கடவுள், சாஸ்திரம், சடங்குகளைக் காப்பாற்றக் கூட இப்போது காவல்துறைதான் தேவைப்படுகிறது. ’இவர் கடவுளை விமர்சித்து விட்டார்; காவல்துறையே நடவடிக்கை எடு என்று புகார் மனுக்களை தூக்கிக் கொண்டு காவல்துறையிடம் போகிறார்கள். மதத்தை புண்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று வீதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் கடவுளிடம் போய் முறையிடுவதில்லை.

‘பகவானே, உன்னை புண்படுத்துகிறவர்களை நீ தண்டிக்க வேண்டாமா? அல்லது இப்படி எல்லாம் பேசாமல் இருப்பதற்கு உனது சக்தியை பயன்படுத்த மாட்டாயா? என்று ஏன் முறையிடுவதில்லை! அதற்காக சிறப்பு அர்ச்சனை, யாகம் நடத்தி தங்கள் வேத சக்தியை ஏன் ஏவிவிடக் கூடாது? இதைக் கேட்டால் அப்போதும் நம்மீது புகார் கொடுக்க காவல்துறையிடம் ஓடுகிறார்கள்.

கடவுள் மீதெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, புராணங்களில் கடவுள்கள் அவதாரம் எடுத்துவந்து எதிரிகளை சம்ஹாரம் செய்ததாக கூறுகிறார்கள். இப்போது கூட ‘சூர சம்ஹாரம்’ திருவிழாவாக நடக்கிறது. நாடுகள் உருவான பிறகு எந்த கடவுளும் தங்களை எதிர்த்தவர்களை அழிக்க அவதாரம் எடுப்பதே இல்லை. ஏன் என்று கேட்டால் கடவுள் நிந்தனை என்று மீண்டும் காவல்துறைக்கு ஓடுகிறார்கள்.

கடவுள் பெரிதா? காவல்துறை பெரிதா? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் அதற்குக்கூட காவல்துறை அனுமதியும் பாதுகாப்பும் தேவைப்படுகிற காலம் இது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது அப்போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்காதது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

“நான் சனாதன எதிர்ப்பு கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். பதவிகள் வரும், பின்னர் போய்விடும். அது முக்கியமல்ல, மனிதனாக இருப்பதுதான் முக்கியம். சட்ட நடவடிக்கைகள் வருமென்றால் அதை சந்திக்கத் தயார்” என்று கூறிவிட்டார்.

பெரியாரும் அம்பேத்கரும் பேசிய சனாதன எதிர்ப்பையே நானும் பேசுகிறேன், அண்ணன் திருமாவளவனும் அதையே பேசுகிறார் என்று உதயநிதி சுட்டிக்காட்டுகிறார். அண்மைக் காலமாக தமிழக வரலாற்றில் இலட்சியப் பிடிப்புள்ள வெகுசில தலைவர்களில் உதயநிதியும் இடம் பிடித்துவிட்டார். உதயநிதிக்கு ஒரு ’சல்யூட்’ இந்த பதிலில் ஒரு அர்த்தமுள்ள கேள்வியும் அடங்கியிருக்கிறது. பெரியார், அம்பேத்கரின் சனாதன எதிர்ப்பு கருத்துகளை பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறுமா? என்பதுதான் அந்த கேள்வி.

ஒரு அமைச்சர் மனிதனாக இருப்பேன் என்றெல்லாம் பேசலாமா? இது சனாதனத்துக்கு அவமானம், தேச ஒற்றுமையை சிதைக்கும் நச்சுக் கருத்து. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்று கூறுவது எங்கள் மதத்தையே இழிவுபடுத்துவதாகும் என்று ஒரு ‘புண்பட்ட’ மனிதர் வழக்குத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போது நீதிமன்றம் என்ன தீர்ப்பை கூறுமோ தெரியாது. சனாதனத்தைக் காப்பாற்ற காவல்துறை நீதிமன்றங்கள் இருக்கின்றன, மனிதத்தை காப்பாற்றத்தான் இங்கே யாரும் இல்லை.

- கோடங்குடி மாரிமுத்து