இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியா முழுவதும் அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் குடியேறியிருக்கும் இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழக அகதிகள் முகாமொன்றில் வசித்துவரும் தோழர் விஜிதரன் எழுதிய ‘ஏதிலி’ எனும் புனைவு குறித்து அறிமுகம் செய்வதன் வாயிலாக இலங்கை அகதிகளின் அவல வாழ்நிலையை ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகிறேன்.

vijidharan book‘வாழ்வு என்பதற்கும் வாழ்க்கை என்பதற்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம்’ என்பார் புதுமைப்பித்தன். வாழ்தலுக்கும் உயிரோடிருத்தலுக்குமான வித்தியாசத்தை விரிவாக விளக்குகிறது இப்புனைவு. இவை இரண்டுக்குமான இடைவெளியை முன்வைக்கும் படைப்புகள் இதற்கு முன்னதாக எதுவும் தமிழில் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்நூலை வாசித்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும் இருந்தது. காரணம் 1984-இல் நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே ஈழத்தமிழர் தொடர்பான போராட்டங்களை அறிந்தவனாகவும் அதில் பங்கேற்றவனாகவும் இருந்திருக்கிறேன். கும்பகோணத்தில் ஈபிஆர்எல்எப் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்த காலத்தில் அம்முகாமிலிருந்த ‘ஈழமணி’ எனும் ஈழத்தோழரை எங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கூட்டம் நடத்தி அதில் நானும் பேசியிருக்கிறேன். அக்கூட்டம் நடத்துவதற்காகப் பேருந்துகளில் ஏறி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து உண்டியல் வசூல் செய்து கூட்டச்செலவுபோக மீதத்தொகையை முகாமுக்குக் கொடுத்தோம்.

இந்நாவல் அதிர்ச்சியளித்தது எனக் குறிப்பிட்டதற்குக் காரணம் தூரத்துப் பச்சை கருகுவது கண்டு கவலையோடும் கவனத்தோடும் கதறிக் கூவிக் கொண்டிருந்தவனுக்கு காலடியில் மனிதர்கள் கருகிக் கொண்டிருக்கும் நிலை இத்தனையாண்டு காலம் கண்ணுக்குத் தட்டுப்படாமல் இருந்திருக்கிறதே என்றெண்ணி என்மீதே எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது. ஒருவேளை தமிழகம் தவிர்த்த வேறு பல நாடுகளில் பாதுகாப்பாக வாழும் ஈழ அகதிகளைப் போலவே தமிழக அகதிகளையும் உருவகப்படுத்திக் கொண்டேனே என்னவோ தெரியவில்லை. என்னையே நான் அருவருப்பாக உணரத் தொடங்கிய தருணமது. இப்போதும்கூட ஒருவித வெட்கமும் கழிவிரக்கமும் கூடிய உன்மத்த மனநிலையிலேயே இதனை எழுதுகிறேன்.

நாவலில் வெவ்வேறு மனிதர்கள் வருகிறார்கள். முதல் அத்தியாயத்திற்கும் கடைசி அத்தியாயத்திற்கும் எந்த முடிச்சும் கிடையாது. ஒருவருக்கொருவருடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஈழத்தமிழர்கள் என்ற அளவில் அவர்கள் தங்கள் இருப்பை வெளிப்படுத்தி நிற்கின்றனர். அதேவேளையில் நாவல் என்ற மரபான வடிவத்தில் இது கட்டமைக்கப்படவில்லை என்பதே இந்நாவலின் வெற்றி எனக் கருத இடமுண்டு. இதன் உள்ளடக்கத்திற்காகவும் உண்மைத் தன்மைக்காகவும் உரத்துப்பேசும் அரசியலுக்காகவும் உன்னதமானதொரு படைப்பாகத் தன்னை மேலுயர்த்திக்கொள்கிறது. மேலும் இழப்புகளுக்காகவும் தோல்விகளுக்காகவும் குமுறிக்கொண்டிருப்பதைவிடவும் அடுத்தகட்ட நகர்வாக என்ன செய்யவேண்டும் என்பதையும் தீர்க்கமாகப் பேசுகிறது நாவல்.

பெரும்பாலான ஈழ எழுத்தாளர்களின் படைப்புகள் ஈழத்தில் நிகழ்ந்தேறிய வன்கொடுமைகளையும் சகிக்கவியலா கொடூரங்களையும் பக்கம்பக்கமாக எழுதிக் குவித்துள்ளன. அவை ஏற்படுத்திய தாக்கமும் இறுக்கமும் அடர்த்தியானவை என்பதில் மாற்று இல்லை. அவற்றிலிருந்து மாறுபட்டும் விலகியும் இருக்கும் இப்புனைவு எதனையெல்லாம் பேசாமல் படைப்பாளர் பலரும் மௌனித்துக் கடந்தனரோ அதனை ஆரவாரமாகப் பேசுகிறது. தமிழக, இந்திய அரசுகள் மற்றும் தமிழகத் தலைவர்களின் அரசியல் அக்கிரமங்களையும் அயோக்கியத்தனங்களையும் திரைமறைவு வேலைகளையும் எவ்விதத் தயக்கமுமின்றி வெளிச்சப்படுத்துகிறது.

இலங்கையிலிருந்து கையிலிருந்த பணம் அத்தனையும் கொடுத்து பயந்துபயந்து கள்ளத்தனமாகத் தப்பிவந்து தமிழகத்து அகதி முகாம்களில் குடியேறிய மக்களைப் பற்றி மட்டும் ‘ஏதிலி’ பேசவில்லை. போராட்ட கால ஈழத்தில் நிலவிய சூழல் நெருக்கடிகளையும் தப்பித்து வெளியேறியே ஆக வேண்டிய அவசர அவசியத்தையும் ஆங்காங்கே வெவ்வேறு பாத்திரங்களின் வழியாக உணர்த்துகிறது.

சாவிலிருந்து தப்பி வாழவேண்டுமெனும் விருப்பில் தாயகம் வந்துசேர்ந்த மக்களின் வாழ்நிலையைப் பார்க்கிறபோது அங்கேயே அவர்கள் போரில் செத்தழிந்திருக்கலாமோ என்பதாக நம்மை எண்ணங்கொள்ள வைப்பது சாதலினும் பெருங்கொடுமையன்றி வேறென்ன?

அகதிவாழ்வு தரும் தீராத மனநெருக்கடிகளால் தினசரி குடிக்கு அடிமையாகி தன்னைத்தானே வசை பாடிக்கொண்டு செய்வதறியாது தத்தளிக்கும் நிலையில் ‘இதையெல்லாம் நீ எழுதவேண்டும்’ என்று கதைசொல்லியான அகதியிடம் இன்னொரு அகதி நண்பர் கோரிக்கை வைப்பதாகத் தொடங்குகிறது முதல் அத்தியாயம்.

இலங்கையிலிருந்து ஒரு குடும்பம் தப்பித்து அகதிகளாக வெளியேறும் பதட்டமான நிமிடங்களை விவரிக்கிறது நாவலின் அடுத்த பகுதி. அந்தக் குடும்பத்தில் ஒருவராக கதைசொல்லியை ஊகிக்கலாம். இவ்விடத்தில் ‘அமுதாவின் மாமனார் வாழ்நாள் முழுக்க வீடு வீடாகப் போய் துணிகள் வாங்கித் துவைத்துச் சேர்த்த ஒரே சொத்தான அயன் பண்ணும் கடையை விற்ற காசில் நடந்தேறுகிறது இந்தப் பயணம் இருந்தாலும் என்ன செய்ய நிலத்தைவிட உயிர் பெரிதுதானே’ என்றெழுதுகிறார் விஜிதரன்.

இதனை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக அச்சமும் பதற்றமும் தவிப்புமாக இருள்வெளியில் நிகழும் இதேபோன்றதொரு அகதிகள் வெளியேற்றத்தைச் சுட்டுவது பொருத்தமானதாயிருக்கும் எனத் தோன்றுகிறது.

த.அகிலன் எழுதிய ‘மரணத்தின் வாசனை’ எனும் நூல் ஈழப் போர்க் காலத்தில் முடிவுக்கு வந்த வெவ்வேறு மனிதர்களின் மரணங்களை உணர்வெழுச்சியோடும் உருக்கத்தோடும் ஆவணப்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து அவர்கள் புறப்படுகிற தருணத்தை இப்படி எழுதுகிறார் அகிலன்.

“அவர்கள் அந்த ஈரமணலில் நடக்கத் தொடங்கினார்கள். அவன்மீது ஒரு புதுக்காற்று படர்வதாய் உணர்ந்தான். புதுசு, எல்லாம் புதுசு. அவன் இனி இந்த நிலத்திற்கு அன்னியன். அவன் ஒரு கள்ளத்தோணி. அவன் ஒரு அகதி. ஒரு நிலத்தின் எஜமானன். காலத்தால் தூக்கியெறியப்படக்கூடாத ஒரு பள்ளம் இது. இப்போது நான் ஒரு அகதி. அது அவனுக்குள் உறுத்தலாயிருக்கிறதா? இல்லையா? என அவன் சரியாக அறியாதிருந்தான். ஆனால் மனசுக்குள் ஓரமாய் ஒரு மகிழ்ச்சி இருந்தது.”

நீளும் அவ்வத்தியாயத்தின் நிறைவில் ஓட்டிக்காரன் இடைவழியில் எங்கோ இறக்கிவிட்டுப் போய்விட்டது தெரிந்த நிலையில்,  அக்குடும்பத்து ஆண்பிள்ளை நான் எப்படியாவது கரைக்குச் சென்று ஏதாகிலும் படகு ஏற்பாடு செய்துவருகிறேன் என்கிறவிடத்தில் அகிலன் எழுதுகிறார்.

“அம்மா, வேண்டாமையா, செத்தாலும் எல்லாரும் ஒரேயடியாய் சாவம். போகாதை எண்டாள். மேரியும் ஜெனிற்றாவும் அழுதார்கள். அவனுக்கும் கத்தி அழவேண்டும் போலிருந்தது.”

இறுதியில் அந்தக் குடும்பமே கடல்வழியில் தங்களைக் கைநழுவவிட்டதாக முடிவுறும். வெளியேறுவதற்கு முன்னதாக ஓரமாய்த் துளிர்த்த மகிழ்ச்சி சில கணங்களில் ஒட்டுமொத்தமாகக் கரைந்துபோய்விடும்.

இப்படியாக எத்தனையோ குடும்பங்கள் கடலையே தங்கள் புதைநிலமாக மாற்றிக்கொண்டமாதிரியான அவலம் நேராமல் இந்நாவலில் முப்பத்துநான்கு பேரையும் ஓட்டிக்காரன் பத்திரமாக தமிழகத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறான்.

வழக்கமான விசாரணைகள் இத்யாதிகள் எல்லாம் முடிந்து அவர்களின் பெயர்கள் மற்றும் விசாரணைகள் நடக்குமிடத்தைப் பற்றி தோழர் விஜிதரன் எழுதுகிறபோதுதான் முன்பே கூறியதுபோல மற்ற ஈழப்படைப்பாளிகளிடம் காணப்பெறாத ஒரு விடயத்தைக் காணமுடிகிறது.

அதாவது சாதி என்ற இடத்தில் அனைவரும் ‘வெளாளர்‘ என்றே பதிவு செய்திருந்தனர் என்று எழுதுகிறார். பெரும்பான்மை ஈழப் படைப்பாளர்கள் ஆவணப்படுத்த முனையாத அம்சமிது.

தமிழக அகதிகள் முகாம் குறித்த விவரணைகள் ஒருசில அத்தியாயங்களில் வருகின்றன. குறிப்பாக, முதல் அத்தியாயத்தில் கதைசொல்லியிடம் என் கதையை நீ எழுதவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அகதித் தோழரின் உள்ளுணர்வோடு அமைந்த உரையாடல்.

“இல்ல மச்சான், இங்க பாரு, இங்க எல்லாரும் என்னை கெட்டவனாத்தான் பாக்குறாங்கடா, எனக்குன்னு ஒரு நிலையான வாழ்க்கை இல்லடா... ஏதோ நரகத்துல சிக்கின மாதிரி இருக்குது. என்னை நினைச்சாலே கேவலமா இருக்குடா...”

“முகாம் வீடுகள் பின்வீடு, முன்வீடு எல்லாம் இடையில் ஒற்றைச் செங்கல்லால் கட்டப்பட்டவை. அதனால் சிறிய சத்தங்களைக்கூட அடுத்த வீடுகளால் உணரமுடியும்.”

முகாம் வீடுகளை ஆய்வு செய்யும் கேரளப் பெண் தோழரின் பார்வையில் அக்குடியிருப்பின் அவலகரமான லட்சணங்களை வாசகர்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இவ்விடத்தில் கடந்த ஜூன் மாதம் 21ந்தேதி நாளிதழ் செய்தி ஒன்றை நினைவுகூரவேண்டும்.

“திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65பேர் இந்தியக் குடியுரிமை கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு அரசியல் அமைப்பு சட்டப்படி அகதிகளாக இருந்தாலும், தஞ்சம் அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மனுதாரர்களின் நிலை திரிசங்கு சொர்க்கமாக உள்ளது. இவர்கள் நிலையைப் பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. இருப்பினும் நீதித்துறையின் லட்சுமண ரேகையான எல்லையைத் தாண்ட முடியாது. எனவே, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.”

“தமிழகத்திலுள்ள பல அகதிகள் முகாம் நரகத்தைப் போல உள்ளன. ஐபிஎஸ் அதிகாரிகள் அகதிகள் முகாமுக்கு மாற்றப்படுவதை தண்டனையாகக் கருதுகிறார்கள். 35 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும், இன்றும் கண்காணிப்பில்தான் உள்ளனர். தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி நிராகரிக்க நினைக்கக் கூடாது. ஏனெனில், இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் விசாவுக்காகக் காத்திருக்க முடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு மனுதாரர்களின் விண்ணப்பத்தை ஏற்கும் வகையில், மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆக, தமிழகத்திலுள்ள ‘அகதி முகாம்கள் நரகத்தை ஒத்திருக்கின்றன’ என்று இந்திய அரசின் நீதிபதி ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பது இந்நாவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவை தவிரவும் இலங்கையிலும் தமிழகத்திலுமாக ஈழத்தமிழர்கள் என்பதாலேயே ஏதோவொரு வாதைக்கும் நோய்மைக்கும் ஆட்பட்டு அலைக்கழியும் ஷாமினி, சுரேன் அண்ணா, சுதாக்கா, சாந்தன் அண்ணா, ரமேஷ் அண்ணன், குமார் அண்ணன், சந்திராக்கா, மலரக்கா, கடிதங்களின் வாயிலாக ஆறுதலும் ஆசுவாசமுங் கொள்வதோடு அடிக்கடி தொலைந்துபோய்விடும் சுசி மற்றும் இந்திரா என விசித்திரமான குணாம்சங்களைக் கொண்ட பலரும் மனதில் பதிந்துபோய்விடுகின்றனர்.

இவர்களைப் பற்றி வாசகர்கள் வாசித்து அறிந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். காரணம், இம்மனிதர்களை தங்கள் வாசிப்பனுபவத்தின் வாயிலாகவே முழுமையாகக் கண்டடையவேண்டும். என் வாசிப்புக்குப் பின்னால் என் தோளில் அமர்ந்து பாரமாய்க் கனக்கும் அவர்களை உங்கள் தோள்களுக்குக் கைமாற்றுவது நியாயமாக இராது. எந்த ரட்சகரிடமும் இறக்கி வைத்திரமுடியாத பாரம் அது. வாசித்தபின் சுமந்தலைந்தே தீரவேண்டிய பாரம்.

இவர்களைவிடவும் இந்நாவலில் வரும் குகன் எனும் மனிதரின் உயர்வான குணாம்சத்திற்கு ஈடாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. காதலித்த பெண் கண்ணிவெடியில் தன் இரண்டு கால்களையும் இழந்தநிலையிலும் அவரைத் திருமணம் செய்துகொள்கிறார். இந்தக் காதல் கதையிலும் முன்பே சொன்னதுமாதிரி தோழர் விஜி தன் நேர்மையான கதை சொல்லும் பாணியைக் கையாண்டுள்ளார். அதாவது, இந்தக் காதல் அத்தியாயம் இப்படித் தொடங்குகிறது.

“எளிய நாயே... உனக்கு வேற எங்கையும் பொட்டையள் கிடைக்கேலேயோ... போயும் போயும் நளம், பள்ளுதான் கிடைச்சுதோ... சொல்லடா?”

குடும்பத்தாரின் இந்தக் கேள்வியிலிருந்து குகனுடைய சாதியையும் அப்பெண்ணுடைய சாதியையும் ஊகித்திட முடியும். அதனால்தான் நூலாசிரியர் இந்த அத்தியாயத்தை ‘சூப்பர் லவ் ஸ்டோரி’ என வருணிக்கிறார் போலும்.

நாவலில் எனக்கு அணுக்கமாகப் பிடித்துப்போனவர் அறிவார்த்தமும் துடுக்குத்தனமும் நிரம்பிய சுவாரஸ்யமான நபரான சாரு எனும் பெண். இப்படியான சாருவின்

வாயிலாகவே ஈழப்பிரச்சினையின் சிடுக்குகளையும் அதன் நுண்ணரசியலையும் வெளிப்படை அரசியலையும் வெளுத்து வாங்குகிறார். முன்பே சொன்னதுபோல ஈழப்படைப்பாளிகளிடமிருந்து முற்றிலும் விலகிநின்று சட்டையைப் பிடித்துக் கேட்பதுபோல தமிழக அரசியல்வாதிகளை விளாசுகிறார் நூலாசிரியர்.

2012-ஆம் ஆண்டு அகதிகள் முகாமில் நடைபெறும் ஒரு உண்ணாவிரதத்தில் தமிழக அரசியல்வாதி ஒருவர் பேசுவதுபோல வரும் காட்சி.

“தலைவர் சரியான நேரத்திற்காகத்தான் வெயிட் பண்றார். அவர் நிச்சயம் வருவார். அப்ப இருக்குது கடைசி அடி. வைகோவுக்கும் பழ நெடுமாறனுக்கும் சீமானுக்கும் அவரிண்ட இடம் தெரியும். சிங்களவனுக்கு இனி இருக்குது பூசை.”

இப்படியாகத் தொடரும் உண்ணாவிரத மேடையில் திடீரென ஏறும் சாரு இப்படிப் பேசுகிறார்.

“இன்றுவரை நாம் முகாம்களில் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். இங்கு இருக்கும் அரசிடம் பேசியோ போராடியோ ஒன்னும் செய்யமுடியாதவர்கள்தான் நாளைக்கு இங்க ஆட்சி புடுச்சி அங்க ஈழம் புடுங்குவாங்களா? அதனால அடுத்தவன் காலை நம்புறத விட்டுட்டு நம்ம புள்ளகுட்டிகளைப் படிக்க வைக்க சரியா யோசிக்க வைச்சி ஒரு அரசியல் செய்தாத்தான் நமக்கு விடிவே தவிர வேற யாரும் எதையும் புடுங்கமாட்டாங்கள்.”

இதுபோன்ற இடங்களைக் குறிப்பிட்டுதான் மற்ற ஈழப் படைப்பாளர்களிடமிருந்து இவர் வேறுபடுகிறார் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பூடகங்கள் எதுவுமில்லாமல் நேரடியாகவே அரசியலைப் பேசுகிறார் விஜிதரன். எவ்வளவுதான் பாதகங்களை அனுபவித்தாலுமேகூட பலரும் குறிப்பிடத் தயங்கும் சாதியைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். ஆபத்தான அரசியல்வாதிகளின் பெயர்களைத் துணிச்சலோடு கோடிட்டுக் காட்டுகிறார். என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையும் அலசுகிறார். தமிழக முகாம்களில் தலைமை என்ற பெயரிலும் சாதியின் பெயரிலும் நடக்கின்ற அட்டூழியங்களையும் தோலுரிக்கத் தயங்கவில்லை இவர். எல்லாம் அரசியல் என்பதாகிவிட்ட ஈழத்தமிழர் விடயத்தில் தெளிவான அரசியல் நிலைப்பாடு தேவை என்பதையே அழுத்தமாக வலியுறுத்துகிறார் தோழர் விஜி.

நாவலின் சில முக்கியமான அம்சங்களைப் பட்டியலிடலாம் என நினைக்கிறேன்.

சொந்த நிலத்தையும் உறவுகளையும் உடைமைகளையும் நினைவுகளையும் ஒருசேரக் கழற்றியெறிந்துவிட்டு உயிரை மட்டும் கொண்டு வந்தவர்கள் ஈழ அகதிகள் என்று மட்டும் முடிவு கொண்டுவிடக்கூடாது. அதையும் தாண்டி அவர்களது இழப்பு பலவாறானதாக இருக்கிறது.

ஓரிடத்தில் கதைசொல்லியிடம் ‘ஓ... தம்பிக்கு எங்கட கதை வராதோ? இந்தியாக்காரங்கள் மாதிரி கதைக்கிறீயள்’ என்று கேட்கப்படுகிறது.

அதற்கு அவரது பதில்.

“எனக்கு ஒரே அவமானமாப் போச்சுது. இது இவர் மட்டுமல்ல, முதல்ல எங்க போய் நான் இலங்கை என்று சொன்னாலும் சரி, இல்லையென்றால், என்னை இலங்கை என்று யாராவது அறிமுகப்படுத்தினாலும் சரி, முதலில் வரும் கேள்வி இதுதான் அப்போதெல்லாம் இதே அவமானம்தான் வரும். ஏதோ அடையாளமற்றவனாய் உணருவது போலிருக்கும்”.

பல ஆண்டுகள் தமிழகத் தமிழே பழகிவிட்ட காரணத்தால் அதுவும் தமிழ் மொழிதான் என்றாலும் தங்கள் நிலத்திற்கே உரிய அழகிய மொழி உச்சரிப்புத்துவத்தை இழந்து நிற்பது உள்ளபடியே அவமானத்திற்குரியதுதான் இல்லையா?

அடுத்ததாக சாருவின் உணவுப் பழக்கத்தைப் பற்றி வரும் இடங்கள்.

“சாருவுக்கு இந்திய உணவு வகைகள் மீது அவ்வளவு பிடித்தம் இல்லை. அவளும் எவ்வளவோ முயன்று பார்த்தும் அவளால் அதிகபட்சம் காரக்குழம்பு வரைதான் பிடிக்கவைக்க முடிந்தது. சாம்பார், ரசம் என்றால் இன்னும் உவப்பின்மைதான்.”

“சாருவும் வெளிக்கிட்டுவிட்டு புட்டையும் சீனியையும் வாழைப்பழத்தையும் போட்டுப் பிசைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.”

என்னதான் சுவையான அமிர்தமான உணவென்றாலும் தங்கள் பால்யத்திலிருந்து பழகிய உணவுக்கு ஈடாகாது என்பதை இவ்வரிகளில் உணரமுடிகிறதல்லவா?

முகாம் வாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர்களைப் பற்றிய மிக முக்கியமானதொரு கணக்கீட்டை இந்நாவலில் வெளிப்படுத்துகிறார் தோழர் விஜி. அதாவது, முகாமிலிருந்து பத்தாம் வகுப்பு படித்தவர்களின் எண்ணிக்கை 90ஆக இருந்தது, பிளஸ் டூவில் 30 முதல் 40 ஆகவும் குறைந்து பட்ட மேற்படிப்பின்போது வெறும் இரண்டு பேராக சுருங்கிவிடுகிறது. படிப்பு தேவையில்லை, பொது அறிவு, சமூகம் எதுவும் தேவையில்லை என்பதல்ல அதற்கான வாய்ப்புக்குப் போராட வேண்டியிருக்கிறது. பலரின் குடும்பச் சூழல் அதற்கு அனுமதிக்காத பட்சத்தில் பிழைப்புக்காக பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகிறவர்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களுக்கு நாட்களை நகர்த்தவேண்டும். வேறு என்னதான் செய்ய அனுமதித்திருக்கிறது இந்த அகதி முகாம்? அதிகாரிகளைப் பொறுத்த அளவில் இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்ற

அடிப்படையில்தான் இவர்களுக்கு அடையாள எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதாவது இறைச்சித்தோல் உடம்பிலே இலக்கம் இடப்பட்டிருக்கிறது.

பெண்பிள்ளைகள் திருமணம் ஆகிக் குடும்பஸ்திரி ஆகிவிடுகிறார்கள். ஆண்கள் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குத் தயாராகிவிடுகிறார்கள். காலையில் வெளிக்கிளம்பி மாலைக்குள் வீடு திரும்பி அடங்கிவிடுவதே ஒவ்வொருநாளும் வாடிக்கையாகிவிடுகிறது இவர்களுக்கு. ஆக இதைத்தான் வெறுமனே உயிரோடிருப்பது என்று குறிப்பிடவேண்டியிருக்கிறது.

ஈழ அகதிகளை சிறிதுகூட மனிதர்களாகப் பொருட்படுத்தாமல் கீழினும் கீழ்மக்களாக நடத்தும் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிச்சப்படுத்தும் இப்புனைவு இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கும் இச்சூழலில் மிக முக்கியமானதாகப் படுகிறது. தம் சகோதர மக்களின் அவதியும் அவலமுமான வாழ்வை அசலாகப் பதிவு செய்திருக்கும் எழுத்தாளர் விஜிதரனும் இந்நூலைப் பதிப்பித்த சிந்தன் புக்ஸ் நிறுவனத்தாரும் பாராட்டுக்குரியவர்களாவர்.

ஏதிலி

அ. சி. விஜிதரன்

வெளியீடு: சிந்தன் புக்ஸ்

பக்: 294 / விலை:ரூ.250/-

Pin It