அயோத்தியில் இராமர் கோயில் கும்பாவிசேகம் முடிந்திருக்கின்றது. இராமனின் கண் திறக்கப்பட்டு அவனுக்கு பார்வை கொடுக்கப்பட்டிருக்கின்றது. நிச்சயம் இராமனுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

சம்மந்தம் இல்லாத இடத்தில் தனக்கு சம்மதம் இல்லாத மனிதர்களுக்கு மத்தியில் சம்மந்தம் இல்லாத கோஷங்களுக்கு மத்தியில் தன்னை தனித்து விடப்பட்டவனாக உணர்ந்திருப்பான்.

செத்துப் போன தனக்கு உயிர்கொடுத்த பார்ப்பனக் கூட்டத்தை மிரட்சியுடன் இந்நேரம் இராமன் பார்த்துக் கொண்டிருப்பான். சினிமாக்களில் வருவதுபோல பிணங்களை உயிர்ப்பித்து நாச வேலைக்குப் பயன்படுத்தும் நாசகாரக் கூட்டத்திடம் தான் மாட்டிக் கொண்டதை எண்ணி கண்கலங்கி இருப்பான்.

அனைவருக்குமான அரசியல் அமைப்புச் சட்டம் உள்ள ஒரு நாட்டில், எல்லா மனிதர்களின் ஓட்டுக்கும் ஒரே மதிப்பு என்றான நாட்டில், வில்லும் அம்பும் ஒழிந்துபோய் பீரங்கிகளும் அதிநவீன துப்பாக்கிகளும் இருக்கும் ஒரு நாட்டில் ராமனுக்கு என்ன வேலை இருக்கப் போகின்றது? அதுவும் ஆளுவதற்கு ராஜ்ஜியம் இல்லாத ஒரு நாட்டில்...pm modi ram templeவேலை இல்லாமல் இல்லை. அவன் அமைதியாக நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். இராமனின் பெயரால் இன்னும் சில ஆயிரம் மனித உயிர்களை இராமனுக்கு உயிர்கொடுத்தவர்களால் கொல்ல முடியும்.

இந்த நிகழ்வு விமர்சையாக சங்கிகளால் கொண்டாடப்பட்டாலும் அது ஒரு குற்றத்தின் கொடூரத்தை உணர்த்திக் கொண்டே இருந்தது. எப்படி ஒரு மோசமான கொலைகாரன், பாலியல் குற்றவாளி போன்றோரின் மரணத்திற்குச் செல்பவர்களை மக்கள் இழிவாகப் பார்ப்பார்களோ அப்படித்தான் பாபர் மசூதியை இடித்துவிட்டு கட்டப்பட்ட இராமர் கோயிலுக்குச் செல்பவர்களும் பார்க்கப்பட்டார்கள்.

மசூதியை இடித்தவனுக்கும், அதை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்றவனுக்கும் எப்படி குற்றத்தில் பங்கு இருக்கின்றதோ, அதே பங்கு கும்பாவிசேகத்தில் கலந்து கொண்டவனுக்கும் உள்ளது. இவர்களும் குற்றத்தின் பங்குதாரர்கள்தான். இவர்களின் ஆழ்மனத்தில் மண்டிப்போய் இருக்கும் மதவெறியைத்தான் களத்தில் இறங்கி வேலை செய்யும் சங்கிகள் செய்து முடித்தார்கள்.

நடந்து முடிந்த கும்பாவிசேகம் சங்கிகளின் தரப்பில் இருந்தே பல கேள்விகளை எழுப்பி இருந்தது. அதில் முக்கியமானது மோடி இராமர் சிலையை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்ற சங்கராச்சாரியார்களின் எதிர்ப்பு.

ஆம், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையின்போது இராமர் சிலையை மோடி தொடுவதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக பூரி கோவர்தன் மடம் சங்கராச்சாரி நிச்சலானந்த சுவாமி என்பவர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

"சிலையை யார் தொட வேண்டும், யார் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சம்பிரதாயப்படி தான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. இதைச் சரியாகச் செய்யாவிட்டால் தேவர்களும், தெய்வங்களும் கோபமடைவர். இது நகைச்சுவை அல்ல. முறையாகச் செய்தால்தான் தெய்வத்தின் மகிமை அனைவருக்கும் கிடைக்கும். இல்லையெனில் ஆபத்து ஏற்படும்,” என்றும்,

”மோதி சிலையைத் தொட்டு அதைத் திறந்து வைப்பார். நான் கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமா? என்றும் தெரிவித்திருந்தார்.

அதே போல ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, “இராமர் கோவில் கும்பாபிஷேக விழா சாஸ்திரங்களின்படி ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால் விழாவில் பங்கேற்க முடியாது" என்று கூறியிருந்தார். மற்ற இரண்டு மடங்களான சிருங்கேரி மடம் மற்றும் சாரதா மடம் ஆகியவையும் அதே முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இதுவரை சங்கராச்சாரியார்களின் எதிர்ப்புக்கு பிஜேபியோ இல்லை ஆர்.எஸ்.எஸ் அமைப்போ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்படி என்றால் இது ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் நாடகமாக இருக்குமோ என்று தோன்றலாம். நிச்சயம் இல்லை.

இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு வலுவான உண்மை என்பது ஆர்.எஸ்.எஸ்தான் பிஜேபியைக் கட்டுப்படுத்துகின்றதே அல்லாமல் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கட்டுப்படுத்தவில்லை என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸ் என்பது அடிப்படையில் பார்ப்பனிய சித்தாந்தத்தை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். அது பேசும் கலாச்சார தேசியம் எல்லாம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தொடர்ச்சியாக தக்க வைப்பதையும் அதை நியாயப்படுத்துவதையும் மட்டும்தான்.

ஆனால் மாறிவரும் காலத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்ற சூத்திரர்கள், தலித்துக்கள் போன்றோருக்கான பங்கை அது ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சனாதனம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டு சிலை பிரதிஷ்டையை பார்ப்பனர்களை மட்டும் வைத்து செய்ய வைத்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இயக்கும் பார்ப்பன சங்கிகள் அம்பலப்பட்டுப் போவர்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

எப்போதுமே பார்ப்பனியம் தலைமைக்கு தான் வருவதைவிட, தன்னையும் தன் சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொண்ட ஓர் அடிமையை அமர்த்துவதையே விரும்பி செயல்படுத்தி வந்திருக்கின்றது.

மோடி போன்றவர்கள் பார்ப்பனர்களைவிட பார்ப்பனியத்தை சிறப்பாகப் பரப்பும் நபர்கள் ஆவார்கள். மோடியால் நிச்சயம் பார்ப்பனர்களின் கலாச்சார தேசியம் என்ற கோட்பாட்டிற்கு பெரிய பலம் ஏற்பட்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

இன்று வட மாநிலங்களில் பிஜேபி பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் மோடியின் மீதான சூத்திர மற்றும் தலித் சங்கிகளின் பார்வையாகும். அவர்கள் மோடியை நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கை என்பது மோடி பார்ப்பனரல்லாதவர் என்று கூட இருக்கலாம். அந்த முகமூடி மோடிக்கும் நல்லது, மோடியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் நல்லது. அதனால்தான் பிஜேபியோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ சங்கராச்சாரிகளின் புலம்பலைக் கண்டுகொள்ளாமல் காரியத்தை முடித்திருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேலைத்திட்டம் என்பது பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட ஓர் இந்தியாவைக் கட்டமைப்பதுதான். அதில் நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் நெளிவு சுழிவான பாதையிலேயே அது பயணப்பட்டு வந்திருக்கின்றது.

குறிப்பாக ராமர் கோயில் கட்டுமானத்தில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டதைவிட அது உருவாக்கிய விசுவ இந்து பரிசத்தான் ஈடுபட்டது.

1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி மும்பையில் ஆர்.எஸ்.எஸ் தலைவான எம்.எஸ் கோல்வால்கரால் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்ட போதே அதன் முதல் பொதுச்செயலாளரான எஸ்.எஸ்.ஆப்தே,

“ஒட்டுமொத்த உலகையுமே கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும், கம்யூனிஸ்ட்களும் இன்றைக்கு மூன்றாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். அம்மூன்று பிரிவினருமே இந்து சமூகத்தை ஒரு சிறந்த உணவாகக் கருதி, நம்மை உண்டு கொழுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் நாம் அனைவரும் இந்துக்களாக ஒன்றிணைந்து, அம்மூன்று தீய சக்திகளிடமிருந்தும் இந்து சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று அறிவித்தார்.

பாபர் மசூதி இடிப்பை செய்து முடிக்க சாதுக்களையும் இந்து மதத்தின் பல்வேறு குழுக்களையும் ஒருங்கிணைத்ததே விஹெச்பிதான்.

1950 முதல் 1984 வரையிலும் பாபர் மசூதியை இராமர் கோயில் கட்டுவதற்காகத் தர வேண்டும் என்று நீதிமன்ற வழக்குகள் வழியாக மட்டுமே தான் கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருந்தன. அயோத்தியில் நேரடியாக களத்தில் எந்தப் போராட்டமும் கலவரமும் வன்முறையும் பெரும்பாலும் நிகழ்ந்ததில்லை.

அங்கே புனித யாத்திரை வரும் பக்தர்கள்கூட அமைதியாகவே சென்று வந்தார்கள். ஆனால் 1980களில் இராமஜென்ம பூமி இயக்கம் புத்துயிர் பெற்றபிறகு அயோத்திக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. 1990களிலோ அது உச்சத்தைத் தொட்டது.

அயோத்தியைச் சுற்றியுள்ள கோயில்களில் ரவுடி சாதுக்கள் மட்டுமே கோயில் மகந்த்துகளாக வர முடியும் என்ற நிலையை விஹெச்பி உருவாக்கியது. இதனால் உண்மையில் ஆன்மீகத்தை விரும்பி சாதுவானவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

விஹெச்பியும் அதன் சகோதர இயக்கங்களும் பாபர் மசூதியை இடிப்பதற்கு உதவும் வகையிலான சாதுக்களையே அயோத்தியின் பல கோயில்களுக்கு மகந்துகளாக மாற்றியது.

இப்படியாக ஆர்.எஸ்.எஸ்., தான் உருவாக்கிய ஒரு அமைப்பின் மூலம் திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்துத் தள்ளி அங்கே கோயில் கட்டுவதற்கு சட்டப்படியே அனுமதியையும் வாங்கி இன்று கோவிலின் கும்பாவிசேகத்தையும் முடித்து விட்டது.

இன்று மோடி சிலையை பிரதிஷ்ட்டை செய்யக்கூடாது என்று சங்கராச்சாரியார்கள் சொன்னாலும், அன்று மசூதியை இடித்ததில் முழுக்க முழுக்க ஈடுபட்டது சூத்திர மற்றும் தலித் சங்கிகள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதனால்தான் பிஜேபியோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ சங்கராச்சாரியார்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அதற்கு செவி கொடுத்திருந்தால் அது பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும்.

தேர்தல் வரும் சமயத்தில் பார்ப்பன மேலாண்மையை வெளிப்படையாக தூக்கிப் பிடிக்க பிஜேபியோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ விரும்பவில்லை. ஆனால் அதற்காக பார்ப்பன மேலாண்மையை அது ஒரு போதும் கைவிட்டுவிட்டது என்று நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

மசூதியை இடிக்க கடப்பாரையோடு சங்கராச்சாரியார்கள் ஒருபோதும் வரப் போவதில்லை. அதனால் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கான பங்கை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். அந்தப் பங்குதான் மோடிக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பதிலுக்கு மோடி, நிச்சயம் கிறிஸ்தவர்களையும் இசுலாமியர்களையும் கம்யூனிஸ்ட்களையும் ஒழித்து இராமராஜ்ஜியத்தைக் கட்டியமைப்பார்.

- செ.கார்கி

Pin It