நான் சமீபத்தில் இலங்கை சென்று வந்ததும் அதுசார்ந்த அனுபவங்களை எழுத வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தபோது நண்பர் கௌரி காமாட்சி அவர்கள் தான் எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பி வைப்பதாக சொன்னார். ஏற்கனவே அவர் மூன்றாம் தலைமுறை என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களாக தமிழகம் வந்து சேர்ந்த கதையை எழுதி முடித்திருப்பதாக என்னிடம் சொல்லியிருந்தார். ஆகவே நானும் இலங்கை சென்று வந்திருப்பதால் அப்புத்தகத்தை வாசிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.

'மூன்றாம் தலைமுறை” 70 பக்கங்களே கொண்டது என்றாலும் விருவிருப்பான வாசிப்பு நடை. அடுத்து என்ன? அடுத்து என்ன? என எதிர்பார்ப்போடு வாசகர்களை படிக்கத் தூண்டும் அளவுக்குப் பொருத்தமான சில இடங்களில் புதிர்கள், போதிய வர்ணனை, ஏக்கமும், வலியும் கலந்து சிறுவயது அனுபவம் எனப் பலவற்றை இந்நூலில் சுட்டிக்காட்டலாம். கௌரி காமாட்சி அவர்களுக்கு முதல் நூல் என்றாலும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒருசில இடங்களில் கூடுதல் தகவல்களை பதிவு செய்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. புனைவு ஏதுமில்லா உண்மையை அப்படியே கதை சொல்லும் பாணியில் இந்நூல் பதிவு செய்திருப்பதே இதன் பலம் எனலாம். சுருக்கமாகச் சொன்னால் நாம் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் இலங்கை முகாம் வாழ் தமிழர்களின் கதையின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

moondram thalaimuraiஆசிரியரின் சிறுவயது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் போது அவரோடு நாமும் சிறுவயதில் பயணிப்பது போன்றதொரு உணர்வு மேலிடுகிறது. சிறுவயதில் பள்ளி முடிந்ததும் ஆவலோடு மதிய உணவு சாப்பிட வரும் ஆசிரியர் மீன் குழம்பை ருசித்து சாப்பிட எத்தனிக்கும் போது வெடிக்கும் குண்டு சத்தத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட வேண்டிய அவலம். பசியோடு மணிக்கணக்கில் நடந்து பாதுகாப்பாக ஓடி ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கும் போது அங்கு கிடைக்கும் பிஸ்கட்டும் கடுங்காப்பியும் அமிர்தமாகவே பட்டது எனக் குறிப்பிடும்போது பசியின் கொடுமையை அச்சிறு வயதில் எப்படி உணர்ந்திருப்பார் ஆசிரியர் என நினைக்கத் தோன்றுகிறது.

குண்டு போட்டு தங்களின் வாழ்விடத்தை தீக்கிரையாக்கி விட்ட கொடூரத்தை அறியா வயதில் தான் பள்ளிக்கூடம் போக வேண்டியது இல்லை என மகிழும் குழந்தைப் பருவ அனுபவங்களைப் பதிவு செய்யும்போது வாசிக்கும் நாமும் அந்தக் குழந்தை பருவத்தோடு ஒன்றிப்போக செய்துவிடுகிறார். அதற்குப் பரிகாரமாகத்தான் என்னவோ தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த பின்னர் ஆறாம் வகுப்பை இரண்டு வருடங்களாக மூன்று பள்ளிகளில் படித்து இருக்கிறார் என்பதை குறிப்பிடும் போது அவரின் பெற்றோர் எத்தனை இடத்திற்கு புலம் பெயர்ந்தாலும் தான் படித்த படிப்பு தன்னை விட்டுப் போகாது என உணர்ந்தே அவரைத் திரும்பத் திரும்பப் படிக்க வைத்து இருக்கின்றனர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் கொடூரம் என்னவென்றால் அவர் படித்த படிப்பு சான்றிதழை கூட பாதுகாப்பாக வைக்க முடியாமல் முகாமில் தீப்பற்றி வீடுகள் எரிந்து சாம்பலானதில் படிப்பு சான்றிதழ் கருகிப் போனதுதான். சொந்த மண்ணில் குடியிருக்க விடாமல் இலங்கை ராணுவம் குண்டு போட்டு விரட்டியடித்த ரணங்களில் இருந்து தப்பிக்க தமிழகம் வந்து சேர்ந்தாலும் உயிர்வாழ முடிந்ததே தவிர இந்திய குடிமகனாக உரிமைகள் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அவர்களை ஒரு பக்கம் வதைத்துக் கொண்டு இருந்தாலும் அவர்கள் குடியிருப்புகள் மிகக்குறுகிய அளவே கொண்டதாகவும் அதில் ஒட்டுமொத்த குடும்பமும் குடியிருக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

நான் ஒருமுறை திருநெல்வேலி அருகேயுள்ள கோபால சமுத்திரம் என்ற இடத்தில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமில் சென்றிருந்தேன். அங்குதான் முதன் முதலாக நான் அம்மக்கள் குடியிருக்கும் வீடுகளை பார்த்தேன். ஒரு குடும்பத்திற்கு வெறுமனே 10 க்கு 10 அளவுகொண்ட இடத்தில் எத்தனை பேர் அங்கு இருந்தாலும் அதே வீட்டுக்குள்ளே குடியிருக்கும் அவலம். ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் இடைவெளி பெரிதாக இல்லாததால் நெருக்கமாகவே இருந்தது. மிகச் சிறிய நிலப்பரப்பில் பெரும் மக்கள் கூட்டம் நகர்ப்புறங்களை விட நெருக்கமாக வாழும் நிலையில்தான் இன்றும் குடியமர்த்தபட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உடைத்து பதிவு செய்திருக்கிறார்.

மூன்று தலைமுறையாக இந்தியாவிலேயே இருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு இலங்கை மீது பிடிப்பு இல்லாது போவது இயல்புதான். ஏனென்றால் தற்போதுள்ள தலைமுறைகள் இங்குதான் பிறந்திருக்கிறார்கள். இங்குதான் வாழ்கிறார்கள் அவர்கள் உணவு, உடை, கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் என இங்குள்ளவர்களை போல முற்றிலும் மாறிவிட்ட பின்னர் அவர்களை இலங்கை வாழ் மக்கள் எனச் சொல்லி இரண்டாம் தர மக்களாக ஏதும் அற்றவர்களாக வைத்திருப்பது நியாயம்தானா? என நாசுக்காக இன்றைய ஆட்சியாளர்களுக்கு நூலாசிரியர் வைத்திருக்கும் கோரிக்கையை இந்நூலை வாசிக்கும் யாரும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்.

இந்நூலில் பக்- 65 இல் ஒரு செய்தியை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார், “இவர்களுக்கு அகதி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் குடியேற்ற நாடுகளில் அகதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கும். 5 வருடங்களுக்குப் பின்பு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் தமிழர்கள் என்பதால் மனிதாபிமான அடிப்படையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை" என்கிறார். மனிதாபிமான அடிப்படையில் தமிழர்கள் என்ற பெயரில் தங்க வைக்கப்பட்டதை காலங்காலமாக சொல்லிக்கொண்டு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கும் அரசுகள் மனிதாபிமானமே இல்லாமலும் கண்டுகொள்ளாமலும் விட்டு விட்டது என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

‘கிட்டத்தட்ட நாங்கள் இலங்கை மண்ணிலிருந்து எங்களது பூர்வீகத்தை துறந்து புலம்பெயர்ந்த மக்களாக இந்தியாவிற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவி முகாமிலிருந்து வாழ்ந்து வந்தாலும் நாங்களும் இந்தியர்களே. எங்களுக்கும் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்குக் கொடுக்கக்கூடிய உரிமைகளை வழங்குங்கள்’ என்ற கோரிக்கையை முன் வைக்கும் ஆசிரியர் அது குறித்து தரும் மிக அருமையான விளக்கம் இது. “90 க்குப் பிறகு இந்தியாவில் வந்து பிறந்தவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கும் இலங்கையைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது. கலாச்சாரம், பண்பாடு, புவியியல் அமைப்பு, அரசு, அரசியல் போன்று எதுவுமே இவர்கள் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் முழுக்க முழுக்க இந்திய மண்ணில், இந்தியக் காற்றை சுவாசித்து, இந்திய அரசியல் பண்பாடு கலாச்சாரத்தோடு சேர்ந்து இந்தியனாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பினால் ஒரு வளர்ந்த மரத்தை பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் என்ன நிகழுமோ அதுவே இவர்கள் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்” (பக் 65 - 66;)

இதைவிட வேறு என்ன உத்தரவாதம் தான் அவர்கள் கொடுத்துவிட முடியும். இதுவே அம்மக்கள் அனைவரும் உறுதிமொழி கொடுப்பது போன்ற அடர்த்தியான வார்த்தைகளால் பதிவு செய்திருக்கிறார்கள் கௌரி காமாட்சி.

தேர்தல் நேரத்தில் ஓட்டு போடாத ஒருவன் மனிதனா? என்ற கேள்வி வலி நிறைந்தது. அக்கேள்வியை தன்னைத்தானே கேட்டுப் பார்த்துக்கொண்டு தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஓட்டபோட்டுப் ஓடவிட வேண்டும் என நினைப்பதில் தவறேதும் இல்லையே?

வாக்காளர் அடையாள அட்டை ஒரு மனிதனுக்கு அடிப்படையான ஒரு அடையாள அட்டை என்றே சொல்லலாம். அதுவே இல்லாதபோது பிற ஆவணங்களை அவர்கள் பெற முடியாதுதான். வாக்காளர்களுக்கு உரிமை இல்லை என்கிற போது மற்ற ஆவணங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என விட்டுவிட்டார்கள் போலும்!

எனக்குத் தெரிந்தவரை எங்கள் மாவட்டம் விருதுநகரில் சில இலங்கை தமிழர் முகாம் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் வெம்பக்கோட்டை அணைக்கட்டுக்கு அருகே உள்ள முகாம் எனது ஊருக்கு மிகப் பக்கம். இந்நூலில் கௌரி காமாட்சி ஏற்கனவே இலங்கை முகாம் தமிழர்கள் பெயின்டிங் கட்டிடப் பணிகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் கௌரி காமாட்சி எழுதியுள்ளது போல் இதுபோன்ற வேலைகளில் அதிகம் ஈடுபடுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் வேலைக்குப் போகும் தமிழக மக்கள் பலர் பேசுவதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். “அவர்களுக்கு என்ன கவலை? அரசாங்கம் மாதமாதம் தலைக்கு பெரியவர் என்றால் ஆயிரமும், சிறியவர் என்றால் 500 வரை பணம் கொடுத்து விடுகிறது. அவர்களும் தவறாது வேலைக்குப் போய் விடுகிறார்கள். பெயிண்டிங் உள்ளிட்ட வேலைகளில் நல்ல சம்பளமும் கிடைக்கிறது. அதை வாங்கி அன்றாடம் மது அருந்துவது, வேண்டியதை வாங்கி சாப்பிடுவது என ஜாலியாக இருக்கிறார்கள். பெயருக்கு நாங்கள் அகதி எனச் சொல்லிக் கொள்கிறார்கள். அதேநேரத்தில் வாரத்தில் மூன்று, நான்கு நாட்களாவது மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். சொந்தமாக சொத்து எதுவும் வாங்க முடியாது. அதனால் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு நன்றாக செலவழித்து ஜாலியான வாழ்க்கை வாழ்கிறார்கள். நம்மை போல அவர்கள் என்ன கஷ்டப்படவா செய்கிறார்கள் எனப் பேசுவதை கேட்டிருக்கிறேன். அவர்களுடன் வேலை செய்யும் நபர்களே சொல்கிறார்கள் என்றால் உண்மையாகத்தானே இருக்கும் எனப் பிறரும் நம்புவது இயல்புதான். அப்படி இருக்கும் பட்சத்தில் இலங்கை தமிழர் முகாம்களில் வாழும் தமிழர்களின் மீதான வெகுசான மக்களின் பார்வை மேற்கண்ட விஷயங்களில் இருந்து பார்க்கும்போது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் முடிவு செய்யும் முன்னர் அவர்களை அப்படி வைத்திருப்பது யார்? அதற்கான காரணம் என்ன என்பதை கொஞ்சம் நாம் யோசிக்க வேண்டும் என்பதை இந்நூலில் பரவலாக நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். இதில் பெரும் அரசியல் காரணங்கள் பொதிந்து கிடக்கின்றன என்பதையும் மறுக்க இயலாது.

குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின் இலங்கை தமிழர் முகாம்களில் குடியிருக்கும் மக்களின் மீதான இங்குள்ள மக்களின் பார்வை மாறியதை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருப்பது எதார்த்தம்தான். யாரோ ஒருவர் செய்ய ஒட்டுமொத்த மக்களின் மீதான பார்வை இன்றும் ஆறாத வடுவாக பதிந்துள்ளது. ராஜீவ் காந்தி இறப்பிற்கு முன் இருந்த இங்குள்ள மக்களுக்கு இடையேயான உறவு மீண்டும் வளர்வதற்கு வாய்ப்பு கிடைக்காத சோகம் தான் இன்று வரை அம்மக்களை சிறிய இடத்திற்குள் சிறை கூடாரம் போன்று உணரச் செய்திருக்கிறது

முகாம் வாழ் தமிழர்களின் கல்வி, இளைஞர் ஒருங்கிணைப்பு, நலவாழ்வு உள்ளிட்ட பணிகளை எனக்குத் தெரிந்த வரையில் துசுளு என்ற நிறுவனம் சேசு சபை அருட்தந்தையர்களால் நடத்தப்பட்டு முகாம் மக்களுக்கான பல சேவைகளை வழங்கி வந்தது. அவ்மைப்பின் மாநில, மண்டல, மாவட்ட அளவில் பணியாற்றிய பலரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். என்னோடு பல கட்டங்களில் பயிற்சி பெற்றவர்கள.; நானும் முகாம் இளைஞர்களுக்காக சில இடங்களில் பயிற்சிகளை இந்நூலாசிரியரோடு இளைஞர் குழுக்களுக்கு வழங்கியிருக்கிறேன். அவர்களோடு உரையாற்றும் போது முகாம் குறித்த அனுபவங்களை நான் பரவலாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதோடு இலங்கை மண்ணில் நேரடியாக போரின்போது கண்ட ரணங்களை இன்றும் மறக்காமல் நினைவு கூறும் நபர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்களின் கவலை எல்லாம் இப்போதுள்ள இளைஞர்கள் சினிமா, ரசிகர் மன்றங்கள், ஜாலியான வாழ்க்கை என இங்குள்ள மக்களோடு மக்களாக அவர்களின் கலாச்சாரத்திற்கு ஒன்றிப் போய்விட்டார்கள். படிக்கச் சொன்னால் ஏன் படிக்க வேண்டும்? படித்தால் அரசு வேலை வாங்க முடியாது. தனியாரில் கூட நல்லதொரு வேலையில் அமர்வதற்கு இங்குள்ளவர்கள் வாய்ப்பு கொடுக்கக்கூட முகாம் மக்கள் என்ற காரணத்திற்காகவே மறுக்கிறார்கள். எப்படியும் கிடைத்த வேலைகளைத்தான் செய்ய வேண்டிய அவலம். அதனால் ஏன் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்ற கேள்வியைத்தான் முன்வைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வளவு நொந்து போயிருந்தால் இந்த வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்று உணர முடிகிறது. ஆனாலும் கணிசமான இளைஞர்களை படிக்க வைப்பதிலும் அவர்களை ஒருங்கிணைப்பதிலும் தொண்டு நிறுவனங்களின் பணி இலங்கை முகாம் தமிழர்களின் மத்தியில் மகத்தான பணியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

நான்கு நாட்கள் வரை பல்வேறு இடங்களில் நாங்கள் பயிற்சிகளை ஒருங்கிணைத்து நடத்தும் போது இலங்கை முகாம் தமிழர்கள் அவர்கள் தங்கியிருக்கும் எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று வரவேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் அவர்கள் தேசத் துரோகம் செய்தவர்களை போன்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற தகவலை நான் கேள்விப்படும்போது மிகவும் நொந்து போயிருக்கிறேன். அதோடு க்யூ பிரிவு அதிகாரிகள் திடீர் திடீரென நடத்தும் முகாம் ஆய்வுகளில் அந்தந்த வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவரும் சரியாக இருக்க வேண்டும். அப்போது இல்லை என்றாலும் சிக்கல்தான். வேறு யாரேனும் புதிதாக இருந்தாலும் பிரச்சினைதான். நாமெல்லாம் நம்மூரில் உறவின் வீடுகளுக்கோ அல்லது வேறு எங்கேனும் சென்றால் எத்தனை சுதந்திரமாக சென்று வருகிறோம். ஆனால் இலங்கை முகாம் தமிழர்களின் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இல்லையே என நினைக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஆழம் புரிகிறது. இத்தகைய கொடூர வாழ்க்கைக்கு அவர்கள் பழகிப் போனாலும் இப்படியொரு சூழலை துளியும் அறியாத நமக்கு அவர்களின் வாழ்க்கைப் பின்புலம் எப்படித் தெரிந்திருக்கும்? இதுபோன்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர்களின் வாழ்க்கை சுருங்கி கிடைப்பது அகதி என்கிறார்கள்.

நாமெல்லாம் இலங்கைத் தமிழர் முகாம்களை கடந்து செல்லும் போது இது அகதிகள் முகாம் என்று எளிதாக சொல்லி விட்டு கடந்து விடுகிறோம். ஆனால் அகதி வாழ்க்கை எத்தகைய சிறை கூடாரம் போன்றதொரு சூழலில் அமைந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடியாது. நமது சமூக அமைப்பில் திட்டமிட்டே ஊருக்கு ஒதுக்குப்புறமாக இன்றும் பல இடங்களில் தலித் மக்களின் குடியிருப்பு அமைந்திருப்பதை விட, இது மோசமானது. தலித் மக்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தெற்கு பக்கமோ அல்லது கிழக்கு பக்கமோ இருந்தாலும் அவர்களின் குடியிருப்புகள் தனித்த அடையாளத்துடன் தெரியும். இன்றைக்கு பெரும்பாலான இடங்களில் எல்லா சமூக மக்களும் ஒன்றாக பிளங்கினாலும் தெரு குடியிருப்பு சார்ந்து வேற்றுமை மிக கவனமாகக் கையாளப்பட்டுதான் வருகிறது. ஆனாலும் ஒரு தலித் தான் விரும்பிய மாதிரி அந்தக் குடியிருப்பை வடிவமைத்து எத்தனை பெரிதாக வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். சொத்து வாங்கிக் கொள்ளலாம். தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சி செய்யலாம். அதற்கான உரிமை போராட்டங்கள் எத்தனையோ நடந்திருக்கிறது. அது கடந்த கால வரலாறு.

இலங்கை முகாம் வாழ் தமிழர்களை இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்ற காரணத்திற்காக காலங்காலமாக இங்கு அகதி வாழ்க்கை வாழ்ந்து ஏதுமற்றவர்களாக இருப்பது நியாயம்தானா? என அவர்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் பதிவுதான் இந்த ‘மூன்றாம் தலைமுறை’

நேரடியாக போர் சூழலிலிருந்து தமிழகம் வந்து இங்கு தனக்கு அடுத்த தலைமுறையினரையும் கிரகித்து அனைவருக்குமான உரிமைக் கோரல் என்பதிலிருந்து அதன் பின்னணியையும் இந்நூல் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதே.

இப்படியொரு வலிமிகுந்த பதிவை நேரடியாக அனுபவித்த நபரான கௌரி காமாட்சியைத் தவிர வெளி நபர் ஒருவர் உள்வாங்கி எழுதிவிட முடியாதுதான். தனக்கான உரிமையை தான்தான் கோர முடியும் என்பதை சரியாகப் புரிந்து அதற்கான வழியாக அவர் எழுத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரின் எழுத்துகள் வாயிலாக ஆட்சியாளர்கள் உட்பட சமூக இயக்கங்கள், அமைப்புகள் வெகுசன மக்கள் என அனைவரிடமும் இலங்கை முகாம்களில் தமிழர்களின் நிலை குறித்த ஒரு அதிர்வை உருவாக்கட்டும். அதன் வழியாக அவர்களுக்கான ஆதரவு குரல் பெருகட்டும்.

அதோடு நூலாசிரியர் கௌரி காமாட்சி இன்னும் விரிவாக இலங்கை முகாம் வாழ் தமிழர்களின் வாழ்க்கைப் பதிவுகளை பதிவு செய்ய வேண்டும். அவரின் எழுத்துகளால் அவர் சார்ந்திருக்கும் இலங்கை தமிழ் மக்களின் வாழ்வில் வெளிச்சக் கீற்றுகள் பரவட்டும். இந்நூலை வெளியிட்டுள்ள சரண் பதிப்பகத்தாருக்கும் எனது பாராட்டுக்கள்!

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It