பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், வேதியல் கழிவுகள் அனைத்தையும் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து தமிழக வேளாண் நிலங்களிலும், ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளிலும், சாலை யோரங்களிலும் திருட்டுத்தனமாய் கொட்டிப் போகிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் அமிலத் தன்மையடைந்து பயிர் செய்ய முடியாதபடி பாழ்பட்டு வருகின்றன.
 
நீர் நிலைகளில் கலக்கும் கழிவுகளால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பெயர் தெரியாத பல தொற்று நோய்கள் பரவுகின்றன. இயற்கையும், சுற்றுச் சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளை தமிழ்நாட்டிற்குள் கடத்திக் கொண்டு வருவதற்கு பொள்ளாச்சி சுற்றுப் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்களும், ஒரு சில லாரி உரிமையாளர் - ஓட்டுனர்களுமே பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு தமிழக காவல்துறையும், வருவாய் துறையும் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறார்கள். இப்படி தமிழக வளங்களை அழிக்கும் நாசகாரப் பணிக்கு துணையாக தமிழக அதிகாரிகளும், சமூக விரோதி களுமே முன் நின்று மலையாளிகளுக்குத் துணை போகிறார்கள்.
 
தமிழர்களுக்கு எதிரான மலையாளிகளின் இந்த அத்துமீறலை கண்டித்து பல ஆண்டுகளாக பொள்ளாச்சி பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்த்தும், தடுத்தும் போராடி வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கழகத் தோழர்களால் நள்ளிரவில் விரட்டியடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவு லாரி ஒன்று மீண்டும் கடந்த 8.7.2010 அன்று மாலை மருத்துவக் கழிவுகளுடன் பொள்ளாச்சியை நோக்கி வந்திருக் கிறது. கழகத் தோழர்கள் பொள்ளாச்சி எல்லையில் அந்த லாரியை மடக்கிப் பிடித்து செய்தியாளர்கள் முன்னிலையில் காவல் துறையினரிடம் ஒப்படைத் துள்ளனர்.
 
கழிவு லாரியை ஓட்டி வந்தவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்த பொள்ளாச்சி காவல்துறை லாரியை பிடித்துக் கொடுத்த கழகத் தோழர் காசு. நாகராசன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து மறுநாள் அதிகாலையில் அவரது வீட்டிற்கே போய் கைது செய்துவிட்டனர். இந்தச் சேதியறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் வ. செயராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் பேசி கைது செய்யப்பட் டுள்ள நாகராசனை விடுவிக்குமாறு கோரியுள்ளார். அதிகாரி மறுத்துள்ளார். உடனே, சட்டமன்ற உறுப்பினர் வ. செயராமன், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் சமூகப் பணிகளைத் தடுத்து காவல்துறை சட்டவிரோதமாக செயல்படுவதைக் கண்டித்து தானே மறியல் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். தொடர்ந்து கழகத் தோழர்களும், அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் காவல் நிலையம் முன் குவிந்துள்ளனர். உடனே மதியம் வாக்கில் நாகராசனை விடுவித்த காவல் துறையினர். வழக்கில் “யாரோ ஒரு அடையாளம் தெரியாத பெரியார் திராவிடர் கழக கட்சியைச் சேர்ந்தவர்” கழிவு லாரியைத் தாக்கியதாக ஒரு புகாரை லாரி கிளீனர் பேரால் பதிந்து முதல் தகவல் அறிக்கையும் தயாரித்து வைத்துக் கொண்டு கழகத் தோழர் களைத் தொடர்ந்து நெருக்கிக் கொண்டுள்ளனர்.
 
இது போதாதென்று வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் கேரள தெரு நாய்களைப் பிடித்து வந்து வனப் பகதிகளுக்குள் கேரள வனத்துறை யினரே விட்டுச் சென்றுள்ளனர். மலையாள வன அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்தும்கூட அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதியாமல் அவர்களை பாதுகாப்பாக கேரளாவுக்கு அனுப்பி யுள்ளனர் தமிழக காவல்துறையும், வனத் துறையும்.
 
இதற்கிடையே, லாரியில் வந்த கழிவு “பேரபாயம் தரக்கூடியதல்ல” என்கிற ஆராய்ச்சி(?) முடிவுப்படி லாரியை விடுவிப்பதாக பொள்ளாச்சி நீதிமன்றமும் தன் பங்கிற்கு மலையாளிகளைப் பாதுகாத்து லாரியை பத்திரமாகத் திருப்பிதத்தர உத்தரவிட்டு லாரியும் போய்விட்டது. ஆனால், கழகத் தோழர்கள் மீதான வழக்கு மட்டும் பத்திரமாய் இருக்கிறது.
 
மருத்துவக் கழிவோ, ஆபத்து தரக்கூடியதோ, தராததோ எதுவாக இருந்தாலும் மலையாளிகளின் கழிவைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு தமிழ் நாடென்ன குப்பைத் தொட்டியா? என்கிற கேள்வி களோடு பொள்ளாச்சி பகுதியில் களம் இறங்கி யுள்ள கழகத் தோழர்கள் கடந்த 10.8.2010 அன்று தமிழக கேரள எல்லையோரங்களில் மலையாளி களின் அத்துமீறல்களைக் கண்டித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தி தமிழக விவசாயிகளையும், சமூக ஆர்வலர்களையும் அணி திரட்டும் பரப்புகளை நிகழ்த்தினர். இந்தக் கூட்டங்களில் திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் சு. துரைசாமி, பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் இரா. மோகன், சி. விசயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 
தொடர்ந்து 13.8.2010 அன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி நகர செயலாளர் வே. வெள்ளிங்கிரி, வட்ட செயலாளர் காசு. நாக ராசன், ம.தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சரவணன், ஆதித் தமிழர் பேரவை செயலாளர் கோபால், திருப்பூர் மாநகர கழக செயலாளர் முகில்ராசு, மாவட்ட கழகத் தலைவர் சு. துரைசாமி ஆகியோர் உரைக்குப்பின் கழக பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் கண்டன உரை யாற்றினார்.
 
அப்போது, “கேரள கழிவுகளை முற்றாய் தடுத்து தமிழக வளங்களைப் பாதுகாக்கும் பணியை சட்டப்படி மேற்கொள்ளாமல் இனியும் தமிழக அரசின் காவல்துறை மலையாளிகளுக்கு சாதகமாக செயல்படுமென்றால் தமிழ்நாட்டு விவசாயிகளை யும், இயற்கை ஆர்வலர்களையும் அணி திரட்டி பெரியார் திராவிடர் கழகத்தினரே முன்னின்று மலையாளிகளின் அத்துமீறல்களை எதிர்கொள்ள நேரடியாக களம் இறங்குவோம் என்று பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத் நன்றி கூறினார்.
 
கோவை மாநகர செயலாளர் வே.கோபால், கோவை நாகராசு, திருப்பூர் அகிலன், காங்கயம் பாண்டியன், பொள்ளாச்சி நகர துணைச் செய லாளர்கள் இராசேந்திரன், கலை இராசேந்திரன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சீனிவாசன், சரவணன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கண்ணன், ஆனைமலை நகர செயலாளர் வே. அரிதாசு, மணிமொழி, அப்பாதுரை, பேச்சிமுத்து, கதிர், கா.க.புதூர் அமைப்பாளர்கள் பழ.மாரிமுத்து, த. மணி, ஆத்துப் பொள்ளாச்சி அமைப்பாளர் பேச்சிமுத்து, சேத்துமடை அமைப்பாளர் உத்திர ராசு மற்றும் மாணவர்கள் சதீசு, சரவணக்குமார், சிலம்பரசன், பிரதாப், ராகுல், பிரபாகரன், இரா.பிரசாத் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தி: ஆ. இரமேசு