ஈழத் தமிழர் இனப் படுகொலையில் அய்.நா. தலையீட்டைக் கோரி - உலகம் முழுதும் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோளை ஏற்று கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.

அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த மூவர் குழு அறிக்கை ஈழத்தில் இறுதி கட்டப் போரில் நடந்த தாக்குதல் இனப் படுகொலையே என்பதை உறுதி செய்துள்ளதால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்ய வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் முதன்மை அமைச்சர் ருத்திரகுமார் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடருவதற்குததான். அய்.நா. பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல் தேவை. ஆனால், அது குறித்து புலனாய்வு செய்வதற்கு சடட நிபுணர்களுக்கு பரிந்துரைக்க அய்.நா. பொதுச் செயலாளருக்கே உரிமை இருக்கிறது என்று ருத்திரகுமார் - அய்.நா.வின் சட்டப் பிரிவுகளைக் காட்டி விளக்கியுள்ளார்.

இப்போது நியமிக்கப்பட்ட மூவர் குழு அய்.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அய்.நா. செயலாளரே அமைத்ததாகும். இது ஆலோசனைக் குழுதான். இதற்கு அடுத்த கட்டமாக இந்த ஆலோசனைக் குழு அறிக்கையின் அடிப்படை யில் அதிகாரம் கொண்ட ஆணைக் குழு ஒன்றையே அமைக்க அய்.நா. செயலாளருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, அய்.நா. செயலாளரே தனது உரிமையைப் பயன்படுத்தி இலங்கையின் போhக் குற்றங்களை விசாரிக்க அதிகாரம் கொண்ட ஆணையம் ஒன்றை அமைக்கவும், சாவதேச குற்றவியல் மன்றம் - சட்ட நிபுணர்களைக் கொண்டு, வழக்கு தொடருவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக நடந்த சம்பவங்கள் பற்றி புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல லட்சம் தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று அய்.நா. செயலாளருக்கு அனுப்பி வைக்கும் இயக்கத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதற்கான படிவங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையதளம்  வெளியிட்டுள்ளது.

கையெழுத்து இயக்கம் நடத்த விரும்புவோர், அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னையில் கடந்த 30 ஆம் தேதி மாலை 2000 பேர் திரண்ட பேரணியை நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மய்யம் அதன் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடத்தியது. பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், கிராமப் பெண்கள் விடுதலை இயக்கம், சேவ்தமிழ்’ அமைப்பு, ‘மே 17’ இயக்கம், பல்வேறு மீனவர்கள் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட 2000-த்துக்கும் அதிக மானோர் கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை நோக்கிப் பேரணியாக புறப்பட்டு, இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி முழக்கமிட்டு வந்தனர். மறைந்த மீனவர் தலைவர் ஜீவரத்தினம் மகள் டாக்டர் பானுமதி பாஸ்கர் தொடங்கி வைத்தார். பேரணி தொடக்கத்திலும், இறுதியிலும் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் உரையாற்றினர். பேரணியின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளையேற்று கையெழுத்து இயக்கத்தையும் பேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்தார்.

அய்.நா. குழுவின் அறிக்கை - இனப் படுகொலை என்ற சொற்றொடரை பயன்படுத்தவில்லை என்றாலும், 1948 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘இனப் படுகொலைக்கு எதிரான சர்வதேச உடன்பாடு’ மற்றும் 1949 ஆம் ஆண்டின் ஜெனிவா சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இப்போது நடந்துள்ள போர்க் குற்றங்களை இனப் படுகொலையாகவே கருதி, அய்.நா. நேரடியாக தலையிட முடியும் என்று சர்வதேச சட்டவியல் அறிஞர் பிரான்சிஸ் ஏ. பாய்ல் உறுதியாகக் கூறி வருகிறார்.

அப்பாவி பொது மக்கள் பரவலாக ஷெல் வீசி கொல்லப்பட்டுள்ளனர்.  மருத்துவமனை மற்றும் மனித உதவி அமைப்புகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டிய மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. சண்டையின்போது முகாமில் இருந்தவர்களும், போராளிகளும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சித்தவர்களும், மனித உரிமை மீறல்களால் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டனர் என்று - அய்.நா. குழு கூறியிருப்பதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. தாக்குதலை நடத்தியது சிங்களர்களை மட்டுமே கொண்ட இராணுவம்; தாக்குதலுக்கு உள்ளானது, தமிழர்கள் மட்டுமே என்பதால், இது இனப் படுகொலை என்ற உறுதியான முடிவுக்கு வரவேண்டும் என்றும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை அமைச்சர் ருத்திரகுமார் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழ் மக்களை மட்டும் சிறீலங்கா சித்திரவதைக்கும், கட்டாய சிறைக்கும் உள்ளாக்கி, மனித உரிமைகளை மீறி செயல்பட்டுள்ளது. இது இனத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட பாகுபாடுகள் ஆகும். போரின் போது நடந்ததாக அய்.நா. அறிக்கை உறுதி செய்துள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர் படு கொலை, பாலியல் வன்முறை, ஒட்டு மொத்தமாக சுட்டுக் கொன்றது, உணவு மற்றும் மருந்துகளை வழங்க மறுத்தது ஆகிய நடவடிக்கைகள், இனப் படுகொலைக்கு உட்பட்டதே ஆகும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப் பரப்பில் மக்கள், இன ரீதியாக கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச சட்டப்படியும், உள் நாட்டு சட்டப் படியும், இவை இனப்படுகொலைகளேயாகும். இந்தக் கொலைகளின் உள்நோக்கமே, முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த உள்நோக்கத்தை, நடவடிக்கையின் அளவு மற்றும் தன்மைகளின் அடிப்படையில் உய்த்து உணரலாம். அய்.நா.வின் விசாரணை அறிக்கை - இனப் படுகொலைக்கான சர்வதேச சட்ட விளக்கங் களுடன் மிகச் சரியாக பொருந்தி வருகிறது. எனவே இவையாவும் சர்வதேச குற்றங்களாகிவிடுகின்றன. இந்த நிலையில் இந்தக் குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விசாரிக்க உரிமை இருப்பதால், அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு கையெழுத்து இயக்க வழியாக வலியுறுத்தும்.

Pin It