சிங்கள கடற்படை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலில் படுகொலை புரிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் வேதாரண்யம் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மிகவும் கொடூரமான முறையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கடலில் வீசி கொல்லப்பட்டார். இப்படுகொலை தமிழக மக்களிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சென்னையிலுள்ள சிங்கள புத்த போதி சங்கத்தின் மீது கடந்த 24.1.2011 அன்று இரவு 9.30 மணியளவில் எதிர்வினை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அம்மடத்தில் உள்ள பொருட்கள், வாகனம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டதாகவும், ஒரு சில சிங்களவர்கள் காயம் அடைந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கழகத்தைச் சேர்ந்த 7 பேர் 27 ஆம் தேதியன்று எழும்பூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அன்று மாலையே நேர் நிறுத்தப்பட்டனர். அப்போது எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், தமிழக மற்றும் இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு தேநீர் விருந்து அளித்தனர். மேலும் வழக்கு விசாரணையின் போது தாமாகவே முன் வந்து கழகத் தோழர்களுக்காக, அவர்களை கைது செய்தது சட்ட விரோதம் என அரை மணி நேரத்திற்கும் மேலாக நீதிபதியிடம் வாதம் செய்தனர்.

இவ்வழக்கில் காஞ்சி மாவட்ட அமைப்பாளர் டேவிட் பெரியார், இரவிக்குமார் (திருவல்லிக்கேணி), பாஸ்கர் (பொன்னேரி), நாத்திகன், அப்பு (மயிலாப்பூர்), சுகுமார், சம்பத் (எ) அங்காடி (இராயப்பேட்டை) ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் ஓர் ஆட்டோவும் காவல் துறையால் கைப்பற்றப்பட்டது. வழக்கறிஞர் குமாரதேவன் கழகத் தோழர்களுக்காக நீதிமன்றத்தில் நேர் நின்றார். வழக்கறிஞர் அமர்நாத் மற்றும் ஜான் ஆகியோர் காவல் நிலையத்திலும் நீதி மன்றத்திலும் தோழர்களுக்கு ஆதரவாக உதவி புரிந்தனர். சென்னை மாவட்ட நிர்வாகி களும், தோழர்களும் திரளாக எழும்பூர் நீதிமன்றத்தில் கூடி நின்று கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு ஆதரவாகவும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் முக்கங்கள் எழுப்பி தோழர்களை வழியனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட வர்களை பிணையில் விடுதலை செய்யக் கோரும் மனு திங்கள் அன்று 31.1.11 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த நாள் 1.2.11 செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. செவ்வாய் கிழமை அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

தாக்குதல் குறித்து ஏடுகள் கருத்து

சென்னையில் சிங்களர்களின் மகாபோதி சங்கம் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட தாக்கம் என்ன? இப்படி ஒரு தாக்குதல் நடந்த பிறகே, இலங்கை தூதர் இனி மீனவர்களை தாக்க மாட்டோம் என்று உறுதி கூறினார் என்று, ‘தினமணி’ நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளது. 28.1.2011 அன்று ‘தினமணி’ வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி :

“தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை சுடப்படும் போதும் மத்திய அரசின் மென்மையான கண்டிப்பும், கடிதம், தந்தி மட்டுமே அனுப்பும் தமிழக அரசின் நடவடிக்கை களும் ஜன.12 ஆம் தேதியும், ஜன.22 ஆம் தேதியும் நடந்த படுகொலைச் சம்பவங்களின் பின்பு மாறியிருக்கிறது. இருமுறையும் சற்றே வேகம் காட்டியுள்ள மத்திய, மாநில அரசுகளைப் போன்று இலங்கை அரசும் துரிதமாகச் செயல்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வுகளில் கவனிக்க வேண்டியது 3 விஷயங்கள். முதலில், இம்முறை மீனவர் ஜெயக்குமார் என்பவர் சுடப்படவில்லை. கயிற்றால் கழுத்து இறக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். அதாவது, தெரியாமலோ அல்லது தவறுதலாகவோ சுடப்படவில்லை என்பது தெளிவாகிறது. இரண்டாவது ஜன.12 ஆம் தேதி மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்த பின்னும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் படுகொலை செய்ததற்கு மத்திய அரசு மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது (எச்சரிக்கை அல்ல!). மூன்றாவது, இலங்கை அரசு இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் மூலம் இனி மேல் சுடமாட்டோம் என உறுதி அளித்திருக்கிறது. அதாவது ‘இது வரை சுட்டது நாங்கதான்’ என்பதை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல ஒத்துக் கொண்டிருக்கிறது.

மீனவர் கொல்லப்பட்டதை அடுத்து சென்னை யில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர்காயமடைந்தது குறித்து விளக்கம் அறிய வந்தபோதுதான், தமிழக அரசு தலைமைச் செயலரிடம் மேற்கண்ட உறுதியைக் கூறியிருக்கிறார் இலங்கைத் தூதர்.

முதலில் ஒரு மீனவர் கொல்லப்படுகிறார். பிறகு ஒரு கும்பல் இலங்கை சங்கத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், தூதரோ தாக்குதல் நடத்தப்பட்டதை முதன்மைப்படுத்தி மாநில அரசைச் சந்திக்கிறார். ஒரு தாக்குதலுக்கே இலங்கை அரசு தூதரை அனுப்பி விளக்கம் கேட்கிறது. ஆனால், 400-க்கும் மேலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் மத்திய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை என்ன என்பது தான் தெரியவில்லை. எப்படிச் சொன்னாலும் இலங்கையில் யாரும் கேட்க மாட்டார்கள் என்று மென்மையான கண்டிப்புடன் நிறுத்தி விட்டார்கள் போலும்” - என்று ‘தினமணி’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா

மகாபோதி சங்கம் தாக்கப்பட்டதால் சிங்களர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் சென்னையில் வாழ பயப்பட மாட்டோம் என்று சிங்களர்கள் கூறுவதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜன. 28) செய்தி வெளியிட் டுள்ளது. சிரோமி அலெக்சாண்டர் என்ற சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றும் சிங்களப் பெண் கூறுகையில், “தாக்குதல் வேதனைக்குரியது; சிங்களர்களுக்கு எதிரான இந்த உணர்வு ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வாக கருத முடியாது; ஆனாலும் தமிழகத்துக்கு சுற்றுலா வரும் சிங்களர்களின் எண்ணிக்கை குறையும்” என்று கவலை தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளான மகாபோதி சங்கம் 80 ஆண்டு பழமையானது. 40 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. சென்னையில் 500 சிங்கள குடும்பங்கள் வாழ்கின்றன. பெரும்பாலோர், இலங்கை தூதரக ஊழியர்கள்.

சென்னையிலுள்ள இலங்கை துணை தூதர் வடிவேல் கிருட்டிணமூர்த்தி கூறுகையில், “ஒரு சிறிய குழு ரகசியமாக இத்தாக்குதலை நடத்தியுள்ளது” என்று கூறினார். ஆனால், சிங்கள மாணவர் தினந்து என்பவர், “சிறிய குழுவின் தாக்குதல் என்று கூறி, பிரச்சினையை அலட்சியப்படுத்தக் கூடாது; யுத்த பூமியாகிவிட்ட இலங்கை யில் தமிழர்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் அகதிகளாக புலம் பெயர்ந்துள்ள தமிழர் களின் அவலமான வாழ்க்கையால் இங்கே தமிழர்கள், மிகவும் கொதிப்படைந்துள்ளனர். அதனால் உருவான பாதிப்புதான் இந்தத் தாக்குதல். எனவே இலங்கை அரசு பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். ஏதோ சிறிய குழுவினரின் தாக்குதல் என்று கூறி, பிரச்சினையை திசை திருப்பக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Pin It