தமிழ்ச் சூழலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில வகையான கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுவது வழக்கம். இலக்கிய வாதிகள், அரசியல்வாதிகள், திரைப்படக்காரர்கள், தொழிலதிபர்கள் என யாரிடமும் ஒரு துண்டு கேள்வியாக இவை முன்வைக்கப்படும். அமைப்பியல்வாதம் அமைப்பியல் வாதம் என்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? அது தமிழுக்குத் தேவையா? இந்த வரிசையில் கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் ‘காலத்தின் கேள்வியாக’ அமைந்தவை பல. மேஜிக்கல் ரியலிசம் பற்றி உங்கள் கருத்து, எதார்த்த வாதம் முடிந்து விட்டது என்கிறார்களே? பின்நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்கிறார்களே? நான் லீனியர் என்கிறார்களே? தலித் இலக்கியம் என்கிறார்களே? கவிதை செத்துவிட்டது என்கிறார்களே? பெண்ணியம் என்கிறார்களே? பெண்கவிஞர்கள் பெண்மொழி என்கிறார்களே? உடல்மொழி என்றெல்லாம் கூறுகிறார்களே? இந்த வகை கேள்விகள் அலோபதி மருந்து சீட்டில் அவசியம் இடம்பெறும் அல்சர் தணிக்கும் துணை மருந்து போல இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த வகை கேள்விகள் ஒருவகையில் பொதுக் கருத்தியல் சொல்லாடல்களில் ஏற்பட்டுள்ள புரிதல் சிக்கல்களின் தடையங்களாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. அதே சமயம் இவை பற்றி சொல்லப்படும் கருத்துக்களின் தன்மை அரசியல் மற்றும் அதிகார அணுகுமுறைகளின் வகைகளைப் புரிந்துகொள்ள அவசியமானவை. இந்த வகை கேள்விகளைப் பற்றி உண்மையில் சிந்தித்து வருபவர்கள் மட்டுமின்றி அதுபற்றி கேள்விப்பட்டிராதவர்கள்கூட ஏதாவது சொல்லித் தொலைய வேண்டுமே என்று சொல்லுபவை கூடுதலான முக்கியத்துவம் உடையவைதான். பொதுப்புத்தியின் அறிதல் மறுப்பு தாக்குதலின் ஒருபகுதியாக இருப்பவை. இன்றும் சில வகையினர் ‘எல்லாம் தெரிந்த ஏகம்பநாதர்கள்’ பெண்ணியமா, பெண் எழுத்தா, தலித்தியமா, பின் நவீனத் துவமா, கருப்பின விடுதலையா, சுற்றுச்சூழலா, கலக இலக்கியமா, தமிழ் வரலாறா, உலக வரலாறா, லத்தின் அமெரிக்க இலக்கியமா எதுபற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். இவைப் பற்றி ஓயாமல் சிந்திப்பது போலவும் அவர்களின் ‘அருள்வாக்கு’ அனைவருக்கும் பரவ இது ஒரு வாய்ப்பு என்பது போல் தமது ‘மூவன்னா பதிலை’ மோட்டுவளையைப் பார்த்தபடி பதிவு செய்வார்கள்.
ஏன் இந்தக் கேள்விக்கு ஒருவர் பதில் சொல்ல வேண்டும். இல்லை இந்தக் கருத்துக்களை ஒருவர் தெரிந்துதான் இருக்க வேண்டுமா. இதுபற்றி நான் சிந்திக்கவில்லை என்று பதில் சொல்லக்கூடாதா.
தற்போது சந்தையில் ‘வில்லங்கமான’, ‘விதண்டாவாதமான’, ‘விபரீதமான’, ‘பெண்ணெழுத்து’, ‘பெண்ணியம்’ பற்றி சில எழுத்தாளர்கள் கூறிய பதில்களை ஒன்றாக வாசிக்கும் வாய்ப்பு ‘உதயம் நேர்காணல்கள்’ தொகுப்பில் கிடைத்தது. இதில் சிலருக்கு பெண்ணியம், பெண்ணெழுத்து பற்றிய புரிதலும் மரியாதையும் இருப்பதால் அது தொடர்பான ஆதரவுக்குரல் இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது. சிலரிடம் பட்டும்படாத ஒரு தொனி உள்ளது. பரவாயில்லை. நேரடியாக மறுத்தும் எதிர்த்தும் கூறியிருப்பதுகூட புரிந்துகொள்ள வேண்டியவையே. அனைவரும் பெண்ணியப் பார்வையை ஏற்க வேண்டும் என்றோ பெண்ணெழுத்தை ஆதரிக்க வேண்டுமென்றோ என்ன தலையெழுத்து.
ஆனாலும் புரட்சிக்காரர்கள், கலகக்காரர்கள் மேதைகள் என்று எட்டுத் திசையும் புகழ்பரப்பியுள்ள சிலர் பொன்மொழிகளை அருளும்போது அவை பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிடுகின்றன. பல கேள்விகளையும் எழுப்பிவிடுகின்றன. அப்படி கேள்வி எழுப்பி சிந்திக்கத் தூண்டிய இருவரின் பதில்களைப் பார்போம். ஒன்று, பொன்னீலன் என்ற மனிதாபிமான பொதுவுடமைக்கருத்துடைய, சமூக மாற்றத்தை விரும்பும் முற்போக்கு எழுத்தாளருடையது. இரண்டாவது, கேரளத்திற்கு புதிய தரிசனங்களைத் தந்துவரும் மலையாள, அய்ரோப்பிய, அமெரிக்கக் கலகக்காரர்களின் தமிழக விநியோகஸ்தரும் தமிழில் எதையும் படிக்கவில்லை என்பதை மட்டுமே தமது தனிப் பெரும் தகுதியாகத் தொடர்ந்து பிரகடனப் படுத்தி வரும் நவீனத்துவ அறிவுஜீவியுமான சாரு நிவேதிதாவுடையது.
பொன்னீலன், சமூகமும் கட்சியும் மதிக்கும் ஒரு பெரிய மனிதர் மற்றும் மரியாதைக்குரிய எழுத்தாளர். ஆனால் இவருக்கு உடல்மொழி, இலக்கியம், அழகியல் பார்வை, சமூக அர்த்தம் என்பவை பற்றிய புரிதல் இந்த அளவே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்று. இவர் ஒரு அரசியல் அமைப்பை வழி நடத்துகிறவராகவும் இருப்பது பயத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்ப் பெண்கவிஞர்களின் தொகுப்புகள் எதையும் இவர் படிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; ‘எனக்குத் தெரிந்த வரையில் குட்டி ரேவதியின் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவர்களின் படைப்புகள் வெறும் உடல்சார் சம்பவங்களாகச் சிறுத்து நிற்கின்றன. கலைப் படைப்புகளாக அவை பரிணமிக்கவில்லை.
உடல் சார்ந்து எழுதுபவர்களில் பலர் சுயகவனம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது’ என்று எதைவைத்துக் கூறுகிறார். அப்படி எதுவும் சிறுத்து நிற்கவில்லை என்பதை இவருக்கு யார் எடுத்துக் கூறுவது. சுயகவனம் பெறுவதற்காக பெண்கள் மட்டும்தான் எழுதுவது போலவும் மற்றவர்கள் தமது எழுத்துக்களை கொல்லிமலைக் குகைகளில் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவாகத் திரிவது போலவும் ஏன் இவருக்குத் தோன்றுகிறது. குட்டி ரேவதியின் ‘ஒரு சில’ கவிதைகள் மட்டும் இவருக்கு பரிணமித்துத் தோன்று வதற்கு ‘சமூக’ உணர்வுதான் காரணமாக இருக்கும் என்று புரிந்துகொள்வதை இவர் எப்படி மறுக்க முடியும். இந்த அளவில்தான் உள்ளது முற்போக்கு முகவர்களின் நிலை. பாவம் தமிழகம், பாவம் முற்போக்கு.
தமிழில் அதிகம் படிப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா பெண்ணெழுத்துப் பற்றிய கேள்விக்கும் அப்படியே சொல்லியிருக்கலாம். ஆனால் இவரோ எல்லாவற்றையும் ‘கண்டு கேட்டு உண்டு’ அறிந்த தொனியில் பெண் படைப் பாளிகளின் எழுத்து சொல்லும்படியாக இல்லை என்று பெருமிதத்துடன் தொடங்கு கிறார். பெண் கவிஞர்கள் ‘சுற்றுப்புறத்தையும் குடும்பத்தையும் பார்த்து பயப்படுகிறார்கள். ஆனால் பயப்படாமல் சூழலை எதிர் கொண்டால் ‘மாலதி மைத்ரி கையில் குண்டாந் தடியோடு அலைகிறார்’ என்கிறார். பெண் படைப்பாளிகளின் மீதான தாக்குதலுக்கும் அவதூறுகளுக்கும் கண்டனம் தெரிவிப்பதும் மறுத்து எழுதுவதும் குண்டாந்தடியோடு அலைவதாம். இந்த கட்டப்பஞ்சாயத்துத் தலைவர் நியாயம் பேசுகிறார்.
சில்வியா பிளாத் போல தமிழில் பெண்கவிஞர்களே இல்லை என்று வேறு சொல்கிறார்(வேறாரு பத்திரிக்கை பத்தியில்). சில்வியா பிளாத்தின் ‘புலம்பல்’ வெள்ளைப் புலம்பல். தமிழில் புலம்பினால் அது கவிதை இல்லை. இப்படித்தான் இருக்கிறது இலக்கிய விமர்சனம். இவரின் இலக்கியச் சேவையை இப்போது பார்ப்போம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சாரு நிவேதிதாவின் இலக்கியத் திருட்டுக்களை அம்பலப்படுத்தி ரமேஷ் பல்வேறு பத்திரிகைளில் எழுதினார். அதுகுறித்து சா. நி. எங்குமே வாய்திறக்கவில்லை. மறுப்பு கூறவில்லை. எழுத்தாளர் ஆபிதீனின் கையெழுத்துப் பிரதியாகவுள்ள நாவலைத் திருடி ‘கொடிமரக் கப்பல்’ என்றொரு தொடர் கதையை குமுதத்தில் சா. நி. எழுதினார். ஆபிதீன் குமுதத்திற்கு எழுதி இத்திருட்டை அம்பலப்படுத்தியவுடன் அக்கதை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதற்காக விளக்கம் கேட்டு ஆபிதீன் சா. நி.வுக்கு எழுதிய கடிதங்களும் சா. நி. அவருக்கு எழுதிய கடிதங்களும் ‘பதிவுகள் டாட் காமில்’ பிரசுரிக்கப்பட்டன. அவை பிறகு ஆபிதீனின் ‘இடம்’ சிறுகதைத் தொகுப்பில் பின் இணைப்பாக (ஸ்நேகா வெளியீடு) வெளிவந்துள்ளன. இதற்கு இது வரையில் சா.நி. எங்கும் மறுப்போ விளக்கமோ அளிக்காதது ஏன்? இந்த இலக்கியத் திருடர் பெண்படைப்பாளிகளைப் பற்றி தரக் குறைவாகத் தொடர்ந்து விமர்சித்து வருவதும் அதை சில பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து திருடனுக்குத் திருடன் துணைப்போகும் திருட்டு இலக்கியக் களவானிக் கூத்தாக இலக்கியச் சூழலை உரு வாக்கி வருகிறது. இந்த சாதி வெறிப்பிடித்த, ஆணாதிக்க வெறிப்பிடித்த இலக்கியக் கும்பல் பெண்படைப்பாளிகளை குறித்து போகிற போக்கில் ‘இலக்கிய ஈவ்டீசிங்’ செய்து வருகிறது.
ரமேஷ் - பிரேம் இருவரையும் சா. நி. தனது கோஸ்ட் ரைட்டராக வைத்திருந்தார். இவருடைய இரண்டு கட்டு குப்பைகளை இரண்டு நாவல்களாக உருவாக்கித் தந்தவர்கள் ரமேஷும் பிரேமும். இதைப்பற்றி சா. நி.வை அம்பலப்படுத்தி ஏற்கனவே அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவருடைய ஸீரோ டிகிரி - கைப்பிரதியை எடுத்து வந்து என்னிடம் முன்னுரை கேட்டார். நான் வாசித்து விட்டு, ‘ இது ஒரு ஆணை மையப்படுத்திய குடும்பக்கதையாக இருக்கிறது, இதற்கு முன்னுரை தர முடியாது’ என்று சொன்னேன். மேலும் ‘மொத்த நாவலையும் தன் மகளிடம் கூறுவது போல அமைத்து அவன் தன் மகளிடம் பாவமன்னிப்பு கேட்கும் ஒரு தொனியை உருவாக்குங்கள்’ என்றும் கூறினேன். ‘அய்யோ எப்படி எல்லாத்தையும் தலைகீழாக மாற்றியமைப்பது’ என விழிகள் பிதுங்கி நின்றார் சா.நி. உடனே ரமேஷ் தான் மாற்றித் தருவதாகச் சொல்லி நாவலின் மொத்த வடிவமைப்பையும் மாற்றித்தந்தார். என்னிடம் முன்னுரை கேட்டு நின்றவர். பிறகு என்னுடைய ஆலோசலையின்படி மொத்த நாவலையும் மாற்றி அமைத்து தனக்குப் பெருமை தேடிக்கொண்ட இந்த ‘கலா ஆளுமைதான்’ தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமே இல்லை, தமிழ்ப் பெண் கவிஞர்கள் எழுதுவதெல்லாம் ஒன்றுமற்றவை என எல்லா இடங்களிலும் புலம்பி வருகிறார்.
தன் மகள் பள்ளிக்கு எழுதிய லீவு லெட்டரை அப்படியே ஒரு பத்திரிகைக்கு அனுப்பி அதை ஒரு கதையாக பிரசுரித்ததாக அமரந்தா சொல்கிறார். வாரமலரில் வந்த அப்பளம், வடாம், அக்கார அடிசல் கதைகளை தவிர்த்த இவரின் ‘ஸ்டார் வேல்யூ ரைட்டிங்ஸ்’ எல்லாம் ரமேஷ் - பிரேமின் கைங்கரியம். இப்போது ஏன் இவர் நான் லீனியர் கதைகளை எழுதுவதில்லை? தற்சமயம் டவுண்லோடும் மொழிபெயர்ப்பும் மட்டும் செய்துகொண்டிருக்கும் சா.நி. சொந்தமாக ஒரு நாலுவரி எழுதிவிட்டு பிறகு பிற படைப்பாளிகளை விமர்சிக்கவும்.
உலக மொழிகளிலுள்ள கலகக் கலைஞர்களைப் பற்றிய தகவல்களை ‘டவுண் லோடு’ செய்து தமிழில் எழுதிவருவதின் மூலம் தன்னையும் ஒரு கலகக் கலைஞனாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் கோமாளித்தனத்தை சா. நி. நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்பளம், வடாம், அக்கார அடிசல் பற்றிய கதைகள் எழுதும் இந்தக் கலகக்காரரின் மடிசார்மாமி கலாச்சார அதிர்வுகளை தினமலர், விகடன் இதழ்களோடு நிறுத்திக்கொள்ளட்டும். இவர் ஆனந்தவிகடனில் எழுதிய ஒரு சிறுகதையில், பிரான்ஸ் நாட்டில் குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து உரித்தக் கோழியை சமைக்க எடுக்கிறார். உறைந்த சில்லிட்ட கோழியை கத்தியால் வெட்டுகிறார். ரத்தம் கத்தியில் வழியோ வழியென்று வழிகிறது. இப்படியாக ஒரு கதைக்குள் ஒரு சின்ன தகவலைக்கூட பிழையில்லாமல் எழுதத் தெரியாதவர்தான் இந்த சா. நி. ஐஸில் உறைந்த கோழியிலிருந்து ரத்தம் கொட்டுவது மாந்திரீக எதார்த்தமோ என்னவோ;
உமா மகேஸ்வரி, சல்மா மட்டுமில்லை சாரு நிவேதிதா உட்பட தமிழில் தொண்ணூறு சதவிகித எழுத்தாளர்கள் குடும்பக்கதைகளைத்தான் எழுதி வருகிறார்கள். உமா மகேஸ்வரியாவது எல்.கே.ஜி யில் நான்கு வருடமாகத் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறார். ஆனால் சா.நி. யோ எல்.கே. ஜியிலேயே ‘பிட்’ அடித்து மாட்டிக்கொண்டு இலக்கியப் பள்ளியைவிட்டு ‘கிண்டர் கார்டன்’ நிலையிலேயே வெளியேற்றப்பட்டவர்.
இன்று பெண்படைப்பாளிகளின் எழுத்துகள் மட்டும் பரவலான கவனத்தையும் தாக்கத்தையும் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தவில்லை. அவர்களை நோக்கிய வசைகளும் அவதூறுகளும் அதிக கவனத்தைப் பெறுகின்றன. சா. நி. போன்ற படைப்புணர்வற்ற செத்த மூளைகள்; சமூக, அரசியல், கலாச்சார முரண்களைப் பற்றிய பிரக்ஞை அற்ற எழுத்து வியாபாரிகள் மற்றும் எழுத்துத் தொழில் அதிபர்கள்; இதுவரை தமிழ்ச் சூழலில் எந்த விவாதத்திலும் பங்கெடுக்காத எதைப்பற்றியும் கருத்து சொல்லாத சில படைப்பாளிகள்; சினிமாவுக்குள் நுழைய துருப்புச் சீட்டாக தமது கவிதைத் தொகுப்பை அச்சிட்டு இலவசமாக கோடம்பாக்கத்தில் விநியோகித்து வரும் ‘முகவரி அட்டைக் கவிஞர்கள்’ போன்றோர் திடீரென பெண்களின் எழுத்தையும் அவர்களின் அரசியல் பிரக்ஞையையும் பற்றி கேள்வி எழுப்பி இதன் மூலமாக சூழலில் பரவலான கவனத்தையும் தாக்கத்தையும் தங்கள் மீது ஏற்படுத்தி சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். மேலும் சிலர், பெண்கவிஞர்களுக்கு முன்னுரையோ மதிப்புரையோ எழுதும்போது போகிறப்போக்கில் ‘பிற பெண் கவிஞர்களை போல இவர் பாலியல் கவிதைகளை எழுதுவதுவதில்லை’ என்று ஏளனத்தோடு சாடி ஒற்றைவரி விமர்சனத்தின் மூலம் தங்களின் வக்கிரத்தையும் காழ்ப்புணர்வையும் தீர்த்துக் கொள்கிறார்கள்.
மனுஷ்யபுத்திரன் என்ற தொழில் அதிபர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அரசி என்ற நெடுங்கவிதை எழுதி கருணாநிதியிடமிருந்து பாராட்டுப் பெற்றார். ஆனால் இவர் இப்பொழுது ஜெயா தொலைக்காட்சியில் எப்படியாவது தன் முகத்தை அடிக்கடிக் காட்டிக்கொண்டிருப்பதில் அதிகப் பிரயத்தனப்படுகிறார். ஜெயா டிவி நிகழ்ச்சியாளர்களை கொண்டுவந்து தனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளில் மேடையேற்றி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார். ஜெயலலிதாவை விமர்சித்து ஒருபக்கம் கவிதை எழுதுவது மறுபக்கம் ஜெயா டிவியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு தன்னை ஒரு அதிகாரமையமாக்கிக்கொள்வது. இதுதான் மனுஷ்யபுத்திரன் போன்ற எழுத்தாளர் களின் அரசியல் நிலைப்பாடாக இருக்கிறது. இவர்கள் இந்த வெகுஜன ஊடகங்களில் உட்கார்ந்துக்கொண்டு பெண்படைபாளிகள் வெகுஜன ஊடகங்களில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள அலைகிறார்கள் என்றும் ஊடகங்களுக்கு பலியாகிவிடாதீர்கள் என்றும் வெகுஜன பத்திரிகை மூலமும் டிவியில் தோன்றியும் அறிவுரை சொல்கிறார்கள்.
இதை அவரோ அவரது இலக்கிய சிறுமுதலாளிகளோ பின்பற்றினால் நல்லது. இந்த வியாதிக்கூறு பல எழுத்தாளர்களிடம் தீவிரமாக தொற்றிவருகிறது. இவர்கள் முதலில் அதிகார மையத்தையும் வெகுஜன ஊடகங்களையும் விமர்சிக்கிறார்கள். அதன் மூலம் தங்களை நோக்கி அதிகார மையத்தின் மற்றும் வெகுஜன ஊடகத்தின் கவனத்தைத் திருப்புகிறார்கள். பிறகு அதனுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு தங்களை உப அதிகாரமையமாக மாற்றிக் கொள்கிறார்கள். இதன் மூலம் தங்கள் சரக்குகளை பரந்துபட்ட அளவில் கொண்டுசெல்ல விளம்பரம் கிடைத்துவிடுகிறது. இவர்கள் புதிய தொழில் அதிபர்களாக சிறுபத்திரிகை சூழலிலிருந்து உருவாக முடிகிறது.
மேலும் விவாதம் தொடரும். . . .