பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப் புத்தூருக்கு அருகேயுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை-சொர்ணத்தம்மாள் இணையருக்கு 1925ஆம் ஆண்டு சூலை மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் குன்றக்குடி அடிகளார். அவரது இயற்பெயர் அரங்கநாதன்.

 kundrakudi adikalar1952ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டுவரை குன்றக்குடி மடத்தின் தலைமை ஆதினமாக இருந்தவர். ஆன்மீகவாதியாக இருந்தாலும்கூட சமூக-சமத்துவத் தளங்களில் தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டாற்றிய பெருமையும் குன்றக்குடி அடிகளாருக்கு உண்டு. பெரியாரின் நாத்திகக் கருத்துகளோடு ஏராளமான முரண்பாடுகள் இருந்தாலும், ஜாதி ஒழிப்புக் கருத்துகளுக்கு இசைந்து பெரியாரோடு அந்தப் புள்ளியில் இணைந்தவர் குன்றக்குடி அடிகளார். சன்னிதானங்கள் பவனி வர பயன்படுத்தி வந்த பல்லக்கை தான் ஆதீனமாகப் பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே தவிர்த்தது போன்ற எண்ணற்ற சீர்திருத்த சிந்தனைகளையும் தன்னகத்தே அவர் கொண்டிருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலில் வழிபாட்டுக்கு அனுமதிப்பது; சமசுகிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு நடத்துவது; கோவில்களில் அர்ச்சகர்கள் பின்பற்றி வந்த ஜாதிய கட்டுப்பாடுகளை ஒழிக்க பாடுபட்டது என்று காவி உடை தரித்த சமூக நீதி காத்த காவலராகத் திகழ்ந்து இந்த தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றியவர் அடிகளார். பகுத்தறிவுவாதியும், தீவிர கடவுள் மறுப்பாளருமான தந்தை பெரியார் மற்றும் பழுத்த ஆன்மீகவாதியான குன்றக்குடி அடிகளார் இடையே நெருக்கமான நட்புணர்வு இருந்தது. ஜாதி ஒழிப்புக் களத்தில் இருவரும் இணைந்தும் பணியாற்றினர்.

1954ஆம் ஆண்டில் தமிழறிஞர்களின் ஏற்பாட்டின்படி, ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் வீட்டில் பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும் ரகசியமாகச் சந்தித்தனர். பல மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு ”பெரியார் பழகிய பாங்கு அவர் பெரியார் என்பதை உறுதிப்படுத்தியது” என குன்றக்குடி அடிகளார் கூறியுள்ளார். அன்றுமுதல் பெரியாரை தலைவர் பெரியார் என்றே அவர் அழைத்து வந்தார்.

ஒரு சமயம் தந்தை பெரியாருடைய பிறந்தநாள் விழா திருச்சி பொன்மலைப்பட்டியில் நடந்தது. அந்த விழாவுக்கு குன்றக்குடி அடிகளார் அழைக்கப்பட்டார். பெரியாருக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டினார் அடிகளார். அன்றைய தினத்தைப் பற்றி இன்றளவிலும் ஒரு தீராத சர்ச்சை நிலவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார் பொன்னாடை போர்த்தியபோது பெரியார் அடிகளாருடைய காலில் விழுந்ததாக சர்ச்சை எழுந்தது. ’சுயமரியாதை ஆன்மிகத்தின் காலில் விழுந்துவிட்டது’ என்று பெரியார் எதிர்ப்பாளர்கள் விமர்சித்தனர். ஆனால் பெரியாரியவாதிகள் இன்றளவிலும் இதனை மறுத்தே வருகின்றனர். இப்படியொரு நிகழ்வு நடந்ததாகக் குன்றக்குடி அடிகளாரும் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. மாறாக அந்த விழா பற்றி அவர் கூறுகையில், “நம்முடைய பேச்சு அவருடைய கொள்கையை மறுக்கின்ற பேச்சாக இருந்தபோதும் தலைவர் பெரியார் அவர்கள் பெருந்தன்மையுடன் யாதொன்றும் கூறவில்லை. அவர் எதுவும் கூறாமைக்குக் காரணம் பண்பாடு காக்கப்பட வேண்டுமென்ற நெறி பற்றியே. ஆயினும் கச்சிதமாக சமுதாயத்தில் நிகழ்கின்ற தீமைக்கு கடவுள் பொறுப்பில்லை என்றால் திருத்தியமைக்க மகா சன்னிதானம் அவர்கள் வழி சொல்ல வேண்டும். மகா சன்னிதானம் சொல்லும் வழியை மற்ற மதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா என்பதையும் அறிந்துகொள்ள ஆசை” என்றுதான் கூறியுள்ளார்.

சைவ, சமய சின்னங்களை அணிந்தபடியே பெரியார் கூட்டிய நாத்திகர் அவைகளிலும், கிறுத்துவ, இசுலாமிய சமய அமைப்புக் கூட்டங்களிலும் சென்று கலந்துகொண்டவர்களில் முதல் சமயத் தொண்டர் குன்றக்குடி அடிகளார்.

1969ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞரின் கோரிக்கையின் பேரில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவியை ஏற்றுக்கொண்டார் அடிகளார். அருள்நெறி திருக்கூட்ட இயக்கத்தின் வளர்ச்சி தமிழினத்தில் இருவேறு பிளவுகளை உண்டாக்கி தமிழின மேம்பாட்டைத் தடுத்து விடுமோ என்ற கருதிய சிலர் அடிகளாரை நோக்கி வர ஆரம்பித்தனர். அந்த சமயத்தில்தான் தமிழக மடங்கள் இணைந்து செயல்பட வேண்டுமென்ற தொடர் வலுயுறுத்தலின்பேரில் அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் பக்தவச்சலத்தின் உதவியோடு தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தொடங்கப்பட்டது. அதன் தலைவராக குன்றக்குடி அடிகளார் பொறுப் பேற்றார்.

கோவில்களில் தமிழ்மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி பல சீரிய முயற்சிகளையும் இவர் மேற்கொண்டார். அதன் பயனாக 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் பக்தவச்சலம் திருமறை தமிழ் அர்ச்சனையைத் தொடங்கி வைத்தார். தமிழுக்குக் கருவறை நுழைவு கிடைத்தது.

அதுமட்டுமின்றி பிறப்பில் வேறுபாடின்றி அனைவருக்கும் பயிற்சி கொடுத்து, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டு மென்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்வதற்கான மசோதாவை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. சட்ட மன்றத்தில் இந்த மசோதாவை எதிர்க்கும் படி காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து குன்றக்குடி அடிகளாருக்கு கோரிக்கை வந்தது. ஆனால் அந்த மசோதாவை எதிர்ப்பதற்குரிய நிலையில் தான் இல்லையென்று துணிவோடு தைரியமாக வெளிப்படுத்தினார் அடிகளார்.

அந்த நிகழ்விலிருந்து தமிழ்நாடு தெய்வீகப் பேரவைக்கும், காமகோடி பீடத் திற்குமான இடைவெளி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. காஞ்சி காமகோடி மடத்தின் சார்பில் பரிசுகள் வழங்குவதற்காக தமிழ்நாடு தெய்வீகப் பேரவையிலிருந்து பணம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு மடம் நடத்தும் போட்டிகளுக்கு பணம் தருவதில்லை என்று அதன் செயலாளர் மறுத்துவிட்டார். இத்தோடு தமிழ்நாடு தெய்வீகப் பேரவையோடு, காஞ்சி காமகோடி பீடம் உறவை முடித்துக்கொண்டது. இவர்களுக்குள் மீண்டும் சிலகாலம் கழித்து புதுப்பிக்கப்பட்ட உறவு இப்போது இல்லை.

பொதுவாக மடத்தில் வசதி படைத்தவர் களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் தனி விருந்து வைப்பதும், சாதாரண மக்களுக்கும், கிராமப்புற விவசாய மக்களுக்கும் இரண்டாந்தர உணவு வழங்குவதும்தான் வழக்கமாக இருந்தது. இதை விரும்பாத அடிகளார் ஒரு புது உத்தியைக் கையாண்டார். ஒருநாள் சிவகங்கை மன்னர் வரப்போகின்றார், மதிய விருந்து தயாரியுங்கள் என்று உத்தரவிட்டார். மடத்தில் உணவு தயாரிப்புக்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தது. சுவையான உணவு தயாரானது. மடத்தின் முகப்புகள் அலங்கரிக்கப்பட்டது. நேரம் நண்பகல் 12 ஆனது. மன்னர் வரவில்லை. ஆனால் விவசாயிகள் சிலர் வந்திருந்தனர். அவர்களை வரவேற்ற அடிகளார், “இவர்கள் தான் சிவகங்கையின் மன்னர்கள், இவர்களை உபசரியுங்கள். இவர்கள்தான் நாட்டின் மன்னர்கள்” என்றார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மடத்தில் எல்லோருக்கும் ஒரே வகையான உணவு மட்டுமே தயாரிக்கப்பட்டு, ஒரே பந்தியில் உணவு பரிமாறப்பட்டது.

1948-49ஆம் ஆண்டில் மாவட்ட கழகங்களுக்கு நடந்த தேர்தலிலும், 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் காமராசரை ஆதரித்து காங்கிரசுக்கு வாக்குகேட்டு பிரச்சாரம் செய்தார். 1967ஆம் ஆண்டு காரைக்குடி திருக்குறள் விழாவுக்கு வந்த அறிஞர் அண்ணாவை மடத்திற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு அண்ணாவும் குன்றக்குடி சென்றிருந்தார். அவருக்கு மடத்தின் மரபுப்படி அப்போது வரவேற்பு அளிக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டில் மொழிப்போராட்டம் நடந்தபோது குன்றக்குடியில் அடிகளார் தலைமையில் அமைதிகாக்கும் ஊர்வலம் நடந்தது. தமிழ் வாழ்க என்பது மட்டுமே இந்த ஊர்வலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனாலும் அரசியல் காரணத்தால் குன்றக்குடி அடிகளார் கைது செய்யப்பட்டு 350 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் பக்தவச்சலம் வழக்கை திரும்பப் பெற்றார். அபராதத்தை செலுத்தி விட்டு வெளியே வந்தார். சிலகாலம் கழித்து அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கு நடவடிக்கைகளை முழுமையாகத் திரும்பப் பெற்றதோடு அடிகளாரிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையையும் திருப்பிக் கொடுக்க ஆணை பிறப்பித்தார்.

1982ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அன்றைய பிரிக்கப்படாத கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு பகுதியில் இந்து, கிறுத்துவ, இசுலாமியர்களுக்கிடையே மதக் கலவரம் வெடித்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் எம்.ஜி.ஆர். இருந்தார். அங்கு சென்று கலவரத்தைக் கட்டுப்படுத்த எண்ணினார் குன்றக்குடி அடிகளார். மண்டைக்காடு பகுதிக்குள் செல்ல அடிகளாருக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. அதையும் மீறி உள்ளே சென்று அங்குள்ள கிறித்துவர்களின் தேவாலயத்தில் அமர்ந்துகொண்டார். அடுத்த நாளே சட்டமன்ற உறுப்பினர் உமாநாத் அங்கு வந்தார். இவர்களையடுத்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும் மண்டைக்காடு வந்தார். அதற்குப் பிறகுதான் மண்டைக்காடு கலவரம் முடிந்து அமைதி உருவானது.

நெருக்கடி காலத்தில்தான் குன்றக்குடி கிராம நலச்சங்கம், கிராம நல திட்டக் குழு தோன்றியது. குன்றக்குடியைப் போல நூற்றுக்கணக்கான கிராமங்கள் தன்னிறைவு உடைய கிராமங்களாக நாடு முழுவதும் உருவாக வேண்டும்; நாட்டை நலிவுறச் செய்யும் வறுமையை எதிர்த்துப் போராடுவதே இனி நமது வாழ்நாள் பணி; ஜாதி, மதச் சண்டைகளால் சமூக உறவுகள் பாதிக்கப்பட்டு நமது கிராமங்கள் பொழிவிழந்து போகாமல் பாதுகாப்பதுதான் நமது பணி என்ற குறிக்கோளோடு களம் இறங்கினார் அடிகளார். அதற்கு தமிழ்நாடு அரசும் போதிய ஆதரவு காட்டியது.

பல கிராமங்கள் இதன் ஏற்புத் திட்டங் களுக்கு கீழ் வந்தன. தொழில் புரட்சிக்கு வித்திடப்பட்டது. நூற்றுக்கணக்கான குடும்பங் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சோசலிச சமுதாய அமைப்புக்கு முதல்படியாக கூட்டுடமைச் சமுதாயம் அமைக்கப்பட்டது. இந்தப் பணியில் ஒரு ஆன்ம திருப்தி இருப்பதாகச் சொல்லி தொடர்ந்து பணியாற்றி வந்த குன்றக்குடி அடிகளாரை பாராட்டி இந்திரா காந்தி பரிசளித்தார். 1985ஆம் ஆண்டில் தன்னிறைவு பெற்ற கிராமமாக குன்றக்குடி உருவானது. நடுவணரசின் திட்டக்குழு ஆலோசகர்கள் நாட்டுக்கே இது ஒரு முன் மாதிரியான பணி என்றும் பாராட்டி யிருந்தார்கள்.

1955ஆம் ஆண்டு பெரியார் மலேசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு குன்றக்குடி அடிகளாரும் மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரியாரின் நாத்திகக் கருத்துகளை எதிர்க்கும் விதமாக மலேசிய நாட்டுக்குச் செல்லத் திட்ட மிட்டார். பெரியாரின் நாத்திகக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தார். சைவத்தில் ஜாதிப் பிரிவினைக்கு இடமில்லை என்றும் கூறினார். இந்தப் பயணம் குறித்து அவர் கூறுகையில், “மலேசியாவில் தமிழர்களிடையே பெரியார் தூவிய நாத்திகக் கருத்துகளுக்கு எதிர்கருத்து கூறவே கடல் கடக்க வேண்டியதாயிற்று” என்றார். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் துணிவில்லாத இன்றைய இந்துத்துவவாதிகளுக்கு ஆன்மீக வாதியான குன்றக்குடி அடிகளாரையே நாம் எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது.

1968ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு சென்று தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்தார். கொரியா, ஆங்காங், சீனா, ஜப்பான் ஆகிய நாடு களுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழையும், சைவ சமயத்தையும் ஒருங்கே வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1950ஆம் ஆண்டின் மத்தியில் பிள்ளையார் சிலை உடைப்பு மற்றும் ராமர் சிலை உடைப்பு போராட்டங்களை பெரியார் முன்னெடுத்தார். இந்தப் போராட்டத்துக்கு அருள்நெறி திருக் கூட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பெரியாரின் போராட்டத்துக்கு எதிர்வினை ஆற்றினார். துண்டறிக்கைகளை வெளியிட்டார்.

தனித்தமிழை வளர்க்க அவருக்கான ஒரு தனி பாணியை உருவாக்கி செயல்பட்டார். அதில் ஒன்றாக மேடைத் தமிழை வளர்க்க அவ்வப்போது பட்டிமன்றங்களை நடத்தினார். இலக்கிய, சமூக, சமய தலைப்புகளில் இந்தப் பட்டிமன்றங்கள் நடந்தன. குன்றக்குடி அடிகளாரும் செந்தமிழிலேயே சொற்பொழி வாற்றுவார். மணிமொழி, தமிழகம், அருளோசை மற்றும் மக்கள் சிந்தனை போன்ற இதழ்களையும் நடத்தினார். திருக்குறள் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். தமிழறிஞர் களை அழைத்து குன்றக்குடியில் சமய மாநாட்டை நடத்தினார்.

1952ஆம் ஆண்டில் அடிகளார் பிறந்த ஊரில் ஒரு கல்விக்கூடம் கூட இல்லை. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மடத்தின் மொத்த வருவாயில் 35 விழுக்காட்டை கல்விக்காக மட்டுமே செலவிட்டார். 15 கல்வி நிறுவனங் களைத் தொடங்கி நிர்வகித்து வந்தார். இறுதியில் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மறைந்தார்.

ஆதாரம்: ‘நியூஸ்-7’ தொலைக்காட்சி மற்றும் இதழ்களில் வெளி வந்த செய்திகளின் தொகுப்பு.        

தொகுப்பு - ந. பிரகாசு

Pin It