக்கம் கரசேவை செய்து இந்துக்களை தாஜா செய்வது மட்டுமல்ல, வாக்குகளைத் திரட்டி மத்தியில் அதிகாரத்திற்கு வருவதும்தான் என்று அத்வானி கத்தியாரிடம் கூறினார்.........பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும், அதாவது மத்தியில் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அத்வானி கத்தியாரிடம் கூறினார்; பாபர் மசூதியை இடித்தால்தான் அது சாத்தியமாகும்; ஏனெனில், அதுதான் இந்துக்களை பாஜகவிற்கு ஆதரவாக ஒன்று திரட்டும்' என்று கௌரி தன்னுடைய லிபரான் கமிஷன் முன்பு அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். (ஆதாரம்: விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்கள்).

அத்வானி இப்படி மாற்றி மாற்றிப் பேசுவது இது முதல் முறையல்ல. மசூதி இடிக்கப்பட்ட அன்று அத்வானி செய்தது என்னவென்று பாருங்கள்;

'மத்தியப் படைகள் அயோத்திக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நகரின் அனைத்து நுழைவாயில்களையும் மூடுங்கள் என்று அத்வானி உத்தரவிட்டார். இது பிற்பகல் 2 மணிக்கு நடந்தது. அப்போது கரசேவகர்கள் மசூதியின் கவிகை மாடத்தை இடித்துக் கொண்டிருந்தார்கள்' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் றாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தி ஹிந்து பத்திரிக்கையும் அமு போலவே செய்தி வெளியிட்டிருந்தது. முதல் கவிகை மாடம் 2.45 அணி அளவில் தரைமட்டமாக்கப்பட்டது. மற்ற இரண்டும் 4.30 மணிக்கு நிலைகுலைந்து வீழ்ந்தன. 12.30 மணியளவில் உத்திரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங் ராஜினாமா செய்வதற்கு அத்வானி அனுமதிக்கவில்லை. 2 மணிக்கும் கூட அனுமதி மறுத்தார். அவர் 5.30 மணிக்குத்தான் ராஜினாமா செய்தார். இரட்டை வேடத்திற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாக சில மணி நேரங்களுக்குப் பின்னர் 'இன்று அயோத்தியில் நடந்தவைகளுக்காக நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்.....என்னால் இந்த சம்பவத்தைத் தடுக்க முடியவில்லையே என்பதற்காக வருந்துகின்றேன்' என்று மக்களவை சபாநாயகருக்கு லக்னோவிலிருந்து கடிதம் எழுதினார். (ஏஜி.நூரனி, தி ஆர்எஸ்எஸ் அன்ட் தி பிஜேபி, பக்.74).

இவை எல்லாம் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்து வாக்கு வங்கியைக் குறி வைத்தே சங்பரிவாரம் ராமர் கோவில் இயக்கத்தை திட்டமிட்டது. அத்வானி ரதயாத்திரை நடத்தினார். ராமருக்குக் கோவில் எங்கு வேண்டுமானாலும் கட்டலாமே என்று பலர் கூறியபோது, மசூதி இருக்கும் இடத்தில்தான் கோவில் கட்டுவோம் என்றனர். மசூதியை இடித்ததால்தான் இந்துக்களிடையே மதவெறியைக் கிளப்பி அதைத் தங்களது கட்சிக்குச் சாதகமாக ஆக்க முடியும் என்று திட்டமிட்டுத்தான் இடித்தார்கள். அத்வானியின் மருமகள் சொல்வது போல் அது முதல் நாள் திட்டமிடப்பட்டிருக்க முடியாது. ஏனெனில், அவ்வளவு பெரிய கட்டிடத்தை இடிக்கத் தேவையான கருவிகளை அல்லது ஆயுதங்களை முன் கூட்டியே திட்டமிட்டிருந்தால்தான் கரசேவகர்கள் அவற்றை எடுத்து வந்திருக்க முடியும். நிற்க.

மசூதி இடிக்கப்பட்டதால் பாஜக மக்கள் ஆதரவை இழந்து விட்டது என்பது ஒரு வகையில் உண்மைதான். மசூதி இடிக்கப்பட்டதும் உபி, மபி, இமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில பாஜக அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன. மீண்டும் நடந்த தேர்தலில் பாஜக ராஜஸ்தான் தவிர வேறு எங்கும் ஆட்சிக்கு வரவில்லை. அங்கும் கூட அதற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உதிரி எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைத்தார்கள். அதாவது அவர்களது கணக்கு பொய்த்துப் போய்விட்டது. பின்னர் 1996ல் அவர்கள் மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக வளர்ந்ததும், அதற்குப் பின்னர் 1998லிருந்து 2004 வரை ஆட்சியிலிருந்ததும் வேறு பல காரணிகளும் சம்பந்தப்பட்டது. ஆனால், வரலாற்று அறிஞர் பணிக்கர் கூறுவது போல் மசூதி இடிக்கப்பட்டதால் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்று அது வரை அதைக் கருதிக் கொண்டிருந்த அதன் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரை அது இழந்தது.

ஏற்கனவே அக்கட்சியிடமிருந்து விலகியிருந்தவர்கள் மேலும் தூரமாக விலகிப் போனார்கள். ஆனால், அது அத்வானிக்கு இப்போதுதான், அதுவும் சதி வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்யப் போகிறது என்றவுடன்தான் உறைக்கிறது. வழக்கிலிருந்து தப்பிக்க அத்வானி என்னென்னவோ செய்து பார்க்கின்றார். சொல்லிப் பார்க்கின்றார். ஒரு வேளை வழக்கிலிருந்து தப்பிவிட்டால் அவரது பேச்சே வேறு மாதிரி இருக்கும். ரதயாத்திரை நடத்தியபோது எப்படி வெறியைக் கிளப்பினரோ அப்படி இருக்கும். ஏனெனில், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை அவர்கள் இன்னும் கைவிடவில்லை. போதாக்குறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வேறு சாதகமான தீர்ப்பு அளித்திருக்கின்றது. அதை சங்பரிவாரம் எவ்வளவு உற்சாகமாக வரவேற்றது என்பது நமக்குத் தெரியும்.

ஆறு வருடங்கள் மத்தியில் அதிகாரத்திலிருந்தபோது ஏன் அவர்கள் கோவில் கட்ட முயற்சிக்கவில்லை என்ற கேள்வி இன்னும் சிலருக்கு இருக்கலாம். ஆனால், அவர்கள் அதற்காக முயற்சித்தார்கள் என்பதுதான் உண்மை. கூட்டணி நிர்ப்பந்தத்தின் காரணமாக தந்திரமான, அவ்வளவு வெளிப்படையாக இல்லாத முயற்சிகளை எடுத்தார்கள். மசூதி இருந்த இடத்திற்குக் கீழே கோவில் எதுவும் முன்னர் இருந்ததா என்கிற ஆராய்ச்சி அதில் ஒன்று. ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் அவர்களது ஆட்கள் நிறைய இருந்தார்கள் என்பது ஆராய்ச்சி குறித்த முடிவுகளிலேயே தெரிந்தது. இதன்றி தங்களது இதர வகுப்புவாதத் திட்டங்களைச் செயல்படுத்தினார்கள்; சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என்றது, அரசியல் சட்டத்தைத் திருத்த குழு அமைத்தது, சாவர்க்கரை விடுதலைப் போராட்ட நாயகனாகச் சித்தரித்தது, பாடத்திட்டங்களை இந்துத்துவமயமாக்கியது இப்படிப் பலவற்றைப் பட்டியல் போடலாம். சாதாரண அரசு எழுத்தரிலிருந்து நீதிபதிகள் வரையிலும் தங்களது ஆட்களை நியமித்தது என்பதையும் முக்கியமாக இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வகுப்புவாதிகளைப் பொறுத்த வரையில் எதையாவது சொல்லி, எதையாவது செய்து அதிகாரத்திற்கு வர முயற்சிப்பார்கள். அவர்கள் என்ன சொல்லியிருந்த போதிலும் அதிகாரத்திற்கு வந்ததால் தங்கள் நிகழ்ச்சி நிரலைத்தான் செயல்படுத்துவார்கள். வெறுமனே அதிகாரத்திற்கு வருவது அவர்களது நோக்கமல்ல. காங்கிரசைப் போலவோ, ஜனதா தளத்தைப் போலவோ அது மற்றொரு முதலாளித்துவ அரசியல் கட்சியல்ல. தங்களது வகுப்புவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்காகத்தான் அவர்களுக்கு அதிகாரம் வேண்டும். குஜராத்திலும், மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்த்தால் போதும். இது புரியும். மக்களுக்கும் அது தெரிந்திருக்கின்றது. அதனால்தான் அவர்களது அரசியலை விரும்பாத மக்கள் பாஜகவை அதிகாரத்திலிருந்து தூரத்திலேயே வைத்திருக்கின்றார்கள்.

Pin It