தமிழ் மொழியும், இனமும் இரண்டாயிரம் ஆண்டு காலமாக எதிர் கொண்டு வருகின்ற இடர்ப்பாடுகள், சொல்லில் வடிக்கத்தக்கதன்று. அதிலும் குறிப்பாக தாய்த் தமிழ் மொழி, வேற்று மொழிகளின் படையெடுப்புகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே நடத்துகின்ற போராட்டங்கள் வீரமும், மானமும் செறிந்தததோடு மட்டுமன்றி, ஈடிணையற்ற ஈகமும் நிறைந்ததாகும். சமற்கிருதமும், தமிழ் மண்ணுக்குச் சற்றும் தொடர்பில்லாத வந்தேறிகளின் படையெடுப்பும் மொழியையும், இனத்தையும் இன்றளவும் பாடாய்ப்படுத்தி வருகின்றன. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கங்களெல்லாம் அருகித் தேய்ந்து, எங்கே தமிழ், எதிலே தமிழ் என்று தேடுமளவிற்குத் தரம் தாழ்ந்து நிற்கின்றன. இனத்தையும், மொழியையும் காப்பதற்காகவே வந்துதித்த திராவிட இயக்கங்கள், என்று பெருமையாய்ப் பீற்றிக் கொள்கின்ற கழக ஆட்சிகள், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் அசைக்க முடியாத பலத்தோடு வேரூன்றி நின்ற நிலையிலும் கூட, தமிழ்மொழி ஒடுக்கப்பட்டு, தமிழனைப் போன்றே ஏதிலியாக நிற்கிறது.
இன்று வணிக நிறுவனங்களின் பெயர்கள், தமிழில் தாங்கி அமையும் வண்ணம் தமிழில்தான், பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டு நிறைவேற்றுகின்ற நிலைக்கு திராவிட இயக்கம் ஆளாகியிருக்கிறது. எந்த மொழியை கருவியாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தனரோ, அந்த மொழியை, தங்களின் சொந்த நலத்திற்கு கேடு நேர்ந்தால், உடனடியாகக் கைகழுவி விட்டு அதற்கு விளக்கம் கற்பிக்கும் நிலையில்தான் தமிழகத்தின் ஆளும் வர்க்கம் இருந்து வருகிறது. பதவி என்றால் உடனடியாகத் தில்லி செல்வதும், மொழி, இனம் சார்ந்த உரிமைகளுக்கு கடிதத்தின் மூலம் தகவல் அனுப்புவதும்தான் தமிழக முதல்வரின் இன்றைய வளர்ச்சி நிலை. எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தால் உடனே சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம்; அத்துடன் முடிந்தது. அந்தத் தீர்மானம் என்னவாயிற்று? அது குறித்து நடுவணரசு என்ன முடிவெடுத்தது? இவை குறித்து தமிழக அரசுக்கு ஒரு போதும் கவலையில்லை.
ஆனால், தமிழ்ச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சான்றோர் பெருமக்களும், அறிஞர்களும், வழக்குரைஞர்களும் அவ்வப்போது தமிழரைத் தட்டியெழுப்புகின்ற அறப்போராட்டத்தை நடத்துவதில் எப்போதும் முனைப்புக் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஈழச் சிக்கலில் தமிழக வழக்குரைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால் இந்திய நடுவணரசும், தமிழக அரசும் திணறிப் போய்விட்டன. அதுபோன்றதொரு உண்ணாநிலை அறப்போராட்டத்தை அண்மையில் மதுரையில் சில வழக்குரைஞர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். அதன் விளைவு, இன்று பல தரப்பிலும் முக்கியமான விவாதப் பொருளாய், வழக்காடு மொழிச் சிக்கல் மாறிவிட்டது. பல்லாயிரமாண்டுப் பழமை வாய்ந்த உலகின் மூத்த மொழி தமிழ், அதன் தாயகத்தில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உரிமைக்குரல் எழுப்புகிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக வைக்கப்பட்டு வருகிறது. அக்கோரிக்கையும்கூட, வேறு எங்குமல்ல, தமிழகத்தில்தான்.
ஆனால் அதன் பின்னுள்ள நியாயமான விசயங்களை மறைத்து, பிராந்திய வெறியுடன் தமிழ் அமைப்புகள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டை தேசியவாதிகள் என்று சொல்லப்படுகின்ற சிலர் முன் வைக்கின்றனர். 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348 (2)ஆவது பிரிவு மற்றும் 1963ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் 7ஆவது பிரிவு ஆகியவற்றைப் பொறுத்தமட்டில், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களுக்குச் சமமாக தமிழ்நாடு பாவிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு எதிர்பார்க்கிறது' என்று சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் முரசொலியில் முதல்வர் கருணாநிதியும் 'எப்போதும் போல' புள்ளிவிபரங்களோடு கடிதம் எழுதியிருக்கிறார்.
பிற மாநிலங்களிலிருந்து பணியாற்ற வரும் வெகு சில நீதிபதிகளின் வசதிக்காக, 8 கோடி மக்களின் நியாயமான மொழி உரிமை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறுகின்ற வழக்குகளின் விபரங்களை அளிப்பதற்கோ அல்லது வேறு மாநிலங்களுடனோ எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாத தமிழக உயர்நீதிமன்றங்களில், வழக்காடு மொழியாக ஏன் தமிழ் மொழியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்? தங்களின் வழக்குத் தொடர்பான விபரங்களை, தங்கள் மொழியிலேயே அறிந்து கொள்ளும் உரிமை அனைத்து மக்களுக்கும் பொதுவானது எனும் போது, தமிழர்கள் உள்ளிட்ட பிற தேசிய இனங்களின் தாய்மொழியை மறுப்பது ஏன்?
இன்னும் சொல்லப்போனால், தமிழுக்கு மட்டுமே நடத்துகின்ற போராட்டமல்ல. பிற மாநில மொழிகளுக்கும் சேர்த்து நடைபெறுகின்ற அறப்போராட்டமே இஃது. 'உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதற்கும், உடனடியாகத் தீர்ப்புகள் வழங்காமைக்கும் அடிப்படைக் காரணமே மொழிப்பிரச்சனைதான். சாதாரண சொத்துரிமை வழக்குகளில் உறவுமுறை குறித்துக் கூறும்போது, ஆங்கிலத்தில் 'அங்கிள்' என்றும், 'ஆண்ட்டி' என்றும் சொல்லும்போது, நீதிபதிக்கு அந்த உறவு மாமாவா, அத்தையா, சித்தப்பாவா எனக் குழப்பம் வருவது இயற்கை. 'கொடிவழி பட்டியல்' என்றழைக்கப்படும் நிமீஸீமீஷீறீஷீரீவீநீணீறீ ஜிணீதீறீமீஐக் கூட புரிந்து கொண்டு விளக்குவதற்கு கால விரயம் ஏற்படுகிறது. ஆகையால் தாய்மொழியில் வழக்கு நடக்கும்போது சொத்துரிமை வழக்குகளை மட்டுமன்றி பிற வழக்குகளையும் எளிதாக வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் புரிந்து கொள்ள இயலும்' என்கிறார் வழக்குரைஞர் இலஜபதிராய்.
உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்ட பின்புதான் தமிழை உயர்நீதிமன்ற மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று சில நீதிபதிகளும், நடுவண் அமைச்சர் வீரப்ப மொய்லியும் கூறுவது மிக அபத்தமான வாதம். இவர்கள் கட்டமைப்பு வசதி என்று சொல்வது, சட்டநூல்களின் மொழி பெயர்ப்பையே. செம்மொழி மாநாட்டிற்காக தமிழக முதல்வரின் படைப்புகளை சில வாரங்களிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முடியுமானால், சட்ட நூல்களுக்கு மட்டும் எத்தனை மாதங்களாகும்? அது சரி... கட்டமைப்பு வசதி என்று எத்தனை ஆண்டுகள்தான் இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்? அதுமட்டுமல்ல, உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள 54 நீதிபதிகளில் இரண்டு பேரைத் தவிர, மற்ற அனைவரும் தமிழர்கள். வழக்காடுகின்ற பெரும்பாலான வழக்கறிஞர்களும், வழக்குத் தொடுப்பவர்களும் தமிழர்களாய் இருக்கும்போது ஆங்கில மொழியில் தான் வழக்கை நடத்த வேண்டும் என்பது மாபெரும் கேலிக்கூத்தன்றோ?
தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு, கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் நாள், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அடுத்த நாள் தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும்விட்டது. ஆனால், இதுநாள் வரை குடியரசுத்தலைவர் அந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மிக அண்மையில் தமிழகத்தில் சட்டமேலவை அமைப்பதற்கான ஒப்புதலை ஒரே மாதத்தில் வழங்கிய குடியரசுத்தலைவரும் இந்திய ஒன்றிய அமைச்சரவையும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பதற்கு மட்டும் இன்னமும் எதற்காகத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது தமிழ்ச் சான்றோர் பலருக்கும் எழுகின்ற கேள்வியாக இருக்கிறது. 1970ஆம் ஆண்டிலேயே உத்தரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றம், இந்தியை வழக்காடு மொழியாக அறிவித்து, தற்போது வரை அமலில் உள்ளது. மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும், இந்தியே உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக உள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 93 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே தங்களது பாடங்களைப் பயில்கின்றனர் என்று கூறியிருக்கிறார். இது அப்படியே சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும். தமிழ் வழியில்தான் பெரும்பாலான மாணவர்கள் பயில்கின்றனர். தங்களின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ளும் காலத்தில் மாவட்ட நீதிமன்றங்கள் வரையே அவர்களால், தங்களின் வழக்குகளில் வாதாட முடிகிறது. உயர்நீதிமன்றங்களில் நிலவும் ஆங்கில மொழியாதிக்கத்தால், பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றினால், தமிழ் வழியில் பயின்றோரும் இனி வருங்காலத்தில் உயர்நீதிமன்றங்களில் சரளமாகத் தங்கள் தாய்மொழியிலேயே வழக்குகளைக் கையாள முடியும்.
ஆங்கில மொழியின் பயன்பாட்டால் தேவையற்ற வழக்குச் செலவுகள், வழக்குகளின் நிலையைப் புரிந்து கொள்ள இயலாமை, விரும்பத்தகாத அலைக்கழிப்புகள், எண்ணற்ற வழக்கு நிலுவைகள் போன்றவற்றால் பாமர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். தங்களின் தாய்மொழியில் வழக்கின் கூறுகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், பல்வேறு ஏமாற்றுதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். வழிபாட்டு மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி ஆகியவற்றிற்காக நடத்துகின்ற அறப்போராட்டங்களோடு தற்போது வழக்காடுவதற்கும் நம் தாய்த் தமிழ்மொழியை அரியணையேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தத் தீர்மானம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 348(2)ன்படி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் சில உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடுவணரசின் ஒப்புதலின்றி இதனை அறிவிக்க முடியாது என்றும், பிராந்திய மொழியான தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முடியாது என்றும் தொடர்ந்து தமிழ்மொழிக்குரிய இடத்தை மறுத்து, வஞ்சித்து வருகின்றனர். வெறும் ஆயிரம் ஆண்டுகளை மட்டுமே தனது வரலாறாகக் கொண்ட இந்தி, உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகும்போது, நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது இருப்பைக் கொண்டுள்ளதோடு, உலகத் தேசிய இனமான தமிழினத்தின் ஒப்பற்ற மொழியாகவும், ஏறக்குறைய 10 கோடித் தமிழர்களின் தாய்மொழியாகவும் திகழும் தமிழை, உயர்நீதிமன்ற வழக்குமொழியாய் அறிவிப்பதில் இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு உள்ள தடை யாது?
தமிழகத்தில் ஆளும் கட்சியாய் இப்போதிருக்கும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், இச்சிக்கலில் உரத்துக் குரலெழுப்பாதது ஏன்? பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தினமணி நாளேட்டு அறிக்கையின் வாயிலாக 'தமிழால் எல்லாம் முடியும், தமிழக அரசால் முடியுமா?' என்ற பொருள் பொதிந்த கேள்வியை எழுப்பியிருந்தார். ஆயிரமாயிரம் பதில்கள் உள்ளடங்கி உறங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கு நடுவண், மாநில அரசுகள் என்ன பதிலைச் சொல்லப் போகின்றன?
- கருப்பையா
படங்கள்: கெ.அழகர்