நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலவர் முதுபெரும் தோழர் ஆர்.இராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்டு இருக்கும் பேரிழப்பு ஆர்.பி.எஸ். என அன்போடு அழைக்கப்படும் மூத்த தோழர் ஆர்.பார்த்தசாரதி அவர்களின் இழப்பு. என்.சி.பி.எச். நிறுவன வெளியீட்டுத் துறையின் மூளையாகச் செயல் பட்ட அந்தப் பேரறிஞரின் நினைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.

இந்தியத் தத்துவ ஞானங்களில், குறிப்பாகத் தமிழ்த் தத்துவ மரபுகளில் ஆழம் கண்ட பெரும் படைப்பாளி ஆர்.பி.எஸ். மார்க்சிய ஞானத்திலும் தேர்ச்சி மிக்கவர் அவர். இந்தப் பேரறிவுகளை ஆயுதங்களாகக் கொண்டு, அவற்றின் கூட்டு வெளிச்சத்தில் என்.சி.பி.எச். நிறுவனத்தில் வெளியிடப்படுவதற்காக வந்து குவியும். ஆயிரமாயிரம் நூல்களில் வெளியிடத் தக்கவைகளைக் கவனமாகப் பொறுக்கியெடுத்து, பதிப்புரை எழுதிச் சிறப்பித்து வந்த பதிப்புலக மேதை அவர். அதிரப் பேசாத, அதிகம் பேசாத மிகப் பெரும் செயல் வீரர். அவருடைய படைப்புத் திறனுக்கு நம்முடைய வெளியீடுகளே வாழும் சாட்சிகள்.

அறிவு வளம் மிக்க சூழலில் பிறந்து வளர்ந்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஆகி, தொழிற்சங்கத்தின் மூலமாக மார்க்சிய தத்துவச் செழுமையும், தொழிற் சங்கப் போராட்ட வலிமையும் பெற்று, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு வந்தவர் ஆர்.பி.எஸ். விசாலமான படிப்பாளி அவர். ஆழமான நூல்கள் பல தரத்தக்க அறிவு வளமும் அனுபவ வளமும் பெற்றவர் அவர். அந்த ஆற்றல்கள் முழுவதையும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீட்டு வளர்ச்சிக்குச் செலவிட்டவர். ஓரிரு ஆண்டுகளின் முன்னே உடல் நலம் கெட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு வர இயலாமல் போனபோது, அவர் பட்ட துயரமும் அவர் வர இயலாமையால் நிறுவனம் பட்ட சிரமமும் இன்று நினைத்தாலும் நெஞ்சு கலங்குகிறது. அந்தச் சிரமங்களை வெளியீட்டுத் துறைப் பொறுப்பாளர் இரா.சாரதா அவர்கள் சொல்லக் கேட்டு நொந்திருக்கிறேன். நிரந்தரமாக அவர் நம்மிடம் இருந்து விடை பெற்றுக் கொண்ட இன்றைய சூழ்நிலையில், அந்தப் பணிகளை யாரைக் கொண்டு நிறைவேற்றுவது? இப்படிப்பட்ட ஒரு பல்துறைச் சிந்தனையாளர், சீர்தூக்கி முடிவெடுக்கும் நடுநிலையாளர், எந்தப் பலனையும் எதிர்பாராத உழைப்புத் தியாகி, எந்த நேரமும் நமக்குப் பயன் படும் கற்பகத்தரு, எல்லா விமர்சனங்களுக்கும் புன்முறுவலோடு செவி கொடுக்கும் நயத்தகு நாகரிகர் இனி நமக்குக் கிடைப்பாரா?

நல் இலக்கிய இதழுக்கு ஈடாக, “உங்கள் நூலகம்” என்னும் நல்நூல் அறிமுக ஏட்டினைக் கனமாகவும் கவர்ச்சியாகவும் வீரியமாகவும் உருவாக்கி விரிவுபடுத்தியிருக்கிறாரே, அத்தகு படைப்பாற்றல் மிக்க தோழர் லேசில் கிடைப்பாரா?

மெலிந்த உருவம்

குறைந்த சொற்கள்

பரந்த பார்வை

விரிந்த அனுபவம்

திறந்த மனசு

நிறைந்த உழைப்பு

ஆர்.பி.எஸ். அவர்களே!

என்றென்றும்

தமிழ் அறிவுலகில்

சிறந்து நிற்கிறீர்கள் - நீங்கள்.

புரந்தூட்டும்

அறிவு நதியாக

Pin It