முருகபூபதி அவுஸ்ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் ஸ்தாபகர் என்பதையோ, அவுஸ்ரேலியாவில் அவர் பல எழுத்தாளர் ஒன்றுகூடலை நடத்தினார் என்பதையோ நான் மறுக்கவில்லை. அத்தகைய ஒரு மகாநாடு மெல்பேர்ன் நகரத்தில் நடந்தபொழுது என்னை அழைத்துக் கெளரவித்துள்ளார். நான் வாழும் சாட்சி. இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்கிற அமைப்பு மூலம் கல்வி உதவி செய்கின்றார் என்பதை நான் அறிந்து, அதனை மனசாரப் பாராட்டவும் செய்துள்ளேன். நான் நீர்கொழும்பில் நடந்த தமிழ் விழாவில் கலந்து கொண்டபொழுது, அரைக் காற்சட்டை தாரியாக என்னைச் சந்தித்ததாக அவர் குழைவார். இந்த யதார்த்த உறவுகளை நான் மறந்தேனல்லன். இந்த உறவுகளுக்கு அப்பாற்பட இலக்கிய வாழ்க்கையில் தர்மம் நிலைநாட்டப்படுதல் வேண்டும் என்பது என் மதம்.
நான் என்னுடைய அறிக்கையில், தமிழ் ஈழர் இலங்கை மண்ணிலே படும் துயரங்கள் குறித்து என் ஆதங்கங்களை வெளிப்படுத்தினேன். அதற்கு இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியிலும், சென்னையிலும் கொட்டித் தீர்த்த குமுறல்களை ஆதாரமாகக் காட்டினேன். இன்று ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில், சர்வாதிகாரத்தின் மூர்க்கம் கட்டவிழ்க்கப்பட்டுள்ள நிலையில், படைப்பாளிகள் தங்களுடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் களம் அமைத்துத் தரமுடியுமா என்கிற என் சந்தேகங்களையும் முன்வைத்தேன்.
இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிடுதல் பொருந்தும். எனக்கு இலங்கையில் பல நெருக்கடிகளும், இன்னல்களும் ஏற்பட்டன என கதைகள் சோடித்து நான் அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்துக் கோரியவனல்லன். "நான் எழுத்தாளன். எழுத்துப் போராளியாகவே வாழ்ந்தவன். என் எழுத்தின் சுதந்திரத்தை அநுபவித்துச் சுதந்திரமாக வாழ்வதை விரும்புகின்றேன். இலங்கை திரும்பினால், இந்தச் சுதந்திரத்தை நான் அநுபவிக்கமுடியாது'' என்பது தான் என் அகதிமனுவின் சாரம்(வ.வா.-பக்கம் 1972). இதனை அவுஸ்ரேலியா அங்கீகரித்தது. இந்த சுதந்திரத்திற்காக நான் குரல் கொடுக்கும்பொழுது, முருகபூபதிக்கு எப்படி எதனால் மானபங்கம் ஏற்படுகின்றது என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
என் எழுத்துச் சுதந்திரத்தையும், என்னுடைய கருத்துச் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கும் ஒரு ஜனநாயக அரசு அவுஸ்ரேலியாவில் நடைபெறுகின்றது. இந்த அரசியல் நாகரிகத்தினால் ஈர்க்கப்பட்டுத்தான் நான் அவுஸ்ரேலிய குடிமகனாய் வாழ்கின்றேன். கருத்துக்களையும் எதிர்க்கருத்துக்களையும் அச்சமின்றி பரிமாறிக்கொள்ளுதலே ஜனநாயகத்தின் ஆணிவேர். இந்தச் சுயாதீனத்தினை அநுபவிக்கும் பிரஜை என்கின்ற நிலையில், என் கருத்துக்கு எதிர்க்கருத்துத் தெரிவிக்காமல், நான் பத்துக்கோடி இந்திய நாணய மதிப்பில் சங்கை நட்ட வழக்குத் தொடருவேன் என்று கூறுதல் ஒருவகையில் அச்சுறுத்தலும் மிரட்டலுமாகும். இது உண்மையில் வன்முறையே.
ஐ.நா. சபையின் விசாரணைக்குக் குறுக்கே நின்று, அந்தச் சபையின் கிளையையே மூடச் செய்தும், தராக்கி தொடக்கம் லசந்தா வரையிலும் எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்து நரபலியாடிய, ஜனநாயக உரிமைகளை ஆழமாகப் புதைத்துள்ள ஒரு மயான பூமியின் ஆட்சியாளரின் பாணியைப் பின்பற்றி மிரட்டல் மூலம் என்னை மெளனிக்கச் செய்யும் முயற்சி அவுஸ்ரேலியா பேணிப் பாதுகாக்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் முற்றிலும் முரணானது; எழுத்தாளர் தகைமைக்கு ஒவ்வாதது. இதனை உணராது, `எடுப்பார் கைப்பிள்ளை' போன்று புலம்புதல் நான் அறிந்துள்ள முருகபூபதியின் இயல்புக்குப் பொருந்துவதில்லை என நினைத்துக் கவலைப்படுகின்றேன்.
`பைபாஸ் சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவன்' என்று மருத்துவ காரணங்கள் காட்டி அநுதாபத்தினைச் சம்பாதிப்பதுகூட ஓரளவில் அறியாமை சார்ந்ததாகவே நான் கருதுகிறேன். `சரியான காரணங்களுக்காக அவ்வப்போது விவாதத்தில் ஈடுபடுதல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது' என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சமூக ஆய்வு மையத்தின் ஆய்வாளர் Kira Birditt கூறுகிறார். விவாதத்தைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்குக் குந்தகமானது என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்படி முருகபூபதியின் ஆரோக்கியத்தினைப் பேணும் வகையிலேதான், உண்மையைக் கண்டறியும் ஒரு விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பினை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
நிற்க; முருகபூபதி தந்துள்ள விளக்கக் குறிப்புகள் மேலும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. முருகபூபதி பத்து ஆண்டுகளாக நடத்தும் அவுஸ்ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் இந்த மகாநாட்டினைக் கூட்ட நான்காண்டுகள் முயன்றதாகவும், 2011இல் அது சாத்தியமாவதாகவும் ஜூனியர் விகடனில் உருகியுள்ளார். இந்த மகாநாட்டை அவர் நிறுவிய கலைச்சங்கம் நடத்தப் போகின்றதா அல்லது புதிதாக முளைத்துள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தப் போகின்றதா? பின்னதுதான் நடத்துகின்றது என்றால், முன்னதின் நிறுவனருக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?
அவருடைய மிரட்டல் கடிதத்திலே, 3-1-2010 அன்று கொழும்பில் சுமார் 120 பேரளவில் கூடிய ‘மாபெருங் கூட்டத்தினை' தான் கூட்டியதாகவும், இலங்கை அரசு கொடுக்கும் சம்பளத்திலே வாழும் பல்கலைக்கழக ஆசிரியர்களும் பிறரும் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றார். அவருடைய கலைச் சங்கம் சகலவற்றையும் நடத்துவதான மயக்கத்தை ஏற்படுத்துகின்றார். இடையிலே இப்பொழுது International Tamil Writers Forum நடத்துவதாக பிரசாரம் நடைபெறுகின்றது. இந்த ஒன்றியம் இப்பொழுது முளைத்துள்ள மர்மம் என்ன? இந்த ஒன்றியம் அரசு அனுமதி பெறாமலா மகாநாடு நடத்துகிறது? இந்த அனுமதியைப் பெற்றுத் தந்துள்ள மர்ம நபர்கள் யார்? அவர்களுக்கும் அரசுக்குமுள்ள உறவு என்ன? இலங்கையின் மிக உயர்தளபதி பொன்சேகாவின் அனைத்து உரிமைகளையும் பறித்துள்ள ராஜபக்சே இந்தத் தமிழருக்கு இளகியதின் பின்னணி என்ன? ஊழலும் லஞ்சமும் நிகழ்ந்துள்ளதா? இத்தகைய சந்தேகங்கள் எழுதல் நியாயமானது. இவற்றைப் போக்குதல் அமைப்பாளரின் கடன். ஊழல், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, எதிர்ப்புகளை மெளனிக்கச் செய்தல் என்பன ராஜபக்சே சகோதரரின் ஆட்சி `ஸ்டைல்'. இவற்றிலிருந்து விலகிச் சுத்த சுயம்புவான தர்மசீலர்களுடைய எழுத்தாளர் ஒன்றுகூடல் சாத்தியமானதா? இதனைக் கேட்டால் `லஞ்சம் வாங்கிவிட்டேன்' என்று முருகபூபதி துள்ளிக் குதிப்பதா?
தமிழ் இலக்கிய மரபுகளையும் விழுமியங்களையும் சிங்களத்துக்கு அடிமையாக்குதல் மிக வெறுக்கத்தக்க ஈனமான செயல். இதன் ஆரம்பம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸாஹிரா மாநாட்டிலே துவங்கிற்று. மார்க்ஸியராயினும் தமிழ் இலக்கியமும் மொழியும் பேணிப் பாதுகாத்துள்ள தமிழ்க்கூறினை மறுதலிக்கலாகாது என்கிற கோரிக்கைதான் `நற்போக்கு இலக்கிய'ப் பிரகடனம். இந்தக் கருத்துப் போருக்குத் தலைமை தாங்கியவன் நான். அதன் பயனாக நானூறுக்கு மேற்பட்ட கலை - இலக்கியவாதிகள் 1963இல் மட்டக்களப்பில் கூடி ஒரு தமிழ் விழாவை நடத்தினார்கள். மூன்று நாள்கள் ஒரே இடத்தில் ஒன்றாகவே தங்கி, உண்டு, அளவளாவிக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வசதியைச் சகாயித்தது. அதனைத் தொடர்ந்து கிண்ணியா, மூதூர், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களிலும் தமிழ் விழாக்கள் நடை பெற்றன. இயக்கவாதியாகவும் வாழும் ஓர் இலக்கியவாதிக்குக் கிட்டிய பெருமை இது. இருப்பினும், அரசியல் பின்புலத்தினைப் பயன்படுத்தி, கைலாசபதி - சிவத்தம்பி தலைமைத்துவம், தமிழ்நாட்டு கலை - இலக்கியத் தொடர்புகளைத் துண்டிக்கும் வகையிலே, தமிழ் ஈழரின் கலைகளைச் சிங்களமயமாக்குதலை முன்னெடுத்தார்கள். இதற்காகவே யாழ் பல்கலைக்கழக வளாகம் நிறுவப்பட்டு, கைலாசபதி அதன் தலைவரும் ஆக்கப்பட்டார். இது வரலாறு. 1983ஆம் ஆண்டு அநர்த்தங்களின் பின்னர், போராட்டக் குழுக்களின் கை ஓங்கியதினால், இந்த சிங்களமயமாக்கல் முறியடிக்கப்பட்டது.
இப்பொழுது, தமிழ் ஈழத் தாயகத்தைச் சிங்களர் "மண்கொள்ளை' அடித்தபின்னர், தமிழர்களைச் சிங்களமயமாக்குதலிலே கணிசமான வெற்றியைச் சாதித்துள்ளதான இறுமாப்புடன், தமிழ் கலை - இலக்கியங்கள் சிங்கள மொழியை மூத்த மொழியாகவும், கலாசார மொழியாகவும் திணிக்கும் முயற்சியை சிங்கள இனவாதம் மேற்கொண்டுள்ளது. முன்னரே இதற்கு முண்டு கொடுத்து வாழ்ந்த சீனச் சார்பாளர்களையும், மார்க்ஸியம் பேசும் முற்போக்கு எழுத்தாளர்களையும் வளைத்துள்ளது போலத் தோன்றுகின்றது. `ஒன்றியம்' என்கிற சொல்லே மொஸ்கோ புத்திஜீவிதம் பிரசவித்துள்ள சொல்.
கருணா, கே.பி., டக்ளஸ், வரதராசப் பெருமாள் ஆகியோர் எதற்காக ராஜபக்சே அணியிலே சேர்ந்து தமிழ் இனத்தைக் கருவறுக்கும் செயலிலே ஈடுபடுகிறார்கள்? அவர்களுடைய செயற்பாட்டிற்குப் பின்னால் ஊழலும் லஞ்சமும் இல்லையா? யாழ்ப்பாணத்திலே இந்த மகாநாடு சம்பந்தமாக ஓர் எழுத்தாளர் வீட்டில் ஆலோசனை நடந்ததாகச் செய்தி கசிந்துள்ளது. அவர் இராஜபக்சே குரலில் அரசியல் பேசுவதற்காக பல லட்சங்களைப் பெற்றதும் அம்பலமாகியுள்ளது. இவர்களுடைய அநுசரணைகள் எதுவும் பெறப்படமாட்டாது என முருகபூபதி அமைப்பாளர் சார்பில் உறுதிமொழி தரத்தயாரா?
இப்பொழுது இதே கைங்கரியத்தை கலை - இலக்கியக் களத்திலேயும் உபயோகிக்கிறார்கள் என்று சந்தேகப்படுவதிலே நியாயமில்லையா? சேடம் இழுத்துக்கிடந்த பழைய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சக பயணிகள் இந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு இலங்கையின் அநுசரணையாளராகச் செயற்படுகிறார்கள் என்பதை மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளிலே உள்ள கலாநிதிகளிலே அநேகர் கைலாசபதி - சிவத்தம்பி ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள்; அன்றேல் அவர்களுடைய அடிப்பொடிகளான கலாநிதிகளாலே உருவாக்கப்பட்டவர்கள். அவர்களிலே பலர் இந்த எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு ஒத்துழைக்கிறார்கள். பதவி பெறுவதுகூட லஞ்சமே! இவர்கள் தான் பல்வேறு இடங்களிலே கருத்தரங்குகள் நடத்த முன்வருகின்றார்கள். இவை உண்மையல்ல என்பதற்காக சான்றுகள் தந்து என் போன்ற படைப்பாளிகளின் ஆதங்கங்களைப் போக்குவார்களா? இவற்றைப் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதற்கு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து ஊழியம் பயிலும் எனக்கு உரிமை இல்லையா என்பதுதான் கேள்வி.
பிறிதொன்றையும் இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 1915இல் தமிழர் தலைவர் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் தமிழ் ஈழரின் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிவிட்டார்கள். 1949இல் தமிழ்த் தலைவர். G.G. பொன்னம்பலத்தினால் மலைநாட்டுத் தமிழர்களும் தமிழ் ஈழரின் தேசிய நீரோட்டத்திலிருந்து துரத்தியடிக்கப் பட்டார்கள். இப்பொழுது இவர்கள் மத்தியிலிருந்து தான் முக்கியமான பொறுப்பாளர்களைப் பொறுக்க வேண்டிய அவதி அமைப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றிலிருந்து இலங்கையில் வாழும் தமிழ் ஈழரின் ஆதரவு மேற்படி எழுத்தாளர் ஒன்று கூடலுக்குக் கிடைக்கவில்லை என்று ஊகிப்பதில் என்ன தவறு?
முள்ளிவாய்க்கால் பகுதியிலே தமிழ் இனச் சங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, இந்த எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு ஒத்துழைக்கும் எழுத்தாளர் பலரும் ராஜபக்சேயுடன் கூடிக் குலவி இருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியலையும், தொடர்புகளையும் என்னால் வெளியிட முடியும். அவர்களிலே பலர் ராஜபக்சேயின் உத்திகள் பலவற்றினால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களைப் போலவே, மூளைச்சலவைக்கு உட்பட்ட சங்கங்களுடன் முருகபூபதி செயற்படுவதுதான் வேதனையானது.
இறுதியாக ஒன்று கேட்கிறேன். இந்த எழுத்தாளர் ஒன்றுகூடலிலே உலக மாந்தநேயர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ராஜபக்சே அரசு போர்க்குற்றம் செய்துள்ளது என்கிற தீர்மானத்தை நிறைவேற்றுமா? இந்த எழுத்தாளர் ஒன்று கூடலுக்குப் பின்னால் அரசியல் எதிர்பார்ப்புகள் பலவும் பின்னிப் பிணைந்துள்ளன என்கிற என் சந்தேகத்தினை முருகபூபதி மட்டுமன்றி இந்த ஒன்றியத்தின் அமைப்பாளர் சகலரும் போக்க முன்வருவார்களா? தமிழ் ஈழரின் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அமைதி நிலைகள் ஏற்பட்டுள்ளன என அவர்கள் கருதுகிறார்களா? ஜஃபா நிகழ்ச்சியை தமிழ்த்திரைப் படவுலகம் முற்றாகப் புறக்கணித்தது. அத்தகைய தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலே வாழும் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொழும்பு வாருங்கள் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கடை விரித்துள்ளீர்கள்?
இது எச்சரிக்கை அல்ல. நான் எழுத்துப் போராளியாக வாழும் படைப்பாளி என்பது முருகபூபதி உட்பட அமைப்புக் குழுக்களிலே செயற்படும் அனைவரும் அறிவர். எத்தனையோ இழப்புகள் ஏற்பட்ட பின்னரும், இந்த இலக்கிய ஓர்மத்தினையும், இலக்கிய தர்மத்தையும் பேணி வாழுதல் எனக்குப் பெருமையாகவும் இருக்கின்றது.
வினா - விடைகள் மூலம், அவுஸ்ரேலியா பேணும் ஜனநாயக முறையிலே கருத்துப் பரிவர்த்தனைக்கு முருகபூபதியை மட்டு மன்றி, இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகளிலே ஒத்துழைக்கும் அனைவரையும் அழைக்கின்றேன். அந்த மகாநாட்டுக்கு முன்னராவது கருத்துச் சுதந்திரம் நலமுடன் வாழட்டும்!
- எஸ்.பொ.
தொடர்புக்கு: +919176333357