பிரிட்டன் வரவேற்பு

ராஜபக்சே போர்க்குற்றம் செய்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ள அய்.நா. குழுவின் அறிக்கையை பிரிட்டன் வரவேற்றுள்ளது. இலங்கை இதற்கு பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்த தாக்குதல் பற்றி நம்பகத் தன்மையுள்ள விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, பிரிட்டன் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாலேயே அய்.நா.வின் இந்தக் குழுகூட அமைக்கப்பட்டது என்றும் பிரிட்டன் கூறியுள்ளது.

ராஜபக்சே பெயர் நீக்கம்

உலகின் சக்தி வாய்ந்த 100 தலைவர்களில் ஒருவராக அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை ராஜபக்சேயை ஏற்று, அவருக்கு நான்காவது இடத்தைத் தந்திருந்தது. அய்.நா. அறிக்கையில் ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பது உறுதி யானதைத் தொடர்ந்து ‘டைம்’ பத்திரிகை ராஜ பக்சேயின் பெயரை பட்டியலிலிருந்து நீக்கி விட்டது. உலகம் முழுதும் வாக்கெடுப்பு நடத்தி, இதைத் தீர்மானிக்கிறது ‘டைம்’. ராஜபக்சே தனது தூதரகங்கள் வழியாக ஏராளமான கள்ள ஓட்டுகளை தனக்கு ஆதரவாக போட வைத்ததும் அம்பலமானது. உலகின் வலிமையான இணைய தளங்களான ‘சேனல் 4’ மற்றும் அல்ஜசீரா இணையதளங்கள் தொடர்ந்து ராஜ பக்சேயின்  போர்க் குற்றங்களை அம்பலமாக்கி, ‘டைம்’ ஏட்டுக்கு கண்டனமும் தெரிவித்து வந்தன. கடைசியாக ராஜபக்சே பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

பான் கி மூனுக்கு கிடுக்கிப் பிடி

ஈழத்தில் இறுதி கட்டப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு விடுதலைப் புலிகள் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் போன்றோர் தலைமையில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை ராணுவம் சுட்டுப் பிணமாக்கியது. இது குறித்து ஏற்கனவே முதன்மை செயலாளர் விஜய் நம்பியார் வழியாக அய்.நா.வுக்கும், ராஜபக்சேயின் சகோதரரான கோத்த பய ராஜபக்சேவுக்கும் முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. விஜய் நம்பியார், சர்வதேச நெறிமுறைகளின்படி வெள்ளைக் கொடியுடன் வருவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி கூறியிருந்தார். ஆனால், வஞ்சகமாக, உறுதிக்கு மாறாக புலிகளின் தளபதிகளையும் சரணடைய வந்த தமிழ் மக்களையும் ராணுவம் சுட்டுப் பிணமாக்க சதி செய்தார். இது பற்றி கடந்த வாரம் அய்.நா.வின் அறிக்கை வெளிவந்த பிறகு அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனிடம் நியூயார்க்கில் நேரடியாகவே ‘இன்னர் சிட்டி பிரஸ்’ பத்திரிகை யாளர் கேள்வி கேட்டார். தமிழர்கள் வெள்ளைக் கொடியுடன் வந்தபோது, விஜய் நம்பியாரின் பங்கு என்ன? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு இது பற்றி தன் னுடைய மூத்த ஆலோசகர்களுடன் விவாதிக்க இருப்பதாகக் கூறி, பான்-கீ-மூன் நழுவி விட்டார்.

அய்.நா. அதிகாரி குட்டை உடைக்கிறார்

ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, அய்.நா.வின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் என்ற பதவியில் இருந்தவர் கோர்டன் வைஸ். இப்போது பதவி ஓய்வு பெற்று ஆஸ்திரேலியாவில் உள்ளார். அய்.நா. அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் இறுதி கட்டப் போரில் பெரும் எண்ணிக்கையில் நடந்த உயிரிழப்பை தடுக்க, அய்.நா. தவறிவிட்டது என்று கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இந்தியா செயல்பட்டதால், பொது மக்கள் உயிரிழப்புகள் பற்றி, கண்டு கொள்ளவே இல்லை என்று இந்தியா மீதும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவுக்கு போர் நடந்த பகுதியில் வலிமையான புலனாய்வு வசதிகள் இருந்தன. நடந்தவையெல்லாம் இந்தியாவுக்கு தெரியும் என்று கூறியுள்ள அவர், விடுதலைப் புலிகள் தலைவர்களை வெள்ளைக் கொடியுடன் சரணடைய தொடர்ந்து வலியுறுத்தியதே இலங்கை அரசுதான். அதற்குப் பிறகு சரணடைய வந்தவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்றும் வைஸ் கூறியுள்ளார்.

‘ஆம்னஸ்டி’ கண்டிக்கிறது

அய்.நா. அறிக்கை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறுதி கட்டப் போரில் கொல்லப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதால், அய்.நா.வே இலங்கை மீது பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைக் கழகம் (ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்) அய்.நா.வுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அக்கழகத்தின் ‘ஆசியா - பசிபிக்’ இயக்குனர் சாம் ஜாரிஃபி விடுத்துள்ள அறிக்கையில் –

“போரின் இறுதிகட்டத்தில் சிக்கிய மக்களின் நிலையை அய்.நா. குழுவின் முன் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியிருக்கும் தகவல்கள் அதிர வைக்கின்றன. மரண ஓலம் கேட்டிருக்கிறது. கடும் காயங்களுடன், மரண பயத்தில், மருத்துவ வசதியின்றி, உணவு இன்றி, குடிநீர்இன்றி தவியாய் தவித்துள்ளனர். போர்ப் பகுதியிலிருந்து தப்பி வந்தவர்களையும் ராணுவம் சிறை பிடித்து கொடுமைப்படுத்தியுள்ளது” என்று சர்வதேச மனித உரிமைக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

கோத்த பய சிக்குகிறார்


அய்.நா. அறிக்கை வெளி வந்ததைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு செயலாளரான கோத்தா பய ராஜபக்சேயை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே - இப்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

Pin It