கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த கால கட்டத்தில் 19-1-1999இல் தமிழ் அன்பர் நெஞ்சம் மகிழும் விருந்தாக எதிர்காலத் தமிழ் இளைஞர்களுக்கு நலம் பயக்கும் மருந்தாக அடுத்த கல்வியாண்டு முதல் (1999-2000) புவி இயல், வரலாறு, கணிதம், சமூக அறிவியல் பாடங்களை தமிழில் தான் கற்பிக்க வேண்டுமென்று நீதிபதி மோகன் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஆனால் அரசு வெளியிட்ட ஆணையை, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும், பெற்றோர்களும் எதிர்த்தனர். அவர்கள் போட்ட வழக்கு தமிழக அரசின் ஆணையை இலதாக்குவதில் (இரத்துச் செய்வதில்) முடிந்தது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அப்போது தமிழ்ப் பயிற்று மொழிக்கு பகைவர் யார்? என்று நமக்குத் தெரியும்.

school students 276உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்ன?

விரிவான விவாதங்களுக்குப் பின் தமிழ்வழிக் கல்வியைச் செயல்படுத்துவது குறித்து பரிந்துரைகள் வழங்க நீதிபதி மோகன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு முறையானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு முதலில் நீதிபதி சண்முகம் முன்னிலையிலேயே விசாரணைக்கு வந்தது. நீதிபதி சண்முகம் ஏற்கனவே பயிற்றுமொழிக்கு ஆதரவான தீர்ப்பளித்தவர் என்பதால் அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாதென மெட்ரிகுலேசன் பள்ளி வழக்கறிஞர் யு.என்.ஆர்.ராவ் வாதிட்டதைத் தொடர்ந்து நீதிபதிகள் ஏ.எஸ். வெங்கடாசலமூர்த்தி, எஸ்.ஜெகதீசன், என். தினகர் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றமே இவ்வழக்கை விசாரித்தது. இவ்வழக்கின் முக்கியக் கருத்துகள் வருமாறு

1.            பயிற்றுமொழியாகத் தமிழைக் கட்டாயமாக்கி அரசு வெளியிட்ட உத்தரவு தெளிவாக இல்லை. முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. இது அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவுக்கு எதிராக உள்ளது.

2.            ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகள் ஆங்கிலோ இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 5ஆம் வகுப்புவரை ஆங்கில வழியில் படிக்க மாணவர்கள் மட்டும் தாய்மொழியில் படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

3.            இந்த உத்தரவை வெளியிடுவதற்கு முன்பாக மெட்ரிகுலேசன் நிர்வாகங்களின் கருத்துகளை அரசு கேட்கவில்லை.

4.            தங்கள் குழந்தைகளுக்கு எத்தகைய கல்வியைத் தர வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோருக்கு உள்ளது என்று மனித உரிமை குறித்த சர்வதேச மாநாடு தீர்மானம் செய்துள்ளது. இத் தீர்மானத்தில் இந்திய அரசு 1992 டிசம்பர் 11ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளது.

5.            கல்வி பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உள்ளது. பயிற்றுமொழி எது என்பதைக் குழந்தைகளின் பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும். அரசு உத்தரவு இந்த அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது.

6.            பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்படுவதால் சிறுபான்மையினர்கள் உரிமையும் இந்த உத்தரவால் பாதிக்கப்படும். (தினமணி 21.04.2000).

நீதிபதிகள் கூறுவது இதுதான்

அரசாணையில் தமிழ் அல்லது தாய்மொழி என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் தமிழைத் தவிர வேறு மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படும்? அதற்கு அரசாங்கம் தனது அரசாணையில் ஏதும் வழிவகை செய்யவில்லை. தாய்மொழிக் கல்வி பற்றிய கமிஷனும் இது குறித்து ஏதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே மொழிவழி சிறுபான்மையினர்களுக்கு, அவர்களது நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறது உயர்நீதிமன்றம்.

அரசியல் சாசனத்தின் 51ஆவது ஷரத்து, 350ஆவது ஷரத்து மற்றும் சர்வதேச மனித உரிமை மாநாட்டு முடிவுகளின் 26(3)ஆவது பிரிவு ஆகியவற்றை உயர்நீதிமன்றம், விவாதித்து, அவற்றின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய அரசாணை செல்லாது என அறிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தின் மேற்படி ஷரத்துக்கள் பின்வருமாறு கூறுகின்றன

(1)          51 (c) வரன்முறைப் படுத்தப்பட்ட மக்களிடையே ஒருவரோடொருவர் உறவு கொள்ளும்போது அவர்கள் சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட கடமைகளை மதித்து நடக்குமாறு அரசு பார்த்துக் கொள்ள முடிய வேண்டும்.

(2)          350-ஏ சிறுபான்மை மொழிபேசும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தத்தம் தாய்மொழியில் ஆரம்ப நிலைக் கல்வி அளிப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசும், அம்மாநிலங்களில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களும் முயல வேண்டும். இவ்வகையில், ஜனாதிபதி அவர்கள் எந்த ஒரு மாநில அரசையும் அத்தகைய வசதி செய்யுமாறு உத்தரவிடலாம்.

(3)          26(3) சர்வதேச மனித உரிமை ஒப்பந்தம்

தங்கள் குழந்தைகளுக்கு எத்தகைய கல்வி வழங்க வேண்டும்? என்று தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு.

இம்மூன்று ஷரத்துக்களையும் நீதிமன்றம் நுணுகி நுணுகி ஆராய்ந்துள்ளது. சர்வதேச மனித உரிமை மாநாட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசு 1992 டிசம்பர் 11இல் கையெழுத்திட்டுள்ளது. அதனால் அதற்கெதிராக வேறெந்தச் சட்டமும் இந்நாட்டில் இயற்றப்படாததால் மனித உரிமை ஒப்பந்தத்தின் ஷரத்துக்களே இங்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்றுவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அந்த ஷரத்தில் எத்தகைய கல்வியை அளிப்பது என்பதைப் பற்றித்தான் கூறப்பட்டுள்ளதே தவிர, எந்த மொழி பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது பற்றி எந்தப் பேச்சும் இல்லை.

அந்த ஷரத்தில் கூறப்பட்டுள்ள விஷயத்துக்கு எதிராக எந்த ஒரு சட்டமும் இயற்றப்படாததால் மனித உரிமை மாநாட்டு முடிவே சட்டப்படி செல்லுபடி ஆகும் என்று நீதிமன்றம் கூறுகிறது. அரசாங்கம் இயற்றியுள்ள அரசாணை சட்டம் அல்ல என்றும் எனவே அது செல்லுபடி ஆகாது என்றும் கூறுகிறது.

அதாவது, அரசியல் சாசனத்தின் 253வது ஷரத்தை யாரும் பரிசீலனை செய்யவில்லை.

அப்பிரிவு பின்வருமாறு கூறுகிறது.

253ஆவது ஷரத்து, சர்வதேச ஒப்பந்தங்களை அமலாக்குவதற்கான சட்டம் இயற்றுதல் “இந்தப் பிரிவில் இதற்கு முன்னால் என்ன கூறப்பட்டிருந்தபோதிலும்? சர்வதேச மாநாடுகளில் பிற நாட்டுடனோ, பிற நாடுகளிலோ செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், முடிவுகள் போன்றவற்றை அமலாக்கும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு.”

அரசியல் சாசனத்தில் இந்தப் பிரிவு மிகத் தெளிவானது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது கூட, அரசியல் சாசனம் பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி 1992 செப்டம்பர் 11இல் மத்திய அரசாங்கம் கையெழுத்திட்ட மனித உரிமைகள் (குழந்தைகள் உரிமை) பற்றிய சர்வதேச ஒப்பந்தத்தை அமலாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவேண்டும். அப்படி ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்படாத நிலையில் மேற்படி சர்வதேச ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் இந்திய மக்களைச் சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியதில்லை.

அரசியல் சாசனத்தின் இந்த ஷரத்தைச் சரிவரக் கணக்கில் கொள்ளாத நீதிமன்றம் வண்டிக்கு எதிராகக் குதிரையைப் பூட்டுகிறது.

“உள்நாட்டுச் சட்டத்திற்குப் புறம்பாக இல்லாத எந்த ஒரு சர்வதேச மாநாட்டு ஒப்பந்தமும் உள்நாட்டுச் சட்ட நூல்களில் சேர்க்கப்பட்டதாகவே கருதப்படும். அந்த வகையில் இவ்வழக்கைப் பொருத்தமட்டில் ஓர் அரசாணை மட்டுமே உள்ளது. அது எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் அல்லது தாய்மொழியிலேயே பாடங்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்று கூறுகிறது. (இது அரசாணை, சட்டமல்ல) எனவே உள்நாட்டுச் சட்டம் ஏதும் இல்லாத நிலையில், சர்வதேசிய அளவில் நம்மால் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகளையும் நடைமுறைகளையும் நம் நாட்டுச் சட்டங்களில் காணவேண்டியுள்ளது. இதன் பொருள், தங்களது குழந்தைகளுக்கு எத்தகைய கல்வியை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை பெற்றோர்களுக்கு உரியது என்பதே ஆகும். அவ்வாறாயின், சர்ச்சைக்குரிய அரசாணையானது சட்டத்துக்கும் முரணானது. சட்டப்படிச் செல்லுபடி ஆகாதது. அமுல்படுத்த இயலாதது ஆகும். நாமும் அவ்வாறே கொள்கிறோம்.

இத்தகைய சிக்கலான பிரச்சினையைக் கையாளும்பொழுது யதார்த்தமான அணுகுமுறையைக் கையாள வேண்டும்.

எல்.கே.ஜி. வகுப்பிலிருந்து சந்தேகமில்லாமல் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமே. பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாக அனுமதிக்கலாம்.

இக்கருத்தைச் சுட்டிக் காட்டிய உயர்நீதிமன்றம் ஆங்கிலப் பயிற்சி மொழிக்கு உள்ள தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இனி பண்பாடு என்பது குறித்து ஒரு விசித்திரமான கருத்தையும் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

“பண்பாடு என்பது நேர்மை, ஒழுக்கம் பற்றிய மதிப்புகள், தனது பணியின்பால் முழு ஈடுபாடு, தேசத்திற்காகத் தியாகம் செய்தல், சகிப்புத்தன்மை, பொதுவாழ்வில் தூய்மை ஆகியவையே ஆகும். இந்த அடிப்படையான பண்பாட்டையே ஒவ்வொரு இந்தியனும் பாதுகாக்க வேண்டும், போற்ற வேண்டும்,” என்று அது கூறுகிறது.

நீதிமன்றம் கூறுவது, தனி மனிதன் சமூகம் அல்லது தான் வாழும் தேசத்தின்பால் காட்ட வேண்டிய பரிவு கடமை பற்றியதாகும். இதுவே பண்பாடாகிவிடாது. பண்பாடு, மொழி, வரலாறு, சமூகம் போன்றவையோடு சம்பந்தப்பட்டதாகும்.

"அரசியல் சாசனத்தின் 30(1)ஆவது ஷரத்து சிறுபான்மை மக்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தவும், வழி வகை செய்கிறது. அவைகள் தரமான முறையில் நடத்தப்படுமானால் அவைகளுக்கு அங்கீகாரமும் இணைப்பும் வழங்கப்பட வேண்டும். நிறுவனங்கள் நடத்தும் உரிமையில் பயிற்சி மொழி சட்டப்படியான வரைமுறைக்கும் உட்பட்டே ஒழுங்குமுறைகள் இந்நிறுவனங்கள் மீது புகுத்த இயலும். தமிழ் அல்லது தாய்மொழியிலேயே கல்வி புகட்டப்படவேண்டும் என்று கூறுவது ஒழுங்குபடுத்துவதல்ல. அவைகளின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாகும்" என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

மேலும் இயற்கை நீதிக்குப் புறம்பாக மேல்மட்டக் குழுவின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. எது எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்தக் கொள்கை யாருக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று காண நீதிமன்றம் இந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், நர்சரி பள்ளிகளும் அரசாணைகளின் மூலமே உருவாக்கப்பட்டன ஒழுங்குபடுத்தப்பட்டன என்பதைக் காணத் தவறிவிட்டன. உதாரணமாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஒழுங்கு முறை விதிகள் அரசாணை எண்ணின்படி உருவாக்கப்பட்டதாகும். எனவே அரசாணையால் உருவாக்கப்பட்ட ஒழுங்கு முறைகள் வேறொரு அரசாணையால் மாற்றப்படலாம் என்பது பெறத்தக்கது.

இந்தி ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டுமானால் தமிழ் மற்றும் எல்லாப் பிராந்திய மொழிகளும் வளரவேண்டும். அத்தகைய வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது ஆங்கிலமே.

ஆனால் இன்றுள்ள நிலை என்ன? 1 முதல் 5 வரை எல்லாப் பள்ளிகளிலும் தமிழே பயிற்சி மொழியாக அதாவது கணிதம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய பாடங்களில் பயிற்சி மொழியாகத் தமிழே இருக்க வேண்டும் என்று கூறும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

தமிழக அரசின் மேல்முறையீடு

தமிழ்வழிக் கல்விக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தீர்ப்புக்கு எதிரான ஊர்வலங்கள், கூட்டங்களைத் தமிழ் அமைப்புகள் தமிழகமெங்கும் நடத்தின. தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாக அரசு இருந்தபோதிலும் பல தமிழக அரசியல் கட்சிகள் இத்தீர்ப்பு குறித்து கருத்துச் சொல்லவில்லை என்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அவர்களது மனுவில் கூறப்பட்டிருந்தவை இவை: (இதழ்களின் கருத்துக்கள்)

“ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர் சங்கம் - கர்நாடக அரசு ஆகியவைகளுக்கு இடையேயான வழக்கில் தொடக்கக்கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழ் வழிக் கல்வி தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட்டுக்கு உரிமை உள்ளதா?

மேல் முறையீட்டு வழக்கு 31.9.2000த்தில் விசாரணைக்கு வந்தது.

2001 வரை இருந்த தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்தது. இப்போது இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவது அ.தி.மு.க. அரசு. 22.7.2001இல் நிலை என்ன? (தினமலர்)

அதுபற்றித் ‘தினமலர்’,

“தமிழ்ப் பயிற்றுமொழி தொடர்பாக வழக்கு நடத்திய தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கம் செய்த அப்பீல் மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போது வலியுறுத்திய ஜெயலலிதா இப்போது தமிழக முதல்வராக இருப்பதால், இந்த அப்பீல் வழக்கில் தமிழக அரசு என்ன நிலையை எடுக்கப்போகிறது?" என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

அரசு மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜுலை 10ஆம் தேதி தமிழக அரசு அப்பீல் மனுவை தாக்கல் செய்தது. சில தமிழ் வளர்ச்சி இயக்கங்களும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. அப்பீல் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இதற்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பு பதில் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேந்திரபிரசாத், தாஜு ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்‘ முன்பு, இந்த அப்பீல் மனுக்கள் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ள நிலையில், இந்த அப்பீல் வழக்கைத் தமிழக அரசு எப்படி அணுகப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், கடந்த தி.மு.க., அரசு பிறப்பித்த தமிழ்ப் பயிற்று மொழி தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆங்கிலப் பள்ளிகள் சார்பில் வாதாடியவர் சீனியர் வக்கீல் என்.ஆர்.சந்திரன். இவர் இப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக உள்ளார்.

இதேபோல், ஆங்கிலப் பள்ளிகள் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் முத்துக்குமாரசாமி, இப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார்.

கடந்த தி.மு.க. அரசு பிறப்பித்த தமிழ் வழிக் கல்வி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வராக உள்ளார்.

ஏப்ரல், 2002இல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது தமிழக அரசு தன் கொள்கை முடிவைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

விசாரணையின் போது நடந்தவற்றைத் ‘தினமணி’ (4.4.2002) இதழ்,

“அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், ‘இப் பிரச்சினையை நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்‘ என்று தெரிவித்தார்.

‘அவ்வாறு சொல்ல முடியாது. மேல் முறையீட்டு மனுவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்கிறதா, இல்லையா?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

‘திரும்பப் பெறவில்லை’ என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

‘சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக 11 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச் விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணை முடியும் வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் அறிவித்தனர்”.

அரசு சரியாக வாதாடவில்லை - தமிழண்ணல்

இதன் தொடர்பான கருத்தினைத் தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் வாயிலாகப் பார்ப்போம்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப்பிறகு கண் துடைப்புப் போல உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, திறம்பட வழக்காடாமல் விட்டுவிட்டது. இது போன்ற ஒரு வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்காடி வென்றது.

இன்றைய அரசு நீங்களே தீர்ப்பு கூறுங்கள் நாங்கள் வழக்காடவில்லை என்று தாய்மொழியை அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘உங்கள் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என அறிவுரை கூறியுள்ளனராம்.

பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் நாடு. பல தேசியமொழி, சமய இனங்களின் கூட்டமைப்புள்ள துணைக் கண்டம் இது. ஒரு தேசிய இனத்தையோ, மொழியையோ சமயத்தையோ, சமமாகப் பாவித்து சமநிலை தந்து, அரவணைத்து, இணைந்து போவதே இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும். இவற்றுக்கு வெறி என்று பெயர் சுட்டி அழிக்க நினைப்பது தவறு. ஒரு தேசிய இனத்தையோ, மொழியையோ, சமயத்தையோ அழுத்தவும், அழிக்கவும் நினைப்பவர்களே பிரிவினைவாதிகள் அதாவது பிரிவினைவாதத்திற்கு வித்திடுபவர்கள்.

இத்தீய சக்திகள் பிறரை அடிமைப்படுத்த முயன்று கொண்டே அழுத்தப்படுபவர்கள் வலி தாங்காமல், எகிறி எழும் பொழுதெல்லாம் மேலும் மேலும் அழிக்கவே முயல்வது. அரவணைக்காமல் அழுத்திவிடலாம் என ஒரு குடியாட்சி நாட்டில் கடுமை காட்டுவது இந்திய இறையாண்மையைச் சிதைக்கும், ஒருமைப்பாட்டை அழிக்கும். இவர்களே பாரதத்தின் பகைவர். முடியாட்சிக் காலத்தில் எல்லாம் எதிர்ப்பை முறியடித்த தமிழும் குடியாட்சி காலத்தில் குடிமுழுகிப் போகும் என எதிர்பார்ப்பது அப்பட்டமான தவறு.

மெட்ரிக் பள்ளிகளினால் தீமைகள் என்ன? தமிழ் வழிக் கல்வியினால் நன்மைகள் என்ன?

கல்வியாளர்கள் உலகளவில் தாய்மொழி வழிக் கல்வியைத்தான் ஆதரித்துப் பேசி வருகின்றனர். தாய்மொழி வழிக் கல்வி அடிப்படை உரிமையென்றால், இது குழந்தைகளின் உரிமை, கல்விக்கான உரிமை. இதைப் பெற்றோருக்கு ஒதுக்கிவிட முடியாது. மெட்ரிக் பள்ளிகளுக்கும் இந்த உரிமையை வழங்கிவிட முடியாது. இப்படி வழங்குவது சரியான கல்விக் கொள்கையானது.

பணம் பண்ணுவதுதான் மெட்ரிக் பள்ளிகளின் முதன்மையான கொள்கை. மாணவர்களின் தலையில் வெற்று விவரங்களைத் திணித்து, அவர்களின் முதன்மை சுதந்திர உணர்வு, கலைத்திறன், ஆளுமை வளர்ச்சி முதலியவற்றை அழிப்பதில்தான் இவர்கள் முனைந்துள்ளனர். ஆங்கிலத்தையே வளர்ப்பது இந்த மெட்ரிக் பள்ளிகளின் நோக்கமாகக்கூட இருக்க முடியாது. இவர்களிடம் கல்வி கற்று மீண்டும் ஆங்கிலத்தின் மூலம் அறிவியல், கணினி முதலியவற்றில் தேர்ச்சி பெற்று, நம் மாணவர்கள் அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ சென்று அவர்கள் பொருளியல் வளர்ச்சிக்கும் சேவை செய்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் உலகளாவிய ஆதிக்கம் பெறுவதற்கு இவர்கள் அடிமைகளாய்ச் சேவகம் செய்கிறார்கள். இந்தியா, தமிழகத்தின் மீது இவர்களின் ஆதிக்கம் இன்னும் கடுமையாவதற்கு இவர்களின் வேலை பயன்படும். இந்த அடிமைத்தனத்தை வளர்ப்பதற்குத்தான் மெட்ரிக் பள்ளிகள் துணைபோகின்றன. அரசுகளும் இந்த அடிமைத்தனத்தைத்தான் விரும்பி ஏற்கின்றன.

வரலாறு மற்றும் பண்பாட்டுச் சூழலிலிருந்துதான் நாம் எதையும் உள்வாங்கிக் கொள்கிறோம். மண்ணையும், உயிரினங்களையும், மக்களையும் இயற்கையையும் நேசிப்பதற்கான கல்விதான் உண்மையான கல்வியாக இருக்க முடியும். ஆங்கிலத்தின் வழியே கற்பதன் மூலமும் தமிழ்ச் சூழலை ஒதுக்கிவிட நேர்கிறது. இது மாணவர்களை மலடாக்குகிற, இயந்திரமாக்குகிற முயற்சி.

இந்த மாணவர்களிடம் பண்பு தங்க முடியாது. பணம் தான் இவர்களை ஊக்குவிக்கும். வசதியுள்ளவர்கள் தான் இந்தக் கல்வியைப் பெறமுடியும். வசதியில்லாத பெரும்பான்மையான தமிழ் மக்களை இவர்கள்தான் எதிர்காலத்தில் அதிகாரம் செய்வார்கள். தமிழ் மக்களின் அடிமைத் தன்மை அதிகரிப்பதில்தான் இதுபோய் முடியும் என்று கவலையுறுகிறார்.

பீனிக்ஸ் பறவை கலைஞர் கருணாநிதி

வழக்கு நிலுவையில் உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்து கலைஞர் முதல்வரான பிறகு தமிழ் நாட்டில் பொறியியல் படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. சிவில், மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் தமிழ்வழிப் பொறியியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு (2008) அதில் 900 மாணவர்களை அனுமதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பாடநூல்கள் முழுமையாக தயாராகவில்லை. தயாரித்த நூல்களும் கையேடு பேரில் இருந்தன. அவைகளையே நகல் எடுத்து மற்றவர்களும் படிக்க நேர்ந்தது. இப்படியான ஆட்சி மாற்றங்களினால் தமிழ் வளர்ச்சி, காலம் காலமாக தொடர் பேரிடிகளைக் கண்டு வருவதை தமிழர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை என்பது நாம் மொழி மீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. எனலாமா?

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.