மூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்களிடையே பகுத்தறிவு பிரச்சாரங்களைக் கொண்டு செல்லும் இயக்கம் பெரியார் இயக்கம் ஒன்றுதான். ஆனால், கடந்த சில காலமாகவே இந்த பகுத்தறிவு பிரச்சார இயக்கங்களே எதிர் நீச்சல் போடும் நிலைக்கு முடக்கப்படுகின்றன என்பது வேதனையான உண்மை. குறிப்பாக பெரியார் திராவிடர் கழகம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்தினாலோ, தீ மிதி மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்த முயற்சித்தாலோ காவல்துறை அனுமதிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் வழியாகவே காவல்துறை தடையை நீக்க வேண்டியிருக்கிறது.

மக்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள நாடு முழுதும் குறி சொல்லும் கூட்டம், சாமியார் கூட்டம் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இவர்களின் மோசடிகள் முழுமையாக வெளியே வருவதில்லை. வெளியே வரும் சில சம்பவங்களில் மட்டும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் 6 குழந்தைகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் ‘சாமியாடி’ சில மணி நேரத்தில் குழந்தை இறக்கப் போகிறது என்று ‘குறி’ சொல்லி வந்திருக்கிறார். தமது கூற்றை உண்மை என்று நம்ப வைப்பதற்காக பிரசாதத்தில் நஞ்சு கலந்து, குழந்தைக்கு தர வைத்திருக்கிறார். கிராம மக்களும் ‘தெய்வ குற்றத்தினால்’ தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் இறந்ததாக நம்பினர். அப்பாவி கிராம மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி குழந்தைகளை சாகடித்த குறி சொல்லும் பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். ‘சன்’ தொலைக்காட்சி இத்தகைய பல மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறது. இந்த மோசடிகள் மீதெல்லாம் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உண்மையான மக்களாட்சி ஒன்று இங்கே நடக்குமானால், அரசே இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்ய வேண்டும்.

‘இந்து முன்னணி’ போன்ற அமைப்புகள் இத்தகைய பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பக்தர்களை புண்படுத்துவதாக கூக்குரலிடுகின்றன. பகுத்தறிவு பிரச்சாரங்களை தடுக்க முயல்கின்றன. ‘சன்’ தொலைக்காட்சி இந்த மோசடிகளை ஒளிபரப்புவதைக்கூட சகிக்காமல், போராட்டம் நடத்தினார்கள். இராம கோபாலன் என்ற பார்ப்பனர் பகுத்தறிவு பிரச்சாரம் நடந்தாலே - உடனே அதை எதிர்த்து அறிக்கை விடுவதையும் போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

இராமகோபாலன்கள் இப்போது - ஒரே கிராமத்தில் மூடநம்பிக்கையினால் 6 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனவே; இதற்கு என்ன பதிலை கூறப்போகிறார்கள்? பாதிக்கப்படுவது பார்ப்பனர்கள் அல்லவே; தீண்டப்படாதவரும் ‘சூத்திரரும்’ தானே?

பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முடக்கும் காவல்துறையும், இந்து முன்னணிகளும், பார்ப்பன இராம கோபாலன்களுமே இத்தகைய ‘உயிரைப் பலிவாங்கும்’ மூடநம்பிக்கைகளுக்கு பாதையமைத்துத் தருகிறார்கள் என்று பகிரங்கமாகவே நாம் குற்றம் சாட்டுகிறோம்.

உள்ளூரில் புற்றீசல் போல் பெருகி வரும் இந்த மோசடிகளை தமிழக அரசு ஏன் தடை செய்யக் கூடாது? சோதிட மூட நம்பிக்கையால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றனவே! உயிர்ப் பலிகள் நடக்கின்றனவே! சாமியார்கள் பேச்சை நம்பி எவ்வளவோ ‘கிரிமினல்’ நிகழ்வுகள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றனவே!

திருவண்ணாமலையிலே சாராயம் குடித்து சுருட்டுப் பிடித்து குறிச் சொல்லி பணம் சுரண்டிய ஒரு ‘பெண்’ கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்து, மீண்டும் குறி’ சொல்லக் கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மீதெல்லாம் குண்டர்கள் சட்டம் - தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்வ தில்லையே! உயிரைப் பறிக்கும் மூடநம்பிக்கைகளை ஒடுக்கு வதற்கு இந்த சட்டத்தைப் பயன்படுத்த இந்த ஆட்சி தயாராக இல்லை. மாறாக தமிழின உணர்வுகளை நசுக்குவதற்குத்தான் முறைகேடாக, இந்த சட்டங்களைப் பயன்படுத்தத் துடிக்கிறார்கள்.

மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு பகுத்தறிவு பிரச்சாரத்தின் தேவை மனித வாழ்வுரிமையோடு இணைந்து நிற்பதை, இப்போதாவது கம்யூனிஸ்ட் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும், பெரியார் - அண்ணா கொள்கைக்கான இயக்கங்களாக தங்களைக் கூறிக் கொண்டிருப்பவர்களும் தமிழ் தேசியம் பேசுவோரும் புதிய ஜனநாயகப் புரட்சியாளர்களும் உணர்ந்து, மக்களிடம், பகுத்தறிவு சிந்தனைகளை விதைக்க முன்வரக் கூடாதா? என்று கேட்க விழைகிறோம். இது - ஏதோ, பெரியார் இயக்கத்துக்கான பிரச்சினை அல்ல. சமுதாயப் பிரச்சினை; மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை கவலையோடு சுட்டிக்காட்டுகின்றோம்.

Pin It