திருச்சி வாளாடியைச் சேர்ந்தவன் சிறுவன் பெரியசாமி. அவனுடைய தாய்க்கு ஒரே மகன். பதினெட்டு வயதுகூட நிறையாத (16 வயது) பெரியசாமி தீவிரமான கருஞ்சட்டைத் தொண்டன். பெரியாரின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்ளும் போர் வீரன். பெரியாரின் ஆணையை ஏற்று அவனும் சட்ட நகலை எரித்தான்.

இரண்டாண்டகள் கடும் காவல் தண்டனை விதிக்கப்பட்ட அவன் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவன் ஆனதால் தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான். ஏழ்மையின் காரணமாய் நெடுந்தொலைவு பயணம் செய்ய வசதியில்லாத அவனுடைய தாய், அவனைக் கடைசி வரையில் உயிரோடு பார்க்கவே இல்லை.

ஒருநாள் தட்டப்பாறை சிறையில் பார்வையிட வந்தார் தமிழக கவர்னர் விஷ்ணுராம் மேதி. எல்லோரையும் கேட்டதைப் போலவே பெரிய சாமியையும் கவர்னர் விசாரித்தார். பெரியாரின் தொண்டன், அவர் ஆணை கேட்டுப் போராடிச் சிறுவர் சிறைக்கு வந்த ஒரே அரசியல் கைதி என்ற முறையில் அவனிடம் பெருமதிப்புக் காட்டிய கவர்னர் மேதி, ‘உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். இனிமேல் இது போன்ற காரியம் செய்ய மாட்டாயல்லவா’ என்றார்.

மொழி பெயர்ப்பாளர் மூலம் உரையாடல் நடைபெற்றது. சட்ட எரிப்பிற்கான காரணத்தைக் கவர்னரிடம் தெளிவாய் விளக்கிய பெரியசாமி, ‘வெளியே அனுப்பினால் மீண்டும் கொளுத்துவேன்’ என்றான்.

கவர்னர் மேதி அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். பெரியசாமியைத் தட்டிக் கொடுத்த கவர்னர் ‘கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக’ என அவருடைய நம்பிக்கைப்படிக் கூறிச் சென்றார்.

கவர்னர் சொன்னபடியே கடவுளின் ஆசீர்வாதம் வெகு விரைவிலேயே பெரியசாமிக்குக் கிடைத்தது. கடுமையான கோடைக்காலம் - பழக்கமில்லாத புழு புழுத்த சோளக்கஞ்சி - இரண்டும் ஒப்புக் கொள்ளாமல் பெரியசாமிக்கு வயிற்றுக் கடுப்பில் தொடங்கி - சரியான மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் ரத்தமாய் பேதியாகிப் பெரியசாமி நினைவு தடுமாறலானான்.

சிறை அதிகாரிகள், ‘விடுதலை செய்கிறோம். வெளியே போகிறாயா?’ என்று கேட்க, மௌனமாய்க் கையை அசைத்து மறுத்து விட்டான். சில மணி நேரம் தான்; இறந்து போனான். அந்த இளம் போராளிக்கு திருச்சி - லால்குடி சாலையில் இன்றும் ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது.

Pin It