நூல்மதிப்புரை: அருணன் எழுதிய காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் II & III)

(சுல்தான்கள் காலம், முகலாயர்கள் காலம்)

பிரம்மமான சிவனின்  அடியையும் முடியையும் தேடி  பிரம்மனும் விஷ்ணுவும் பயணம் செய்ததாக புராணம் கூறுகிறது. அன்னப்பறவையாக மாறி பிரம்மன் மேல்நோக்கிப் பறக்க, வராக அவதாரம் எடுத்து விஷ்ணு பூமியைத் தோண்டி கீழே சென்றதாகவும் ஆனால் இருவருமே தோல்வியையே சந்தித்தனர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் தத்துவ ஆசிரியர் அருணன் பிராமணியத்தின் அடியையும் முடியையும் தேடி பயணம் செய்து வெற்றி கண்டிருக்கிறார். இவரது எழுதுகோல் ஒரே நேரத்தில் இரண்டு பணிகளையும் ஒரு சேர செம்மையாகச் செய்துள்ளது.

“காலந்தோறும் பிராமணியம்” முதல்பாகத்தில் வேதகாலம் முதல் சோழர் காலம் வரை ஆய்வு செய்த இவர், இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை 588 பக்கங்கள் கொண்ட ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். இதில் சுல்தான்கள் காலம் முதல் முகலாயர் காலம் வரை பிராமணியம் எதிர்கொண்ட சிக்கல்கள், நிலை கொண்ட விதம் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நாகப்பட்டினம் மாவட்டம் கழுக்காணி முட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் ஆலயப் பகுதியைத் தோண்டியபோது 12 செப்புச் சிலைகளுடன் செப்பேடுகளும் கிடைத்ததாகச் செய்திகள் வெளிவந்தன. இந்த செப்பேட்டைப் பார்வையிட்ட முதல்வர்கலைஞர் முரசொலி ஏட்டில் இதோ செப்பேடுகள் உரைத்திடும் உறுதி என்ற தலைப்பில் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ராஜேந்திர சோழனின் மூத்த மகன் முதலாம் ராஜாதி ராஜன் காலத்திய செப்பேடு அது. அந்தச் செப்பேட்டில்  ஊர்கள் அனைத்தையும் அளந்து ஒன்றாக்கிச் சதுர்வேதிமங்கலமாக அளிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், ராஜாதி ராஜன் வழிவந்தோர் அன்றைக்கே திட்டமிட்டு நமக்கென 86 செப்பேடுகளைப் புதைத்து வைத்ததாகப் பெருமிதமாகக் குறிப்பிட்டிருந்தார்.

சதுர்வேதிமங்கலம் என்ற வார்த்தை மூளையை குடைந்து கொண்டே இருந்தது. காலந்தோறும் பிராமணியம் நூலின் முதல் பாகத்தை எடுத்து சோழர்காலம் குறித்த பகுதியைப் படித்துப்பார்த்தேன். சதுர்வேதிமங்கலங்கள், பிரம்மதேயங்கள் - தேவதான கிராமங்கள் போன்றவற்றின் ரகசியங்களை புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே அந்த கிராமங்களில் சாகுபடி செய்துவந்த விவசாயிகளை அடித்து விரட்டிவிட்டு பிராமணர்களுக்கு அந்த நிலங்களை உரிமையாக்கித் தருவதுதான் சதுர்வேதிமங்கலம். இது முதல்வர் பெருமைப்பட என்ன இருக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.

“காலம்தோறும் பிராமாணியம்” பாகங்கள் இரண்டு மற்றும் மூன்று நூலின் முகப்பில் சுல்தான்கள் காலம் முதல் முகலாயர்கள் காலம் வரை என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இயல்பாகவே சற்றென ஒரு ஆர்வம் பற்றிக்கொண்டது. மதன் போன்றவர்கள் ஏற்கனவே “வந்தார்கள்... வென்றார்கள்...” என்று வரலாறை எழுதிவைத்திருக்கிறார்கள். அவர்கள் வென்ற காலத்தில் பிராமணியம் எப்படி நின்றது என்பதைப் படிக்கும் ஆர்வம் இயல்பாகவே ஏற்பட்டது.

சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் குறித்து ஏற்கனவே வாசிப்பின் மூலம் ஏற்பட்டிருந்த பிம்பங்கள் உடைந்து புதிய அறிவு வெளிச்சம் படர்ந்தது.

இந்த நூலின் முன்னுரையில் முதல் நூலுக்கு ‘இந்தியா டுடே’ ஏடு எழுதியிருந்த விமர்சனத்திற்கு எதிர்வினையை நூலாசிரியர் அருணன் பதிவு செய்துள்ளார்.

சாதியின் உருவாக்கத்தில் பிராமணியத்திற்கு மட்டுமே பங்கிருப்பதாக கூறுவது முற்றிலும் சரியான கூற்றா என்று இந்தியா டுடே எழுப்பிய கேள்விக்கு பிராமணியம் என்பது சாதி முறைமையை உள்ளடக்கியது என்று வரையறை செய்த பிறகு இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்று கூறியுள்ளதோடு பிராமணியம் என்ற சொல்லாட்சியே இவர்களை பதறச்செய்துவிட்டது போலும் என்று குறிப்பிட்டிருக்கிறார். “வெறுக்கத்தக்கதா பிராமணியம்?” என்று சோ நூல் எழுதியபோது இவர்கள் எங்கே போனார்கள் என்றும் நூலாசிரியர் அருணன் சரியான கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த நூலில் டில்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர் காலத்தில் பிராமணியத்தின் இயங்குநிலை மட்டுமின்றி அரசியல் பொருளாதார பின்புலத்தில் ஆய்வு செய்துள்ளதோடு அதை சுல்தான்களும் முகலாயர்களும் எதிர்கொண்ட விதமும் எழுந்த இக்கட்டுகளை பிராமணியம் சமாளித்த ரகசியமும் விண்டுரைக்கப் பட்டுள்ளது என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சுல்தான்கள் மற்றும் முகலாயர் காலத்தின் அரசியல் பின்புலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதற்காக தொடர்புடைய நூல்களை தேடித் தேடிப் படித்து விரிவானதொரு பின்புலத்தை அமைத்து அதன் பின்னணியில் பிராமணியத்தின்- அதாவது சாதிய முறைமையின் சித்து வேலைகளை அம்பலப்படுத்தி யுள்ளார்.

பிராமணியம் நிகழ்கால வாழ்வில் ஓடும் முடிச்சுகளைக் கூட புரிந்துகொள்வது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இந்த முடிச்சுகள் சமூக-பொருளாதார - அரசியல் - பண்பாட்டுத் தளத்தில் மட்டுமின்றி இவற்றால் கட்டமைக்கப்படும் தனி மனிதர்களின் மனவெளியிலும் பல்வேறு முடிச்சுகளைப் போட்டுவைத்திருக்கிறது.

முதலில் நமக்குள் விழுந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்த்தால்தான் சமூகத்தில் இருக்கும் முடிச்சுகளைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அருணன் தேடிச் செல்லும் முடிச்சுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தவை. அவை காலத்தால் இறுக்கப்பட்டு கல் முடிச்சுகளாகவே மாறியுள்ளன. அவற்றை அவிழ்த்து உள்ளே ஒளிந்து கிடக்கும் ரகசியங்களை விண்டுரைக்க ஆழ்ந்த தத்துவ ஞானமும், வரலாற்று அறிவும், பரந்த படிப்பறிவும் இதையெல்லாம் தாண்டி லட்சியப் பிடிப்பும் வேண்டும். இவை அனைத்தும் அருணனிடம் இருப்பதால் இந்த மிகப்பெரிய ஆய்வை நடத்துவது அவருக்கு சாத்தியமாகி உள்ளது.

மாலிக்காபூர் மதுரை வரை வந்தான் என்பது நாம் அறிந்த செய்தி. ஆனால் ஏன் வந்தான்? அழைத்து வந்த சூழல் எது? என்பது விளக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோவில்களை மாலிக்காபூர் கொள்ளையடித்தான். அவை கோவில்களில் சிலைகள் மட்டும் இருக்கவில்லை. ஏராளமான செல்வங்கள் குவிந்திருந்த ராஜாக்களின் கஜானாக்களாகவும் இவை இருந்தன என்பதை விளக்கியுள்ளார்.

சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் குறித்த வரலாற்றில் ஒன்று அவர்களை முற்றிலும் கொடியவர்களாக, ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டுவது அல்லது அவர்களை தர்மப் பிரபுக்களாக காட்டுவது என்ற இருவிதமாகப் போக்குகள் உள்ளன. ஆனால் இந்த நூலில் வரலாற்றின் வழியில் மட்டுமே சென்று நூல்களின் வழி தமக்கு கிடைத்த இருதரப்பு செய்திகளையும் நடுநிலையோடு பதிவு செய்து தமது கருத்தையும் கூறியுள்ளார்.

முஸ்லிம் மன்னர்கள் மற்றும் அக்காலத்திய சரித்திர ஆசிரியர்களின் வரலாற்று உணர்வு வியக்க வைக்கிறது. புராணம் எது, வரலாறு எது என்ற மயக்கம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டு நிலைபெறச் செய்துள்ள நிலையில் வரலாற்றை வரலாறாக  முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில் பதிவு செய்துள்ளதும், அந்த வரலாற்றில் இருந்து உரிய செய்திகளை எடுத்து பிராமணியத்தின் இருத்தல் குறித்து ஆய்வு செய்துள்ளதும் மெச்சத்தக்கது.

நூலின் ஓட்டத்தில் கூறப்பட்டுள்ள கபீரின் சிந்தனைகள் வியக்கவைக்கின்றன. பர்தா முறையை எதிர்த்து சுல்தான்கள் ஆட்சிக்காலத்திலேயே கபீர் குரல் கொடுத்திருப்பதும், சமஸ்கிருதத்தை கிணற்று நீர் என்று கூறும் கபீர், மக்களின் மொழியை ஓடும் நதி என்கிறார்.

ஓளரங்கசீப்பை வில்லனாகவும் சிவாஜியை கதாநாயகனாகவும் சித்தரிக்கும் வரலாறுகளை மட்டுமே படித்தவர்களுக்கு இந்த நூல் இருவரையும் உண்மையான கோணத்தில் அறிமுகப்படுத்தும்.

சுல்தான்கள் காலத்தில் தோன்றிய குருநானக்கின் சீக்கியம் இஸ்லாமை எதிர்த்தது எவ்வளவு உண்மையோ அதைவிட பெரிய உண்மை அது பிராமணியத்தையும் எதிர்த்தது  என்பது இந்த நூலில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

கம்பராமாயணத்தைப் படிப்பதைவிட துளசி தாசரின் ராமாயணத்தைப் படிப்பது மிகவும் புண்ணியமானது என்று கூறப்படுவதுண்டு. துளசி ராமாயணம் இப்போதும் முன்னிறுத்தப்படுவதன் ரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் அது எழுதப்பட்டதன் காலப் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பிராமணியம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள துளசிதாசரின் ராமாயணமாகவும் உருவெடுக்கும். புரந்தரதாசரின் சங்கீதமாகவும் இழையோடும். தாந்த்ரீக மாகவும் கூடுபாயும் என்பது விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

விக்ரக வழிபாடு, யாகமுறை ஆகியவற்றை எந்தளவுக்கு கைவிடாமல் பிராமணியம் பிடிவாதம் பிடித்ததோ அதே அளவிற்கு ஆணாதிக்க செயல் பாட்டிலும் அதை நியாயப்படுத்தும் புராண தத்துவ வியாக்கியானங்களிலும் குறியாக இருந்தது என்பதையும் அருணன் விளக்கியுள்ளார்.

கடந்து வந்த பாதை, இடறி விழுந்த இடங்கள், ஏமாற்றப்பட்ட தருணங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்திற்கான பாதையில் ஒரு அடியைக்கூட உருப்படியாக எடுத்துவைக்க முடியாது. வரலாற்றின் வழித்தடத்தில் சாதீய கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்ட இடங்களை மிகச்சரியாக அடையாளம் காட்டி இருக்கிறார் ஆசிரியர். அவற்றைச் செயலிழக்கச் செய்ய வேண்டிய பணி இன்னமும் முற்றுப் பெறாமலே இருக்கிறது.

இந்த ஆய்வு இன்னமும் முடிந்துவிடவில்லை. நான்காம் பாகமாக ஆங்கிலேயர் காலம் அமையும் என்றும் தொடர்ந்து தற்காலம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் முன்னுரையில் அருணன் குறிப்பிட்டுள்ளார். அவருக்குள் இருக்கும் தத்துவ பலம், அவருக்கு அந்த ஆற்றலைத் தரும்.

- மதுக்கூர் இராமலிங்கம்

வெளியீடு

வசந்தம் வெளியீட்டகம்

69/24ஏ, அனுமார்கோவில் படித்துறை

சிம்மக்கல், மதுரை-625 001

பக்கம் 588

விலை ரூ.350

Pin It