குறிப்பிடத்தக்க இரண்டு பயணங்களை இலங்கை அதிபர்மகிந்த ராஜபக்சே சமீபத்தில் மேற்கொண்டிருந்தார். முதல் பயணம் புத்தர் பிறந்த நேபாளத்தை நோக்கி- அது “புனிதப் பயணம்”. இரண்டாவது பயணம் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு - இது “சாமி தரிசனம்”. இங்கே ஒரு முரண்பாடு தெரிகிறது.

நேபாளத்தில் பிறந்த புத்தர் ஆரியத்திற்கு எதிரானவர், இந்து மதங்களையும் கடவுள்களையும் அதன் சடங்கு சம்பிரதாய ஐதீக நெறிகளையும் தகர்த்து எறிந்தவர். சமூக எழுச்சிக்காக அவரால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவுச் சிந்தனைகளையும், மனிதநேய உணர்வுகளையும் “தம்மம்” என்று சொன்னவர். அதை பவுத்தம் என்றோ மதம் என்றோ சொல்லாதவர் புத்தர். அவர் மனிதனையும் மனித நேயத்தையும் மதித்துப் போற்றியவர்.

இவைகளுக்கு நேர் எதிராக,தான் பவுத்த மதத்தைச் சேர்ந்தவன் என்றும், சடங்கு சம்பிரதாய ஐதிக நெறிகளை மேற்கொண்டும், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இந்துத்துவ சிந்தனைகளோடும், இந்து கோயிலின் பூரண கும்ப மரியாதையை பக்தியோடு ஏற்றுக் கொண்டும் போலி பவுத்தனாக இருப்பவர் ராஜபக்சே. குறிப்பிட்டுச் சொன்னால், அடிமைப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகப் போர்க்குரல் எழுப்பியவர் புத்தர். ஆனால் சுதந்திரமாக இருந்த தமிழ்மக்களை அடிமைப்படுத்த முயற்சி செய்து, போர்க்களத்தில் அவர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சே!

மனிதனையும் மனித நேயத்தையும் வளர்த்தவர் புத்தர். ஆனால் பாதுகாப்பு முகாம் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் தமிழர்களை மனிதநேயமில்லாமல் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் இரக்கமற்ற மனிதன் ராஜபக்சே! புத்தருக்கு எல்லா மனிதர்களைப் பற்றிப் பேசவும் உரிமை உண்டு. ஆனால் புத்தரைப் பற்றிப் பேசும் அருகதை அற்றவர் ராஜபக்சே!

கி.மு.483 ஆம் ஆண்டில் இயற்கையாக மரணம் அடைந்தார் புத்தர். ஆனால் அதற்குப்பின் 2492 ஆண்டுகள் நகர்ந்து 2009 இல் ஈழ மண்ணில் புத்தரைக் கொலை செய்த ராஜபக்சேவின் நேபாளப் பயணம் புனிதப் பயணம் அல்ல; அது, புத்தர் பிறந்த மண்ணில், தமிழர் இரத்தம் தடவச் சென்ற பயணம்.

தான் செய்த போர்க்கொடுமைகளை மறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க வேண்டும், அதற்கு உலக நாடுகளை ஏய்க்க, தான் ஒரு அகிம்சாவாதி போலவும், தான் ஒரு பவுத்தன் போலவும் கபட நாடகத்தை அரங்கேற்றும் பயணம்தான் ராஜபக்சேவின் நேபாளப் புனிதப் பயணம். அந்த மனிதனுக்குத் தெரியவில்லை புத்தர் இப்போது நேபாளத்தில் இல்லை, ஈழத்தில் முள்வேலியில் போய் அழுது கொண்டிருக்கிறார் என்று! சரி!

அடுத்த பயணம் திருப்பதி “ஏடுகுண்டலவாடா”விடம் “சாமிதரிசனம்”.

திருப்பதி இந்து மதக் கோயில். ஒரு வைணவ மதக்கோயில். பவுத்தத்தை நிராகரித்த ஐதீக சடங்குகளுடன் ஆறுகாலப்பூசை நடக்குமிடம் திருப்பதி. அக்கோயிலுக்குள் இந்து அல்லாத பிறமதத்தவர்களை உள்ளே அனுமதிக்காத இந்து தர்மச்சட்டம், பவுத்தனான ராஜபக்சேவை எப்படி அனுமதித்தது? எப்படி பூரண கும்ப மரியாதையை அந்த மனிதனுக்குக் கொடுத்தார்கள் கோயில் பூசாரிகள்? அப்படியானால் ராஜபக்சே பவுத்தனா? அல்லது இந்துவா? சற்று முன்னோக்கிய காலத்திற்குப் போனால் இதற்கு விடை கிடைக்கும்!

புத்தர் மறைந்து 103 ஆம் ஆண்டில் (கி.மு 380) காலாசோக என்ற மன்னன் ஆட்சியில், மகாவன விகார உபதேச மண்டபத்தில் கூடிய இரண்டாம் பவுத்த மகாசபையில், பவுத்தத்தை இரண்டாகப் பிளந்தார்கள் வஜ்ஜியர்கள் என்று அழைக்கப்படும் ஆரியப் பார்ப்பனர்கள்.

காரணம் புத்தர் திராவிடர். அவர் சொன்ன திராவிட பவுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை பார்ப்பனர்களால். எனவே பவுத்தத்தை இரண்டு கூறாகப் பிளந்தார்கள். அப்படிப் பிளந்து, பிரிந்து சென்ற பார்ப்பனர்கள் தனியாக ஓர் பவுத்த அமைப்பை உருவாக்கினார்கள். அதன் பெயர் மகா சாங்கியம். பின்னர் கி.மு. முதலாம் நூற்றாண்டில், ஆந்திரத்தில் ஸ்ரீபர்வதத்தில் நாகார்ச்சுனர் என்ற பார்ப்பனரால் உருவாக்கப்பட்ட மகாயாணம் என்ற பவுத்தப் பிரிவில் மகா சாங்கியம் மற்றும் அதன் வளர்ச்சிப் பிரிவுகள் ஒன்று கலந்தன.

இந்த மகாயாண பவுத்தத்தின் கோட்பாடு விளக்கத்தை “ஆச்சாரிய வாதம்” என்று அழைத்தார்கள். ஆச்சாரியர்கள் பார்ப்பனர்கள். மகாயாண பவுத்தப் பிரிவும் பார்ப்பன ஆரிய பவுத்தமாக உருமாறிவிட்டது. இந்த மகாயாண ஆரிய பவுத்தன் ராஜபக்சே இந்திய வம்சாவளி பார்ப்பனப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்களம் என்றால் ஆரியம் ; சிங்களர் என்றால் பார்ப்பனர் என்பதே பொருள். இதற்கான ஆதாரம் அவர்களுடைய புனித நூலாகவும், இலங்கை அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நூலாகவும் இருக்கின்ற மகாவம்சத்தில் தெளிவாக இருக்கிறது.

மகாவம்சம் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் இலங்கை வருகையைப் பற்றிக் கூறுகிறது. இங்கிருந்துதான் சிங்கள இனம் தோற்றம் பெறுகிறது.

இந்தியாவின் வங்க நாட்டு அரசனுக்கும், ஒரிசாவின் இளவரசிக்கும் ஒரு மகள் பிறக்கிறாள். அவள் ஒரு சிங்கத்தை உடலுறவுப் புணர்ச்சி செய்கிறாள். அதனால் அந்தச் சிங்கத்திற்கும் அவளுக்குமான ஒரு மகளையும் ஒரு மகனையும் பெற்றெடுக்கிறாள். மகன் சிங்கத்தின் உருவமாகவும் மனிதனின் சாயலுடனும் பிறக்கிறான். அவன்பெயர் சிகபாகு. அவனுடன் பிறந்த தங்கை சிகசீலி.

அண்ணன் சிகபாகு, தங்கை சிகசீலி ஆகிய இந்த உடன்பிறந்தவர்கள் கணவன் மனைவியாகி இவர்களுக்கு 32 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களில் மூத்தவன்தான் விஜயன்.

விஜயன் ஒழுக்கக் கேடு கொண்ட கெட்டநடத்தை உடையவன். அதனால் வங்க நாட்டு அரசன், ஒரிசாவில் இருந்து விஜயனையும் மேலும் சிலரையும் கப்பல் ஏற்றி நாடு கடத்தி விடுகிறான். அக்கப்பல் வந்து சேரும் இடம் இலங்கை புத்தளத்திற்கு அருகில் உள்ள தம்பபண்ணி என்ற இடத்தில். இலங்கை வந்த விஜயன் இலங்கையின் பூர்வகுடிப் பெண் குவெய்னியை மணக்கிறான். அவனுடன் வந்தவர்களும் இவ்விதம் மணம் செய்கிறார்கள். இதன்வழி வளர்ந்த இனமே சிங்கள் இனம் என்கிறது மகாவம்சம்.

விஜயனின் அப்பா சிகபாகு ஒரு (பெண்ணுக்கும்) சிங்கத்திற்கும் பிறந்தவன் என்பதால், தந்தை வழியில் சிங்க என்ற சொல்லும், விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம்(தம்பபண்ணி) புத்தளம் என்பதால் (புத்)அளம் என்ற சொல்லும் இணைந்து சிங்களம் ஆகி, இனமாக மாறிவிட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய செய்தி, விஜயனின் பாட்டனான வங்க அரசனும், பாட்டியான வங்க அரசியும், அவன் தாயும் ஆரியர்கள் என்பதுதான். (தந்தை ஒரு மிருகம் விட்டுத் தள்ளுங்கள் -ராஜபக்சேவைப் பார்க்க வில்லையா?) ஆகவே வங்க - ஒரிசா நாட்டுப் பாரப்பனர்களின் வழித் தோன்றிய இனமே சிங்கள இனம். இதை ஆரியச் சிங்களம் என்றால் சரியாக இருக்கும்.

ஆரியர்கள் திராவிடர்களுக்கு எதிரானவர்கள். ஆரியச் சிங்களரும் ஈழத் தமிழ்த் திராவிடர்களுக்கு எதிரானவர்கள். இந்த தமிழர் மீதான எதிர்ப்பை கி. பி. 6 ஆம் நூற்றாண்டு முதலே துட்டகாமினி என்ற இலங்கை பார்ப்பனச் சிங்கள மன்னன் காலத்திலிருந்தே விதைக்கத் தொடங்கிவிட்டார்கள். இதையும் சொல்வது அவர்களின் மகாவம்சம்தான். அதன் உச்சகட்டம்தான் புலிகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் குத்திக் குலைசாய்த்து விட்டான் ராஜபக்சே!

உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நின்றுகொண்டிருக்கும் ராஜபக்சே, தன்னைக் காத்தருள வேண்டித்தான் இந்துமரபுப்படி பூரணகும்ப மரியாதையை ஏற்று திருப்பதிக்கு வந்தார் என்றால், அவர் பவுத்தனாக வரவில்லை, பார்ப்பன பவுத்தனாக, பவுத்த இந்துவாகவே வந்துள்ளார்.

ஏன் திருப்பதியைத் தேர்ந்தெடுத்தார் ராஜபக்சே? அங்கேயும் அவரது இன உணர்வுதான் மேலோங்குகிறது. திருப்பதியின் மதம் வைணவம். கடவுள் விஷ்ணு. விஷ்ணு 10 அவதாரங்கள் எடுத்துள்ளார். கி. பி. 6ஆம் நூற்றாண்டு மச்சபுராணம்; மச்சாவதாரம்- கூர்மாவதாரம்- வராகவதாரம்- நரசிம்மாவதாரம்- வாமனா அவதாரம்- இராமாவதாரம்- பலராமனவதாரம் - கிருஷ்ணாவதாரம்-புத்தாவதாரம்- கல்கி அவதாரம் என்று 10 அவதாரங்களையும் பட்டியலிடுகிறது.

நமது கேள்வி, அப்படியானால் பரசுராம அவதாரம் எங்கே? என்ன ஆனது? அதையும் சேர்த்தால் 11 அவதாரங்கள் ஆகிறதே! உண்மையைச் சொன்னால் இந்துமதம் ஒரு தகிடுதத்த வேலையைச் செய்துள்ளது இங்கே. புத்தரை இந்து கடவுளாக மாற்றும் முயற்சியாக, புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக நுழைத்துவிட்டது. தேவைப்படும்போது புத்தரை விரட்டிவிட்டு பரசுராமனைச் சேர்த்துக் கொள்ளும் இந்துமதம்.

இந்த அடிப்படையில்தான் பார்ப்பன ஆச்சாரிய பவுத்தனான ராஜபக்சே, அவரது ஆரிய(வங்க) மூல மரபுப்படி, ஆரிய கடவுளான விஷ்ணு வீற்றிருக்கும் திருப்பதிக்கு வந்தது.

திருப்பதி “அவாள்கள்”, ஸ்ரீலங்கா “இவாளுக்குப்” பூரணகும்ப மரியாதை அளித்ததன் திருப்பதி ரகசியம் இதுதான் - புரிகிறதா?

Pin It