1950-ல் குத்தூசி குருசாமி தீட்டிய எழுத்தோவியம் இது. இன்றைக்கும் இந்த சிந்தனை அப்படியே தேவைப்படுகிறது.
புத்தியிருக்கிற இடத்தில் பக்திக்கு இடமிருக்காது. மாற்றியும் கூறலாம். இது இங்கு நிற்க!
பக்தியைத் தனியாகக் கட்டி வைத்துவிட்டு, எப்போதோ வேண்டும்போது கட்டையவிழ்த்து ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுத் தின்றுவிட்டு, மூட்டையைக் கட்டி வைத்துவிட்டு, மற்ற வேலைகளை (பெரும்பாலும் பக்திக்கு நேர்மாறானவைகளை) வெகு மும்முரமாகப் பார்க்கிறவர்களுமுண்டு! இந்த நாட்டுப் பார்ப்பனரையும் மேல் நாட்டு கிருஸ்தவர்களையும் இந்த ரகத்தில் சேர்க்கலாம். இவர்களிடம் பெரும்பாலும் வெறும் வாய்ப்பேச்சுக்கும் விவாதத்துக்கும் தான் மதமும் பக்தியும் பயன்படும். பொதுவாகப் பார்த்தால் இந்த நாடு பக்திக்குப் பேர் போனது; மேல் நாடுகள் புத்திக்குப் பேர் போனவை.
சென்ற இரண்டாந் தேதி இரவு சந்திர கிரகணம் ஏற்பட்டதல்லவா? அப்போது நம் நாட்டிலுள்ள இந்து மத பக்தர்கள் என்ன செய்தார்கள்? உப்புப் பானையில் தர்ப்பையைப் போட்டு, தர்ப்பை தாங்கிகளின் கையில் காசைப் போட்டு, நெற்றியில் குட்டுப்போட்டு, உடலையும் வீட்டையும் கழுவி, தீட்டைப் போக்கி, பரிசுத்தத் திருமேனிகளாக மீண்டு வந்தார்களல்லவா? ஏன் இப்படி செய்தீர்களென்றால், “பாம்பு சந்திரனை விழுங்கி விட்டது” என்று கூறி, தங்கள் கூற்றுக்கு அதாரமாகப் பஞ்சாங்கத்தைத் தூக்கி நம்முகத்தில் எறிந்தார்களே! இது இங்கே! ‘பாரத்’ நாட்டில்! பாகிஸ்தானில்கூட இல்லை! ஆகவே பக்தர்கள் ஸ்ரீமான் சந்திரனையும் காப்பாற்றித் தாங்களும் புனிதமானார்கள்! பக்தி மிகுந்த நாட்டில் இது! சாணி உருண்டையைக் கடவுளாக மதிக்கும் நாட்டில் இது!
ஆனால், அங்கே? அதாவது புத்தி மிகுந்த நாட்டில், அதே சமயத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா? வழக்கம் போல் சந்திரனைப் புகைப்படம் பிடிக்க முயன்றார்களாம்! மேகம் மறைத்து விட்டதனால் முடியாது போய் விட்டதாம்! பார்த்தீர்களா! இந்த நாத்திகப் பீடைகளுக்கு ஒரு கட்டுத் தர்ப்பைக்கூடச் சிக்கவில்லை! படம் பிடிக்கிறார்களாம், படம்! அதுவும் சந்திரனை! அதனால் யாருக்காவது ஒரு காசு லாபமாவதுண்டா? ஒரே வரியில் “பாம்பு விழுங்கி கக்கி விட்டது” என்று எழுதித் தள்ளுவதை விட்டு, பல்லாயிர ரூபாய் செலவில் படமெடுக்கிறார்களாம்!
இது மட்டுமா? சந்திரனுக்கே போகின்ற முயற்சிகூட லண்டனில் நடந்து கொண்டிருக்கிறதாம்! ‘அகஸ்டே பிகார்ட்’ என்பவர் 49 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பலூன் மூலம் வானத்தில் பத்து மைல் உயரத்திற்குச் சென்றாராம்! அவர் எழுதியுள்ள ஒரு நூலில் “சந்திரனை நாம் அடைய முடியும்” என்று கூறியிருக்கிறார். அலுமீனியத்தினால் செய்யப்படும் காற்று நுழையாத கூண்டு மூலம் ராக்கெட்டினால் உந்தப்பட்டு, சந்திரனை அடையலாம் என்று இந்த ஆசாமி கூறுகிறார். 440 டன் எடையுள்ள நீர்ப் பிராண வாயு கொண்டு போனால்தான் சந்திரனிலிருந்து மீண்டும் பூமிக்கு வரலாம் என்றும், இது பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாகவும் இந்தப் பேர்வழி கூறுகிறாராம்!
எப்படியிருக்கிறது, சங்கதி! எல்லாம் சுத்த ‘ப்ரூடா!’ சந்திரனுக்காவது போகவாவது? சந்திரன் என்பது ஒரு மனிதன் என்பதை நம் புராண இதிகாசங்கள் கொக்கரித்துள்ள சங்கதி இந்தப் பேர்வழிக்கு எப்படித் தெரியும்? அப்படியே ஒருக்கால் போய்விட்டு வந்தால், “இதெல்லாம் தஞ்சாவூர் அரண்மனை சமஸ்கிருத ஏடுகளிலிருந்து திருடிய சங்கதி தானே!” என்று ஒரே அடியில் அடித்து விடமாட்டோமா நாங்கள்? பேச்சில் மட்டும் எங்களை வெல்கிறவர்கள் ஒரு பிராணிகூடக் கிடையாது. அது தொலையட்டும்! ஆரம்பியுங்கள் நம் சங்கதியை!
“சந்திர கிரகணே பாபவிநாச! கங்கா காவேரி ஸ்நானபுண்யே!
கய கயா! கய கயா! கய கயா!!!”
(நன்றி: நாத்திகம் வெளியீடான - குத்தூசி கட்டுரைக் களஞ்சியம்)