பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (3)
கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைத்து ஒற்றை ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்துகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒன்றியம்’ என்ற சொற்றொடரே மனுவாதிகளுக்கு கசக்கிறது. இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் இந்தியா தொடங்கி மோடி ஆட்சி வரை நடந்த மாநில உரிமைகள் தொடர் பான சுருக்கமான வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.
முந்தைய பகுதி: மெக்காலே – நாத்திகர் பிராட்லா கொண்டு வந்த மாற்றங்கள்!
சங் பரிவாரங்களும் மனுவாதிகளும் ‘இந்துக்களின் நாடு’ - ‘இந்து இராஷ்டிரம்’ என்று இப்போது பேசுகிறார்கள். ‘தாலிபான்கள்’ இஸ்லாமிய மதவெறியை ஆட்சி அதிகாரமாக்க துப்பாக்கிகளைத் தூக்கி நிற்கிறார்கள். ‘இஸ்லாமிய’ நாடுகள் பல மன்னராட்சிகளின் கீழ் இருந்து வருகின்றன. அது போல ‘இந்து ராஷ்டிரம்’ உருவாக்குவதற்கு வேத காலத்துக்கு மீண்டும் திரும்புவதற்கு ‘இராமாயணம் - மகாபாரத’ காலத்துக்குத் திரும்பியாக வேண்டும். அல்லது சத்திரிய வம்சத்தைச் சார்ந்தவர்களை அரசனாக்கி, அவரின் இராஜகுருவாக இருந்து, வேத பண்டிதர்கள் ஆட்சி அதிகாரத்தை வழி நடத்த வேண்டும். இவற்றிற்கெல்லாம் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது நாடாளுமன்றம், ஜனநாயகம், நீதித் துறையும் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் மக்ககள் கருத்துகளை உருவாக்கும் ஊடகங்களும் தான்.
அதனால் தான் ‘இந்து இராஷ்டிரம்’ என்ற மனுவாத பார்ப்பனிய ஆட்சியை உருவாக்குவதற்குத் தடையாக நிற்கும் நாடாளுமன்ற ‘ஜனநாயகத்தை’ சிதைக்கிறது. மொழி வழி மாநிலங்கள் அரசியல் சட்டம் வழியாக உருவாக்கிய சட்டமன்ற இறையாண்மை என்ற உரிமைகளைப் படிப்படியாகப் பறித்து ஒற்றை ஆட்சி நோக்கி நாட்டை இழுத்துச் சென்றால் மட்டுமே ‘இந்து இராஷ்டிரா’ பார்ப்பனிய கனவை நினைவாக்கிக் கொள்ள முடியும் என்று பார்ப்பனிய மனுவாதம் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.
மனுவாதத்துக்கு பலியான பெரும்பான்மை ‘சூத்திர பஞ்சம’ மக்களின் வாக்குகளை பல்வேறு மோசடிகள் (குறிப்பாக - வாக்கு எந்திரங்களை தவறாகப் பயன்படுத்துதல்) தேர்தல் ஆணையத்தை சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட வைத்தல்; நீதிமன்றங்களை முறைகேடாகப் பயன்படுத்தி தீர்ப்புகளைப் பெறுதல்; ‘இந்துத்துவ’ சிந்தனையாளர்களை நீதிமன்றத்துக்குள் நீதிபதியாக படிப்படியாகக் கொண்டு வந்து நுழைத்தல் என்ற பல்வேறு சதித் திட்டங்கள் திட்டமிட்டு அரங்கேறி வருகின்றன.
இந்த அரசியல் பின்னணியில் சட்டமன்ற அமைப்புகள் இந்தியாவில் நிறுவுவதற்குக் காரணமான பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே; அந்த சட்டமன்றங்கள் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் உரிமைக்குக் கதவு திறந்து விட்ட நாத்திகர் சார்லஸ் பிராட்லா ஆகிய நன்றிக்குரிய பிரிட்டிஷ் அதிகாரிகள் பற்றி கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த வரிசையில் இடம் பெற்ற மூன்றாவது அதிகாரி இந்தியாவில் ஆளுநராக இருந்த சார்லஸ் டிரெவெல்யன் - இதற்காக தனது பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தே போராடக் கூடிய ‘மானுடம்’ அவருக்கு இருந்தது. இன்றைய ஆளுநர்களைப் போல ‘கங்காணி’களாக அவர் செயல்பட விரும்பவில்லை. மாறாக மானுடத்தை நேசித்தார். ‘அன்னியர்’களாக ஆட்சி செலுத்த வந்தவர்களிடம் கூட ஆளப்படும் மக்களின் மீது கரிசனம் அவர்களுக்கு இருந்தது.
யார் அந்த டிரெவெல்யன்?
சென்னை - பம்பாய் மாகாண உரிமைகள் பறிக்கப்பட்டு, கல்கத்தாவில் மத்திய அரசிடம் சரணடையச் செய்த 1833ஆம் ஆண்டு சட்டத்தை பல மாகாண அரசுகள் ஏற்றுக் கொண்டபோது போர்க்கொடி உயர்த்தியது அன்றைக்கும் சென்னை மாகாணம் தான். அதுவும் சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். சார்லஸ் டிரெவெல்யன். முதுகெலும்போடு இந்த பிரிட்டிஷ் அதிகாரி தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தார்.
எஜமான விசுவாசிகளாக சட்டத்தின் நெறிமுறைகளை மீறி எப்படியாவது பதவியில் ஒட்டிக் கிடக்கும் கங்காணி ஆளுநர்களைத்தான் சுதந்திர இந்தியா பார்த்து வருகிறது. நேர்மையுடன் செயல்பட்ட ஆளுநர்கள் என்பவர்கள் அபூர்வத்திலும் அபூர்வம். புகையிலை வரி, உப்பு வரி, தொழில் வரி என்று பிரிட்டிஷ் ஆட்சி மாகாணங்களுக்கு விதித்த அத்தனை வரிகளையும் எதிர்த்தார். ‘வரி போடுவதை நிறுத்தி, அரசின் வீண் செலவுகளை குறையுங்கள்’ என்று இடித்துரைத்தார். மாகாண அரசுகளின் ஒப்புதல் இன்றி எப்படி வருமான வரி போடுவீர்கள் என்று தட்டிக் கேட்டார். எதிர்ப்பை வெளிப்படையாகப் பேசினார். பத்திரிகைகளில் செய்தியாகப் பதிவிடச் செய்தார். ஆடிப் போனது கல்கத்தாவில் இருந்த பிரிட்டிஷ் மத்திய ஆட்சி. 14 மாதங்கள் மட்டுமே அவரை பதவியில் நீட்டிக்க விட்டது பிரிட்டிஷ் ஆட்சி. அவரை இங்கிலாந்துக்கே திரும்பி வர உத்தரவிட்டது. அவரை இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பும் உத்தரவைப் பிறப்பித்த அரசு செயலாளரான பிரிட்டிஷ் அதிகாரி அவருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஒரு நேர்மையான அதிகாரியை இந்தியா இழந்து விட்டது. இது இந்தியாவுக்கு பேரிழப்பு. ஆனால் நீங்கள் செய்த செயல் மத்திய அரசையும் அதன் அதிகாரத்தையும் அதன் கடமைகளையும் எதிர்த்து பொது மக்களை புரட்சிக்குத் தூண்டுவதற்கு இணையாக அமைந்து விட்டது.”
அதற்கு டிரெவெல்யன் அனுப்பிய பதில்தான் தென்னாட்டு மக்களின் உணர்வுகளோடு அவர் ஒன்றி நின்றார் என்பதை விளக்குவதாக அமைந்தது.
“வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியர்கள் வேறுபட்டவர்கள். எங்கள் மாகாணத்துக்கு ஏற்கனவே சட்டமியற்றம் அதிகாரம் இருந்தது. அதைப் பறித்தவர்கள் நீங்கள். எங்களைக் கேட்காமலேயே பறித்தது தவறு. எங்கள் தென்னிந்தியாவில்தான் பிரிட்டிஷ் ஆட்சி முதன்முதலாக நிறுவப்பட்டது. பிரிட்டிஷார் முதலில் கால் பதித்தது எங்கள் சென்னை மாகாணம் தான். அதற்குப் பிறகுதான் பம்பாய்க்கும் கல்கத்தாவுக்கும் போனார்கள். நாங்கள் பெரிய மாகாணத்துக்கு உரியவர்கள். சிறிய மாகாணங்கள் பயப்படுவதைப்போல் நாங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை” என்று பதில் எழுதினார்.
அவர் இங்கிலாந்து திரும்பும்போது சென்னை மக்கள் பெருமளவு திரண்டு வழியனுப்பி வைத்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. பிரிட்டிஷ் அதிகாரியாக இருந்தாலும் தென்னாட்டுக் குடிமகனாகவே தன்னை அவர் கருதினார். இத்தகைய தேசங்களைக் கடந்த மானுடப் பற்றையும் சொந்த இனத்துக்காரனாக இருந்தாலும் அவனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் பக்கம் தான் நிற்பேன் என்ற உணர்வுகளை இந்திய சுரண்டும் வர்க்கக் கும்பலிடம் எதிர்பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது!
1861இல் மாகாணங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டு இந்திய சட்டமன்றங்களுக்கான சட்டம் வந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20லிருந்து 50 ஆக உயர்த்தி, அதில் மக்களால் தேர்வு செய்யப்படுவோர் 21 பேராக இருப்பர் என்ற சட்டம் 1909லும், அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலை மேலும் பரவலாக்கி தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை அதிகரிக்கும் சட்டம் 1919ஆம் ஆண்டிலும் வந்தது. அதுவரை ஆளுநர்களின் நிர்வாக சபைகளின் நிழலாக இருந்த சட்டமன்றம், தனித்து இயங்கும் அதிகாரம் படைத்ததாக மாற்றப்பட்டது. அப்போது இதற்குப் பெயர் மதராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் (எம்.எல்.சி.).
1914இல் முதல் உலகப் போர் தொடங்கிய நிலையில், பிரிட்டிஷ் இணைந்திருந்த நேச நாடுகள் அணிக்கு நிபந்தனையின்றி உதவிட இந்தியா தயாராக இல்லை. அப்போது இலண்டனில் இந்தியாவுக்கான அமைச்சராக இருந்த மாண்டேகு, இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். ஒன்று, நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்கள் பங்கு பெறுவது அதிகரிக்கப்படும். இரண்டாவது, மக்களுக்கு பொறுப்பேற்கும் ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன் சுயாட்சி அமைப்புகள் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற இந்தியாவுக்கான அமைச்சர் மாண்டேகுவும் இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த சேம்ஸ் ஃபோர்டும் இணைந்து ஓர் அறிக்கை தயாரித்தார்கள். அதுதான் மாண்டேகு சேம்ஸ்போர்டு அறிக்கை. முதல் கட்டமாக அதிகாரத்தைப் பரவலாக்குதலும் (Decentralisation), அடுத்த கட்டமாக அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொண்டு பிரிந்து கொடுத்தலுமாக (Devolution) அது அமைந்தது. இந்தியாவின் கூட்டாட்சி முறையை நோக்கி வளர்ந்தது என்று ஆய்வாளர் மோசஸ் ஜோன்ஸ் தனது நூலில் (The Government and Politics of India குறிப்பிடுகிறார்.
மூன்றாவது கட்டம் தான் மாகாண சுயாட்சி என்றால் மண்டேகு ஜேம்ஸ் ஃபோர்டு சட்டம் இரண்டாம் வகையைச் சார்ந்தது. ஆனால் அதிகாரப் பங்கீட்டை சட்டத்தில் எழுதி வைக்காமல், வைஸ்ராய் விருப்ப அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. மாகாண சட்டசபைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட அமைச்சர்களிடம் சோதனையாக பொறுப்புகளில் ஒரு பகுதியை மட்டும் ஒப்படைத் தார்களே தவிர, மாகாண அரசுகளுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்படவில்லை. ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டவர்களிடம் சில அதிகாரங்களும், அமைச்சர்கள் கையில் சில அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டதால் இதற்கு ‘இரட்டையாட்சி’ (Dyarchy) என்று பெயர் வந்தது. இந்த இரட்டை ஆட்சி எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவின் தலைவர் ஜின்னா. அக்குழுவில் டாக்டர் ஆர். பராஞ்சிபே, சிவசாமி அய்யர் உள்ளிட்ட இந்தியர்களும் இடம் பெற்றிருந்தனர். இரட்டை ஆட்சி தோல்வி என்ற முடிவுக்குக் குழு வந்தது.
இரட்டை ஆட்சி தோற்று விட்டது என்றும் இந்தக் குறைகளைப் போக்க ஒரே வழி பூரண மாகாண சுயாட்சிதான் என்று பார்ப்பனரல்லாதார் இயக்கமான தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்ற நீதிக்கட்சி குழுவுக்கு கடிதம் எழுதியது. 1927இல் கோவையில் நடந்த நீதிக் கட்சி மாநாடு இரட்டை ஆட்சியைக் கண்டித்தும், மாகாண சுயாட்சியை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேறியது. அன்றைக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி, முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தோட்டமும் முழுமையான மாகாண சுயாட்சியை வலியுறுத்துவதாகவே இருந்தன.
அதைத் தொடர்ந்து 1928ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தங்களை அரசியல் சட்டம் வழியாக வழங்கலாம் என்பது குறித்து ஆராய 7 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டிஷ் குழு கருத்துகளைக் கேட்க இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சியால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு ‘இந்திய சட்ட ஆணையம்’ (Indian StatutoryIndian StatutoryCommission) என்பதே உண்மையான பெயர். ஜான் சைமன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி தலைமை தாங்கியதால் அது சைமன் குழு என்று பெயர் பெற்றது. 1930ஆம் ஆண்டு இந்த ஆணையம் தனது அறிக்கையை அளித்தது. இந்தியாவில் இரட்டை ஆட்சி முறையை முழுமையாக ஒழிக்கவும் மாகாணங் களுக்கு சுயாட்சி வழங்கவும் குழு அழுத்தமாகப் பரிந்துரைத்தது.
‘இந்தியா’ என்ற நாட்டை துப்பாக்கி முனையில் உருவாக்கிய பிரிட்டிஷ்காரர்கள்தான் மாகாணம் - மாகாண சட்டமன்றங்களை உருவாக்கி தன்னிட மிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் வந்தார்கள். அவ்வப்போது வழங்கிய அதிகாரங்களைப் பறிக்க முயலும் முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் வந்த பிறகு தங்கள் செயல்பாடுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார்கள். ‘மாகாண சுயாட்சி’ என்ற நிலை நோக்கி உரிமைகளை நகர்த்தினார்கள். இது தான் பிரிட்டிஷ் இந்தியா. ‘சுதந்திர பார்ப்பன இந்தியா’ உரிமைகளைப் பறிக் கிறது. எதிர்த்தால் மேலும் உரிமைகளைப் பறிக்கிறது. உலக மானுடம் தான் சந்தித்தவற்றில் மிகக் கொடுமையானது ‘பார்ப்பனிய மனுவாதம்’ தான் என்றே கூற வேண்டும்.
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்