கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இளமதி பதில்கள்

 

ரொ.மருதசாமி,மயிலாடுதுறை.

ஜெயமோகன் பெயரோடு வேறு சில எழுத் தாளர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு, இவர் களுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கா விட்டால் பட்டினி கிடந்து செத்துப் போவேன் என்று தலையங்கம் எழுதி மிரட்டுகிறார் மனுஷ்ய புத்திரன். இதற்கு அடுத்த வாரமே இவரது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயமோகனுக்கு விருது வழங்கினால் வன்முறையில் ஈடுபடுவேன் என்று மிரட்டுகிறாரே சாரு நிவேதிதா?

ஏதேதோ பற்றியும், பிறரைப் பற்றியும் மிகவும் வக்கணையாகப் பேசும், எழுதும் இந்த வகை எழுத்தாளர்கள் சாதித்திய அகாதமி விருதுக்கு ஏனிப்படி அலைகிறார்கள்? விருது என்பது அவர்கள் தரவேண்டுமே தவிர, நாம் “வாங்க”கூடாது. செல்வாக்கைச் செலுத்தியோ அல்லது மிரட்டியோ வாங்கப்படும் விருதும் ஒருவித ஊழலே. எழுத் தாளர்கள் தங்களது படைப்பின் சமூகப் பயன்பாடு குறித்தும் வாசகரில் எந்த அடுக்குக்காக எழுதப் பட்டதோ அந்த அடுக்கிற்கு போய்ச் சேர்ந்ததா என்பது பற்றியும் கவலைப்பட வேண்டும். அந்த இலக்கை எட்டிவிட்டால் அதைவிட வேறு பரிசும்,  விருதும் இல்லை.

 

ரா.தட்சிணாமூர்த்தி, கடலூர்.

மேற்கு வங்கத்தில் அரிவாள் சுத்தி செல்லரித்து கேள்விக்குறி போல ஆகிவிட்டதாக தினமணி கருத்துப்படம் வெளியிட்டது பற்றி தாங்கள் பதில் என்ன?

சூரியனுக்குக் கீழ் உள்ள சகலத்தையும் விமர்சிப்பது போல தினமணி தோற்றம் காட்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தை-பி.ஜே.பி.யை மட்டும் விமர்சிக்காது.தப்பித்தவறி விமர்சித்தாலும் செல்லமாய் விமர்சிக்கும். இந்த ஏடு கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றி அப்படி கருத்துப்படம் போட்டதில் ஆச்சரியம் இல்லை. ஒரு விஷயத்தை அவர் களுக்கு நினைவுப்படுத்துவோம், 1971-லேயே காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொடூர அடக்கு முறையைக் கண்டவர்கள் மேற்குவங்க கம்யூனிட் டுகள், அந்தத் தேர்தலில் அவர்கள் படுதோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை யெல்லாம் தாண்டி 1977 - இல் பெரும் வெற்றி கண்டார்கள். சோதனைகள் அந்த மாநிலக் கம்யூனிஸ்டுகளுக்கு புதியவை அல்ல, மீண்டும் எழுவார்கள். இந்த நகராட்சி தேர்தல் முடிவுகூட இந்தப் பத்திரிகைகள் விமர்சிக்கும் அளவுக்கு மிகப் பாதகமானது அல்ல. மக்களவைத் தேர்தல் முடிவோடு ஒப்பிடும்போது இது ஒரளவு முன்னேற்றமே. உண்மைகளை ஒப்புக் கொள் ளும் அளவுக்கு நாணயமான பத்திரிகை தர்மம் இந்த நாட்டில் இல்லை என்பது தெரிந்ததுதானே.

 

 

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கலைஞரின் “பெண் சிங்கம்”பார்த்தீர்களா?

பார்க்கவில்லை, பார்க்க வேண்டும் என்று தோன்றமாட்டேன் என்கிறது. அதற்கான தொலைக் காட்சி விளம்பரத்தைப் பார்க்கும்போது தொலைக் காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே படம் எடுத்துக் கொண்டு, அவர்களே அந்தப் படத்தை ஆஹா, ஓஹோ என்று புகழ்கிற ஒரு புதியபோக்கு தோன்றியிருக்கிறது. இவர்களிடமிருந்து பெரிய திரை பற்றிய நியாயமான மதிப்பீடு வரும் என்று எதிர்பார்க்க முடியவில்லை.

 

எல்.ஸ்ரீதர், செங்கற்பட்டு.

பக்தி இயக்கம் பற்றி “புத்தகம் பேசுது” ஏட்டில் இருவிதக் கருத்துக்கள் வந்திருப்பதைப் பார்த்தீர்களா?

தமிழகத்தின் “பக்தி இயக்கம்” எனப் பட்டதை ஒரு முற்போக்கான வளர்ச்சி என நிறுவிட பேரா.ந.ரவீந்திரன் அரும்பாடு பட்டிருக்கிறார். இதைச் சரியாகவே மறுதளித்திருக்கிறார், பேரா.மே.து.ராசுகுமார். புத்த நந்தியின் தலையை அறுத்த, எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய அந்த “பக்தி இயக்கம்” அப்படி என்னதான் சாதித்தது?

அதற்குப் பிந்திய காலத்தில் தான் இங்கே சாதியம் நன்கு வேர் பிடித்து நின்றது என்பதே உண்மை. வணிகர்களுக்கு எதிரான நிலப்பிரபுத் துவத்தின் எழுச்சி எனும் ரவீந்திரனின் வாதப்படியே பார்த்தாலும் வரலாற்று நோக்கில் இது முற்போக் கான வளர்ச்சி ஆகாது..

வணிகர்களையும் அவர்களது சமயங் களையும் மட்டந்தட்டி வைத்ததுடன், வருணா சிரமம் இங்கே மீண்டும் எழுச்சி பெற்றதுடன் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவம் பிறக்காமல் போனதற்கு அடிப்படைக் காரணம். அது முடிவில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியானது. அதன் வேதனையை இன்றுவரை அனுபவிக் கிறோம்.

மே.து.ராசுகுமாரை பொறுத்தவரை வணிகர்கள் பெரிதும் நிலவுடமையாளர்களாக இருந்தார்கள் என்கிறார். அது நடந்திருக்கக் கூடியதே. ஆனால் இதன் பொருள் இரு வர்க்கங்கள் என்ற முறையில் இந்த இரு பிரிவினரிடையே முரண்கள் தோன்றியிருக்கிறது என்பதல்ல. வணிகர்கள் நிலவுடமையாளர்களாக இருந்திருப் பார்கள், ஆனால் நிலவுடமையாளர்கள் எல்லாம் வணிகர்களாக இருந்திருக்க மாட்டார்கள். சிலப்பதி காரம் இந்த முரணின் இலக்கிய வெளிப்பாடு எனும் மார்க்சிய அறிஞர்களின் கணிப்பும் தவறு அல்ல.

 

மு.பரமேஸ்வரி, திருபுவனம்.

செம்மொழி மாநாட்டிற்கு கலைஞர் எழுதிய பாட்டைக் கேட்டீர்களா, எப்படி இருக்கிறது?

பாடலை நன்றாக எழுதியிருக்கிறார். மெட்டு சரி, பாடிய விதமும் சரி எடுப்பாக இல்லை. நடுவிலே கீச்சுக் குரல் வேறு. ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து இன்னொரு வந்தே மாதரம் பாடல் பிறக்கவில்லை. படப்பிடிப்பும் ரொம்ப சுமார்.

 

சா.ரங்கசாமி, திருப்பூர்.

“சிறுகதைகள் மற்றும் நாவல்களின் காலம் முடிந்து விட்டது“ என்று கி.ரா. கூறியதாக தின மணியில் (9-5-10) கலாரசிகன் எழுதியிருப்பது பற்றி உங்கள் கருத்து?.

மேற்கோள் காட்டியவரே இது சர்ச்சைக் குரிய கருத்து என்றும் சொல்லியிருக்கிறார். இலக்கிய வடிவங்கள் காலாவதியாகலாம். ஆனால் அதற்கு நெடிய காலம் பிடிக்கும். புத்தகக் கண்காட்சி களுக்குப் போனால் இப்போதும் கல்கி, நா.பா, போன்றோரின் நாவல்கள் மலிவுப்பதிப்பாக, புதுப்புது வண்ண அட்டைகளோடு வந்தவண்ணம் இருப்பதைக் காணமுடிகிறது. சுஜாதா, மேலாண்மை போன்றோரின் சிறுகதைத் தொகுப்புகளையும் இதே போல் விதவிதமான பதிப்புகளில் பார்க்க முடிகிறது. இந்த வடிவங்களுக்கு சாதாரண வாசகர்களிடம் இப்போதும் ஓர் ஈர்ப்பு இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், இவர் களுக்காக எழுதுகிற கைதேர்ந்த படைப்பாளிகளின் எண்ணிக்கை சுருங்கிக் கொண்டு வருவதாகப் படுகிறது. அவர்களும் மனிதர்கள்தாமே. சாதாரண வாசகர்களின் பாராட்டைவிட நுணுக்கமானவர் களின், சக எழுத்தாளர்களின் பாராட்டை விரும்பு கிறார்கள். அவர்களின் பாராட்டுக்காக எழுதும் போது சாதாரண வாசகர்களிலிருந்து விலகிப் போய்விடுகிறார்கள். இவர்களது படைப்புகளுக்கு விரிந்த அளவில் வீச்சு இல்லாமல் போகும்போது அந்த  வடிவமே காலாவதியாகிப்போன ஒரு தோற்றம் வந்து விடுகிறது. இது விரைவில் மாறக் கூடும்.

 

எஸ்.தாமோதரன்,சங்ககிரி.

சமீபத்தில் தாங்கள் மிகவும் வியந்த செய்தி என்ன?

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைக் கொல்ல முயற்சி என்று முதலில் பத்திரிகைகளில் செய்தி வந்தது. அவரைக் குறி வைத்து துப்பாக்கி சூடு நடக்க வில்லை. அவர் அந்த இடத்திலிருந்து சென்ற பிறகுதான் குண்டு பாய்ந்தது என்று போலிஸ் கூறியது. இவரைக் கேட்டாலோ “இல்லை, இல்லை, என்னை குறி வைத்தே சுட்டார்கள்” என்றார். கடைசியில் பார்த்தால், பக்கத்து பண்ணை வீட்டுக் காரர் நாய்களை விரட்டச் சுட்டார். அது  தப்பி ரவி சங்கரின் சீடர் ஒருவரை உரசிக் கொண்டு போனது என்கிறது. அதற்குப் பிறகும் ரவிசங்கர் போலிஸ் வழக்கைச் சரியாக விசாரிக்க வேண்டும் என்கிறார். சாமியார்களும்,அரசியல்வாதிகளைப் போல  இப்படித் தங்களைத் தியாகிகளாகக் காட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் புத்திசாலித் தனமான வாழுங்கலை போலும்!.

கே.மனோகரன், திருநெல்வேலி.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறி விட்டதாகச் செய்தி (இந்து 18-6-10) வந்திருக்கிறதே?

அப்படியெனில், ஒரு மாநில அரசு விரும்பி னால் அந்த மாநில மொழியை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசியல் சாசனம் தெளிவாகக் கூறுகிறதே அது ஏட்டுச் சுரைக்காய் தானா? அரசியல் சாசனம் புனிதமானது, அதை மீறக் கூடாது என்று மற்ற விஷயங்களுக்கெல்லாம் வாய்ப்பாட்டு போடு கிறார்கள். மொழிப் பிரச்சனையில் மட்டும் அதை மறப்பது ஏன்? இதனினும் கொடுமை இந்தச் சரத்தைப் பயன்படுத்தி இந்தியை மட்டும் இந்தி பேசும் மாநிலங்களது உயர்நீதிமன்றங்களில் பயன்பாட்டு மொழியாக்கி விட்டார்கள். அங்கே நடைமுறைச் சிக்கல்கள் வரவில்லையா? நிச்சயம் வந்திருக்கும். அவை எப்படித் தீர்க்கப்பட்டதோ அப்படி  இங்கும் தீர்க்க வேண்டுமே தவிர, அதைச் சொல்லித் தமிழுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது. ஏற்கெனவே, வங்க மொழிக்கும் இப்படித்தான் அநீதி செய்திருக்கிறார்கள். இந்தி பேசாத மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய உரிமைப் பிரச்சனை இது.