british india 740கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைத்து ஒற்றை ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்துகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒன்றியம்’ என்ற சொற்றொடரே மனுவாதிகளுக்கு கசக்கிறது. இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் இந்தியா தொடங்கி மோடி ஆட்சி வரை நடந்த மாநில உரிமைகள் தொடர்பான சுருக்கமான வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.

கி.பி. 1600இல் பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்குள் வணிகம் செய்ய வருவதற்கு முன்பு, ‘இந்தியா’ என்ற ஒரு நாடே உருவாகவில்லை. பிரிட்டிஷ் அரசி எலிசபெத் அதற்கான சட்டபூர்வ உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கி யிருந்தார். கடற்கரை ஓரப் பகுதிகளில் வணிகத்தை கம்பெனி தொடங்கியது. முதலில் சூரத் (கி.பி.1613), பின்னர் வரிசையாக மசூலிப்பட்டினம் (1616), அரிகரிபூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தா (1686) என வணிகத்துக்கான குடியேற்றங்களைத் தொடங்கிய கம்பெனி, ஒரு கட்டம் வரை வணிகத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது. பிறகு தாக்குதல்கள் வழியாக பல்வேறு பகுதிகளை மீட்கத் தொடங்கியது. முதல் தாக்குதல் நடந்த பகுதி சிட்டகாங் (1686).

ஆட்சியிலிருந்த மன்னர் அவுரங்கசீப், பிரிட்டிஷ் படையை தோற்கடித்ததோடு, ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்ட ஆணையிட்டார். இந்தியாவின் பெரும் பகுதியை தனது குடைக்குக் கீழே கொண்டு வந்து ஆட்சி நடத்திய ஒரே மன்னர் அவுரங்கசீப் தான். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டு தோற்கடித்த முதல் மன்னனும் அவுரங்கசீப் தான். கி.பி. 1707இல் அவுரங்கசீப் முடிவெய்தியவுடன் அவரது பேரரசு சிதைந்தது. ஒற்றைத் தலைமை இல்லா சூழ்நிலை கம்பெனிக்கு சாதகமானது. பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைப் பிடித்தார் (1749). அடுத்த 12 ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பல போர்களை நடத்தி தங்கள் வசமாக்கிக் கொண்ட கம்பெனி, 1758இல் நடந்த பிளாசி சண்டையில் கருநாடகம், வங்கத்தையும் பிடித்தது. இந்த வெற்றி தான் இந்தியாவில் ஆங்கிலப் பேரரசுக்கான அடித்தளம். பிளாசிப் போருக்குப் பிறகு ஒரு நூற்றாண்டில் இந்தியா முழுமையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.

3000 ஆண்டுகால வரலாற்றில் உருவாக முடியாத இந்திய ஒற்றுமை, ஆங்கிலேயரின் துப்பாக்கி முனையால் தான் உருவாக்கப்பட்டது என்கிறார், வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கர். தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரங்களை, மெல்ல மெல்லப் பறித்து வந்த பிரிட்டிஷ் ஆட்சி, 1858இல் இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் முழுவதையும் தன்னிடம் எடுத்துக் கொண்டது. அந்த ‘இந்தியா’வுக்குள் இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், நேபாளம், பூட்டான், பர்மா, இலங்கையும் அடங்கியிருந்தன.

கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்பாட்டில் ஆட்சி நிர்வாகம் இருந்த காலத்திலேயே சென்னை, பம்பாய், கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மூன்று மாகாண அமைப்புகளும், கல்கத்தாவில் தலைமை நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. இதில் கவனிக்கத்தக்க ஒரு வரலாறும் உண்டு. அவுரங்கசிப் மறைவிற்குப் பிறகு 72 ஆண்டுகள் (கி.பி.1779 வரை) இந்தியா முழுவதையும் நிர்வகிக்கும் ஒரு மத்திய அரசு உருவாகவே இல்லை.

ஆங்கிலேயரின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு மாகாணங்களாக, சிற்றரசர்களாக, குறுநில மன்னர் ஆட்சிகளாக நடந்த தன்னாட்சி அதிகார அமைப்பைக் குலைத்து விடாமல், மய்ய அரசு நிர்வாகம் ஒன்றை, ஆங்கிலேயே அரசு இலண்டனில் உருவாக்கியது. “இந்தியா”வில் மாகாணங்களில் ஆளுநர்களும் (கவர்னர்) இவர்களைக் கட்டுப்படுத்த சர்வ அதிகாரமுள்ள கவர்னர் ஜெனரலும் அவரது தலைமையில் குழுக்களும் உருவாக்கப்பட்டன. சொல்லப் போனால் இன்றைய நடுவண் ஆட்சி முறைக்கு இது முதல் வித்து. இந்த நிர்வாக அமைப்பைக் கண்காணிக்க மேலும் கூடுதல் அதிகாரங்களோடு இங்கிலாந்தில் இந்திய நாட்டுக்கான அரசுச் செயலர் குழு ஒன்று (Secretary of State for India in Council) உருவானது.

இந்த நிர்வாகக் கட்டமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டதா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதுதான். மாகாணங்களின் உரிமைகளை படிப்படியாக பறிக்கும் சட்டங்களை 1789, 1793, 1813, 1833 ஆண்டுகளில் கொண்டு வந்தார்கள். மாகாணங்களின் உள்ளாட்சி அதிகாரம், நிதி, பொருளாதார திட்டங்கள் உள்ளிட்ட அதிகாரங்கள் பறிக்கப் பட்டன. மாகாண ஆட்சிகளுக்கும் கவர்னர் ஜெனரலுக்கும் முரண்பாடுகள் வெடித்தன. ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற மிகச் சிறந்த வரலாற்று ஆவணத்தை எழுதிய கு.ச. ஆனந்தன் தனது நூலில் இவ்வாறு பதிவு செய்கிறார்:

“அந்தக் காலகட்டத்தில் மாகாணங்கள் மொழி அடிப்படையிலோ அல்லது அதனதன் தனித் தன்மையை நிலைநாட்டும் வகையிலோ பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தந்த மாகாண மக்களின் கருத்தை எதிரொலிக்கும் ‘சட்டசபைகள்’ பற்றி மக்களுக்குத் தெரியாத காலம் அது. குடியரசு முறையே இந்தியாவில் உருவாகவில்லை. ஆள்பவர்களுக்கும் ஆளப்படுகிறவர்களுக்கும் தொடர்பே இல்லாத சூழ்நிலை. அந்த நிலையில்கூட ஓர் அனைத்திந்திய மய்ய அரசாங்கத்தின் வல்லாட்சியை மாகாணங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் விடுதலை பெற்ற இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் மூலமாய் அவ்வகை மத்திய வல்லாட்சியை மொழி சார்ந்த தனி மாநிலங்கள் மீது திணித்திடத்தான் முடியுமோ”

2

பிரிட்டிஷ் ‘இந்தியா’வில் பார்ப்பன-பனியாக்களின் சுரண்டலுக்கு கதவு திறந்துவிட்ட இந்தியாவின் சுதந்திர ஆட்சி, படிப்படியாக மாநில மக்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் வளங்களையும் பறித்துக் கொண்டே இருந்தது; இருக்கிறது. தேசிய இனங்களின் உரிமைக் குரல் போராட்டங்களாக உருவெடுத்தாலும் அந்த உணர்வுகளை மதிப்பதற்கு ஆளும் வர்க்கமான பார்ப்பன - பனியாக்களின் பிரதிநிதிகளாக செயல்படும் அகில இந்திய தேசியக் கட்சிகள் தயாராக இல்லை. ஆனால், வணிக நோக்கத்தோடு சுரண்டல் இலாபங்களுக்காக இந்தியாவை காலனியாக்கிய பிரிட்டிஷ் ஆட்சி, மாகாணங்களின் உரிமைகளைப் பறித்தாலும், அவ்வப்போது எழுந்த எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கிறது. அதிகாரப் பறிப்புகளுக்கிடையே உரிமைக் குரல்களுக்கும் காது கொடுத்திருக்கிறது, என்பதே வரலாறு.

கிழக்கிந்திய கம்பெனி, நிர்வாக வசதிக்காக சென்னை, பம்பாய், கல்கத்தா என்ற மூன்று மாகாணங்களை உருவாக்கியதை ஏற்கனவே குறிப்பிட்டோம். இந்த மூன்று மாகாணங்களும் தங்களுக்கான சட்டங்களை இயற்றலாம். இலண்டனில் உள்ள கம்பெனியின் தலைமை நிலையத்துக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி நாடாளுமன்றம் வழியாக முதல் உரிமைப் பறிப்பில் இறங்கியது. அதுதான் 1773இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கொண்டு வந்த ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating act) இந்தச் சட்டத்தின் வழியாக பம்பாய், சென்னை மாகாணங்கள் கல்கத்தா மாகாணத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன. கல்கத்தா மாகாண கவர்னர், கவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார். பம்பாய், சென்னை மாகாண கவர்னர்கள், கல்கத்தா கவர்னர் ஜெனரல் அதிகாரத்துக்கு அடங்கிப் போக வேண்டும். அப்போதே சென்னை, பம்பாய் மாகாணங்களில் தங்களின் சட்டம் இயற்றும் உரிமை பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கி விட்டன.

கல்கத்தா அதிகார மய்யமாக மாற்றப்பட்டதை எதிர்த்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் குரல்கள் ஒலித்தன. இதன் விளைவாக மத்திய - மாகாண நிர்வாக உறவுகளை ஆராய நாடாளுமன்ற விசாரணைக் குழு ஒன்றை அமைத்து சாட்சியங்களைப் பதிவு செய்தது. குழு அமைக்கப்பட்ட ஆண்டு 1852-53. மாகாண உரிமைகளுக்காக இந்திய வரலாற்றில் அமைக்கப்பட்ட முதல் குழு இது தான். குழுவின் விசாரணைக்குப் பிறகு ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

கல்கத்தா தலைமை மாகாண கவர்னர் ஜெனரலுடைய நிர்வாகக் குழுவில் பம்பாய், சென்னை மாகாண பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்வது என்பதே அந்த முடிவு. கல்கத்தா மத்திய சட்டசபையாக மாற்றப்பட்டிருந்த நிலையில் மாகாண ஆட்சியில் முதன்முறையாக மாகாணங்களுக்கு பங்கேற்பு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இப்படி ஒரு முடிவை எடுத்த காலகட்டத்தில் இந்தியா-கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தில்தான் இருந்தது. அதற்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்துத்தான் 1858இல் பிரிட்டிஷ் ஆட்சி தனது நேரடி கட்டுப்பாட்டில் ‘இந்தியா’வைக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து மாகாண உரிமைகளுக்கு புதிய வெளிச்சம் தரும் சட்டம் ஒன்றை 1861இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கொண்டு வந்தது. இதற்குப் பெயர் இந்திய கவுன்சில்கள் சட்டம் (The Indian Councils Act).

இச்சட்டத்தின் வழியாக சென்னை-பம்பாய் மாகாணங்களிடமிருந்து பறிக்கப்பட்டிருந்த சட்ட மியற்றும் அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டன. அதற்காக மாகாண சட்டசபைகள் (Provincial Legistlative Councils) உருவாக்கப்பட்டன. அகில இந்திய அடிப்படையிலான பொதுப் பிரச்சினைகளுக்கு Imperial - Legislative Council எனும் கவர்னர் ஜெனரலுடைய சபை (கல்கத்தாவை தலைமை யகமாகக் கொண்டது) சட்டங்கள் இயற்றும். மாகாணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மாகாண சட்டசபைகளே சட்டம் இயற்றும். மாகாணம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம் ­அப்போது மாநிலங்கள் (State) உருவாகவில்லை. Presidency என்ற பெயரில் மாகாணங்கள் மட்டுமே செயல்பட்டன. மாகாண அரசு இயற்றுகிற எந்த சட்டமும் முதலில் கவர்னர் ஒப்புதல்; பிறகு கல்கத்தாவிலுள்ள கவர்னர் ஜெனரல் ஒப்புதல் (அவருக்கு வைஸ்ராய் என்ற பெயரும் உண்டு) அதன் பிறகு இலண்டனில் பிரிட்டிஷ் அரசு ஒப்புதலைப் பெற வேண்டும்.

 இங்கிலாந்தில் இந்திய பிரச்சினைகளுக்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டார் (Secretary of State for India). மாகாண அரசுகளுக்கு நிதி அதிகாரம் ஏதும் கிடையாது. ஒவ்வொரு செலவுக்கும் மத்திய அரசின் அனுமதி பெற்றாக வேண்டும். 1870ஆம் ஆண்டு வரை இதுதான் நிலை. 1871ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரலாக (வைஸ்ராய்) கல்கத்தா தலைமையகத்துக்கு மேயோ பிரபு வந்தார். அவர் முதன்முறையாக மாகாணங்கள் உரிமைகளின் கீழ் சில துறைகளை மாற்றினார். முதன்முறையாக காவல்துறை, சிறை, கல்வி, பத்திரப் பதிவு, சுகாதாரம், சாலைகள், சிவில் கட்டிடங்கள் தொடர்பான துறைகள் மாகாணங்களிடம் வந்தன. இவற்றை நிர்வகிப்பதற்கு மாகாண அரசு மொத்தமாக ஒரு தொகை மான்யமாக வழங்கப்பட்டது. அந்தத் தொகைக்கு மிகாமல் மாகாண அரசுகள் செலவிட முடியும். அதில் இந்த 7 ஆண்டுகளில் அதாவது 1877இல் மற்றொரு மாற்றம் வந்தது.

கவர்னர் ஜெனரலாக இருந்த லிட்டன் பிரபு நிலவரி, எக்சைஸ், முத்திரை (ஸ்டாம்ப்), பொது நிர்வாகம், சட்டம், நிதித் துறை அதிகாரங்களையும் அதில் கிடைக்கும் வருமானத்தையும் மாகாணங்களுக்கு உரித்தாக்கி, ஏற்கனவே வழங்கி வந்த மான்யத்தை நிறுத்தினார். மாகாணங்களுக்காக வருவாய் தரும் துறைகளை முதன்முதலாக ஒதுக்கியது இப்போதுதான்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It