நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டதாக அறிவித்து விட்டார். அவர் உருவாக்கிய மக்கள் மன்றங்களும் கலைக்கப்படும் இரசிகர் மன்றமாகவே செயல்படும் என்றும் தெளிவாக்கி விட்டார்.

இரஜினியை தமிழக அரசியலில் களமிறக்கி மீண்டும் சனாதனத்தை, மனுவாதத்தை உயிர்ப்பித்து விடலாம் என்று திட்டம் போட்ட சனாதன சக்திகள் படுதோல்வி அடைந்து நிற்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்தப் போராட்டம் புத்தர் காலத்திலேயே தொடங்கிய போராட்டம். வேத காலத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு காலகட்டத்திலும் மனுவாத சக்திகளும், சனாதன சக்திகளும் தங்களை உயிர்பித்துக் கொள்கின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டே தான் வந்திருக்கின்றன. டார்வின் கூறுகிறார், ‘சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாத எந்த உயிரினமும் நிச்சயமாக உயிர் வாழ முடியாது. அது மடிந்து போகும்' என்று கூறினார். ஆனால் வெகு மக்களுக்கு விரோதமான இந்த சனாதன மனுதர்ம தத்துவத்தை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அந்த ஆட்சியை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்துப் போட்டுக் கொண்டு உயர்ந்த பதவிகளையெல்லாம் இவர்கள் பிடித்துக் கொண்டார்கள். திலகர் தங்களுக்கான தலைவராக வந்துவிட்டார் என்று துள்ளிக் குதித்தார்கள். நாடு இந்து இராஷ்டிரமாக மாறப் போகிறது என்று கனவு கண்டார்கள். திலகருக்குப் பின் காந்தியின் தலைமை வந்தது. இந்து இராஷ்டிர கனவு தகர்த்து ஒழிக்கப்பட்டது. காந்தியின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட காங்கிரசிலும் பிறகு பார்ப்பனிய சனாதனம் தன்னை நுழைத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் அது காந்தியினுடைய உயிரையே பறித்துக் கொண்டது. அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி சனாதன கட்சியாக மாறிய சூழ்நிலையில், தமிழகத்தில் சனாதன சக்திகளிடமிருந்து பெரியார் காமராசரை மீட்டெடுத்தார். காமராசர், திராவிடத்தினுடைய தலைவராக உலா வந்தார்.

அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலுக்கு வரத் தொடங்கிய காலகட்டம். திராவிட முன்னேற்றக் கழகத்தை இராஜாஜி என்ற இராஜகோபாலாச்சாரி தனது பிடிக்குள் கொண்டு வந்தார். அண்ணா இராஜாஜியை சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். 1967 இல் அதிகாரத்திற்கு வந்தவுடன் இராஜாஜியின் உறவை துண்டித்துக் கொண்டு பெரியாரின் பக்கம் வந்து சேர்ந்தார் அண்ணா. அப்போதும் சனாதன தர்மம், மனுவாதம் தோற்றுப் போய் விட்டது.

அதற்குப் பிறகு கலைஞர் வந்தார். கலைஞர் ஆட்சியை சனாதன கூட்டத்தால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. எனது ஆட்சி சூத்திரர் ஆட்சி தான் என்று பிரகடனப்படுத்தினார் கலைஞர். மனுவாதிகள் காலத்திற்காகக் காத்திருந்தார்கள். எம்.ஜி.ஆர் வந்தார். அவரைத் தூக்கிப் பிடித்தார்கள். தங்களுக்கான ஆட்சி வந்து விட்டது என்று துள்ளி குதித்தார்கள். எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களில் பல ஓட்டைகளைப் போட்டார். ‘கட்சி’யை இந்துமயமாக்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனாலும்கூட சமூக நீதிக்கு எதிராக தொடங்கிய அவரது நடவடிக்கைகள் அவருக்குப் பின்னடைவையும் தோல்வியையும் மக்களிடம் கொடுத்தக் காரணத்தினால் அவர் அப்படியும், இப்படியும் தள்ளாடிக் கொண்டு சமூகநீதியின் பக்கமே வந்து சேர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு பார்ப்பனர்கள் அவர்கள் விரும்பிய ஒரு தலைமை கிடைத்து விட்டது. ஆம், அதுதான் ஜெயலலிதாவின் ஆட்சி.

இராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு அரசியலில் தங்களுக்கான தலைமை கிடைத்து விட்டது என்று பார்ப்பனர்கள் குதூகளித்தார்கள், மகிழ்ச்சியில், துள்ளிக் குதித்தார்கள். எவ்வளவு பெரிய ஊழல்கள் ஜெயலலிதா ஆட்சியில் நடந்தாலும் அது புனித ஆட்சி என்று போற்றினார்கள். சங்கராச்சாரியையே கைது செய்து ஜெயலலிதா சிறையில் போட்டாலும்கூட குறை கூறாமல் அந்த ஆட்சியை பாதுகாக்கத்தான் விரும்பினார்கள்.

ஒரு சங்கராச்சாரி போனால் மற்றொரு சங்கராச்சாரியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அரசியலில் ஒரு ஜெயலலிதாவை இழந்துவிட்டால், வரலாற்றில் வேறு ஒரு ‘ஜெயலலிதா’ கிடைக்கவே மாட்டார் என்ற தெளிவான புரிதல், பார்ப்பனிய வேத மரபினருக்கு இருந்தது. வைதீக மரபில் வளர்ந்த ஜெயலலிதா தன்னை எம்.ஜி.ஆர். வாரிசாக்கிக் கொள்ளும் முயற்சியில் பார்ப்பனிய அதிகார மய்யங்கள், பார்ப்பனிய ஊடகங்களின் உதவியோடு வெற்றியும் பெற்றார். மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து முதல்வராக உயர்ந்த கலைஞரை சகித்துக் கொள்ளவே முடியாத ‘வேத மரபு’ பார்ப்பனியர்கள், திராவிட இயக்கக் கொள்கைகளை வீழ்த்த, ‘கலைஞர் வெறுப்பு’ என்ற அரசியலை சாமர்த்தியமாக உருவாக்கினர். பார்ப்பனிய வலையில் சிக்கிய எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்த அந்த அரசியலை ஜெயலலிதாவும் முன்னெடுத்தார்.

பார்ப்பனரல்லாத விளிம்பு நிலை மக்களுக்கான பெரியார்-அண்ணாவின் ‘திராவிட கோட்பாட்டை’ ஊடுருவி அழிக்கும் முயற்சிகள் நடந்தன. இடஒதுக்கீடு கொள்கையில் கை வைக்க எம்.ஜி.ஆர். முனைந்தபோது தமிழ்நாடு அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். இடஒதுக்ககீடு கொள்கை மாநில உரிமை என்ற கருத்துகளில் சமரசம் செய்து கொண்டு தான் இந்த ஊடுருவலை நடத்த முடியும் என்பதே அவர் கற்ற பாடம். எம்.ஜி.ஆரிடமிருந்து இந்த பாடத்தைக் கற்றுக் கெண்ட ஜெயலலிதா, அதே வழியில் பார்ப்பனிய ஆட்சியை நடத்தினார். ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடும் எதிர்ப்பாளராகவும் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, பிறகு தி.மு.க. எதிர்ப்பு அரசியலுக்காக ஈழ விடுதலை என்ற நிலைப்பாட்டை எடுத்தார். ஜெயலலிதா ஈழ விடுதலை ஆதரவை பார்ப்பன சக்திகள் சகித்துக் கொண்டு ஜெயலலிதாவை முழுமையாக ஆதரித்தன. இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மரணம் பார்ப்பனிய மனுவாத சக்திகளுக்கு அதிர்ச்சியாகி விட்டது.

ஜெயலலிதாவை அடுத்து அஇஅதிமுக.வை இரண்டாக உடைத்து தங்களுக்கான சாதகமான அமைப்பை உருவாக்குகிற முயற்சியில் ஈடுபட்டார்கள். பிறகு இரஜினிகாந்த் கிடைத்தார். ஆகா ஜெயலலிதாவிற்குப் பிறகு அற்புதமான தலைமை கிடைத்துவிட்டது இனி இரஜினிகாந்தை வைத்து சனாதனத்தை மீட்டெடுப்போம் என்று அவர்கள் திட்டம் போட்டார்கள். இரஜினியை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். இரஜினி தான் இந்த நாட்டினுடைய ஆட்சியை தீர்மானிக்கப் போகிறவர் என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், சமூகத்தினுடைய சூழலையையும் மக்களுடைய மனநிலையையும் இரஜினிகாந்த் சாமர்த்தியமாகப் புரிந்து கொண்டு தன்னை இந்தப் பிடியில் சிக்காமல் விடுவித்துக் கொண்டார். இனி அரசியலுக்கே நான் வரப் போவதில்லை என்ற திட்டவட்டமான முடிவுக்கே வந்துவிட்டார். இது ஒரு முக்கிய திருப்பம். பார்ப்பனியத்துக்குப் பேரிடி!

இப்போது முழுமையான திராவிடத்தினுடைய ஆட்சி மு.க ஸ்டாலின் தலைமையில் வந்துவிட்டது. ஒரு பார்ப்பன அமைச்சரோ ஒரு பார்ப்பன சட்டமன்ற உறுப்பினரோ இல்லாத சட்டமன்றம் உருவாகியிருக்கிறது. இந்த ஆட்சியில் ஓட்டை போட முடியாமல் இவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்ற திட்டங்களுக்காக அவர்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நாம் திரும்பத் திரும்பக் கூற விரும்புகிறோம். சமூக சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளாத எந்த உயிரும் உயிர்வாழ முடியாது. சமூக மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள விரும்பாமல் சமூக மேலாதிக்கத்தையும், வெகு மக்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் சனாதனமும், மனுதர்மமும் வைத்திருக்கின்ற வரை அது மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டு தான் இருக்கும். உயிர்ப்பித்துக் கொள்ளவே முடியாது இதுதான் அறிவியல் என்பதை அவர்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It