இலங்கை அதிபர் இராஜபக்சே விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவது சரியா? எது பயங்கர வாதம்? எது விடுதலைப் போராட்டம்?
ஒடுக்குமுறைகளின் நவீன வடிவமெடுத்து நிற்கும் அரசுகள், அந்நாட்டு மக்களின் நியாயமான உரிமைகளை மறுக்கும் போதும், தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் ஒடுக்கும் போதும், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. அமைதி வழியில் போராடும் மக்களை அரசு தனது ஆயுத பலத்தால் அடக்க முயலுகிறது. அடக்குமுறைகள் எல்லை மீறும் போது அது அரசு பயங்கரவாதமாக உருவெடுக்கிறது. இனியும் ஒடுக்குமுறையின் கீழ் வாழ முடியாது என்று மக்களை உறுதியான நிலைக்கு இட்டுச் செல்வதே இந்த அரசு பயங்கரவாதம் தான்.
அந்த பயங்கரவாதத்தை சந்திக்க, வேறு வழியின்றி, மக்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கிறார்கள். இது அரச பயங்காரவாதம் என்ற வினைக்கு எதிராக மக்களும், இயக்கங்களும் நிகழ்த்தும் எதிர் வினை. ஆனால் - இந்தத் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஒடுக்கும் அரசுகள் சூட்டுகிற பெயர் ‘பயங்கரவாதம்’; ஈராக்கிலே அமெரிக்கா தனது படைகளை அனுப்பி, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது. இதை எதிர்த்துப் போராடும் ஈராக் போராளிகளை, பயங்கரவாதிகள் என்கிறது அமெரிக்கா! சர்வதேச சமூகம், இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
இன்றைய உலகு ஒழுங்கமைப்பில் அரச பயங்கரவாதத்தின் முகங்களில் புதிய மாற்றங்கள் வந்து விட்டன. சீட்டு விளையாட்டில் அனைத்து சீட்டுகளையும், தன்னிடமே வைத்துக் கொண்டு விளையாட்டுகளை நடத்துகின்றன. ஒடுக்கும் அரசுகளின் இந்த சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுவிட்ட மறுதரப்பினர், அதாவது அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகிறவர்கள், விளையாட்டு விதிகளையே மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த மாற்றப்பட்ட விதிகள் தான், அரசுகளை நடுங்க வைக்கின்றன. இப்படி நடுங்க வைத்த சம்பவம் தான், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது நடந்த ‘செப்.11’ தாக்குதல் என்கிறார், பிரபல அமெரிக்க இடதுசாரி ஆய்வாளர் ழான்போத்திரியா!
சிறீலங்காவில் அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் விடுதலைப்புலிகள் தலைமையின் கீழ் நடத்தி வரும் போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்; வரலாற்று ரீதியாக தங்களுக்கான நிலம், மொழி பண்பாடுகளைக் கொண்ட ஒரு இனம், சுயநிர்ணய உரிமை கோருவதை அய்.நா. சபையின் சட்டங்கள் ஏற்கின்றன.
அதே நேரத்தில் - ‘இனப்படுகொலைகள்’ நடத்தப்படுவதை, பயங்கரவாத நடவடிக்கை என்கிறது அய்.நா. மன்றம். 1948 ஆம் ஆண்டிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டு 1961 முதல் அமுலுக்கு வந்த இந்த சர்வதேச சட்டம் - இனப் படுகொலைகள், அவை போர்க்காலத்தில் நிகழ்ந்தாலும் சர்வதேச சட்டப்படி குற்றம் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. தமிழர்கள் மீது விமானத்திலிருந்து குண்டுகளை வீசி - அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது அப்பட்டமான இனப்படுகொலை தான். அண்மைக்கால மறுக்க முடியாத சான்று. செஞ்சோலை மாணவிகள் மீது, அரசு ராணுவ விமானங்கள் குண்டு வீசி, 55 மாணவிகளை பிணமாக்கியதாகும். குண்டு வீசப்பட்ட பகுதி, செஞ்சோலை மாணவிகள் காப்பகம்தான் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் உறுதி செய்துவிட்டது. சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விடுவது பயங்கரவாதம் தான் என்பதற்கு இதைவிட சான்று தேவை இல்லை.
சுனாமி பேரழிவில் உலகமே துயரத்தில் மூழ்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக நாடுகள் உதவ முன் வந்தன. ஆனால், கடும் உயிரிழப்புக்கும், உடைமை இழப்புக்கும் உள்ளான தமிழர்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளைக்கூட வழங்குவதற்கு, மறுத்துவிட்டது சிறீலங்கா அரசு. உலக நாடுகள் தந்த நிதியை செலவிடுவதற்கு, தடை போட்டுள்ள அரசு - பயங்கரவாத அரசா? இல்லையா?
தமிழ் இளைஞர்கள், ஒவ்வொரு நாளும் கடத்தப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அன்றாட நிகழ்வுகளாகி, மனித உரிமை ஆணையங்களின் முன் புகார்கள் குவிந்து வருவதே, சிறீலங்கா அரசின் பயங்கரவாதத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில், இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றனவா? அகதிகளாக அடைக்கலம் தேடி ஓடி வருகிறவர்கள் தமிழர்கள் மட்டுமே; சிங்களர் அல்ல. பயங்கரவாதம் எங்கே தங்கி நிற்கிறது என்பதற்கு இந்த ஒரு சான்று போதாதா?
விடுதலைக்காகப் போராடியவர்களுக்கு எல்லாம் ஒடுக்கும் அரசுகள் தந்த பட்டங்கள் பயங்கரவாதிகள் தான்! ஆனால் விடுதலைக்குப் பிறகு அவர்கள், அந்த தேசத்தின் தேச பக்தர்களாக அந்த “பயங்கரவாதிகள்” அங்கீகரிக்கப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்கு - ராணுவத்தை நோக்கித்தான் நிகழுகிறதே தவிர, எந்தக் காலத்திலும் அப்பாவி சிங்களர்கள் மீது நடந்தது உண்டா? எனவே தான் விடுதலைப் போராட்டம் என்ற குணாம்சத்தைப் பூரணமாக இது தழுவி நிற்கிறது. ஆனால் புலிகளின் இலக்குகளைத் தாக்குவதாகக் கூறிக் கொண்டு இலங்கை ராணுவம் குறி வைக்கும் இலக்கு, அப்பாவி மக்கள் மீது தான். எனவே இது திட்ட வட்டமான அரசு பயங்கரவாதம் தான்.
ஆனாலும் ஆதிக்கவாதிகளின் பிடியில் கழன்று கொண்டிருக்கும் ‘உலக ஒழுங்கு’ பயங்கர வாதத்துக்கான தெளிவான வரையறைகள் எதையுமே நிர்ணயிக்கவில்லை. தங்கள் நலனுக்கேற்ப அது உருமாற்றம் பெற்று வருகிறது. இன்றைய உலக ஒழுங்கமைப்பில் அரச பயங்கர வாதம் அனைத்துச் செயல்பாடுகளிலும், தன்னை முழுமையான மேலாதிக்க சக்தியாக வடிவமைத்துக் கொண்டு செயல்படுகிறது. ஊடகங்கள் இதற்கு முழு வீச்சில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயங்கரவாதத்துக்கு இப்போது கருத்தியல் என்று ஒன்றுமில்லை. கருத்தியலையும், அரசியலையும் அது கடந்து விட்டது. நியாயத்துக்குப் புறம்பாக வளர்ந்து வரும் அரச பயங்கரவாதம், நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குலைத்து விட்டது.
மார்க்சியம் கடந்த இடதுசாரி சிந்தனையாளராக ‘நியூயார்க் டைம்ஸ்’ வர்ணிக்கும் ழான் போத்ரியா, இது பற்றி, துல்லியமான சிந்தனையை முன் வைக்கிறார். “நன்மை தீமையை வெல்லுவதில்லை. தீமை நன்மையை வெல்லுவதில்லை. ஒன்றினுள் ஒன்றாகச் சுருக்க முடியாத நிலையில், அவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவையாகவும் இருக்கின்றன. இறுதியில் நன்மை தனது “நல்ல தன்மையை” இழப்பதன் மூலமே, தீமையை வெற்றிக் கொள்ள முடிகிறது. உலக அளவிலான அதிகாரத்தை நாடும் நன்மை, அச் செயல் பாட்டின் ஊடாகவே தனக்கு எதிரான உலகளாவிய வன்முறையையும் உருவாக்குகிறது” என்கிறார்.
அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் ராஜபக்சே, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதிகள் என்று கூறும்போது, அதை மேற்கத்திய சமூகம், கண்களை மூடி ஏற்றுக் கொள்வது, எதைக் காட்டுகிறது?
இதைத்தான் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன், தனது மாவீரர் நாள் உரையில் இவ்வாறு சுட்டிக் காட்டினார்:
“பயங்கரவாதம் என்ற சொற் பதத்திற்கு ஒரு தெளிவான தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால், தர்மத்தின் வழி தழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் ராணுவ பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்த துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.”
பயங்கரவாத சேறு பூசும் ராஜபக்சேக்களின் பொய்மையை மட்டுமல்ல, உலக ஒழுங்கமைப்பு தனக்கு சாதகமாக கட்டமைக்கும் ‘பயங்கரவாத’த்தையும் மிகச் சரியாகவே அடையாளம் காட்டும் வரலாற்று வரிகள் இவை!