இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்த புதுடில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் இயக்குனரான பார்ப்பனர் வேணு கோபாலின் சாதிவெறி அம்பலமாகியுள்ளது. மத்திய மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி, வேணுகோபால் மிரட்டலுக்கு அஞ்சாது உறுதியுடன் சமூக நீதிக்காகப் போராடி வருகிறார்.

டாக்டர் வேணுகோபாலின் முறைகேடுகளுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் மூலம், தடையை தற்காலிகமாக நீக்கிக் கொண்டு, பணியில் தொடர்ந்து வருகிறார் வேணுகோபால். இவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ‘ஏ.அய்.அய்.எம்.எஸ்.’ மருத்துவக் கழகத்தில் தான் 27 சதவித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம், தீவிரமாக நடந்தது.

இந்த நிறுவனத்தில் பயிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் திட்டமிட்டு, அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்படுவது, இப்போது அம்பலமாகி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து வந்த புகார்களை விசாரிக்க, மத்திய அமைச்சர் அன்புமணி, மத்திய பல்கலை நிதி உதவிக் குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.கே. தோரட் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.

மாணவர்களிடம் நேரடி விசாரணை நடத்திய குழு தனது விசாரணை அறிக்கையை மத்திய அமைச்சர் அன்புமணியிடம் கடந்த சனிக்கிழமை (மே 5, 2007) வழங்கியது. அதில், “இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியதில் இயக்குனர் வேணுகோபாலுக்கு பெரும் பங்கு உண்டு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவமதிப்புக்கும், அலைகழிப்புக்கும் உள்ளாக்கப்பட்டதாக, தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

பாடம் நடத்தும் ஆசிரியர்கள், தங்களை வேற்றுமைப்படுத்தியதாக - 72 சதவீத மாணவர்கள், சாட்சியமளித்துள்ளனர். “ஏனைய மாணவர்களிடம் காட்டிய அக்கறையையோ, ஆதரவையோ எங்களிடம் காட்டவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானோம்.

இதனால் எங்களுடைய படிப்பும் பாதிப்புக்குள்ளானது” என்று தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூறினர். நாங்கள் நன்றாக தேர்வு எழுதியிருந்தும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை” என்று 88 சதவீத மாணவர்களும் எங்களின் சாதியைப் பார்த்து, திட்டமிட்டே மதிப்பெண்களைக் குறைத்தார்கள் என்று 84 சதவீத மாணவர்களும், குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

பார்ப்பன ஆதிக்கக் கோட்டையாக செயல்பட்டு வரும் ஏ.அய்.அய்.எம்.எஸ். இப்போது மக்கள் மன்றத்தில் அம்பலமாகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் அன்புமணியின் உறுதியான நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும்.

 

 

Pin It