• தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், மனித இன ஆராய்ச்சியாளர்களும், ஆதி மனிதன் பாலூட்டியாக இருந்தான் என்கிறார்கள். அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் ஒரு விலங்காகவே இருந்திருக்கிறார்கள். அதன் பின் தான் ஐந்து கைவிரல்களும் ஐந்து கால் விரல்களும் கொண்ட குரங்கினத்தைப் போலவும் மனிதக் குரங்கினத்தைப் போலவும் மாறியுள்ளான். இதை தான் ‘பிரைமேட்’ இனம் என்கிறார்கள்.
• இதற்கு பின் ஏற்பட்ட வளர்ச்சி என்னவென்றால், விலங்குகளுக்குள்ளே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் திறமையுடன் இயக்கும் ஆற்றல் பெற்றான். காலாலும், கைகளாலும் நடந்து கொண்டிருந்தவன், இரு கால்களால் தட்டுத் தடுமாறி நடக்கும் மனிதச் சாயலை பெற்றான். இதை ‘ஹோமினிடே’ இனம் என்று அழைக்கிறார்கள்.
• இதற்கு அடுத்த நிலை மனித பரிணாம வளர்ச்சியின் முக்கிய நிலையாகும். தன் மொத்த உருவத்தில் குரங்குகளையும், மனிதக் குரங்கையும் விஞ்சி அதிக மூளை வளர்ச்சியும் திறமையும் உள்ள ‘ஹோமோ எரக்டல்’ எனப்படும் நிமிர்ந்த நிற்கும் இன மனிதன் ஆனான். இது அவனுடைய பரிணாம வளர்ச்சியின் முக்கிய திருப்பமாகும். நெடுங்காலத்துக்குப் பின் ‘ஹோமோசேப்பியன்’ எனப்படும் மனித இனத்தவன் ஆனான்.
முழு மூளை வளர்ச்சியும் உருண்டையான வளைந்த மண்டை ஓடும், நேரான நெற்றியும் உடையவனாக மாறினான். இந்த மனிதனையே வரலாற்று காலத்துக்கு முந்தைய மனிதன் என்கிறோம். இவன் விட்டுச் சென்ற பொருட்களும், அடையாளங்களும் உலகின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மிகப் பழங்கால மனிதனின் சுவடுகள் ஆசியாவிலேயே காணப்பட்டன. 1891 இல் ஜாவா மனிதனின் மண்டை ஓடு, டாக்டர் யூஜின் டுபாய்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவன் மனிதக் குரங்கு மனிதனாவான். இவனது காலம் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது.
1929 இல் டாக்டர் டேவிட்ஸன் பிளாக் என்பவர் சீனாவில் உள்ள பீஜிங் நகரில் ஒரு மண்டை ஓட்டை கண்டுபிடித்தார். இது 2.5 லட்சம் ஆண்டுக்கு முந்தியது.
ஐரோப்பாவில் ஹெய்டல்பர்க் என்ற இடத்தில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனது மண்டை ஓட்டை கண்டுபிடித்தனர். ஜெர்மனியில் நியண்டர்தால் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனை நியண்டர்தால் மனிதன் என்கிறார்கள். இவனும் 2 லட்சம் ஆண்டுகள் முந்தியவன்தான். இவனுடம் முழுமையான மனிதன் அல்ல. அரை மனிதன். இவன் நெருப்பை அறிந்திருந்தான். குகையில் வாழ்ந்தான். தோலாடையை உடுத்தினான். வலக்கையை பயன்படுத்தினான். வேட்டையாட மரத்தையும் கடினமான கற்களையும் பயன்படுத்தினான். ஆற்றின் அருகே வசித்தான். அவனுக்கு பானையோ, பாத்திரமோ செய்யத் தெரியாது. இவனது தாடை எலும்பின் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இவன் பேசத் தெரியாதவன் என்று தெரிகிறது.
இதற்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் அறிவில் சிறந்து இன்றைய நிலையை அடைய லட்சக்கணக்கான வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
மனிதன் பேசத் தெரிந்த பிறகுதான் கடவுளையும் மதத்தையும் உருவாக்கிக் கொண்டான்.