தினத்தந்தி’ சென்னைப் பதிப்பில் (20.7.2007) வாஸ்து மூட நம்பிக்கைக்கு ஓர் உயிர்ப் பலியான செய்தி வந்துள்ளது.

சென்னை கொசப்பேட்டையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் வெங்கடேசனின் மனைவி தீபா (வயது 24) - சமையலறையில் ‘கியாஸ்’ சிலிண்டர் பற்ற வைத்த போது சிலிண்டரில் இருந்த கியாஸ், வீடு முழுதும் பரவி இருந்ததால் திடீரென தீ பிடித்து உடையில் பற்றி பலியானார்.

தீ விபத்து நடந்த வீட்டின் சமையலறை கதவு ஜன்னல்கள் ஏற்கனவே செங்கல் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதனால் தான் சிலிண்டரிலிருந்து வெளியேறிய ‘கியாஸ்’ வெளியில் செல்ல முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் இறந்து போன பெண்ணின் கணவர் வெங்கடேசனிடம் கேட்டபோது,

“கடந்த சில மாதங்களாக எனக்கும், எனது மனைவி தீபாவுக்கும் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் வாஸ்து நிபுணர் ஒருவரை சந்தித்தேன். அவர் வந்து எனது வீட்டைப் பார்த்தார். பின்னர் கிழக்குப் பக்கமாக இருக்கும் வாசலை அடைத்து தெற்கு பக்கமாக வாசலை வைக்கச் சொன்னார். அப்படி செய்தால் உடல்நலக் கோளாறு அனைத்தும் சரியாகி விடும் என்றார். அவர் சொற்படி, கதவு ஜன்னலை மாற்றியமைத்தேன். அது இப்போது எனது மனைவியின் உயிரையே பறித்து விட்டது என்றார்.”

அதே நாளிட்ட ‘தினத்தந்தி’ யில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாஸ்து மீன்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பறி முதல் செய்யப்பட்டது என்ற செய்தி வெளிவந்தது. கடந்த 17 ஆம் தேதி தாய்லாந்திலிருந்து வாஸ்து மீன் கடத்தப்பட்டு, பிடிபட்ட செய்தி வெளிவந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுங்கத்துறை ஆணையர் ராஜன், விமானங்கள் மூலம் ‘வாஸ்து’ மீன்கள் கடத்தப்படுவது பற்றி ஏராளமான புகார்கள் வருகின்றன என்றும், இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

‘வாஸ்து மீன்கள்’ என்று சில வகை மீன்கள் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகின்றன. நட்சத்திர ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள், பணக்காரர் வீடுகளில் ‘வாஸ்து தோஷத்தை’க் கழிக்க இந்த ‘மீன்கள்’ வைக்கப்படுகின்றன. இதன் விலை பல லட்சம் ரூபாய்!

சென்னை மாநகரக் காவல்துறையும் இப்படி உயிர்ப்பலி வாங்கக் கூடிய கடத்தலுக்கு காரணமான ‘வாஸ்து’ வை நம்பிச் செயல்பட்டு வருவது வெட்கக் கேடானதாகும்.

 இதுதான் பெரியார் ஆட்சியா?

வாஸ்து - கடவுள்களிடம் சரணடையும் காவல்துறை

தமிழ்நாட்டில் ‘பெரியார் ஆட்சி’ நடப்பதாக காது கிழியப் பிரச்சாரம் நடக்கிறது. ஆனால், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் கடவுளர் படங்களும், பூசைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மாநகரக் காவல் துறையில் ஓட்டுநரின் இருக்கைக்கு எதிரே ஒவ்வொரு ஓட்டுநரின் விருப்பக் கடவுள்களும் கண்ணாடி போட்டு மாட்டப்பட்டுள்ளன.

1967 இல் ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் அண்ணா, அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டக் கூடாது என்று பிறப்பித்த ஆணை செயலிழந்து கிடக்கிறது. 2005 இல் இப்போது சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக இருக்கும் லத்திகாசரண் (அப்போது காவல்துறை துணைத் தலைவர்) காவல்துறைக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் காவல்துறை அதிகாரிகள் எந்த மதச் சடங்குகளிலும் ஈடுபடக் கூடாது; அரசு வளாகங்களில் வழிபாட்டுத் தலங்கள் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் - அதே லத்திகா சரணே காவல் நிலையங்களில் ‘வாஸ்து மீன்கள்’ வைப்பதற்கு உதவுவதோடு மேற் பார்வையும் செய்கிறார்.

பெரம்பலூர் மாவட்டக் காவல்துறை அலுவலக வளாகத்துக்குள்ளேயே மாவட்டக் காவல்துறை அதிகாரியின் முழு ஆதரவோடு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு தந்தார், பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் இலட்சுமணன். உடனே மாவட்டக் காவல்துறை அதிகாரியே தோழர் இலட்சுமணனை அழைத்து இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்க்க வேண்டாம் என்று, ‘சமாதானம்’ பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளாகவும், “பெரியார் ஆட்சி”யில் பார்ப்பனர்களும் வடநாட்டுக்காரர்களுமே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் - குற்றவாளிகளைப் பிடிக்க ‘வாஸ்து’வையும், ‘கடவுளை’யும் நம்புகிற வெட்கக் கேடான நிலைக்கு தமிழக காவல்துறை போய்க் கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை முதலமைச்சர் பொறுப் பின் கீழ் உள்ள துறையாகும். மூட நம்பிக்கையின் முடை நாற்றம் வீசும் சென்னை மாநகரக் காவல் துறை பற்றி அரசின் தீவிர ஆதரவு நாளேடான ‘தினத்தந்தி’யே கடந்த ஜூலை 17 இல் செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தியை அப்படியே இங்கு வெளியிடுகிறோம்:

சென்னை நகர போலீசாரிடையே தற்போது கடவுள் நம்பிக்கை அதிகரித் துள்ளது. குற்றவாளிகளைப் பிடிப் பதற்கும், குற்றங்களை தடுப்பதற்கும் கடவுள் அருள் வேண்டும் என்று நம்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தைக்கூட பெரிதும் மதிக்கிறார்கள்.

சென்னை நகரில் நடந்த கிரில் கொள்ளை சம்பவங்களில் வடநாட்டு கொள்ளையர்கள் பிடிபட்டனர். பல ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த பீரோ புல்லிங் கொள்ளையன் கைது செய்யப்பட்டான். சென்னை கோட்டூர்புரத்தில் கொடூரமான முறையில் டாக்டர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் எந்தவித தடயமும் இல்லாத நிலையில் மறுநாளே குற்றவாளிகள் புதுக் கோட்டையில் தற்செயலாக கைது செய்யப்பட்டனர்.

இப்படி போலீசுக்கு இக்கட்டான வழக்குகளில் உடனடியாக தீர்வு கிடைத்தது. இதற்கு போலீசாரின் உண்மையான கடின உழைப்பு, திறமையான செயல்பாடு, சிறப்பான துப்பறிவு திறன் போன்றவை முக்கிய காரணமாக இருந்தாலும்கூட, எல்லாவற்றிற்கும் மேலாக அதிர்ஷ்டமும், கடவுளின் அருளும் ஒரு காரணம் என்று உயர் போலீஸ் அதிகாரிகளிலிருந்து, போலீஸ்காரர்கள் வரை கருத்து தெரிவித்தனர். வெளிப்படையாகவே சென்னை போலீஸ் வட்டாரத்தில் இந்தப் பேச்சு பேசப்பட்டது.

சென்னை சேத்துப்பட்டில் ஆட்டோ டிரைவர் ஒருவர் சமீபத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடும் போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகள் பிடிபட்டனர். இதுபற்றி சேத்துப்பட்டு போலீசார் வெளிப்படையாகவே சில கருத்துக்களை கூறினார்கள். சேத்துப்பட்டில் 70 ஆண்டுகாலமாக பிரபலமாக விளங்கும் அருள்மிகு கருக் காத்தம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சேத்துப்பட்டு போலீசார் சார்பில் தினமும் பூஜைகள் செய்யப்படும். ஒரு வாரம் பூஜை செய்யாமல் நிறுத்தி விட்டார்கள். இதனால்தான் அமைதியாக இருந்த சேத்துப்பட்டில் திடீரென்று ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்ற போலீசார் நம்பினார்கள்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமலும் கடும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கருக்காத்தம்மனுக்கு பூஜையை நிறுத்தியதால் தான், கொலையும் நடந்துவிட்டது. குற்றவாளிகளையும் பிடிக்க முடியவில்லை என்று கருதிய சேத்துப்பட்டு போலீசார் உடனடியாக பூஜை செய்ய ஆரம்பித்தார்கள். பூஜை ஆரம்பித்த மறுநாளே குற்றவாளிகள் பிடிபட்டதாக சேத்துப் பட்டு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கூறினார். இப்போது தினமும் கருக்காத்தம்மனை வழிபட்ட பிறகு தான் பணியைத் தொடங்குகிறேன் என்றும் பக்தி பரவசத்தோடு அவர் கூறுகிறார்.

வாஸ்து சாஸ்திரம்

சென்னை போலீசார் வாஸ்து சாஸ்திரத்தையும் பெரிதும் நம்பு கிறார்கள். ஜூலை 16 அன்று திறந்து வைக்கப்பட்ட சென்னை ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் மீன்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த மீன் தொட்டிக்குள் நல்ல காரியங்கள் நடக்கச் செய்யும் வாஸ்து மீன் ‘புளோரான்’ ஒன்று துள்ளி விளையாடுகிறது.

இந்த மீன் உள்ள இடத்தில் கெட்ட காரியங்கள் நடக்காதாம். சென்னை ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வாஸ்து மீனை போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் பார்வையிட்டார். அந்த மீனின் அற்புதம் குறித்து தனது சக அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார்.

சென்னை நகரிலுள்ள பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் கடவுள் படங்களை வைத்து வெள்ளிக் கிழமைகளில் பெரிய பூஜை நடப்பதும் வழக்கமாக உள்ளது. பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை தங்கள் அலுவலகத்தில் வைத்து வழிபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ‘தினத்தந்தி’ செய்தி வெளியிட்டுள்ளது.

(குறிப்பு: ‘தினத்தந்தி’ இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியை, ஏட்டில் வெளியிடாமல் என்ன காரணத்தினாலோ தவிர்த்து விட்டது)

Pin It