கோவை, ஈரோடு நகரங்களில் ‘இந்து’ நாளேடு மீதான தாக்குதல்கள் தொடர்பாக அந்நாளேட்டின் முதன்மை ஆசிரியர் என். ராம், பெரியார் திராவிடர் கழகத்தைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கைக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் விளக்கத்தையும், பதிலையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையில் தமிழர்கள் மீது இனப் படுகொலையை அந்நாட்டு ராணுவம் தீவிரமாக கட்டவிழ்த்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கடந்த 14 ஆம் தேதி கூட்டினார். அந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடிய அதே நாளில் ‘இந்து’ நாளேட்டின் நிர்வாக ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டில் இனத் தீவிரவாத ஆபத்து தலைதூக்குகிறது என்றும், விரக்தியுற்ற விடுதலைப் புலிகள் இதற்குப் பின்னால் இருந்து செயல்படுவதாகவும் அக்கட்டுரை கூறியது. பாதுகாப்பு தேடி பதுங்கு குழியை நோக்கி விடுதலைப் புலிகளின் தலைவர்களை இலங்கை ராணுவம் துரத்தி, முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அத்தியாயம் முடியப் போகும் தருணத்தில், தமிழ்நாட்டில் மீண்டும் இனவெறி துண்டிவிடப்படுகிறது என்றும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது. இந்த இனவெறியை முன்னெடுப்பதில் இரண்டு கட்சிகளை அக்கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி; மற்றொன்று மறுமலர்ச்சி தி.மு.க.

இந்தக் கட்டுரை வெளியான உடனே கோவையில் ‘இந்து’ பத்திரிகை அலுவலகம் முன், பெரியார் திராவிடர் கழகமும், உணர்வுள்ள இளைஞர்களும் ‘இந்து’ ஏட்டுக்கு எதிராக முழக்கமிட்டு, அந்த ஏட்டைக் கொளுத்தியுள்ளனர். ஈரோட்டில் ‘இந்து’ நாளேடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான சட்டவிரோத வன்முறை என்றும், பெரியார் திராவிடர் கழகத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் ‘இந்து’ ராம் அறிக்கை கூறுகிறது.

தமிழினம் பூண்டோடு அழிக்கப்படும் சூழலில் தமிழகமே கொந்தளித்து நிற்கும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலையில் அந்த உணர்வுகளைக் கிஞ்சித்தும் மதிக்காமல் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட ‘துணிவது’ பத்திரிகை தர்மமா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். இலங்கையிலே தமிழர்களைக் கொன்று குவிப்பது ‘இந்து’வின் பார்வையில் இனவெறியாகத் தெரியவில்லை. அந்த ராணுவ நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் இலங்கை ராணுவம் வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் பூரித்து கட்டுரை எழுதுகிறது. இதை எதிர்த்து தாய்த் தமிழகத்தில் உருவாகும் எழுச்சியை மட்டும் ‘இனவெறி’ என்கிறது.

இனவெறியர்கள் - சிங்களர்களா? படுகொலையை நிறுத்தக் கோரும் தமிழர்களா? என்று கேட்கிறோம். ‘இந்து’ நாளேடு - ஒரு தேசிய பத்திரிகை என்ற போர்வையில் ஈழப் பிரச்சினையில் ஈழத் தமிழர் களுக்கு எதிராக இலங்கை அரசின் ‘முகவராகவே’ மாறி, தமிழ்நாட்டில் பிரச்சார இயக்கத்தையே நடத்திக்கொண்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். கருத்து சுதந்திரம் - பத்திரிகை சுதந்திரம் பற்றியெல் லாம் பேசும் ‘இந்து’ நாளேடு நடுநிலையையோ, கருத்து சுதந்திரத்தையே தனது ஏட்டில் பின்பற்றுகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

இலங்கை ராணுவம் நடத்தும் இனப்படுகொலைகளையோ, அந்நாட்டின் அதிபர்களின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையோ கண்டித்து இந்த ஏடு எழுதியது உண்டா? மாறாக, ஈழத் தமிழர்களையும், அவர்களின் ஒரே பிரதிநிதிகளாக உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் குற்றக் கூண்டிலே நிறுத்துவதைத்தான் ஏட்டின் ‘பத்திரிகை தர்மமாகவும்’, ‘கருத்துச் சுதந்திர’க் கொள்கையாகவும் பின்பற்றி வருகிறது.

அரசு ஒடுக்குமுறைக்கு ஒரு பத்திரிகை உள்ளாகும் போது அது - பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பதாகும். அதைக் கண்டிக்க வேண்டியது நியாயம். மக்கள் உரிமைகளுக்கு எதிராக பத்திரிகைகள் செயல்படும் போது ஆத்திரமூட்டல்களை தூண்டிவிடும்போது மக்களின் தன்னெழுச்சியான எதிர்வினைகளை ‘கருத்து சுதந்திரப் பறிப்பு’ என்று கூறமுடியுமா? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ‘இந்து’ ஏட்டுக்கு கடும் விமர்சனங்கள் இருக்கலாம். அதற்காக பொய்யான செய்திகளை பரப்புவது கருத்து சுதந்திரமாகிட முடியுமா?

1984 ஜூலை 24 ஆம் தேதி பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்திக்காக வருத்தம் தெரிவித்தது உண்டா? பிறகு, 2005 ஜன. 15 இல் பிரபாகரன் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்து விட்டார் என்று மீண்டும் எழுதியது. இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்ட இலங்கை அரசின் வானொலியே அதை மறுத்துவிட்ட பிறகும், ‘இந்து’ பிரபாகரன் மரணத்தை உறுதி செய்யும் வகையில், ‘பிரபாகரன் எங்கே’ என்று தலையங்கமே தீட்டியது. இதுதான் பத்திரிகை சுதந்திரமா?

இலங்கையில் - சந்திரிகா, ரணில், ராஜபக்சே என்று தொடர்ந்து பிரதமர்கள் மாறிய நிலையில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செய்திகளையும், கட்டுரை களையும், தலையங்கங்களையும் எழுதிக் குவித்ததே தவிர, செத்து மடியும் ஈழத் தமிழர்களுக்காக அல்ல என்பதை, அந்த ஏட்டைப் படிக்கும் வாசகர்களுக்குப் புரியும்.

அதற்காகவே இலங்கை அரசின் உயர் கவுரவ விருதான ‘சிறீலங்கா ரத்னா’ விருதை, ‘இந்து’ ஆசிரியர் என்.ராமுக்கு அதிபர் சந்திரிகா கொழும்பு நகரில் வழங்கி மகிழ்ந்தார், அதைப் பெருமையுடன் ‘இந்து’ ராம் பெற்றுக் கொண்டார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான தமிழ்ச்செல்வன் குறி வைத்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்தோ, நார்வே தனது சொந்த செலவில் கட்டித் தந்த சமாதான செயலகத்தை ராணுவம் குண்டு வீசி தகர்த்தது பற்றியோ, போர் நிறுத்த ஒப்பந்தத்தை - தன்னிச்சையாக ராஜபக்சே அரசு ரத்து செய்து விட்டதைக் கண்டித்தோ, ‘இந்து’ ஏடு கண்டித்து எழுதியதுண்டா? இவையெல்லாம், ‘இனவெறி’யாக ‘இந்து’வின் கண்களுக்கு தெரியாதா?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத் தலைவர்கள் வெளியிடும் கருத்துகளை வெளியிடு வதற்குக்கூட ‘இந்து’வின் கருத்து சுதந்திரத்தில் இடம் கிடையாது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவம் ஒப்பந்தத்தை மீறி நடத்திய ராணுவ நடவடிக்கைகளை எல்லாம் ராஜபக்சேயின் வெற்றியாகப் பாராட்டி எழுதிய ‘இந்து’ நாளேடு அதற்கு பதில் தாக்குதல்கள் வரும் போது மட்டும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகிறது என்று எழுதும். சுனாமிப் பேரலையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமான போது - வீடு வாசல்களை இழந்த போது - ஈழத் தமிழ் நாளேடுகள் - அலுவலகங்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசிய போது - இராணுவம் பத்திரிகையாளர்களை சுட்டுக் கொன்றபோது - ‘கருத்து சுதந்திரம்’ பற்றி பேசும் ‘இந்து’ நாளேடு கண்டித்தது உண்டா?

யாழ்ப்பாணத்தை தரை வழியில் இணைக்கும் ஒரே தரை வழிப்பாதையை பல ஆண்டுகளாக இலங்கை அரசு மூடி, பொருளாதாரத் தடையில் மக்களை முடக்கிப் போட்டது பற்றியோ - அப்பாவி மக்கள் மீது விமானக் குண்டுகளை வீசி பிணமாக்குவது பற்றியோ - செஞ்சோலை குழந்தைகள் முகாமில் குண்டு வீசி - 60க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்று குவித்தது பற்றியோ - ‘நார்வேயின் சமரச முயற்சியை ஏற்க மாட்டோம்; ராணுவத்தால் - சந்திப்போம்’ என்று சூளுரைத்து, தேர்தல் அறிக்கையிலும் அறிவித்து பதவிக்கு வந்த ராஜபக்சேயின் போர் வெறியைக் கண்டித்தோ - ‘இந்து’வின் பத்திரிகை தர்மமும் - சுதந்திரமும் வாய் திறந்ததா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வந்தபோது, அந்த உதவிகளையும் கிடைக்கவிடாமல் தடுத்ததே, இலங்கை அரசு! அதைக்கூட கண்டிக்க மனம் வராதவர்கள், ‘நடுநிலை’, ‘பத்திரிகை தர்மம்’ பற்றியும் கருத்து சுதந்திரம் பற்றியும் பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை முதலில் சந்திக்கச் சென்றபோது பிரதமர் சந்திக்க மறுத்து விட்டார். பிரதமரின் மிகச் சிறந்த நடவடிக்கை என்று அப்போது ‘இந்து’ பாராட்டியது! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஏன் சந்திக்கக் கூடாது என்று கேட்கவில்லை.

விடுதலைப் புலிகள் சமரசத் தீர்வை ஏற்க மறுப்பவர்கள் என்று குற்றம் சாட்டி வந்த இதே ஏடு, சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கி, போர் நிறுத்த ஒப்பந்தம் வந்த பிறகாவது ஈழத்திலே அமைதியை உருவாக்கும் முயற்சிகளை ஆதரித்ததா? போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, களத்தில் கணிசமான போர் வெற்றிகளைக் குவித்திருக்கிறார் என்று ராஜபக்சே அரசின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளைக் குவித்து தலையங்கம் தீட்டியது.

தமிழ்நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக மருந்துகள் அனுப்பியதாக, தமிழகத்தில் அடைக்கலம் புகுந்திருந்த ஈழவேந்தன், சச்சிதானந்தம் மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவர் மாலினி, தமிழகத்தைச் சார்ந்த மருத்துவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட செய்தியை பெரும் பரபரப்புடன் வெளியிட்ட ‘இந்து’ நாளேடு, பிறகு இது பொய் வழக்கு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த செய்தியை திட்டமிட்டு இருட்டடித்தது. வழக்கில் தொடர்புடைய மருத்துவர் ஸ்ரீதர் இதைச் சுட்டிக்காட்டி, அகில இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார்.

பத்திரிகை கவுன்சில் ‘இந்து’வின் தலையில் குட்டிய பிறகு, நீதிமன்றத் தீர்ப்பு வந்து சுமார் ஓராண்டு காலத்துக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியையே சுட்டிக் காட்டாமல், அந்த செய்தியை வெளியிட்டது. ‘இந்து’வின் பத்திரிகை தர்மத்துக்கு இது ஒரு உதாரணம்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை தனது பத்திரிகையின் பெயராக வைத்துக் கொண்டு, நூற்றாண்டைக் கடந்துவிட்ட பெருமை பேசும் ‘இந்து’ ஏடு தேசிய பத்திரிகை என்ற போர்வையில் ஒரு சார்பான கருத்துகளை வெளியிடுவதும், கருத்துகளை உருவாக்குவதும் உண்மைக்கு மாறான செய்திகளை பரப்புவதும் தான் அதன் பாரம்பர்ய பெருமையா என்று கேட்க விரும்புகிறோம். அண்மையில் ‘ஆனந்த விகடன்’ வார ஏடும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் தமிழகத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் ஈழத்தில் நடப்பது சுதந்திரப் போராட்டம் தான் என்றும், ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் ‘விடுதலைப் புலிகள்’ என்றும் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கருதுகிறார்கள் என்ற உண்மைகளை வெளிச்சப்படுத்தியது.

இதன் பிறகும், ஆசிரியர் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு ‘இந்து’ ஏடு (அக்.18) 95 சதவீத தமிழர்கள், விடுதலைப் புலிகளை நிராகரிக்கிறார்கள் என்று பொய்யான ‘சதவீதப் புள்ளி’ விவரத்தோடு தலையங்கம் தீட்டுகிறது. இதுதான் பத்திரிகை சுதந்திரமா? தர்மமா? பெரியார் திராவிடர் கழகத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட ‘இந்து’ ஆசிரியர் ‘ராம்’, 40 லட்சம் வாசகர்கள் சார்பாக கண்டிப்பதாகக் கூறுகிறார்.

‘இந்து’ வை வாங்கும் அத்தனை பேருமே ‘இந்து’வின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக, அவரே முடிவு செய்து கொண்டு அவர்களின் பிரதிநிதிகளாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்தே, இவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறதே; 40 லட்சம் வாசகர்களுமே ‘இந்து’வின் ஆதரவாளர்கள் என்று எப்படி முடிவுக்கு வந்தார்? இதே பார்ப்பன ஆதிக்க மனநிலையிலிருந்து தான், இவர்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சனையையும் தாய்த் தமிழக உணர்வுகளையும் கொச்சைப்படுத்தத் துணிகிறார்கள். இதே பார்வைதான் இவர்களின் ‘கருத்து சுதந்திரம்’ மற்றும் பத்திரிகை தர்மங்களையும் நிர்ணயிக்கிறது. இதில் இனியும் தமிழர்கள் ஏமாறப் போவதில்லை.

கோவை ஈரோட்டில் நடந்த போராட்டத்தின் வழிமுறைகளில் வேண்டுமானால் கருத்து மாறுபாடுகள் இருக்கலாமே தவிர, பெரியார் திராவிடர் கழகத்தினரும், தமிழின உணர்வாளர்களும், போராட்டத்துக்கு தேர்வு செய்த ‘இலக்கு’ மிகச் சரியானது. ‘இந்து’ ஏடு - மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்களின் சிங்கள - பார்ப்பன ‘இனவெறி’ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டே தீரும்!

Pin It