நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி:
தனி மனிதர்கள் மீது மதத்தின் பெயரால் கும்பலாக தாக்குதல் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதியதற்காக ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காந்தியாரைக் கொன்ற கோட்சேயை புகழ்ந்து தென்னாட்டுக் கோட்சே என்று எச்.இராஜாவிற்கு சுவரொட்டி அடிக்கப்படுகிறது. எது தேச துரோகம் என்று தெரியாத நிலை உள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நகர நாகரிகம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. தமிழகத் தொல்லியல் துறை மூலம், கீழடி ஆய்வை தொடர்ந்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதே நேரம் பூம்புகார், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 தமிழர்கள் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து 400 நாட்கள் ஓடி விட்டன. பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சி, அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பியாந்த் சிங்கை கார் வெடிகுண்டு மூலம் கொலை செய்தவரையே தூக்குத் தண்டனையிலிருந்து விடுவித்திருக்கிறது. இத்தனைக்கும் நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டவர் அவர். 7 தமிழர் விடுதலையை ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பது அதிகார முறைகேடு” என்றார் கொளத்தூர் மணி.
குறிப்பு: நாடு முழுதும் எழுந்த எதிர்ப்பினால் 49 பேர் மீதான தேச துரோக வழக்கை பீகார் காவல்துறை கைவிட்டுள்ளது.