1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன.

தமிழ்நாடு தமிழருக்கே! - IV

“தமிழ்நாடு தமிழருக்கே” என்னும் தலைப்பில் இதற்குமுன் மூன்று தலையங்கங்கள் எழுதி இருப்பது டன், அடுத்தபடி ஆரிய திராவிட சமய சம்பந்தமாக எழுதப்படும் என்று நேற்றைய தலையங்க முடிவில் குறித்திருந்தோம்.

அந்தப்படி இன்றைய தலைங்கத்தின் கீழ் ஆரிய திராவிட சமயங்கள் என்ன? சமய ஆதாரங்கள் என்ன? என்பவைகளைப் பற்றி எழுதப்புகுகின்றோம். இப்படி எழுதுவதில் நாம் பெரிதும் தற்காலம் பிரத்தியட்ச அனு பவத்தில் உள்ளனவற்றையே பெரிதும் ஆதாரமாய்க் கொண்டு எழுதுகிறோமே ஒழிய, நூல் ஆராய்ச்சியை அடிப்படையாய்க் கொண்டே எழுதப்புக வில்லை. அவ்வாராய்ச்சி விஷயங்களைப் பண்டிதர் களுக்கு விட்டு விடுவோம். இன்றையப் பிரத்தியட்ச காட்சிக்கும் கருத் துக்கும் ஆதாரங்களோ ஆராய்ச்சிகளோ விரோதமாய் இருக்குமானால் அதற்கேற்றபடியாகிலும் அனுபவத்தை மாற்றிக்கொள்ளவாவது நாம் எழுதுவது பயன் படட்டும் என்று கருதியே இதில் தலையிடுகிறோம்.

இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் சமயத் துறையில் ஏற்பட்ட கேடுகள்தான் பெரிதும் ஆரியர்களுக்கு இந்நாட்டில் ஆதிக்கம் வளர்ந்து நிலைத்திருப்பதற்குக் காரணம் என்றும், அதுவே தான் திராவிடர் வீழ்ச்சிக்கும் காரணம் என்றும் நாம் கருதுகிறோம். ஆதலால் ஆரிய, திராவிட சமய சம்பந்தமான காரணங்கள் மக்களுக்கு விளங்கவேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

திராவிட சமயம்

திராவிடர்க்கு ஆதியில் என்ன சமயம் என்பது திட்டமாய் விவகாரத்திற்கு இடமில்லாமல் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாய் இருந்தாலும், திராவிடருக்கு முன் பின் பிறவியோ, பிறவியின் பயனாக மேல்-கீழ் சாதியோ, சாதிக்கேற்ற உலகமோ, விக்கிரக உருவமோ, பல கடவுள்களோ, அக்கடவுள்களின் முகத்திலோ, காலிலோ மக்கள் தோன்றியதோ முதலான கோட்பாடுகள் இருந் தாகத் தெரியவில்லை. ஆகவே, அவற்றைப் பொறுத்த வரை அவை சம்பந்தமான சமயமும் கடவுள்களும் சமய நூல்களும் திராவிடருக்கு உடன்பாடானவை அல்ல என்பதும் உறுதியான உண்மையாகும்.

இந்த உறுதியை வைத்துக் கொண்டு பார்த்தால் பெரியார் முகம்மது நபி பெருமான் அவர்கள் கடவுளைப் பற்றியும், சமுதாயத் தைப் பற்றியும் கூறியுள்ள கருத்து களே தமிழர் கடவுளுக்கும் சமு தாயத்துக்கும் பொருத்தமான தென நினைக்கலாம். நபி அவர் கள் கடவுளுக்கு உருவம் இல்லை, பெயர் இல்லை என்று சொன்னதோடு (நாணயம் இல்லையென்றும் இணையே வைக்கக்கூடாது என்றும் நிர்ப்பந்தமான திட்டம் செய்திருப்பதோடு அப்படி யாராவது உருவம், இணை முதலியவை கற்பித்தால் அப்படிப் பட்டவர்கள் கடவுள் கொள்கைக்கு மாறானவர்களாவர்கள் என்றும், இஸ்லாமானவர்களாக மாட்டார்களென்றும் கண்டித்துக் கூறியிருக்கிறார்கள்.

ஆகையால், திராவிடர்கள் கடவுளுக்கு உருவம் இல்லை; இணை இல்லை என்ற அளவாவது ஒப்புக் கொள்வார்களே ஆனால், இன்று பெரும்பாகமான திராவிடர்கள் அனுஷ்டிக்கும் கடவுள் கொள்கைகள் தப்பானதென்றே உணருவார்கள். தப்பானதென்று சொல்லுவது மாத்திரமல்லாமல் திராவிடர்கள் இந்தத் தப்பான கொள்கையாலேயே ஆரியர்களுக்கு சர்வத்திலும் அடிமைப்பட நேர்ந்தது என்றும் சுலபத்தில் உணருவார்கள்.

ஏனெனில், இன்று திராவிடர்கள்மீது சுமத்தப்பட்டிருப்பதும், பெரும்பான்மை திராவிட மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பது ஆரிய மதமாகிய இந்துமதம் என்று சொல்லப்படுவ தேயாகும். அதுபோலவே திராவிடர்கள் கடவுள்களும் இந்துமதக் கடவுள்களேயாகும். சமுதாயத்துறையிலும் திராவிடர்கள் பின்பற்றுவது இந்துசமய முறையேயாகும்.

இந்துமதம்

உண்மையில் வெளிப்படையாக மனம் திறந்து பேசவேண்டுமானால் இந்துமதம் என்பதாக ஒரு மதமே இருந்ததில்லை என்பதோடு இருக்கிறதாகச் சொல்லுவ தற்கும் வகை இல்லை. ஆனால், பின் எப்படி இந்துமதம் என்று ஒரு சொல் இருந்து வருகிறது என்றால் ஆரியர்களு டைய மேன்மைக்கு ஆகவும், அவர்கள்  மற்ற மக்களை அந்தகாரத்தில் வைத்துத் தங்களுக்கு அனுகூலமாக ஆண்டு கொள்வதற்கு ஆகவும், மற்றும் திராவிடர்களை சமயம்போல்-சௌகரியம்போல் பயன்படுத்திக் கொள் வதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட சில சூழ்ச்சி முறை களே இன்று இந்துமதமாய் இருக்கிறது.

ஏனெனில் இந்துமதம் என்கின்ற வார்த்தையே ஆரியர்களுக்குள்ளாகவாவது எப்போதாவது இருந்து வந்ததாகச் சொல்வதற்கு இல்லை. ஆரிய சம்பந்தமான எந்தப் பழைய ஆதாரங்களிலும், அவர்கள் சமயாதாரமாக சமீபகாலம் வரை ஏற்படுத்திக்கொண்ட எந்த ஆதாரங் களிலும் கூட இந்துமதம் என்கின்ற வார்த்தை இருந்தாகத் தெரியவில்லை.

அன்றியும் இந்துமதம் என்றால் என்ன? அதன் கொள்கை என்ன? என்று நிர்ணயித்துச் சொல்லக் கூடியதாகவும் ஒன்றும் இல்லை. எப்படிப்பட்டவன் இந்து? எப்படிப்பட்டவன் இந்து அல்லாவதன்? என்று சொல்லு வதற்கும் ஒரு நியதி இல்லை. இந்தியாவில் உள்ள முகமதியனையோ, ஒரு கிறிஸ்தவனையோ, ஒரு பார்சியையோ, சீக்கியனையோ, ஒரு பிரமசமாஜக் காரனையோ, ஒரு மதமும் ஒரு கடவுளும் இல்லாத பகுத்தறிவு வாதியையோ இந்து அல்லாதவன் என்று சொல்ல ஒரு ஆதாரமும் இல்லை. இந்துமதம் என்று சொல்ல இன்று ஒரே ஒரு ஆதாரம்தான் அனுபவத்தில் பயன்பட்டு வருகிறது. அதாவது, ஆரியர்கள் மேன்மைக் கும் அவர்களது நலனுக்கும் மாறாகப் பேசுவதும் இருப்பதும் எல்லாம்தான் இன்று இந்து மதமல்லாததாய் இருக்கிறதே தவிர, இந்துமதம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கையும் திட்டமும் இல்லை. ஆரியர்களின் மேன் மையையும் அவர்களது மேன்மைக்கு ஆதரவான ஆதாரங்களையும் குறித்து வாதம்புரியாமல் ஒருவன் கடவுளே இல்லை; வேதங்கள் பொய்; சாஸ்திரங்கள் பொய்; புராணங்கள் பொய் என்று சொன்னாலும் கூட “அவர் ஒரு பெரிய வேதாந்தி அல்லது ஒரு துறவி”என்று சொல்லப் பட்டு விடுவான்.

ஆனால், சாதி ஏது, பார்ப்பான் ஏது, பறையன் ஏது, எல்லாம் பித்தலாட்டம் என்றும், கடவுள் பேரால் மதத்தின் பேரால் ஆரியர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்றும் சொல்லிவிட்டால், அவன் எப்படிப்பட்ட பக்திமானா னாலும் நாத்திகனாய் விடுவான்.

ஆராய்ச்சி முடிவு

பொதுவாகவே, இந்துமதம் என்பது பற்றிய பல ஆராய்ச்சிக்காரர்கள் அப்படி ஒரு மதமே இல்லை என்று முடிவு கட்டி மெய்ப்பித்து இருக்கிறார்கள். இந்துமதம் என்பதாக ஒருமதம் இல்லை என்ற ஐரோப்பியர் களாலும், இந்நாட்டுப் பெரும் புலவர்களாலும் எழுதப்பட்ட ஆராய்ச்சிப் புத்தகங்கள் எத்தனையோ இன்றும் இருக்கின்றன.

இந்து என்கின்ற வார்த்தையே திருடன், அயோக்கியன், தொல்லை கொடுப்பவன், நம்பிக்கைத் துரோகக்காரன், அடிமை-கூலிக் காட்டுமிராண்டிகள் என்கிறதான கருத்து களைக் கொடுப்பது என்று பல பாஷைகளில் பரிச்சயமுள்ள அநேகர் எழுதி இருப்பதோடு இதை மெய்ப்பிக்க இன்னும் பல இங்கிலீஷ் அகராதிகள் இருக்கின்றன.

பொதுவாகவே, இந்துமதம் என்றால் ஆரியர் கொள்கை என்றும் புரோகித சமயம் என்றும் பார்ப்பனர்களை உயர்வாய்க் கொண்டதென்றும்; இந்து என்றால் பார்ப்பனர்களைப் பின்பற்றுகிறவன் என்றும்;  விந்தியமலைக்கு வடக்கே உள்ள மக்களைக் குறிப்பதென்றும்; ஆதிகால மனிதத் தன்மையைக் குறிப்பிடுவதென்றும்; அதிராதி களிலும் சகல கலாநிதி என்னும் பழங்காலம் முதல் நாளது வரையில் ஆராய்ச்சி செய்த அறிவு நூல்களிலும் பார்க்கக் காணலாம்.

திராவிடர் இந்துக்களா?

அவை எப்படியோ இருக்கட்டும். நாம் இன்று அம்மாதிரியான ஆராய்ச்சியில் புகவில்லை. ஆனால் திராவிட மக்கள் பிறவியில் சாதி பேதத்தையும், பல கடவுள் களையும், உருவ வழிபாட்டையும் கொண்ட `இந்து’ மதத்தில் சேர்ந்தவர்கள் ஆவார்களா என்பதே நமது பிரச்சினையாகும்.

திராவிட நாட்டில் உள்ள வைணவர்கள் “நாங்கள் ஆரியக்கடவுளை வணங்குகிறவர்கள் அல்ல, திராவிடக் கடவுளாகிய திருமாலை வணங்குகிறவர்கள் என்றும், திராவிடக்கடவுளாகிய சிவனை வணங்குகிறவர்கள்” என்றும் மற்றும் சிலர் “நாங்கள் சிவனையும் திருமா லையும் கூட வணங்குகிறவர்கள் அல்ல, முருகன் என்கின்ற இயற்கை அழகையும் இளமையையும் வலிவையும் குணமாகக் கொண்ட இயற்கையை வணங்கு கிறவர்கள் என்றும், சிலர் “எந்த குணத்தையும் குறியாய்க் கொண்டு வணங்குகிறவர் அல்ல ‘கந்தழி’ என்கின்ற உருவகம் குணம் இல்லாத தூய்மையின் தன்மையை வணங்குகிறவர்கள்” என்றும் பல மாதிரி நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை, ஏன் அவர்களுக்குமே சிலருக்குப் புரிந்திராத விஷயங்களை அந்தந்தச் சமயத்தவர்களிலேயே ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக வாயில் சொல்லலாம்:

ஆனால், திராவிடத்தில் உள்ள மக்களில் கடவுள் வழிபாடுடையவர்களான பெரும்பான்மையோரும் தங்கள் வழிபாட்டை எப்படி நடத்துகிறார்கள் என்பதி லிருந்துதான் திராவிடர்கள் திராவிட சமயத்தவராய், திராவிடத் தத்துவ கடவுள் வழிபாடுடையவர்களாய், அதற்கு ஏற்ற ஆதார நூல்களுடையவர்களாய் இருக்கிறார்களா என்று பார்க்க ஆசைப்படுகிறோம். இன்று பிரத்தியட்சத்தில் வைணவர்கள், சைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளையும் அவைகளுக்கு ஆரியக் கற்பனைப்படி உருவமும் குணமும், பெண்டு பிள்ளை வாழ்க்கைத் தன்மைகளுடன்தான் வணங்கி வருகிறார்கள். ஆனால், விவகாரம் வரும்போது காந்தியார் பேசுவதுபோல் - அதாவது, எப்படி “என் வருணாச்சிரமம் வேறு” “என் இராமன் வேறு” “என் இந்து மதம் வேறு” என்று சொல்லி தப்பித்துக் கொண்டு காரியத்தில் மனுதர்ம வருணாச்சிரமத்தையும், இராமாயண இராமனையும், ஆரிய மேன்மைக்கு உரித்தான இந்து மதத்தையும் நிலைநிறுத்தத்தக்க வண்ணமே நடந்து வருகிறாரோ அது போல், ஆரியக் கற்பனையான பிரமா, விஷ்ணு சிவன்களைத் தான் திராவிடர்கள் சேர்ந்தோ தனித்தோ வணங்கி வருகிறார்கள். திராவிடர்களை ஆரியர்களுக்கு அடிமை யாக ஆக்கி அவர்களிடமிருந்து தப்பித்து வரமுடியாதபடி திராவிடர்களைப் பிணைத்திருப்பது இந்து மதத்தைவிட இந்துமத ஆரியக் கடவுள்களேயாகும்.

நம் பண்டிதர்கள்

நம் பண்டிதர்கள் பெரும்பாலும் கடவுள் சமயம் ஆகியவற்றில் பண்டிதர்களாக இருக்கிறார்களே ஒழிய பொது அறிவியல், இயற்கை அறிவில், இயற்கை சக்தியில் பாண்டித்யம் பெற்ற பண்டிதர்கள் வெகு அருமையாய் இருக்கிறார்கள். ஆரியக் கடவுள்களுக்கும் சமயத்திற்கும் ஆக்கம் அளித்து திராவிடர்களை ஆரியர்க்கடிமையாக்கிய வர்கள் நம் சைவ, வைணவ சமயப் பண்டிதர்கள்தான் என்றால் அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக் கிறோம். ஏனெனில் ஆரியக் கடவுள்கள் சம்பந்தமான திராவிட பாஷை நூல்கள் எல்லாம் உண்டாக்கியவர்கள். பரப்பினவர்கள், பிரசாரம் செய்தவர்கள், இன்றும் செய்பவர்கள் நம் பண்டிதர்களேயாவார்கள்.

திராவிட மக்கள் 100க்கு 95 பேர்கள் கல்வி அறிவில்லா தவர்கள்-எழுத்து வாசனை அற்றவர்களாக ஆக்கப்பட்டி ருக்கிறார்கள். இவர்களிடம் சமயத்தையும் கடவுளையும் பற்றிப் பேசும்போதும் இவர்கள் அறியும்படி சமயக்கதை கள், சமயப் பெரியார்கள் கதைகள், கடவுள் கதைகள் எழுதிப் பிரசங்கம் செய்தால்தான் - கடவுளுக்கு பெண்டு பிள்ளை வைப்பாட்டி கற்பித்து சாதம் நகை படைத்து கல்யாணம் உற்சவம், பூசை, அபிஷேகம் ஆகியவைகள் செய்தும் காட்டினால்தான் புரியும் என்று சொன்னால், இது அறிவுள்ள அல்லது திராவிட இரத்தக் கலப்பில்லாத, தனித் தமிழ் மகன் கூற்று என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கவேண்டி இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு ஒரு சமயம் இருக்கிறது கடவுளும் இருக்கிறது. அந்த முஸ்லிம்களும் 100-க்கு சுமார் 90 பேர்கள் எழுத்து வாசனை இல்லாதவர்களாக இருக்கிறார் கள். இவர்களுக்கு சமய உணர்ச்சியும் கடவுளுணர்ச்சியும் வருவதற்கு இப்படித்தான் செய்கிறார்களா? அப்படிச் செய்யாததால் அவர்களுக்கு கடவுள் உணர்ச்சியும் மத உணர்ச்சியும், மனிதத்தன்மை உணர்ச்சியும் இல்லை என்று யாராவது சொல்லக்கூடுமா? இப்போதைய உணர்ச்சி முஸ்லிம்கள் பெற்றதற்குக் கடவுளுக்கு பெண்டுபிள்ளை, வைப்பாட்டி, சோறு, சாறு, அபிஷேகம், கல்யாணம், உற்சவம் செய்தும் அது சம்பந்தமான கதை கள் எழுதிப்படிக்கச் செய்தும்தான் அவர்கள் உணர்ச்சி பெற்றார்களா? என்பதை யோசித்தால் அப்படிச் சொல்லு கிறவர்கள் எண்ணம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்பது விளங்காமல் போகாது.

ஆரியர்களிடமிருந்தும், அவர்களுக்கு அனுகூலமானதும் நமக்குக் கேடானதுமான அவர்களுடைய சமயம், கடவுள்கள் ஆகியவைகளிடமிருந்தும் திராவிட மக்கள் பிரிக்கப்பட்டால் ஒழிய ஆரியர்களுக்கு அடி மைப்பட்ட திராவிடர்களது மானமும் அறிவும் ஆத்மார்த் தப் போலி உணர்ச்சியும் விடுபடாதென்ற காரணத்திற் காகவே இவைகளைக் கூறுகிறோம்.

ஆகையால்தான் சைவ வைணவப் பண்டிதர்கள் தங்கள் சுயநலத்தையே பிரதானமாகப் பாராமல் மக்கள் நலத்தைச் சிறிதாவது கருதிப் பாமர மக்களின் அறிவின்மை யையும் மூடப்பக்தியையும் போக்க முயலவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம். தங்களின் குரங்குப்பிடியான, ‘சமயம் போனால் பண்டிதத் தன்மையே போய்விடும்’ என்றும் வாழ்க்கை போய்விடும் என்றும் சிலர் பயப்படு கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இது இப்பண்டிதர்களின் பாமரத் தன்மையேயாகும். ஷேக்ஸ்பியரும், ஷெல்லியும், பர்னாட்ஷாவும், வெல்சும், வில்சனும் புராணங்களுக்குப் பொழிப்புரையும் கருத்து ரையும் புதுஉரையும் எழுதித்தானா வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்-உலகில் விளம்பரமானார்கள்- என்பதையே சிந்தித்துப் பார்க்க இப்பண்டிதர்களை வேண்டுகிறோம். ஏன் நாம் இப்படிச் சொல்லுகிறோம் என்றால் திராவிடர் களை ஆரியருக்கு அடிமையாக்கினதில் நம் பண்டிதர் களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. இப்போது அவர்களை மீட்க வேண்டிய பொறுப்பும் சக்தியும் நம் பண்டிதர்களிடம் தான் இருக்கிறது என்பதை நாம் உணருவதாலேயாகும். மற்றொருபுறம் அது முடியவில்லையானால் ஆரியர்களுட னும் அவர்களது ஆயுதங்களுடனும் போராடுவது போலவே இப்பண்டிதர்களுடனும், போராட வேண்டிய தொல்லை யும் ஏற்பட்டுவிடுமே என்கிற பயத்தினாலேயுமாகும்.

ஆகவே, பண்டிதர்கள் திராவிடர்களுடைய சமயம் இன்னது, அவர்களுடைய கடவுள் இன்னது, அவற்றின் கோட்பாடு இன்னது என்று துலக்கமாக வரையறுத்துவிட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம். அதற்கு ஏற்ற கலைகளையே உற்பத்தி செய்ய வேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறோம். இது விஷயமாகப் பல திராவிடப் பண்டிதர்கள் நம் கருத்துக்கு அனுகூலமாகச் சொல்லி இருக்கும் பல அபிப்பிராயங்கள் இருக்கின்றன என்றாலும் அவைகளைச் சமயம் வரும்போது வெளிப் படுத்திக்கொள்ளுகிறோம். இன்றைய சமய ஆசையெல் லாம் நாம் பரிசுத்தமாக ஆரியர்கள் சமய கடவுள்கள் அவற்றின் கொள்கைகள் ஆகியவற்றிலிருந்து பிரிந்து கொள்ளவேண்டும் என்பதே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்பதைப் பண்டிதர்கள் நம்பவேண்டுமென்று மறுபடியும் வேண்டிக் கொள்கிறோம்.

அரசியலில் நமது நாடு ஆரியர்களிடமிருந்து பிரிந்து கொள்ள பிரிட்டிஷார் தயவு எப்படி வேண்டி இருக்கிறதோ அப்படியே சமயம், கடவுள், சமுதாயம் ஆகியவைகளிலும் நமது நாடு ஆரியர்களிடம் இருந்து பிரிந்துகொள்ள நம் பண்டிதர்களுடைய தயவு வேண்டி இருக்கிறது.

நிற்க, திராவிடர் பூரண விடுதலை அடைகிறவரை மானமே மதமாகவும், அறிவே கடவுளாகவும், அதற்கு ஆன ஆராய்ச்சியே பிரார்த்தனையாகவும் இருக்க வேண்டும்.

பிறகு, எந்தச் சமயமானாலும் எந்தக் கடவுளானாலும் எப்படிப்பட்ட பிரார்த்தனையானாலும் வைத்துக் கொள்ள லாம்; அவை திராவிடனை ஒன்றும் செய்துவிடாது.

வியாதியஸ்தனாக, ஜெயில்கைதியாக, கவிழப் போகும் இரயிலில் பிரயாணக்காரனாக, முழுகப்போகும் கப்பலில் பயணக்காரனாக, சண்டையில் போர் வீரனாக இருக்கிற காலங்களில் எப்படிச் சிற்சில நித்தியவாடிக் கைகளையும் பற்றுக்கோடான எண்ணங்களையும், சில ஆச்சார அனுஷ்டானங்கனையும் இலட்சியம் செய்யா மலும் ஒத்திவைத்தும் நடந்து கொள்கிறோமோ அதுபோல் திராவிடமும் திராவிடரும் விடுதலை பெறுகிறவரை அவைகளில் சிலவற்றை ஒத்திவைத்து அல்லது சிறிது தளர்த்தி விட்டு விடுதலையில் கவலை கொள்ள வேண்டு மென்று முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்பட எல்லா திராவிட மக்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

மற்ற சமயக்காரர்

கிறித்தவ சமய உணர்ச்சியையும் முஸ்லிம்கள் சமய உணர்ச்சியையும் பார்த்தாவது திராவிடர்கள் நடந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ சமய உணர்ச்சி கிறித்தவர்களை இன்று உலகப் பார்வை யில் எவ்வளவு உயர்நிலையை அடையச் செய்திருக் கிறது! அதுபோலவே இஸ்லாமியர்களை அவர்களது சமய உணர்ச்சி உலகத்திற்கு முன்பு எவ்வளவு மேன்மை நிலையை அடையச் செய்திருக்கிறது! ஜப்பானியர்களின் சமய உணர்ச்சி உலகத்தின் முன்பு அவர்களை எவ்வளவு மேல் நிலையை அடையச் செய்திருக்கிறது என்பவைகளை திராவிட மக்களில் பண்டிதர்களும் பாமரர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களது சமயங்களை இச்சமூகத்தார் எழுத்து, கமா, புள்ளி தவறாமல் பின்பற்றி இருந்தால் இவர்களும் திராவிடர் களைவிட மிகக் கேவலமான நிலையில்தான் இருந்திருப் பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டார் - சமூகத்தார் மானத்தோடும் மேன்மையாயும் மற்றவர்க்கு எவ்விதத்திலும் அடிமைகளாய், எத்துறையி லும் தாழ்மையாய் இல்லாமலும் வாழவேண்டும் என்பதையே சமயமாய்க் கொண்டு மற்றதையெல்லாம் கொஞ்சம் தியாகம் செய்து முயற்சித்து வந்திருக்கிறார்கள். அதனாலேயே இன்று அவர்கள் தனித் தனி மானமுள்ள  சமூகமாக சுதந்திரர்களாக வாழுகிறார்கள்.

எல்லோரும் கிறிஸ்தவர்களாகவே வாழும் மேல் நாட்டில் பைபிளுக்கு கருத்துரையும் புது வியாக்கியானமும் எழுதிக்கொண்டு அதன்படியேதான் நடந்துதீர வேண்டும் என்று கிறிஸ்தவப் பண்டிதர்களோ பாதிரிமார்களோ செய்து வந்திருப்பார்களேயானால் இன்று கிறிஸ்தவர் களில் ஒருவருக்காவது வாயில் பற்களே இருந்திருக்காது. இடுப்பில் துணியே இருந்திருக்காது. ஏனெனில் அவர் களது சமயம் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை யும் திருப்பிக் காட்டச் சொல்லுகிறது. மேல் வேஷ்டியை கேட்டால் இடுப்பு வேஷ்டியையும் அவிழ்த்துக் கொடுக்கச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட சமயக்காரர்கள் இன்று அவரவர்கள் நாட்டையும் அன்னியர் நாட்டையும் ஆளு கிறார்கள். உலக நாகரிகத்துக்கும் அற்புதங்களைக் கண்டுபிடிப் பதற்கும் வழிகாட்டிகளாய், வாத்தியார்களாய் இருக்கிறார்கள். மேல்நாட்டில் நித்திய வாழ்க்கையில், வாழ்க்கை நடவடிக்கையில் சிறிதுகூட சங்கடமோ தாட்சணியமோ மனக்கசப்போ ஏற்படுவதற்கு இல்லாத மாதிரியில் திட்டங்கள் வகுத்துக்கொண்டு சுதந்தர வாழ்க்கை வாழ்கின்றார்கள். வாழ்க்கையின் சகல படிகளுக்கும் திட்டம் வகுத்து கடிகாரம் நடப்பதுபோல் நடந்து கொள்ளுகிறார்கள்.

அதுபோலவே இஸ்லாமியரும் குரானுக்கு வியாக்கி யானம் செய்து கொண்டு தாடி எத்தனை அங்குலம், தலைமயிர் எப்படி, குல்லா எப்படி, சட்டை எப்படி என்பதைத் துருவிக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு எப்பிடியிருந்தால் மனிதனாக வாழலாம் என்பதில் கவலைகொண்டு துருக்கி, ஆப்கானிஸ்தானம், பர்ஷியா ஈஜிப்ட் முதலிய நாடுகள் மற்ற சமூகத்திற்கு அடிமையாகாமல் நாடு வாரியாய்ச் சுதந்தரத்தோடு வாழுகிறார்கள். இந்தியாவிலும் ஒரு “தாடி இல்லாத இஸ்லாமே” தலைவராய் இருந்து தாங்கள் மைனாரிட்டியென்று சொல்லிக் கொள்ளக் கூடிய பயம் இல்லாமல் சுதந்தரத்தோடு தன் மானத்தோடு வாழ நிபந்தனை விதிக்க மற்றவர்கள் திகைக்கச் செய்ய வசதியோடு இருக்கிறார்கள்.

அதுபோலவே ஜப்பான்காரரும் திராவிடத்தைவிட சிறிய நாடாயும் திராவிடர்களைவிடக் குறைந்த ஜனத் தொகை கொண்ட சமூகமாகயும் இருந்தும் இன்று தனி அரசாங்க உலக வல்லரசுகளில் ஒன்றாக இருந்து கொண்டு தனக்கு நாற்புறமும் அதைவிட 3 பங்கு 4 பங்கு விஸ்தீரணமும் ஜனத்தொகையும் கொண்டதாக உள்ள நாடுகளை விரட்டி நடுக்கிக்கொண்டு சகல துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. ஒருபுறம் 18 கோடி ஜனமும், 81 லட்சம் மைல் விஸ்தீரணமும் கொண்ட ரஷியாவும், மற்றொருபுறம் 12 கோடி ஜனத்தொகை கொண்டு இரண்டு அமெரிக்கா கண்டமும், மற்றொருபுறம் 45 கோடி மக்களுக்கும் பல தேசத்துக்கும் கண்டத்துக்கும் சக்கரவர்த்தியாய் இருக்கும் பிரிட்டனும், தன்னை அடுத்தாற்போல் 45 கோடி ஜனத்தொகையும் பரந்த நாடும் கொண்ட சைனாவும் எதிரிகளாக இருக்க சிறிதும் பயமில்லாமல் தலை நிமிர்ந்து நடக்கிறது; தற்காப்பில் வல்லரசாய் இருக்கிறது. இப்படிப்பட்ட இந்த நாடு தங்கள் சமயமாகிய புத்தர் சொன்ன அஹிம்சையைப் பிடித்துக் கொண்டு ஜாதகக் கதைகளுக்குப் புது உரை எழுதிக் கொண்டு சின்னத்தோடு இருந்திருக்குமானால் அதன் கதி என்னவாயிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. அப்படி இருக்க திராவிடம் இவைகளைப் பார்த்துப் படிக்க வேண்டியவைகளைப் படித்துக்கொள்ள வேண்டாமா என்று யோசித்துப் பார்க்கும்படி மறுபடியும் பண்டிதர்களையும் பாமர மக்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம். இம்மாதிரியான ஒரு திராவிடர், ஆரியர் உணர்ச்சி என்று ஒன்று ஏற்பட்டிருக்கவில்லையானால் இப் பண்டிதர்கள் கதிதான் என்னாகி இருக்கும் என்பதையும் தயவு செய்து சிறிது சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொண்டு இதை முடிக்கிறோம்.

இனி அடுத்த தலையகத்தில் ஆரியர் சமயம் என்பது பற்றி விளக்குவோம்.

(விடுதலை : 24-11-1939)

- தொடரும்