கண்மூடித்தனமான ‘திராவிட’ எதிர்ப்பையும், திராவிட இயக்க எதிர்ப்பையும் இன்னும் சிலர் திட்டமிட்டே பரப்பிக் கொண்டுள்ளனர். அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழ் உணர்வும், மனித நேயமும் உள்ள அனைவரும் பதறித் துடித்தோம். அந்த வேளையிலும் கூட, சென்னையில் ஓரிடத்தில், ‘ திராவிடத்தின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால், இப்படிப் படுகொலைகள் தொடர்கின்றன’ என்று ஒரு பதாகை வைக்கப்பட்டி ருந்தது. அந்த நிகழ்விற்கும், திராவிடத்திற்கும் என்ன தொடர்பு? எதற்கெடுத்தாலும் திராவிட எதிர்ப்பைக் கையிலெடுப்பது, சிலரிடம் ஒரு விதமான மனநோயாகவே பரவிக் கொண்டுள்ளது.

ki_aa_pe_3401944ஆம் ஆண்டு, ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டும் போதே, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. போன்றவர்கள் எதிர்த்தனர் என்று பரவலாகக் கூறப்படுகின்றது. ஆனால் பழைய வரலாற்றுச் செய்திகளைப் புரட்டினால், வேறு பல உண்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அதேபோல, திராவிட இயக்கங்களால்தான், தெலுங்கர்களின் செல்வாக்கு இங்கே கூடிற்று என்றும் கூறப்படுகிறது. அதிலும் உண்மை யில்லை.

1938ஆம் ஆண்டு, பெரியார் சிறையிலிருக்கும்போது, நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அடுத்த ஆண்டு அவர் விடுதலையாகி வெளியே வந்த பின்பு, கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நீதிக்கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த தெலுங்கர்களின் நிலை, பெரியார் தலைவரான பிறகு குறைகிறது என்பதே உண்மை. பெரியார் தலைமையில், 14 புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் 5 பேர் மட்டுமே தெலுங்கர்கள். அவர்களுள்ளும், தொழிற்சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பாசுதேவ், 1939ஆம் ஆண்டே பதவி விலகிவிட்டார். அந்த இடத்திற்குக் கி.ஆ.பெ.விசுவநாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக, இன்றைய ஆந்திராவின் 9 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றைத் தன்னுள் கொண்டிருந்த அன்றைய சென்னைத் தலை மாகாணத்தின் பொறுப்பாளர்கள் 14 பேரில், 10 பேர் தமிழர்களாக இருந்தனர். 4 பேர் மட்டுமே தெலுங்கர்கள். இது எப்படித் தெலுங்கர் ஆதிக்கம் ஆகும்?

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகள் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டுக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர் பெரியார்தான். இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு  மாநாட்டை’ நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்தவரும் பெரியார்தான்.

நீதிக்கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்த பி.டி.ராஜன், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்கள் பெரியாருடன் பல வேளைகளில் முரண்டுபட்டு நின்றனர் என்பது உண்மைதான். அதற்கான காரணங்களைப் பழைய குடி அரசு ஏடுகளில் நம்மால் காண முடிகிறது.

பி.டி.ராஜன், கம்பராமாயணம், புராணங்கள் ஆகியனவற்றை ஆதரித்தும், பாராட்டியும் பல கூட்டங்களில் பேசினார். இதனைப் பெரியார் ஏற்கவில்லை. நீதிக்கட்சிக்குள் உள்ள பழைமைவாதத்தையும் சேர்த்தே தான் எதிர்த்துப் போராடுவதாகப் பெரியார் கூறினார். பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரைகளைப் பி.டி.ராஜன் போன்ற தலைவர்களால் ஏற்க முடியவில்லை. பி.டி.ராஜனின் பழைமைவாதத்தைக் கண்டித்து, 1944 இல் குடிஅரசு ஏட்டில், கைவல்யம் எழுதியுள்ள கட்டுரைகள் பல வெளியாகி உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.

சேலத்தில், 1944 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநாட்டில்தான், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெறுகின்றது. அதனை கி.ஆ.பெ.போன்றோர் கடுமையாக எதிர்த்தனர் என்று திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றது. ‘தமிழர் கழகம்’ என்றுதான் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆனால், 1942 ஜுன் மாதமே, பெரியார் மீது 14 குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதன் அடிப்படையில், கட்சிப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கி.ஆ.பெ.விலகிவிட்டார் என்பதுதானே உண்மை! அந்தப் பொறுப்பில்தானே 42ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் நியமிக்கப்பட்டார்!

42ஆம் ஆண்டு பதவி விலகியவர், சுட்டிக் காட்டிய 14 காரணங்களில், 5ஆவது காரணம் என்ன தெரியுமா? அதனை அப்படியே கீழே தருகிறேன்.

“தனித்திராவிட நாட்டுக்கான அரசியல மைப்பின் நகலை வரையவும், கட்சிக்கு வெளியே உள்ள பார்ப்பனரல்லாத முக்கியஸ்தர்களைக் கட்சியில் சேர்க்க முயற்சி செய்யவும் அமைக்கப்பட்ட துணைக்குழுக் கூட்டங்கள் ஒன்றைக்கூட நடத்தவில்லை”

திராவிட நாட்டுக்கான அரசியலமைப்பின் நகல் வரையப்பட வேண்டும் என்னும் கோரிக்கை, எப்படித் திராவிடத்திற்கு எதிர்ப்பாகும்?

1944ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில், உறுப்பினராகக் கி.ஆ.பெ. கலந்து கொண்டார் என்பது உண்மைதான். அப்போதும் அவர் பேச்சுக்கு மாநாட்டுத் திடலில் கடும் எதிர்ப்பு இருந்திருக்கிறது.

pt_rajan_380சேலம் மாநாடு முடிந்த பின்னரும், பி.டி.ராஜன், ஏ.பி.பாத்தோ போன்றவர்கள், நீதிக்கட்சியிலேயே தாங்கள் தொடர்வதாக அறிவித்தனர். சேலம் மாநாட்டுத் தீர்மானம், தென்னிந்திய நல உரிçமைச்சங்க நிர்வாகக் கமிட்டியைக் கட்டுப்படுத்தாது என்று அவர்கள் கூறினர்.

பிறகு, ஏ.பி.பாத்தோ தலைமையில் ‘புதிய நீதிக்கட்சி மாநாடு’ ஒன்றையும் சென்னையில் நடத்தினர். அந்த மாநாட்டில்(?) 20 முதல் 30 பேர் வரை இருந்தனர். அன்றைக்கும் திராவிட எதிர்ப்பின் வலிமை அவ்வளவாகத்தான் இருந்தது. அந்த மாநாட்டில், பி.ராமச்சந்திர ரெட்டியார் என்பவரைத் தான் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். தங்களின் திராவிட எதிர்ப்பை, ‘ ரெட்டியார்’ தலைமையில் காட்டிய புதிரை என்னவென்பது?

அந்த மாநாட்டில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று, “இனிமேல் ஜஸ்டிஸ் மேடைகளில், கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்புப் பேச்சுகள் பேச அனுமதிக்கக் கூடாது” என்பதாகும்.

“அப்பாடா, பெரியார் தொலைந்தார். இனிமேல் எவரும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசக்கூடாது. பார்ப்பனரல்லாதவர்களுக்கு அரசுப் பணிகளில் வேலைகள் பெற முயற்சிப்பது மட்டும்தான் நீதிக்கட்சியின் வேலை” என்று அவர்கள் கருதினர்.

ஆகவே ‘திராவிட’ எதிர்ப்பின் அடிநாதம், பகுத்தறிவு எதிர்ப்புதான் என்பது தெளிவாகின்றது. புராண, இதிகாசங்களையும், பார்ப்பனர்களையும் ஆதரித்தவர்களே அன்று ‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்தை எதிர்த்தனர். இன்றும் பார்ப்பனியத்திற்கு மறைமுகமாகத் துணை போகின்றவர்களே, திராவிடத்தையும், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கின்றனர்.

(சான்று : 1944ஆம் ஆண்டு, குடியரசு ஏடுகள் மற்றும் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள, ‘பெரியார் : ஆகஸ்டு 15’)

----------------------------------

Comments

18 comments

18
ஏகாந்தன்
ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அதை அறியாத தமிழனின் வாயிலே மண்ணுதான்.
Raja Sundarraman
திராவிட இயக்கக் கருத்தியலை ,தமிழ் தேசியயியலாளர் அனைவரும் பேராசிரியப் பெருத்தகை நோக்கில் ஏற்போம் .
ஆனால் ,நமது அண்டை உறவுகளைக் காக்க ,திராவிட முன்னேற்ற கழக அரசு எடுத்த நடவடிக்கைகள், கட்சி என்ற நிலையில் அது வெளியிட்ட அறிக்கைகள் தாராளமாக போதுமானவை என்ற அவரின் நிலை ,மனவேதனையை ஏற்படுத்துகிறது.
சாகுல் அமீது
"திராவிடத்தின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால், இப்படிப் படுகொலைகள் தொடர்கின்றன" என்ற பதாகையை மறுப்பதற்கு திராவிட கொள்கை உடைய இயக்கங்களால் இப்படுகொலைகளை தடுப்பதற்கு என்ன செய்யப்படிருக்கின்றன என்று விளக்கி இருந்தீர்களே ஆனால் ஏற்புடையதாக இருந்திருக்கும். ஒருவேளை திராவிட இயக்கங்களால் ஒன்றும் செய்யப்படாததாலே தான் பழைய வரலாற்றை பற்றி எழுதி இருக்கிறீர்களா? பெரியாரின் திராவிட கொள்கைகளால் நாம் பெரும் பயனடைந்தோம். ஆனால் இன்றைய திராவிட அரசியல் இயக்கங்களால் நாம் பெரும் தீங்கடைகிறோம்.
காந்தியோடு காங்கிரஸ் போயிருக்கலாம். பெரியாரோடு திராவிடம் போயிருக்கலாம்.
rajanparthipan
Hindu desiyam has its representative in the name of Dravida desiyam in Tamilnadu . In order to bring forth the actual Periyarisam in TN, first step is'' Oppose the Dravida desiyam " which has disuised in the name of periyar for the past four decades. Or other wise simply write the next articles.
ரவி,ஒசூர்.
எந்த பிரச்சினைக்காக அந்த பதாகை வைக்கப்பட்டதோ அந்தப்பிரச்சனைக்கு இவர் வரிந்து உயர்த்திப் பிடிக்கும் திராவிடம் பேசி அரியணையேரிய திராவிட இயக்கங்கள் என்ன செய்கின்றது என்பதை தன் எண்ணத்தை பதிவு செய்வதற்குமுன் யோசித்தாரா! இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் அய்யா செயல்பாட்டின் வரலாறு.
சர்வசித்தன்
ஐயா சு.வீ அவர்களே, தங்கள் இன உணர்வையும், ஈழத்தமிழர்களுக்காக தாங்கள் செய்யும் தொண்டுகளையும் மதிக்கிறோம்.ஆனால், கலைஞரின் செயல்களுக்கு இன்றுவரை முட்டுக்கொடுதே வருகிறீர்களே அதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏழு கோடித் தமிழர்கள் வாழும் நாட்டில் நேர்மையும், நெஞ்சுரமும், யார்க்கும் விலைபோகாத ‘ஆண்மையும்” உள்ள ஓர் தலைவனை இனங்கண்டு இனியாதல் தமிழினம் தலை நிமிர்ந்து நடக்க தங்களைப் போன்றவர்கள் முயற்சி செய்யலாமே. திராவிடம்... திராவிடம் எனப்பேசியே தமிழனின் மூளைகளைச் சலவை செய்தவர்கள் ஆட்சியில் இருக்கும் போதுதான் அண்டை நாட்டில் அதே இனம் அழித்தொழிக்கப்பட்டது. அப்போது, டெல்லி ஆரியத்தின் மடியில் சுகங்கண்ட நமது திராவிடத் தலைமை இப்போது (நேற்று முன் தினம்) மீண்டும் திராவிடத்துக்கு ஆபத்து என ஆரம்பித்திருக்கிறது! தாங்களும் அதையே மீண்டும் கூறுகிறீர்கள். இதுதான் புரியவில்லை.[www.sarvachitthan.wordpress.com]
vasu devan
மலையாளிகளின் ஆதிக்கத்தை பெரியார் எதிர்த்தார... இதனால்தான் சொல்கிறோம் திராவிடன் என்பது ஏமாற்று வேலை... பித்தலாட்டம்... தமிழனும் தெலுங்கனும் கன்னடனும் மலையாளியும் ஒரே இனம் என சொல்லும் பெரியார்... ஏன் மலையாளிகளை வேறு இனமாக கருதி எதிர்க்க வேண்டும்... திராவிட இனத்துக்கு என ஒரு பொதுவான மொழி உண்டா ?
SRIRASA
சுப.வீ.யின் கட்டுரை மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதுபோல் உள்ளது. இப்போது இந்தக் கட்டுரைக்கான அவசியம் என்ன? வெறும் வெற்று வாயாடல்கள் என்னதான் செய்து கிழித்துவிடப் போகின்றன.
திராவிட ஆட்சிகள் மாறி மாறி நடந்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் திராவிட ஆட்சியாளர்கள் விளம்பரம் போடுகிறார்கள் வீடற்று அலையும் தமிழர்களைப் பற்றி... அன்புள்ள திராவிடத் தாத்தாவுக்கு, ஒரே ஒப்பற்ற தமிழர் தலைவர் என்று உருவேற்றப்பட்ட தமிழர் தாத்தாவுக்கு தெருவோரத்து அனாதைத் தமிழ்க்குழந்தைகள் அன்புள்ள தாத்தாவுக்கு என்று கடிதம் எழுதுகிறார்கள்... தமிழனின் மொழி நிலைமையோ இன்னும் கேவலம்... தமிழை உருப்படியான எல்லா நிலைகளிலும் பயன்படு மொழியாகவேணும் இத்தனை ஆண்டுகால இவர்களது ஆட்சியில் மாற்ற முடிந்திருக்கிறதா?
திராவிடத்து மலையாளிகளாலும், திராவிடத்துத் தெலுங்கர்களாலும், திராவிடத்துக் கன்னடர்களாலும் முடிந்த, வளர்க்கப்பட்ட மொழிப்பற்று திராவிடத் தமிழர்களால் மட்டும் முடியாமல் போனது ஏன்?
தமிழ் மொழியை முடிந்த அளவு தொலைக்காட்சி, ஊடகம், இதழியல், கல்வி, உயர்கல்வி, பொது இடங்கள், அலுவலகங்கள், கல்விக்கூடங்கள் என்று அனைத்து வழிகளிலும் அபிமன்யு வதம் செய்து கொண்டு, தமிழர்களையும் இலவசங்களை நோக்கிக் கையேந்தும் பிச்சைக்காரர்களாக அலையவிட்டுவிட்டு, இவர்கள் மட்டும் ஆரியம் திராவிடம் எல்லாம் மறந்து பணம், முலதனம் சார்ந்த சர்வதேசியவாதிகளாய்ப் பரிணமித்து விட்டார்கள். மத்தியில் கொள்ளைக்கான அதிகாரப் பகிர்வு, சர்வதேச நிதி முலதனத்துடனான கொள்ளை இணைப்பு, உடன்பாடு, சர்வதேசப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பு, சர்வதேச ஊடக வலைப்பின்னலின் ஒரு அங்கமாக மாறி, தமிழர்கள் உள்ளிட்ட சகலரையும் ஒட்டச் சுரண்டும் வாழ்முறை நோக்கி நகர்ந்து விட்டு... ஏன் சுப.வீ. போன்றவர்கள் அரதப்பழசான நிலப்பிரபுத்துவ வாதங்களை நவீனக் கருத்தியல் போன்ற மாயை மிடுக்கோடு முன் வைக்கிறார்கள்?
இளஞ்செழியன்
//பார்ப்பனியத்திற்கு மறைமுகமாகத் துணை //போகின்றவர்களே, திராவிடத்தையும், திராவிட //இயக்கத்தையும் எதிர்க்கின்றனர்
யாரோ ஓரிருவர் கூறிக்கொண்டிருப்பதற்கெல்லாம் உட்கார்ந்து ஆராய்ந்து பதிலளித்துக் கொண்டிருக்கும் அய்யா சுபவீ அவர்களே! ஊரே கேட்கிறது? காஞ்சி சங்கராச்சிரியனுக்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பது யார்? நாடே கேட்கிறது. சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் பார்ப்பனர்களின் பங்கு எவ்வளவு? ஒளிவு மறைவின்றி புள்ளிவிவரத்தை தாங்கள் தரத்தயாரா? திராவிடத்துக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு, பார்ப்பனர்களை நேரடியாகவே ஆதரிக்கிற கருணாநிதி கும்பலில் போய் மாட்டிக்கொண்டீரே. அதை நினைத்தால் தான் அய்யா வேதனையாய் உள்ளது.
selvam. erode
சுப.வீ அவர்களே... *** *** ****** ******** ********** பார்ப்பன வெறிப்பிடித்த ராஜாஜியின் ஆலோசனையை கேட்டுத்தான் பெரியார் செயல்ப்பட்டார். திராவிட கருணாநிதி, வைகோ போன்றவர்கள் தான் பார்ப்பனிய பாஜகவையும் ஆர்.எஸ்..எஸ் யையும் தமிழ் நாட்டில் காலுன்ற செய்தார்கள். நடிகர் எஸ்.வி சேகரை திமுகவில் சேர்க்கவும் கருணாநிதி முயற்சி செய்தார். தஞ்சை பெரிய கோவில் 1000௦௦ -ம ஆண்டு விழாவில் .. ஆரிய வெறிப்பிடித்த பத்மா சுப்ரமணித்தியத்தின் நாட்டிய நிகழ்ச்சிக்கு முதல் மரியாதையை கொடுத்ததோடு தங்க
நாணயத்தையும் இந்த திராவிட கருணாநிதிதான் பரிசாக கொடுத்தார். நான் பாப்பாத்திதான் என வெளிப்படையாக அறிவித்த ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என *** **** வீரமணி பட்டம் கொடுத்தார். பார்ப்பனிய வெறிப்பிடித்த *** கால்கள்தான் திராவிடம்... தமிழனை குதற துடிக்கிறது.
surya
திராவிட எதிர்ப்பு மன நோய் அல்ல -மண் குமுறல்

பதாகை பார்த்து பதறி போன நீங்கள் -ஈழ
படுகொலை பார்த்து பதறாமல் போனது ஏன்?
இன அழிப்பின் இறுதி நாளில் ஒருமணி நேர
உணவு இடைவேளை உண்ணா விரதத்தை
ஒன்றும் கேழ்கமல் போனது ஏன்?
பெரியாரின் திராவிடம் எங்களை பெருமை கொள்ளசெயதது.
வீரமணி திராவிடம் கல்லூரி வைத்து காசு பார்க்க செய்தது .
கருணாநிதி திராவிடம் பதவி கட்டிலை பதுகாக்கசெயதது .
இன்றைய நிலையில் திராவிடம் என்பது
கருணாநிதி வீட்டு கருவேப்பிலை மாதிரி தேவை படும்போது தாளிப்பதற்கு .
தமிழ்குமரன்
அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது, ......../////////////திரு. சு.ப.வீ அவர்களுக்கு.. இறந்து போனது.. ஒருவர் அல்ல.. ஐநூறறுக்கும் மேற்பட்டவர்கள். முன்னவர்களின் தொடர்ச்சியாக இறந்தவர்... இப்பொழுது கொல்லபட்டிருக்கும் ஜெயக்குமார். நீங்கள் ஆதவரவு தரும் இந்திய சிங்கள படையின் கடைசி வேட்டை. (நீங்கள் தி.மு.க வை ஆதாரித்தாலே... அது இந்திய சிங்கள ஆதரவு தான்..... ஆடு பகை குட்டி உறவா.. *** ***** வெளியே வாருங்கள் அய்யா)
புரவி
உங்களை போன்றவர்களுக்குதான் வள்ளுவன் இந்த குரலை எழுதி இருப்பன் போலிருகிறது

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்
ம பொன்ராஜ்
1 . மலையாள, கன்னட, ஆந்திராவில் 'திராவிட' என்கிற பெயரில் ஏதேனும் கட்சிகள் உள்ளதா? இல்லை எனில் ஏன்?
2 . ஓணத்திற்கு தமிழ் நாட்டில் விடுமுறை உண்டு. அதே போல பொங்கலுக்கு எத்தனை 'திராவிட' மாநிலங்கள் விடுமுறை விடுகின்றன?
3 . ஏன் ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்கு தண்ணி கொடுக்க மாட்டேன் என்கிறான்?
4 . மொழி வாரி மாநிலங்கள் அமைந்த நாளை அந்த அந்த மாநிலங்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவர்களுக்கென் இன உணர்வை நிலை நிறுத்த பாடல்கள், கொடி, நாள், தலைவர்கள் என்று பல உள்ளன. அதனால் இன்று வரை ஒரு கன்னட,மலையாள,ஆந்திர மீனவனை சிங்களன் கொன்றது கிடையாது. கொன்றால் என்ன நடக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆக, தமிழன் என்ற இன உணர்வு, அவனிடம் இல்லாமல் போது அவன் 'திராவிடம்' பேசியதால் தானே? 500 க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இறந்த போதும் 'திராவிடம்' தமிழனை காக என்ன செய்தது? ஆக, 500 க்கும் அதிகமான முறை 'திராவிடம்' தோற்றுவிட்டது என கொள்ளலாமா? அப்படி ஒரு திராவிடம் இனி 'தமிழனுக்கு' தேவையா?
5 . தமிழன் சீமான் 'நான் திருப்பி அடிப்பேன்' என்று முழங்கியதும், அதே போல 'சிங்களர்கள்' சென்னையில் அடித்து நொறுக்கப் பட்டதும் தானே 'இனி தமிழக மீனவர்களை' (குறைந்த பட்சம் தேர்தல் வரை) கொல்ல கூடாது என்று இந்திய அரசு சொல்கிறது. ஆனால் 'திராவிடம்' பேசியவர்கள் தமிழன் சாகும் போது கடிதம் எழுதுவது, காசு கொடுப்பதும், தனது பிள்ளைகளுக்கு பதவி என்று வரும்போது டெல்லிக்கு பறப்பதும் என்று இருந்தால், அப்படி ஒரு கேடு கெட்ட 'திராவிட அரசியல்' தமிழனுக்கு தேவையா?
6 . ராசா என்கிற ஒரு தலித்தை பழி வாங்க ஆரியம் துடிக்கிறது என்று நா கூசாமல் சொன்ன நீங்கள், 'உமா சங்கர்' என்கிற தலித்தை கருணாநிதி நிந்தித்த போது யார் தலையில் பேன் பார்த்து கொண்டு இருந்தீர்கள்?
... இப்போது சொல்லுங்கள் 'தமிழினம்' பற்றி பேசுவது ஆரோக்கியமா? இல்லை 'திராவிடம் (அதுவும் தேவைப் படும்போது மட்டும்) பேசுவது' மனநோயா' என்று...!!!
தமிழ்குமரன்
பொன்ராஜ் உங்கள் பெயருக்கேற்றபோல உங்கள் கேள்விகளும் சிந்தனையும் உள்ளது. நன்றி
elagnairu
பக்கத்து நாட்டில் இனத்தமிழன் கொலை செய்யப்படும் பொழுது.. ஓட்டு வேட்டையாடிய துரோகக்கும்பல் திமுக.. விளிம்புநிலை வெற்றிக்குப்பின்.. டெல்லிக்கு பதவிசுகத்திற்கு அலைந்து.. நீராராடியா துணையோடு பதவிபெற்று 2ஜி ஊழல் செய்த பண்வெறிக் கும்பல்.. திராவிட துரோகத்திலிருந்து..... தமிழன் நிலைக்கு எங்களை விரட்டிய சுயநல திமுக கும்பலின் துரோகம் இனியும் நீடிக்காது
sathish
தமிழ் பேசுபவர்களை தமிழர்கள் என்று சொல்வதில் என்ன தயக்கம் ? ஏன் தமிழர்களை 'திராவிடர்கள்' என்று அழைக்க வேண்டும்

உங்கள் வாதபடியே வருவோம் ? நீங்கள் திராவிடம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் ?

1) 'த்ரிவடுகம்' (தெலுங்கர்கள்) தான் மருவி 'திராவிடம்' ஆயிற்று என்று 'சி ப ஆதித்தனார்' கூறுகிறார்
2) தென்னிந்திய ப்ராஹ்மணர்களே 'திராவிடர்கள்' என்று 'britannica' சொல்கிறது
3) மனு தர்மம் 'க்ஷத்ரியர்களின்' ஒரு பிரிவையே 'திராவிடர்கள்' என்று சொல்கிறது
4) இன்னும் ஒரு சில பேர் 'திராவிடம் தனி இனம்' என்று சொல்கிறார்கள். 'தனி இனம்' என்றால் அதன் 'தாய் மொழி ' எது

மேற்சொன்ன 'நான்கில்' எது உண்மையான திராவிடம் ? உண்மையான 'திராவிடம்' எது வென்றே தெரியாமல் 'திராவிடம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தி இங்கே '50 ஆண்டுகள்' நன்றாக கல்லா கட்டி இருக்கிறீர்கள்

நன்றி
sathish
// ஆகவே ‘திராவிட’ எதிர்ப்பின் அடிநாதம், பகுத்தறிவு எதிர்ப்புதான் என்பது தெளிவாகின்றது. புராண, இதிகாசங்களையும், பார்ப்பனர்களையும் ஆதரித்தவர்களே அன்று ‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்தை எதிர்த்தனர். இன்றும் பார்ப்பனியத்திற்கு மறைமுகமாகத் துணை போகின்றவர்களே, திராவிடத்தையும், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கின்றனர். //

'திராவிட இயக்கத்திற்கும்' - 'பகுத்தறிவுக்கும்' ஒரு புண்ணாக்கு சம்பந்தமும் இல்லை என்பது திண்ணம்
திராவிடம் என்பதே ஒரு வகையில் 'பார்ப்பனீயத்தை' தான் குறிக்கிறது. இதில் என்ன 'பார்ப்பனீய எதிர்ப்பு' ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.