தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் 24 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை 8 நாட்களாக மேற்கொண்டிருந்தார்கள். தற்போது திமுக அரசின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
8 நாட்களாக நடந்து கொண்டிருந்த இந்த போராட்டம் நமக்கு கடும் மன உலைச்சலை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல்நீதியான சித்தரவதையை அனுபவிப்பது கொடுமையான நிகழ்வாகும்.
ஆனால் இப்படி தமிழ்மக்களின் மொழி உரிமைக்காக 24 பேர் தங்களின் உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதே பெரும்பான்மை தமிழ்ச் சமூகத்திற்குத் தெரியவில்லை.
அந்தளவிற்கு ஊடக புரோக்கர்கள் மிக கவனமாக இந்தச் செய்தியை பெரிதுபடுத்தாமல் யாருக்கும் கொண்டு சேர்க்காமல் தங்களின் இந்தி விசுவாசத்தையும், தமிழ் மீதான காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டினார்கள்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் கடந்தும், தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு 57 ஆண்டுகள் கடந்தும், தமிழ்நாட்டில் தமிழில் வழக்காட உரிமை வேண்டும் என நாம் போராடிக் கொண்டு இருக்கின்றோம் என்றால், அதைவிட தமிழினத்துக்கு என்ன கேவலம் இருந்துவிட முடியும்?
1862இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ஹைகோர்ட்டில் கடந்த 162 ஆண்டுகளாகத் தமிழ் நுழையவே முடியவில்லை என்பது தமிழனுக்கு தமிழ் மீது இருக்கும் அக்கறை எவ்வளவு போலியானது என்பதைத்தான் காட்டுகின்றது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 (2) இன்படி, குடியரசுத் தலைவரின் முன் இசைவுடன் இந்தி அல்லது அந்தந்த மாநில அலுவல் மொழியை ஆங்கிலத்துடன் சேர்த்துக் கூடுதல் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகப் பயன்படுத்த வழிவகை செய்கிறது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் 1969இல் உத்தரப் பிரதேசத்திலும், 1971இல் மத்தியப் பிரதேசத்திலும், 1972இல் பிஹாரிலும் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. 1976இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்தியில் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழில் வழக்காட இன்னும் இந்தி பாசிஸ்ட்களின் கைகளில் இருக்கும் இந்திய ஆட்சியதிகாரம் அனுமதி வழங்க மறுத்து வருகின்றது.
தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழை, சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தி டிசம்பர் –6, 2006 அன்று சட்டமன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அன்றைய தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளிக்க, அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடியரசு தலைவருக்கே அதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இருந்தும், வேண்டுமென்றே அதை உச்ச நீதிமன்றத்தின் உயர்நிலைக்குழுவின் பரிசீலினைக்கு அனுப்பினார். உச்ச நீதிமன்றமோ உயர்நீதிமன்றங்களில் தமிழ் தெரியாத நீதிபதிகளும் பணியாற்றுவதால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என மறுத்து விட்டது.
இப்படி மறுத்த உச்சநீதிமன்றம் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் உயர்நீதிமன்றங்களில் மட்டும் இந்தி எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதைப் பற்றி மறந்தும் கூட வாய் திறக்கவில்லை. அவ்வளவு மொழிப்பாசம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு.
ஏன் தமிழ்நாட்டின் நீதிபதிகள் இந்தி பேசும் மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றுவதில்லையா? இந்திக்காரனுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதியா?
இன்றும் முன்சீப் கோர்ட்டுகள், சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றில் தமிழில்தான் வழக்காடப்படுகின்றது. அங்கெல்லாம் ஏற்படாத பிரச்சினை உயர்நீதிமன்றத்தில் மட்டும் எப்படி ஏற்படும்?.
உலகின் அனைத்து நாடுகளிலும் அவர்களின் தாய்மொழியில்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படுகின்றன. அதற்குக் காரணம் நீதிமன்றங்கள் என்பது ஒரு சமூக நிறுவனமாக இருக்கும் போது அது எப்போதுமே அதிகார வர்க்கத்துடன் நேரடி தொடர்பில் அதன் ஆதிக்கத்தில் இருக்கும் என்பதுதான்.
ஒரு சாமானிய எளிய மனிதன் அப்படிப்பட்ட நீதி அமைப்பில் தனக்கான நீதியைப் பெறுவது அவ்வளவு எளிமையானதல்ல. அதுவும் அவனுக்குப் புரியாத மொழியில் வழக்குகள் நடத்தப்பட்டால் நிச்சயம் அந்த எளிய மனிதனை வீழ்த்துவதற்கு காத்திருப்போருக்கே அவை சாதகமாக அமையும்.
நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்களே நீதிமன்ற நடைமுறைகளையும், அதன் சட்ட மொழியையும் புரிந்து கொள்ள முடியாமல் திணறும்போது ஆங்கிலம் தெரியாதவர்களால் எப்படி வழக்கை திறம்பட நடத்த முடியும்?.
மொழி தெரியாத நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணியாற்றுவது எல்லாம் உண்மையில் இன்று இருக்கும் தொழில்நுட்பத் திறனின் முன்னால் எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்சினைதான். குறைந்த பட்சம் ஒரு மொழிபெயர்ப்பாளரை நீதிமன்றங்கள் நியமிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்க்க முடியும்.
நாம் ஒன்றிய அரசிடம் கேட்பது, நமக்கான தேசிய இன உரிமையைத்தான். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் உள்ள தீர்ப்புகள், ஆணைகள் அல்லது உத்தரவுகளில் இந்தி மொழியைப் பயன்படுத்துவது நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம், மேற்குவங்க உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் அவர்களின் தாய்மொழியான தமிழ், குஜராத்தி, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்பது மட்டும் எப்படி அநியாயமாகும்?
நாம் இந்தக் கோரிக்கையை இன்று வென்றெடுக்காமல் விட்டால் நாளை ஒன்றிய அரசுகள் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இந்தியைக் கொண்டு வருதற்கு வாய்ப்புகள் ஏற்படும். ஏற்கெனவே இந்தியைத் திணிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் இந்தி பாசிஸ்ட்கள் இதை செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இந்தி பாசிஸ்ட்களிடம் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இந்தியாவின் 18வது சட்ட ஆணையம், "இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாய மொழியாக அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை" என்று அறிவித்து இருந்தாலும் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களைத் திருத்தி இந்தியாவை இந்து நாடாகவும், இந்தி நாடாகவும் மாற்ற முயன்று கொண்டிருக்கும் கூட்டம் நிச்சயம் அதை ஒருநாள் செய்யும்.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என நாம் போராடும் அதே சமயம் ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ள 22 மொழிகளிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
தேசிய இன உரிமைகளை எல்லாம் அழித்து இந்து தேசியத்தில் அனைவரையும் கரைத்துவிட துடித்துக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிஸ்ட்களுக்கு அதுதான் சரியான பதிலடியாக இருக்கும்.
- செ.கார்கி