சென்னை மாநகருக்குப் பல முகங்கள் இருக்கலாம். ஆனால் இப்போது சொல்லப் போகும் உண்மைக் கதை ஏமாற்றுக்கார சென்னையின் அசல் முகம். ஆறு வருடங்களாக ஒருவனை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திப் பார்த்த சென்னை இறுதியாக அவனை ஏமாற்றியும் பார்த்திருக்கிறது. ஒருவேளை இதை வாசிக்கும் எவராவது இதே அனுபவங்களைப் பெற்றிருக்கலாம். அல்லது இதைவிட மோசமாக அனுபவித்திருக்கலாம். ஒருவேளை இந்த ஒன்றையுமே அனுபவிக்காமல் இதே சென்னையில் கௌரவமாக நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அனுபவங்களைப் பெறாத அதிர்ஷ்டசாலிகளை துரதிர்ஷ்டவசமாக நான் இன்னும் சந்திக்கவில்லை. 

இந்த சம்பவங்களுக்குரிய நண்பனின் பெயரை இங்கே தவிர்த்திருக்கிறேன். அவன் ஏமாற்றப்பட்டதை சொல்வதற்கு முன்னர் அவமானப்பட்ட சில சம்பவங்களையும்  சொல்லிவிடுகிறேன். 

எனக்கு அவன் 1990  ஆம் ஆண்டில் இருந்து நெருங்கிய நண்பன். 2005 இல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் அறுந்து தொங்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில், யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகள் இளைஞர்களை சரமாரியாக போட்டுத்தள்ளத் தொடங்கியபோது அவன் சென்னைக்குப் போய்விட்டான். அவன் யாழ்ப்பாணத்தை விட்டு கிளம்பியதும் அவனுடனான எனது நேரடித் தொடர்புகள் இல்லாமல் போய்விட்டது. 

2006  Auguest  மாதம் A9  வீதி மூடப்பட்டு யாழ்ப்பாணத்திற்கான அனைத்துத் தொடர்புகளும் அறுந்தபின், இரண்டு மாதங்கள் கழித்து ஒருவழியாக கப்பலில் இடம் கிடைத்து திருகோணமலை ஊடாக கொழும்பை நான் வந்ததடைந்ததும், முதல்வேலையாக அவனுடைய உறவினர் ஒருவரைத் தேடிப்பிடித்து அவனது ஃபோன் நம்பரை வாங்கி அவனோடு பேசினேன். பேசத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, 15  வருடம் பழகிய அந்தப் பழைய நண்பனுக்கும் இப்போது நான் பேசும் நண்பனுக்கும் இடையில் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். அவனோடு தொடர்பில்லாத அந்த ஒரு வருடத்துக்குள் அவனை ஏதோ ஒன்று மாற்றிவிட்டிருந்தது. ஒருவித விரக்தியோடு சுரத்தில்லாமல் பேசினான். 2006  - 2007  இல் நான் ஒருவருடம் கொழும்பில் இருந்த காலத்தில் அவனோடு அடிக்கடி தொலைபேசியில் பேசும்போதும் அவன் தனக்கான பிரச்சனைகள் பற்றி எதுவுமே எனக்கு சொல்லவில்லை. 

2006  இறுதியில் கொழும்புக்கு வந்ததில் இருந்தே அடிக்கடி பொலீஸ் செக்கிங், பொலீஸ் பதிவு  என்று ஒரே இம்சையாய் இருக்க, 2007  இல் என்னையும் சென்னைக்குப் போகுமாறு வீட்டில் ஒரே நச்சரிப்பு. வேறுவழியில்லாமல் நானும் சென்னைக்குப் போக சம்மதித்தேன். ஆனால் சென்னையில் அந்த நண்பனைத்  தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. அவனுக்கு ஃபோன் போட்டு நான் சென்னைக்கு வரப்போவதாக சொன்னபோது நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக சென்னைக்கு வரவேண்டாம் என்பது அவனுடைய பதிலாக இருந்தது. எனக்கு அவன் காரணம் சொல்லவில்லை. ஆனால் என்ன நினைத்தானோ தெரியாது, திடீரென்று அவனே எனக்கு ஃபோன் பண்ணி, சென்னைக்கு வருமாறு சம்மதித்தான். 

எனக்கு வலு புளுகம். முதல்முதல் விமானத்தில் போகப் போகிறேன்..... வெளிநாடு(!) ஒன்றுக்குப் போகப் போகிறேன்.... செக்கிங் என்ற பெயரிலே தினமும் நடுரோட்டில் வைத்து உடம்பைத் தடவிப்பார்க்கும் கொழும்புப் பொலீஸின் அரியண்டத்தில் இருந்து தற்காலிக விடுதலை..... என்று எனது புளுகத்துக்கு பல காரணங்கள். 

இரண்டு நாளிலேயே இந்திய வீசா எடுத்து டிக்கட்டும் போட்டு மூன்றாவது நாள் நான் சென்னையில் போய் இறங்கினேன். விமான நிலையத்தில் என்னை கூட்டிப்போக வந்த அவனைப் பார்த்து எனக்கு பயங்கர அதிர்ச்சி. அவனைப் பார்க்காத அந்த இரண்டு வருடங்களில் என்னை விட நான்கு வயது கூடியமாதிரியான ஒரு தோற்றத்தோடு முகம் முழுவதும் தாடிவைத்து, மெலிந்து, கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரன்போல் இருந்தான். தனக்கு நெருக்கமான ஒருவனைக் கண்ட ஆறுதல் மட்டும் அவன் கண்களில் தெரிந்தது. 

ஏர்போர்ட்டில் இருந்து போரூரில் அவன் இருந்த வீட்டுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் ஏகப்பட்ட அட்வைஸ்களை எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரோடு கதை பேச்சு வைக்கவேண்டாம் என்பது அவனுடைய முக்கியமான அட்வைஸ். அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போது அந்த அட்வைஸ் எதுவுமே எனக்கு முக்கியமாகப் படவில்லை. 

போரூரில் அவன் தங்கியிருந்த வீட்டின் மேல்மாடியில் வீட்டு உரிமையாளர் இருந்தார். கீழே இருந்த வீட்டின் ஒரு பகுதியில் இவனுக்கான அறையும், மறு பகுதியில் இரண்டுபேர் கொண்ட ஒரு சிறு குடும்பமும் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னமே வீட்டு உரிமையாளரிடம் கொஞ்ச நாட்களுக்கு தனது நண்பன் வந்து தங்கப் போவதாக சொல்லி வைத்திருந்திருக்கிறான்.. 

கொஞ்சநேரம் என்னோடு பேசிவிட்டு அவன் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு கடை வரைக்கும் போய்விட்டான். அந்தநேரம் பார்த்து வீட்டு உரிமையாளர் கீழே இறங்கிவந்து என்னோடு பேச்சுக் கொடுத்தார். ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு வரும்வழியில் நண்பன் சொன்ன அட்வைஸ்கள் எதுவும் எனக்கு அப்போது பெரிதாகப் படாததால் நான்பாட்டுக்கு வீட்டு உரிமையாளரோடு பேசத் தொடங்கிவிட்டேன். நான் வாயைத் திறந்து பேசத் தொடங்கிய இரண்டாவது நிமிடமே அந்த மனிதர் சுடுதண்ணி குடிச்ச நாய்போல் ஆகிவிட்டார். ஏக வசனங்களும் ஏகப்பட்ட கெட்டவார்த்தைகளும் வந்து விழுந்தன. அந்தாள் எதற்குத் திட்டுகிறார் என்று எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. அவருடைய திட்டல்களுக்கு மத்தியில் பொறுக்கி எடுத்த தகவல்களின் அடிப்படையில் ஒன்றுமட்டும் புரிந்தது, நண்பன் ஏதோ ஒரு பெரிய பொய்யைச் சொல்லி அந்த அறையை வாடகைக்கு எடுத்திருக்கிறான் என்று. அந்தாள் போட்ட கூச்சலில் பக்கத்து வீட்டுக்காரர்களும் விடுப்புப் பார்க்க தொடங்கிவிட்டார்கள். அதற்குள் நண்பன் வந்துசேரவும், மீண்டும் எனக்கு விழுந்த அத்தனை வசைகளும் அவனுக்கும் விழுந்தது.

கடைக்குப் போய் வருவதற்குள் நடந்திருக்கக் கூடிய அசம்பாவிதத்தை நண்பன் ஊகித்துவிட்டான். நாளைக்கிடையில் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று வீட்டு உரிமையாளர் உறுதியாகச் சொல்லிவிட்டார். இல்லாவிட்டால் பொலீசுக்கு சொல்லப்போவதாக மிரட்டினார். அவர் திட்டும்போது, எங்கள்மேல் அவருக்கிருந்த கோபத்தைவிட, எங்களால் தனக்கு பொலீசில் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயமே அதிகம் தெரிந்தது. நாங்கள் அறைக்குள் போனபின்னும் அந்தாளின் வசைபாடல் கேட்டுக்கொண்டே இருந்தது. 

 யாழ்ப்பாணம் என்று சொன்னால் யாரும் வீடு தருகிறார்கள் இல்லை என்பதால், தான் கேரளாவிலிருந்து வந்திருப்பதாக பொய் சொல்லி வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த விசயத்தை அப்போதுதான் நண்பன் சொன்னான். எனக்கு 'சுள்' என்றிருந்தது. பஸ்ஸில் வரும்போது ''தேவையில்லாமல் வீட்டுக்காரனோட கதைபேச்சு வைக்காத'' என்று நண்பன் சொன்னது இப்போது என் காதுகளுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது. நானோ வீட்டுக்காரனோடு யாழ்ப்பாணத் தமிழில் பேசியது மட்டுமில்லாமல், இலங்கையில் இருந்து வந்ததையும் முதலாவது வசனத்திலேயே அந்தாளுக்கு சொல்லியிருந்தேன். இதற்குமேல் எங்களை யாரால் காப்பாற்ற முடியும்? 

வந்த முதல் நாளே இப்படி சொதப்பி வைத்து நண்பனுக்கு துன்பம் கொடுத்துவிட்டோமே என்று எனக்கு குற்றஉணர்வு. அவன் எந்தச் சலனமும் இல்லாமல், தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு ஃபோன் போட்டு புது வீடு பார்ப்பதற்கான வேலையில் இறங்கியிருந்தான். எனக்கு கொலைப் பசி. அவன் வாங்கி வந்த சாப்பாட்டுப் பார்சல் முன்னாலேயே இருந்தது. ஆனால் வீட்டுக்காரன் திட்டிய திட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. சென்னைக்கு வந்த முதல்நாளே தொப்புள்கொடி உறவுகளிடம் இப்படி வசைவாங்கி இந்தச் சாப்பாட்டை சாப்பிடுவதிலும் பார்க்க கொழும்பில் சிங்களப் பொலீசிடமே புலி என்ற சந்தேகத்தின் பேரில் பிடிபட்டு சிறையில் களியைத் தின்றிருக்கலாமோ என்று தோன்றியது. 

தனக்குத் தெரிந்தவர்களிடம் ஃபோன் பேசி முடித்துவிட்டு, இரண்டு இடங்களில் வீடு இருப்பதாகவும், காலையில் பார்க்கப் போகலாமென்றும் சொன்னான். தொடர்ந்து அவன் சொன்ன பழைய சம்பவங்களில் இருந்து  அவனுக்கு இதொன்றும் புதிதில்லை என்று தெரிந்தது. 

சென்னையில் இருந்த அந்த இரண்டு வருடங்களில் அவன் தான் அசிங்கப்பட்ட அனுபவங்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் கொஞ்சம் நிறுத்தி, ''நான் கதைக்கிற ஸ்டைல் காட்டிக் குடுத்திடும் எண்டு நினைச்சு, இதுக்கு முதல் ஒரு வீட்டில, நான் வாய் பேச முடியாத ஊமை எண்டு பொய் சொல்லி வீடு வாடகைக்கு எடுத்திருக்கிறன்'' என்று சொல்லிவிட்டு வெடித்து அழுதான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் யாராக இருந்தாலும் அவன் அழுகையை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. 

இரண்டு வருடங்களாக அவன் தேக்கிவைத்திருந்த அவமானங்களின் வலி அன்று கண்ணீராக பெருக்கெடுத்து ஓடியது. இரண்டு வருடங்களில் அவனுடைய விரக்திக்கும், தோற்றத்துக்குமான காரணங்கள் புரிந்தது. முன்னர் ஃபோனிலே எதையுமே சொல்லாதவன், நேரிலே எல்லாவற்றையும் அழுகையோடு கொட்டித் தீர்த்தான். இரவு முழுவதும் தூங்காமல் இவற்றையே பேசிக்கொண்டிருந்தோம். காலையில் தூக்கக் கலக்கத்துடன் வீடுதேடும் படலம் ஆரம்பித்தது. 

 தனியாகப் போய் சென்னையில் மாட்டியிருந்தால் நிச்சயமாக நான் பைத்தியமாகி இருப்பேன்.  கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் சென்னையில் அவனோடு இருந்த காலத்தில், நானும் அவனும் சேர்ந்து நான்கு வீடுகள் மாறினோம். பொய்யான ஊர்ப் பெயரைச் சொல்லி, வழக்கமான எங்கள் பேச்சுவழக்கு முறையை மாற்றி, சுயத்தை இழந்து ஒவ்வொரு வீடும் மாறும்போது, எப்போது உண்மையை கண்டுபிடித்து வெளியே அனுப்புவார்களோ என்ற பயமும் கூடவே சேர்ந்து வீட்டுக்குள் வரும். அந்த ஒரு வருடத்தில் நாங்கள் வீடு தேடிய, வீடு மாறிய, வீட்டால் துரத்தப்பட்ட ஒவ்வொரு அனுபவங்களையும் ஒவ்வொரு துணைக்கதையாக எழுதலாம். 

அவன் சென்னைக்கு வரும்போது மூன்றுமாத டூரிஸ்ட் வீசாவிலேயே வந்திருக்கிறான். பின்னர் திரும்பவும் வீசா நீடிப்பதற்காக இலங்கைக்குப் போகப் பயத்தில், அப்படியே இருந்துவிட்டான். ஒழுங்கான வீசா இருப்பவனே துணிந்து ஒன்றும் செய்யமுடியாத ஊரில் வீசா இல்லாத இவனால் என்ன செய்யமுடியும்? அந்தப் படிப்பினையால், நானும் அவனைப்போல் Over  Stay ஆகி இருக்காமல் மூன்று மாதத்தில் திரும்பவும் இலங்கைக்குப் போய் வீசா நீடித்துக்கொண்டு வந்தேன். அப்படி நான்காவது தடவை வீசா நீடிக்க  நான் கொழும்பு வந்தபோது, துரதிர்ஷ்டவசமாக நான் விண்ணப்பித்திருந்த லண்டன் வீசா கிடைத்தது. லண்டனுக்கு வந்தபின்தான் தெரிந்தது நாய்ப் பாடுபட்டாவது சென்னையிலேயே இருந்திருக்கலாம் என்று. சென்னையில் பட்ட துன்பம் ஒரு வகை என்றால், லண்டனில் படும் துன்பம் இன்னொரு வகை. 

நான் வந்ததன்பின்னர், அவன் எத்தனை வீடுகள் மாறினான் என்று அவனும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. எத்தனை வீடுகள் என்று எண்ணிக்கைதான் தெரியாதே தவிர அடிக்கடி வீடு மாறுவது அவ்வப்போது தொலைபேசியில் பேசுவதால் தெரியும். எப்படியும் மூன்று நான்கு மாதங்களுக்குமேல் ஒரு இடமும் தாக்குப் பிடிக்காது. 

ஒரு வருடத்துக்கு முன்னர் ஒருநாள் வழமைபோல் பேசும்போது  மிகுந்த உற்சாகத்துடன், ''மச்சி....நல்ல ரூம் பாத்திருக்கிறன்.......ஒரு வருச அக்ரிமன்ட் .... லீசுக்குத்தான் தருவாங்களாம்.... லீஸ் ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூவா கேக்கிறாங்கள்.... மாச வாடகைப் பிரச்சனை இல்லை மச்சி....'' என்று நீண்ட நேரம் பேசினான்..... அத்தோடு அவன் அப்பா நகை அடகு வைத்து அந்தக் காசை அவனுக்கு அனுப்பியும் விட்டதாக சொன்னான்.

முக்கியமான விசயம் என்னவென்றால், அந்த வீட்டு உரிமையாளருக்கு, இவன் தான் யாழ்ப்பாணம் என்று உண்மையைச் சொல்லி குத்தகைக்குத் தர சம்மதிக்க வைத்தது. உண்மையிலேயே, அவனுடைய குடும்பச் சூழ்நிலைக்கு, அந்த லீஸ் காசு கட்டுபடியாகாது. அது அவனுக்கும் தெரியாததல்ல. (ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபா இந்தியப் பணம் அப்போதைய மதிப்பில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் இலங்கை ரூபாய்) ஆனால், அவன் யாழ்ப்பாணம் என்று தெரிந்தும் வீடு தர சம்மதிக்கிறார்களே என்ற ஒரே காரணம் வேறு எதைப்பற்றியும் அவனை சிந்திக்க விடவில்லை. ஓட்டை உடைசல் வீடாக இருந்தாலும்  ஒரு வருடத்திற்காவது  அலைச்சல் இல்லாமல் நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய அப்போதைய மனநிலை.  உடனேயே சம்மதித்து அக்ரிமெண்டும் போட்டு முடித்துவிட்டான். 

உண்மையிலேயே அந்த வீடு கிடைத்ததில் இருந்து போன வாரம் வரைக்கும், கிட்டத்தட்ட ஒரு வருடம் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி இருந்தது. அடிக்கடி ரூம் மாறும் அலைச்சல் இருக்கவில்லை. அதுவரை வீட்டு உரிமையாளர்களிடம் பட்ட அவமானங்கள் குறைந்திருந்தது. இதெல்லாம் போன வாரம் வரைக்கும்தான். 

அவன் யாழ்ப்பாணத்தை விட்டு சென்னைக்கு வந்து ஆறுவருடங்கள் ஆகிவிட்டது. குடும்பத்தைப் பார்க்காத தவிப்பு. வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வு என்னவென்று தெரியாத குழப்பம். இதனால் அவன் ஊருக்கு திரும்புவதற்கு முடிவெடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் Exit  வீசாவிற்கு விண்ணப்பித்திருந்தான். (வீசா காலம் முடிந்து Over Stay ஆனால், Exit  Visa  எடுத்துத்தான் மீண்டும் இலங்கைக்குப் போகலாம். Exit  Visa  எடுத்து இலங்கைக்குப் போனால் திரும்ப இந்தியாவுக்கு வருவதற்கு வீசா எடுக்க முடியாது.) Exit வீசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு, திடீரென்று Exit வீசா வந்தால் உடனடியாக தான் இலங்கைக்குத் திரும்பவேண்டும் என்று வீட்டு ஓனரிடம் சொல்லியும் இருக்கிறான். அவன் கொடுத்த லீஸ் காசை திரும்பத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்குமாறும் சொல்லியிருக்கிறான். 

இரண்டு வாரங்களுக்கு முன் அவனுக்கு Exit வீசா கிடைத்து, அவன் விமான டிக்கட்டும் போட்டுவிட்டு லீஸ் காசை வாங்குவதற்கு வீட்டு ஓனரிடம் போனபோது,  காசை நாளைக்குத் தருகிறேன் நாளைக்குத் தருகிறேன் என்று அவர் ஒரு வாரமாக இழுத்தடித்து கடைசியாக அவன் போகும் நாளன்று கூட காசைக் கொடுக்கவில்லை. அவன் விமான நிலையத்துக்கு போவதற்கு முன்னர்கூட கெஞ்சிக் கேட்டிருக்கிறான். அப்போது, பொலிஸில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று அந்த வீட்டு ஓனர் மிரட்டியிருக்கிறார். Exit  வீசா என்பதால், போகும் திகதியை மாற்றிவிட்டு காசுக்காக நின்று போராடும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை. அந்த ஒரு லட்சத்தில் இருபத்தி ஐயாயிரம் ரூபாவை ஒரு பொருட்டாக மதிக்காமல் விட்டுவிட்டு போவதற்கு அவனது குடும்பம் ஒன்றும் வசதியான குடும்பம் கிடையாது. 

அவனது குடும்பத்தைப் பொறுத்தவரை அந்தக்காசு பெரிய தொகை என்பதுபோக,  அம்மாவின் நகையை அடகுவைத்து கொடுத்த காசை ஏமாந்துபோய் வந்திருக்கிறானே என்று ஊரில் நினைப்பார்களோ என்ற குற்ற உணர்வும் தாழ்வுமனப்பான்மையே இப்போது அவனைக் கொல்கிறது. மன அழுத்தத்துடனேயே இப்போது ஊருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறான்.

இந்த ஆறு வருடங்களில் சென்னையில் அவன் பட்ட அவமானங்களை விட இந்த ஒரு ஏமாற்றம் நிச்சயம் அவனை கடுமையாகப் பாதித்திருக்கிறது. அந்தக் காசை நான் தருகிறேன் என்று அவனிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், அதை வாங்குவதற்கு அவனது தன்மானம் இடங்கொடுக்கவில்லை 

இதற்கு முன்னரும் நானும் அவனும் சேர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஒரு நிறுவனத்தில் Avid  Editing  படிப்பதற்காக தொடர்புகொண்டபோது, எட்டாயிரம் ரூபாய் என்று முதலில் சொல்லிவிட்டு, நாங்களும் காசைக்கொடுத்து சேர்ந்தபின், ''நீங்கள் Overseas  Students... அதனால் வழமையான உள்ளூர் மாணவர்களின் கட்டணத்துக்கு உங்களுக்கு கற்றுத் தர முடியாது'' என்று கூறி அந்த நிறுவனம் எங்கள் இருவரிடமும் மூன்று மடங்கு காசை ஆட்டையைப் போட்டது. அந்த நிறுவனம் காசு விசயத்தில் எங்களை ஏமாற்றி இருந்தாலும் படித்து முடித்த திருப்தியால் எங்களுக்கு அது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் இப்போது அவன் ஊருக்குப் போகும் தருணத்தில் ஏமாற்றப்பட்டது மிக அதிகமாக வலிக்கிறது. அம்மா அப்பாவைப் பார்க்கும் மகிழ்ச்சியோடு ஊருக்குப் போகவேண்டிய அவன் ஒரு ஏமாளியாகப் போகவேண்டிய அவலத்தை சென்னை தந்திருக்கிறது. 

எனக்குத் தெரிந்த, நான் கண்ணால் பார்த்த என் நண்பனின் அவலம் இது. இதேபோல் இன்னும் எத்தனை ஈழத்து இளைஞர்களை இந்தச் சென்னை அசிங்கப்படுத்தியும், ஏமாற்றியும் இருக்கிறது என்று அவர்கள் இருந்து அழுது தீர்த்த சென்னை அறைகளின் சுவர்களுக்கு மட்டுமே தெரியும். 

போரூர் ரவுண்டானாவின் அருகிலே, சங்கீதா ஹோலுக்கு பக்கத்தில் உள்ள அந்த வீட்டுக்குப் போய், அந்த வீட்டு ஓனரின் சட்டையைப் பிடித்து நியாயம் கேட்கவேண்டும் என்று கைகள் துறுதுறுகின்றன. இந்தவிசயத்தில் ''இதுவும் கடந்துபோகும்'' என்று சொல்லிவிட்டு இருக்க மனம் ஒப்பவில்லை....

- பரணீதரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டது, பொதுவாசகர்களுக்காக இங்கு தரப்படுகிறது - கீற்று நந்தன்)

Pin It